ஆய்வு: கம்பராமாயணத்தில் பெயரடை மொழிகள் (இராமன் - இராவணன்) Name Epithet in Kamabaramayam (Raman - Ravanan) - முனைவர் கோ. புஷ்பவள்ளி, புதுச்சேரி -
அறிமுகம்
பாரி 1932-இல் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் துணைப்பேராசிரியராகப் பணியாற்றினார். ஹோமரின் ஒடிசி, இலியட் ஆகிய காப்பியங்களை ஆராய்ந்த பாரிக்கு அவற்றில் காணப்படும் சில அமைப்புகள் வாய்மொழி மரபுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஐயம். இந்த ஐயத்தைத் தீர்க்கும் முகமாக அமைந்ததே வாய்மொழி வாய்பாட்டுக் கோட்பாடாகும். இந்த ஐயத்தினைத் தெளிவுப்படுத்தும் முகமாக, பாரி யூக்கோஸ்லோவிய நாட்டில் களப்பணிச் செய்து வாய்மொழிக் காப்பிய பாடல்களைச் சேகரிக்கிறார். அவரது மாணக்கர் லார்டு தொடர்ந்து களப்பணிச் செய்து ஆய்வை முடிக்கின்றார். இவ்விருவரும் உருவாக்கிய ‘கோட்பாடு’ என்ற அடிப்படையில் ‘பாரி–லார்டு கோட்பாடு’ என்ற பெயரும் ஏற்பட்டது. இந்தக் கோட்பாட்டில் வாய்பாடு என்பது மையமாக அமைகிறது. இது குறித்து இக்கட்டுரை விவரிக்கிறது.
வாய்பாடுகள் (The Formula)
வாய்பாடு என்பதற்குப் பாரி ‘இன்றியமையாத கருத்தை வெளிப்படுத்துவதற்காக ஒரே விதமான யாப்பு அமைப்பினைக்கொண்டு மீண்டும், மீண்டும் பயன்படுத்தப்படும் சில சொற்களின் கூட்டம்’ என்கிறார் (Formula is Group or words which is regularly employed ender the same metrical conditions to express a given essential idea Parry 1960: 30). ‘சி.எம். பௌரா வாய்பாடு’ என்பது எவ்வித மாற்றமுமின்றி ஒரு குறிப்பிட்ட சூழலில் தேவைப்படும் போதெல்லாம் உறுதுணையாக வந்து அமைகின்றன எனவும், இவை பெயர், பெயரடைகளின் சேர்க்கைகளாக ஓர் ஆள் (அ) பொருளுடன் தொடர்புபடுத்தப் படுவதும், அவை அடுத்தடுத்த தொடர்கள் (fixed Epithet) எனவும் மீண்டும் வரக்கூடிய தொடர்களை வாய்பாட்டுத் தன்மைபெற்று வரியின் முன் அரையடி, பின் அரையடி, முழுவரி (அ) தொகுதி தொடர் வாய்பாடாக வெளிப்படுவதாக விளக்கம் அளிக்கிறார். தமிழகச் சூழலில் கைலாசபதி ஒப்பியல் முறையப்படி முதன்முதலில் சங்க இலக்கியத்தின் மீது வாய்பாடுகளைப் பொருத்தி விரிவான ஆய்வை மேற்கொண்டவர். இவற்றிலிருந்து வாய்பாடு என்பது ஒரு காப்பியத்தில் மீண்டும் மீண்டும் வரக்கூடிய யாப்பில் கட்டமைப்பு என்பதை அறியலாம். இந்த வாய்பாட்டில் அடைமொழிகளே மிகுதியாகப் பங்காற்றுகின்றன.