நீர்கொழும்பில் முன்னர் தமிழர்கள் வாழ்ந்தார்களா..? என்று இன்றும் கேட்கும் தமிழர்கள் இந்த உலகில் இருக்கிறார்கள். இதுபற்றி ஏற்கனவே நான் தொகுத்து வெளியிட்ட நெய்தல் நூலில் விரிவாக எழுதியிருக்கின்றேன். எனது இந்த முதல் சந்திப்பு தொடரில் இடம்பெறும் எழுத்தாளர் தேவகி கருணாகரனின் பெரிய தந்தையார் சண்முகம் கதிர்வேலு விஜயரத்தினம் ( எஸ். கே. விஜயரத்தினம் ) அவர்கள் 1950 ஆம் ஆண்டு காலப்பகுதியில் எங்கள் நீர்கொழும்பூரின் நகரபிதாவாக ( மேயர் ) இருந்தார் எனச்சொன்னால், இக்கால தலைமுறைத் தமிழர்கள் நம்புவார்களா..? அவர் நீர்கொழும்பு கடற்கரை வீதியிலமைந்திருந்த இந்து வாலிபர் சங்க மண்டபத்தில் தலைவராக இருந்தபோதுதான் 1954 ஆம் ஆண்டு விஜயதசமியின் போது எனக்கும் ஏடுதுவக்கி வித்தியாரம்பம் செய்வித்து , விவேகானந்தா வித்தியாலயம் அன்று தொடங்கியது. அவரது தம்பி எஸ். கே. சண்முகமும் புதல்வன் ஜெயம் விஜயரத்தினமும் நீர்கொழும்பு மாநகர சபையில் அந்த மூன்றாம் வட்டாரத்தை பிரதிநிதித்துவம் செய்தவர்கள். 32 தமிழ்க்குழந்தைகளுடன் ஆரம்பமான அந்த வித்தியாலயம்தான் பின்னாளில் அதன் ஸ்தாபகர் விஜயரத்தினம் அவர்களின் பெயரில் வடமேற்கில் இன்றும் ஒரே ஒரு இந்து தமிழ் கல்லூரியாகத் திகழுகின்றது.
இந்தப்பின்னணிகளுடன்தான் அவுஸ்திரேலியாவில் நான் வாழத்தலைப்பட்ட பின்னர் எனக்கு தேவகி கருணாகரன் அறிமுகமானார். எமது அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் ஒரு எழுத்தாளர் விழாவின்போதுதான் இவரை முதல் முதலில் சந்தித்தேன். எமது சங்கத்தின் ஆயுள்கால உறுப்பினராக இணைந்துகொண்டவர். தேவகியின் கணவர் கருணாகரன் பல்மருத்துவர். இவருக்கும் புகழ் பூத்த பின்னணியிருக்கிறது. கருணாகரனும் கலை, இலக்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்தான். கருணாகரனின் சகோதரர்கள்தான் கட்டிடக் கலைஞர் வி. எஸ். துரைராஜா, மற்றும் எழுத்தாளர் வி. எஸ். கணநாதன். திருமதி சகுந்தலா கணநாதனும் எழுத்தாளர்தான்.
- எழுத்தாளர் தேவகி கருணாகரன் -
தேவகி கருணாகரனின் புதிய வரவாக வெளிவந்துள்ள யாழினி நூலுக்கு முகப்போவியம் வரைந்தவர், வி. எஸ். துரைராஜாவின் புதல்வி மஞ்சுளா ஶ்ரீபத்மா. வி. எஸ். துரைராஜா கதை எழுதி, தயாரித்து திரைப்படமான குத்துவிளக்கு பற்றியும் அறிந்திருப்பீர்கள். தேவகியின் நெருங்கிய உறவினரான செல்வி ராதிகா குமாரசாமி ஐ. நா. சபையில் சிறுவர் நலன்கள் தொடர்பில் முக்கிய பணியாற்றியவர். மற்றும் ஒருவர் இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசாமி.
அவுஸ்திரேலியாவில் குறுகிய காலத்தில் தொடர்ந்தும் ஆக்க இலக்கியப் படைப்புகளை வரவாக்கி, அவற்றில் சிலவற்றுக்கு பரிசில்களும் பெற்றிருப்பவரான தேவகி கருணாகரன் பற்றித்தான் இந்தப்பதிவில் சொல்ல வருகின்றேன். தேவகியின் தந்தையார் சண்முகம் கதிர்வேலுப்பிள்ளை துரைசிங்கம். அவரது பூர்வீக ஊர் காரைநகர். ஆனால், அவரும் அவரது சகோதரர்களும் பிறந்து வளர்ந்தது நீர்கொழும்பில் தான் என்பதை அறியமுடிகிறது. தேவகி தற்போது, தங்கள் பூர்வீக வரலாறு குறித்தும் ஆங்கிலத்தில் எழுதிக்கொண்டிருப்பதாக அறிந்தேன். வேதவல்லி - மருத்துவர் சின்னத்தம்பி சரவணமுத்து தம்பதியரின் மகளாக வடபுலத்தில் கட்டுடையில் பிறந்தவர் தேவகி.
