பகுத்தறிவு - சந்திரகெளரி சிவபாலன் -
ஏன் என்று கேட்காதுவிட்டால், மடையர் நாம் என்று கட்டிவிடும் அறிவு. நாம் ஆறறிவு மனிதர்களா? இல்லையெனில் ஐந்து அறிவு மிருகங்களா? என்று புரியாது போய்விடும். மிருகங்கள், பறவைகள் பலவற்றின் குணநலங்களை எடுத்தாராயும்போது அவையே தம் வாழ்வுக்குத் தேவையான அறிவு கொண்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தலையாட்டித் தொடரும் ஆட்டு மந்தைகள் போல் வழிவழியாகத் தொடரும் பழக்கவழக்கம் என்றோ, ஊரோடு ஒத்தோடாவிட்டால், சமூகம் எம்மை ஒதுக்கிவிடும் என்றோ, ஆச்சரியமானதாக இருக்கின்றது என்றோ, எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்றார்களே! அதில் ஏதோ உண்மை இருக்கும் என்றோ எதையும் நம்பிவிடக்கூடாது.
அன்றே உலகப்பொதுமறை தந்து முக்காலத்தையும் ஒன்றே முக்கால் வரிகளால் அளந்த வள்ளுவர் பகுத்தறிவு காடடிவிட்டார்.
“எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
எவர் சொன்னாலும் அதன் உண்மைப்பொருளைக் காணவேண்டும் அதுவே அறிவு.
“எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”
எந்தப்பொருள் எந்த இயல்பினதாகத் தோன்றினாலும் அந்தப்பொருளின் உண்மையான இயல்பை அறிவது அறிவு.
“யார் சொன்னார், எவர் சொன்னார் என்பதை விட்டுவிட்டு எவர் சொன்ன சொல்லையும் உனது சொந்த அறிவால் எண்ணிப்பார்” என்று சாக்ரடீஸ் சொல்லியிருக்கின்றார்.