தமிழில் முதன் முதலில் மருத்துவம் போதித்த மேதையின் 200ஆவது ஆண்டு நினைவு (1822 – 2022) - நவஜோதி ஜோகரரட்னம், லண்டன். -
மனித சமுதாயத்திற்குத் தொண்டுசெய்யும் குணசீலர்கள் அந்த லட்சியத்துடனேயே வாழ்ந்து விடுகின்றார்கள். அவர்கள் காலத்தால் அழிந்து போவதில்லை. காலத்தின் கோரத்தால் ஏலம் போகாது என்றென்றும் மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அந்த வகையில் வைத்தியர் சமுல்.பி. கிறீன் அவர்கள் மக்கள் மனதில் இன்றும் வாழ்ந்துகொண்டிருப்பவர் ஆவார்.
அமெரிக்காவில் ‘கிறின் ஹில்’ என்னும் இடத்தில் 1822ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் பத்தாம் திகதி உவில்லியம் ஈ.கிறின் தம்பதிகளுக்குப் புத்திரனாக சமுல் பிறந்தார். தனது பதினொராவது வயதில் தாயை இழந்தார். பத்துச் சகோதரர்களுடன் பிறந்த இவர் பலவித இன்னல்களையும் சமாளித்து உடலுழைப்பால் சம்பாதிக்கப் பழகிக் கொண்டார். விடாமுயற்சியும் சிக்கன முறைகளும் அவரது அன்றாட வாழ்வில் அவரது அருமையான அனுபவங்களாகின. பதின்ம வயதில் குமுறி வரும் உணர்ச்சிகளுக்கு அணைபோட்டு ஆக்க வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர் வைத்தியர் கிறீன்.
தனது பத்தொன்பதாவது வயதில் நியூயோர்க்கிலிருந்த வண. டாக்டர்; வர்கீஸ் அவர்களிடம் கடமை ஆற்றத் தொடங்கினார். சாதாரண எழுது வினைஞராகவே பணியாற்றத் தொடங்கிய சமுல் கிறீன் அவர்கள் தனது ஓய்வு நேரங்களைப் படிப்பதிலும், வாசிப்பதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டேயிருந்தவர். வைத்தியத் துறையில் ஆர்வம் அதிகமாக அவரிடத்தில் மேலோங்கியிருந்தமையினால் வைத்தியக் கல்வியை மேற்கொண்டு சிறந்த வைத்தியராகத் தேர்ச்சி பெற்றுத் திகழ்ந்தார்.