தந்தையார் அரச பணி நிமித்தம் பதுளை, அனுராதபுரம், கண்டி என இடம்பெயர்ந்துகொண்டிருந்தமையால், தேவகியின் குழந்தைப்பருவமும் அவ்வாறு ஊர் விட்டு ஊர் நகர்ந்திருக்கிறது. பின்னாளில் யாழ்ப்பாணம் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் உயர்தர வகுப்புவரையில் பயின்று முன் பள்ளி ஆசிரியராக தேர்ச்சி பெற்றார். தனது இருபது வயதில் திருமணமாகி, அதற்கு அடுத்த வருடமே, மேற்படிப்பிற்காக லண்டன் சென்ற தமது கணவருடன் பயணித்திருக்கிறார். அங்கே மருத்துவ நிபுணராகிய கணவருடன் தாயகம் திரும்பியதும் கொழும்பில் அவருக்கு நியமனம் கிடைத்துள்ளது. அதனால் தேவகியும் கொழும்பில் சுமார் 18 வருடங்கள் வாழ்ந்திருக்கிறார்.
மீண்டும் தேவகி , கணவருடன் வெளிநாட்டுக்கு புலம்பெயர நேர்ந்திருக்கிறது. 1981 ஆண்டில் இவரது கணவருக்கு நைஜீரியாவின் கடுணா பிரதேசத்தில் சத்திர சிகிச்சை நிபுணர் பணி கிடைத்திருக்கிறது. தமது கணவர் – பிள்ளைகளுடன் அங்கே சுமார் ஐந்து வருடம் வாழ்ந்த காலப்பகுதியில், அங்கு ஒரு ஆரம்பப் பாடசாலையில் தேவகி ஆசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். 1986 ஆண்டில் குடும்பமாக அவுஸ்திரேலியாவிற்கு புலம்பெயர்ந்து நியூசவுத்வேல்ஸ் மாநிலத்தில் சிட்னியில் வாழ்ந்து வருகிறார். இங்கு அவுஸ்திரேலியா பாதுகாப்பு இலாகாவில் பதினைந்து வருடகாலம் பணியாற்றிவிட்டு 2001 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றார்.
தேவகி கருணாகரனும் எமது ஈழத்து பெண் எழுத்தாளர்கள் சிலரைப்போன்று தொடக்கத்தில் இலங்கை வானொலிக்கு இசையும் கதையும் நிகழ்ச்சிக்கு எழுதியவர்தான். அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்து வந்தபின்னர், அரச உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றதையடுத்து மீண்டும் இலக்கியப்பிரதிகள் எழுதுவதில் ஆர்வம் காண்பித்தவர்.
“பேரப்பிள்ளைகளை உச்சி மோர்ந்து களித்தபின்னர் தனது எழுத்துப் பயணத்தை மீண்டும் ஆரம்பித்தவர்தான் தேவகி.“ என்று இங்கு எம்மத்தியில் வாழ்ந்து மறைந்துவிட்ட மூத்த படைப்பாளி எஸ். பொ. அவர்கள், தேவகியைப்பற்றி குறிப்பிட்டுள்ளார்:
இதுவரையில் அன்பின் ஆழம், அவள் ஒரு பூங்கொத்து ஆகிய இரண்டு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டுள்ள தேவகி, யாழினி என்ற மற்றும் ஒரு தொகுப்பை இந்த வருடம் நவம்பர் மாதம் வெளியிடவுள்ளார். தமிழில் ஐம்பதிற்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில குறுநாவல்களும் படைத்திருக்கும் தேவகி, இவற்றில் பத்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளுக்கு இலக்கியப் போட்டிகளில் பரிசுகள் பெற்றவர். 2022 ஆண்டில் தமிழ்நாடு ஸீரோ டிகிரி பதிப்பகம் நடத்திய போட்டியில் தேவகியின் யாழினி குறுநாவலுக்கு முதல் பரிசு, கிடைத்தது. ஆங்கிலத்தில் தேவகி எழுதிய பல சிறுகதைகள் இதழ்களில் வெளிவந்துள்ளன.
இவரது சிறுகதைகள் இலங்கையில் வீரகேசரி, தினக்குரல் வார இதழ்களிலும் , ஞானம், ஜீவநதி மாத இதழ்களிலும் தமிழ் நாட்டில் கல்கி, கலைமகள், குமுதம், கணையாழி, செம்மலர் ஆகிய இதழ்களிலும், கனடா பதிவுகள் இணையத்தளத்திலும் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. ஞானம் இதழ் 2019 செப்டம்பரில் தேவகி கருணாகரனை அட்டைப்பட அதிதியாக கெளரவித்துள்ளது. அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ( A T B C ) வானொலி, எஸ். பி. எஸ். வானொலி மற்றும் லண்டன் S.R.S வானொலியிலும் தேவகியின் சிறுகதைகள் ஒலிபரப்பாகியுள்ளன. சில நகைச்சுவை நாடகங்களையும் எழுதி , இயக்கி சிட்னியில் மேடையேற்றியிருப்பவர். வெளிவரவிருக்கும் யாழினி நூலை தனது அன்புக்கணவர் கருணாகரனுக்கு சமர்ப்பித்துள்ளார்.
