வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர்! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மேனாள் தமிழ்மொழிக் கல்வி இயக்குநர், மெல்பேண், அவுஸ்திரேலியா -
வறுமைத் தடாகத்தில் மலர்ந்திட்ட மாமலர். புதுமைக்கு வித்திட்ட புரட்சிக்கவி.விடுதலைக்குக் கீதம் இசைத் திட்ட வீரக்கவி.இருப்பதில் இன்பத்தைப் பெருக்கிப் பார்த்திட்ட ஏற்றமிகு கவி.பழமைக்கும் புதுமைக்கும் பாலமாய் அமைந்திட்ட பாரத்தின் பண் பாடும் கவி. அஞ்சாத சிங்கமாய் ஆர்ப்பரித்து நின்ற அழகு தமிழ்க் கவி. அந்தக் கவிதான் எங்கள் முண்டாசு கட்டி முறுக்கு மீசையுடன் எடுப்பாய் திகழ்ந்து - பாரதி என்று பட்டொளி வீசி நின்ற கவிக் குயிலாகும். பாரதி என்றதுமே அதில் ஓர் அதிர்வு உருவாகிறதல்லவா ! பாரதி என்றதுமே அதில் ஒரு புது உற்சாகம் பீறிட்டு வருகிறதல்லவா ! பாரதி என்றதும் தளர்வு அகன்று நிமிர்வு எழுகிறதல்லவா ! அந்தளவுக்கு " பாரதி " என்பது ஒரு மந்திரமாய் தமிழுலகில் நிலைத்து நிற்கிறது என்பதை மனத்திருத்துவது அவசியமாகும்.
எதையெடுத்தாலும் பாரதிக்கு முன் - பாரதிக்குப் பின் என்று பார்ப்பதுதான் உகந்ததாய் இருக்கும் என்று பலரும் கருதுகிறார்கள். சிந்தனை, செயற்பாடு, இலட்சியம் , கருத்துக்கள், கவிதை, எழுத்து நடை , என்னும் வகையில் பார்ப்பது பொருத்தமாய் இருக்கும்.பாரதிக்கு முன்னர் தமிழும் , இலக்கியமும், சமுதாயமும் , அமைந்த விதம் வேறாகவே இருந்தது. அதுதான் காலத்தின் நிலை. காலத்தின் தேவையினைக் கருதியே இலக்கியங்கள் எழுகின்றன. இதனால்த்தான் இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடி என்று பார்க்கின்ற னர்.அந்தவகையில் பாரதிக்கு முன்னர் காணப்பட்ட இலக்கியப் போக்கிலிருந்து பாரதி மாறுபடுகிறாரா அல்லது வேறுபடுகிறாரா என்னும் வகையில் சிந்திப்பது பொருத்தமாய் இருக்கும் அல்லவா!