லண்டனில் எஸ். அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலும் அவரின் புதல்வி நவஜோதி ஜோகரட்னத்தின் ‘பூப்பும் பறிப்பும்’ சிறுகதைத் தொகுப்பும்; கடந்த வாரம் (8.6.2024) ஹரோ ஐயப்பன் மண்டபத்தில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
அகஸ்தியரின் ‘சுவடுகள்’ நாவலுக்கு தலைமை தாங்கிப் பேசிய எழுத்தாளர் ந. சுசீந்திரன் அவர்கள் தனது தலைமை உரையில்: ’எஸ். அகஸ்தியர் அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே ஜேர்மனியில் மூன்று நாட்கள் நடைபெற்ற இலக்கிய மகாநாட்டில் அகஸ்தியர் படைப்புகள் பற்றி ஒரு முழுநாள் கருத்தரங்கை நடாத்தியதில் நான் பெருமைப்படுகின்றேன். அவரது நாவல்கள், சிறுகதைகள், ஆய்வுகள் என்பன ஈழத்தின் இலக்கிய வரலாற்றில் அவருக்கு தனி இடத்தைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது. ஈழத்து முற்போக்கு எழுத்தாளரான மூத்த எழுத்தாளர் எஸ். அகஸ்தியர் பிரதாப முதலியார் சரித்திரத்தையும் அரசன்பே சரித்திரத்தையும் ஒப்பிட்டு எழுதிய ஆய்வு நூல் அவரது ஆய்வுத் திறனை வெளிப்படுத்தி நிற்கின்றது. எளிமையாகப் பழகவல்ல அகஸ்தியர் அவர்கள் வாழ்நாளின் இறுதிக் காலங்கள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்த இலக்கியப் பெருமகன் ஆவார். அவர் மறைந்த இருபத்தியொன்பது ஆண்டுகள் கழித்து இந்நூல் அவரது புதல்வி நவஜோதி ஜோகரட்னம் வெளியிடுவது பாராட்டுக்குரியது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
விமர்சகர் மு. நித்தியானந்தன் அவர்கள் பேசுகையில்: ‘அமரர் எஸ். அகஸ்தியரின் நாவல் 1980களின் ஆரம்பத்தில் ஆனைக்கோட்டை என்ற கிராமம் சிங்கள ராணுவத்தால் எவ்வாறு சிதைக்கப்பட்டது என்பதற்கான வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றது. அக்கால கட்டத்தில் யாழ்ப்பாணத்தில் நடந்தேறிய அரச பயங்கரவாதத்தின் கொடுர முகத்தை இந்த நாவலில் நாவலாசிரியர் அகஸ்தியர் துல்லியமாக வெளிப்படுத்துகிறார். ஒரு விதத்தில் சிங்கள ராணுவத்தின் வெறியாட்டத்தை ஆவணப்படுத்துகின்ற அதேநேரம் அவரது சுயசரிதையின் ஒரு பகுதியாகவும் இந்நாவல் அமைகிறது. ஆனைக்கோட்டையில் அவரது குடும்பத்தினர் படும் அவலம், அவரது அரசியல் ஈடுபாடு, அவரது பத்திரிகையுலக நண்பர்கள் ஆகியவற்றைச் சுற்றி நாவல் விரிந்து செல்கிறது. பேச்சு வழக்கினை அழுத்தமாகத் தன் படைப்புகளில் பதிவு செய்யவல்ல அகஸ்தியர் அந்த நாவலிலும் அந்தச் சாதனையைச் செய்கின்றார். அக்கால கட்டத்தில் நடைபெற்ற சிங்கள ராணுவத்திற்கும் இயக்கங்களுக்கும் இடையிலான மோதல் என்பனவற்றை இந்நூல் குறித்துச் சொல்கிறது. அக்காலகட்டத்தின் யாழ்ப்பாண நிலைமை பற்றிய முக்கிய சித்திரத்தை இந்த நாவல் தருகின்றது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
காற்றுவெளி சஞ்சிகை ஆசிரியர் முல்லை அமுதன் பேசும்போது: ‘அகஸ்தியரின் சுவடுகள் நாவலோடு பயணிக்கும்போது அவரின் வாழ்வில் ஏற்பட்ட துயர நிகழ்வுக்கும் எனது வாழ்வின் ஏற்பட்ட நிகழ்வுக்கும் சம்பந்தம் இருப்பது போன்ற உணர்வை என்னில் ஏற்படுத்தியது. பல்வேறு புனைபெயர்களில் எண்ணற்ற பத்திரிகைகளில் எழுதிக் குவித்த அவரின் கைகள் முரண்பாடுகளையும் யதார்த்தமாக்கி எழுத்துலகில் பிரகாசித்தவர். அவருடனான உரையாடலை நடாத்திய பூபாலசிங்கம் புத்தக சாலை தன் நிiவில் அலைவதாக’ குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
தமிழ் இலக்கிய நிறுவனத்தின் தலைவர் இரா உதயணன் ‘பூப்பும் பறிப்பும்’ என்ற நவஜோதியின் சிறுகதைத்தொகுப்பை நெறிப்படுத்தியிருந்தாலும், அகஸ்தியர் காலத்தில் லண்டன் வந்த வேளை தான் அவரின் இலக்கிய விழாவில் பேசியதையும், அவருடனான தனது இலக்கிய உறவையும் நினைவுபடுத்தியிருந்தார். சிறந்த எழுத்தாளரின் மகளான நவஜோதியும் எழுத்தாளராக வந்தமையும் மகிழ்வு தருவதாகக் குறிப்பிட்டார். அவரது மகரந்தச் சிதறல் நூலில் 33 பெண் ஆளுமைகளை வெளிப்படுத்திப் பாராட்டைப் பெற்றமையையும், சிறுகதைத் தொகுப்பில் உள்ள இருபத்திரண்டு சிறுகதைகளுள் எட்டு சிறுகதைகள் பரிசில்கள் பெற்றுள்ளமையையும் குறிப்பிட்டுப் பேசியிருந்தார்.