இந்த நூலுக்கு நான் எழுதிய அணிந்துரையை இங்கு பதிவுசெய்கின்றேன்:
அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய வரலாற்றில் தேவகி கருணாகரனின் வகிபாகம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. நூலுருவில் தனது மூன்றாவது கதைத் தொகுப்பினை தற்போது இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தியிருக்கிறார். இத்தொகுப்பில் தமிழ் நாடு ஸீரோ டிகிரி இலக்கிய அமைப்பின் விருது பெற்ற யாழினி குறுநாவலுடன் மேலும் சில சிறுகதைகளை பதிவேற்றியிருக்கிறார்.
தேவகி கருணாகரன் சிறந்த கதை சொல்லி. தாய்நாடும், புகலிடம் பெற்ற கண்டமும் இவரது கதைகளில் களங்களாகியிருக்கின்றன. இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்த பெரும்பாலான தமிழ் படைப்பாளிகளுக்கு தாயகத்தின் நினைவுகள்தான் அவர்தம் இலக்கியப் பிரதிகளுக்கு மூலதனம். தேவகி கருணாகரனும் இதில் விதிவிலக்கல்ல ! இவர் தமது பாத்திரப்படைப்புகளின் மனவோட்டங்களின் ஊடாக கதைகளை நகர்த்திச்செல்லும்போது, சம்பவங்களையும் துரித வேகத்தில் நகர்த்துகிறார். நினைக்கத் தெரிந்த மனதால், மறக்கவும் முடிவதில்லை. தேவகி படைத்திருக்கும் பெரும்பாலான பாத்திரங்கள் அத்தகைய இயல்பினைக் கொண்டிருக்கின்றன.
Flash back உத்திமுறையை நாம் திரைப்படங்களில் பார்க்கின்றோம். தேவகியும் தனது கதைகளில் அத்தகைய உத்தியையே தொடர்ந்தும் பயன்படுத்தி வருகிறார். படைப்பாளிகள் சிறுகதையோ, நாவலோ எழுதும்போது பாத்திரங்களை முதலில் தீர்மானிப்பார்கள். பின்னர் அந்தப்பாத்திரங்களின் இயல்புகளை பிரதிபலித்து, அதற்கேற்ப சம்பவங்களை பின்னிப் பிணைந்து நகர்த்துவார்கள். தேவகியின் பாத்திரங்களின் இயல்புகள் நகருவதற்கு முன்பே சம்பவங்கள் வேகமாக நகர்ந்துவிடுவதனால், வாசகர்களும் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்கவேண்டியிருக்கிறது.
எமது தமிழ் சமூகம் பேசத்தயங்கும் விடயங்களையும் தனது கதைகளில் தேவகி, அநாயசமாக பேசிச்செல்கிறார். குறிப்பாக ஒருபாலுறவு தொடர்பான கதையைச் சொல்லாம். தேவகியின் பெரும்பாலான கதைகள் பண்பாட்டு விழுமியங்களையும் தொட்டுச்செல்கின்றன.
தாயகம் விட்டு புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்தாலும், குடும்ப வன்முறையினால், மற்றும் ஒரு நாட்டுக்கு தப்பிச்சென்று வாழவேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்ட பெண், இலங்கையில் போர்க்காலத்தில் காணாமல் போன கணவன், மீண்டும் வரமாட்டான் என்ற நம்பிக்கையில் மற்றும் ஒரு இல்லற பந்தத்திற்குள் நுழைந்து, மீண்டும் நிர்க்கதியாகும் பெண், பெற்றோராகவிருக்கும் இரண்டு ஆண்களின் மத்தியில் வளரும் குழந்தை முதலான கதைகள் உட்பட அனைத்துக்கதைகளுமே நனவிடை தோய்தல் உத்தியுடன்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றன.
தேவகி, பேரன், பேத்திகளை கண்டபின்னரும் தொடர்ந்து இலக்கியப்பிரதிகள் எழுதிவருவது பாராட்டத்தக்கது. பொதுவாகவே எங்கள் தமிழ் சமூகத்தில் பெண்கள், எழுத்துத் துறைக்கு வருவது குறைவு. அவ்வாறு வந்தாலும், திருமணத்தின் பின்னர், குடும்பம், பிள்ளைகள் பராமரிப்பு என்று கவனம் திசை திரும்பிவிடும். பல பெண் எழுத்தாளர்களுக்கு குடும்பச்சுமை சார்ந்த இந்த நிலைமை வந்தமையால், நாம் ஆற்றல் மிக்க, படைப்பூக்கம் கொண்ட பல பெண் ஆளுமைகளை இழந்துவிட்டோம். இந்தப்பின்னணியில் தேவகி கருணாகரன், நம்மத்தியில் முன்னுதாரணம் மிக்க படைப்பாளியாக மிளிர்ந்திருக்கிறார்.
அவருக்கு எமது வாழ்த்துக்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.