ஜெய்சங்கரின் வரவும், தமிழ் கேள்வியும்! - ஜோதிகுமார் -
இரு தினங்களின் முன், இலங்கையின் தூதுவர் மிலிந்த மொரகொட, இந்தியா தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவாலை, புதுடெல்லியில் சந்தித்து சீன உளவு கப்பல் யுவாங்-5 வரவின் பின்னராய், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக Hindustan times செய்தி வெளியிட்டிருக்கின்றது. (16.01.2023) இதற்கு இரு தினங்களின் முன்னதாக, இலங்கை தூதுவர் அவர்கள், குஜராத் மாநிலத்தில் மூன்று நாட்கள் தங்கியிருந்து, குஜராத் முதலமைச்சருடனும், வேறு சில பாரதிய ஜனதா முக்கியஸ்தர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்ததாகவும் செய்தி குறிப்புகள், பதிவு செய்திருந்தன.
அஜித் டோவாலுடனான மேற்படி சந்திப்பானது, யுவாங்-5இன் வரவால், சீர்குலைந்ததாய் கருதப்பட்ட இலங்கை-இந்திய உறவுநிலையை, மறுசீரமைப்பது குறித்தும், இனி வார இறுதியில் வரவிருக்கும் இந்திய வெளியுறவு துறை அமைச்சர் திரு.ஜெய்சங்கர் அவர்களின் வரவு குறித்துமே சந்திப்பில் கலந்துரையாடப்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. உறவுகளை மறுசீரமைப்பதற்கான இவ்வகையான முயற்சிகள், இலங்கை-இந்திய உறவுகளுக்கு மாத்திரம் தனித்துவமான ஒரு பிரச்சினை என்றிராது, இஃது ஓர் உலகலாவிய நடைமுறையாக இன்று உருவாகத் தொடங்கியுள்ளது என்பது குறிக்கத்தக்கதாகும்.