பூப்பும் பறிப்பும’ என்ற நவஜோதியின் சிறுகதைகள் குறித்து பட்டிமன்றப் பேச்சாளர் சிறீபத்மநாதன் உரையாற்றும்போது ‘இவரின் கதைகளில் பல இலக்கிய கர்த்தாக்கள், நாட்டிய நாடக மேதாவிகள், பல உளவியலாளர்கள், பாடகர்கள், வாத்திய வித்துவாக்கள், தத்துவ மேதைகள் என்று பலரும் முத்துக்களைச் சிந்திச் செல்கின்றனர். குழந்தைகள் அவர்கள் மொழியில் இலக்கியம் இயம்புகின்றனர். மொத்தத்தில் இவர்தரும் கதா பாத்திரங்கள் வாசகர் நெஞ்சங்களை மஞ்சமிட்டுச் செல்லுகின்றன. தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் பெண்களுக்கான பல தகவல்களால் கதை சொல்வதில் கதாசிரியர் வெற்றி பெற்று நிற்கின்றார். அகஸ்தியரின் மகளாக இலக்கியப் பரப்பில் நிலை பெறுகின்ற நவஜோதியின் அழகான இந்நூல் அனைவர் வீட்டிலும் இருக்கவேண்டியது அவசியம் என்றும்’ தெரிவித்திருந்தார்.
சிறுகதைகள் குறித்து ஊடகவியலாளர் ரஞ்சனி குமர குருநாதன் பேசும்போது ‘பெண்விடுதலைக் குரலாகக் கவிதைகள் கட்டுரைகள், கதைகள் என்று எழுதி வந்த நவஜோதியால் இத்தொகுப்பில் புலம்பெயர் வாழ்வில் பெண்கள் அனுபவிக்கும் இடர்கள், புலம்பெயர்தல் என்ற மாயையால் ஏமாற்றப்படுதல், பெண்பிள்ளைகளுக்கு எதிரான வன்கொடுமைகள், ஆணாதிக்கத்தால் ஏற்படும் அச்சுறுத்தல்கள், தமிழர்கள் புலம்பெயர்ந்தபின் கலாச்சார மாறுபாடுகளால் ஏற்படும் சிக்கல்கள் எனக் கதைகள் எழுதப்பட்டுள்ளன. சிறந்த முற்போக்கு எழுத்தாளரான எஸ் அகஸ்தியரின் புதல்வியான நவஜோதி அவர்களிடமும் சிறந்த மானிட நேயமும், சமூக அக்கறையும் மேலோங்கி நிற்பதை அவரது ஆக்கங்களினூடாக உணரமுடிகின்றது’ என்றும் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலை, பயனற்ற சம்பளப் போராட்டங்கள் போன்றன இவரது கதைகளில் காணப்படுகின்றன. பெண்களின் துணிச்சலான செயற்பாடுகளும் பல கதைகளில் தொனிக்கின்றன’ என்று விரிவுரையாளர் நிர்மலா விஜயகுமார் தனது உரையில் தெரிவித்திருந்தார்.
ஆய்வாளர்; புனிதா கணேஷ்வரன் உரையாற்றும்போது : ‘சமூகப் பிரச்சனைகளைச் சுட்டும் இவரது கதைகள் இலக்கியச் செழுமையுடன் பேசப்பட்டிருக்கின்றன. படிப்பினைக் கதைகளாகவும், அறிவூட்டுவதற்கு உதவும் புத்தகமான இதனை வாசிக்கும்போது ஜெயகாந்தனின் கதைகள் நினைவிற்கு வந்தன’ என்று பேசியிருந்தார்.
மூத்த ஊடகவியலாளர் திரு.நடாமோகன் அகஸ்தியர் குறித்தும், நவஜோதி குறித்தும்; ஆழமாக கருத்துக்களடங்கிய வாழ்த்துரையோடு ஆரம்பித்து வெளியீட்டு விழாவைச் சிறப்பாகவே ஆரம்பித்து வைத்திருந்தார்.
நவஜோதி தனது நன்றி உரையின் போது தனது தாயாரின் முன்னிலையில் இந்நிகழ்வு நடைபெறுவது தனக்கு பெருமிதமும், மகிழ்ச்சியையும் தருவதூகக் குறிபிட்டிருந்தார். அங்கு வருகை தந்திருந்த அனைவருமே பாசத்துடன் பழகுபவர்கள் என யாவரையும் சுட்டிக்காட்டி அவரது இதயம் திறந்த நன்றியுரையோடும், மண்டபம் நிறைந்த பார்வையாளர்களோடும் மிகச் சிறப்பாகி இனிதே நிறைவு கண்டது என்றால் அது மிகையாகாது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.