தமிழ்க்கடவுள் என்று அழைக்கப்படுபவர். முருகவழிபாடு தமிழகத்தைப் பொறுத்தவரை தொல்காப்பியர் காலத்திலேயே குறிக்கப்பட்டதாய் உள்ளது. மலைநாட்டுக் கடவுளாக முருகப்பெருமான் சங்க இலகக்கியங்களில் குறிக்கப்பட்டுள்ளார். சங்க காலத்தை சேர்ந்த மலைப்பகுதிகளில் வசித்து வந்த குறவ இனத்தவர் தங்களது கன்னிப் பெண்களைக் தொல்லைப்படுத்திய அணங்கில் இருந்து அவர்களை வெளியில் கொண்டுவர வெறியாட்டு என்ற நிகழ்ச்சி அல்லது விழா என்பதைக் கொண்டாடினார்கள். இதைப் பற்றியக் குறிப்பு அணங்குடை முருகன் (புறநானூறு : 299:6); அணங்கு பெண்கள் , நெடுவேல் அணங்குறு மகளிர் (குறிஞ்சிப்பாட்டு: 174-175) போன்ற பல இலக்கியங்களில் உள்ளன. முருகனை வேண்டி செய்யப்படும் அப்படிப்பட்ட வழிபாடுகளை முருகு ஆற்றுப்படுத்தல் (அகநானுறு. 22:11); முருகு அயர்தல் (குறிஞ்சிப்பாட்டு: 362:1); வெறி (நற்றிணை. 273:4-5; பரிபாடல்i. 5:15); வெறியயாடல் (அகநானூறு 182:17-18); வெறியாட்டு என்பார்கள். ஐந்குறுநூறு என்பதில் நூறு செய்யுட் பத்திகளில் பத்து செய்யுட் பத்திகளில் வெறியாடல் குறித்து கூறப்பட்டு உள்ளது.

வெறியாடு – சொல் விளக்கம்

வெறி“ என்னும் சொல்லுக்குத் தற்கால அகராதிகள் பெரும்பாலும் ஆவேசம் என்று பொருள் கூறுகின்றன. லிப்கோ அகராதி வெறி என்ற சொல்லுக்கு முருகன் பூசை என்று கூட இன்னும் ஒரு பொருளையும் காட்டுகிறது. பழங்காலத்தில் வெறி என்பதற்கு மணம் என்னும் பொருளை வழங்கி வந்தனர். ’வெறிகமழ் பொழில்’ ‘வெறிமலர்’ என்றெல்லாம் பழைய செய்யுள்களில் காண முடிகிறது. ஒரு குறியையே  நோக்கிச் செல்லும் உறுதியான மனப்போக்கும் அதையே நினைத்துக் கொண்டிருப்பதால் தன் இயல்பு மாறுதலும் வெறி எனப்படும். அது தன்னை மறந்த நிலையாகும். அந்த நிலையில் இருப்பவர்க்குப் அப்போது தான் செய்யும் செயல்கள் எதுவுமே நினைவில் தங்குவதில்லை. இதையே பித்துப் பிடித்தவர்கள், பைத்தியம் பிடித்தவர்கள், மனநிலைம் பிறழ்ந்தவர்கள் என்றெல்லாம் கூறி வருகின்றனர்.

பழந்தமிழ் மக்களிடத்தே வெறியாடல் அல்லது வெறியயர்தல் என்ற ஒரு வழிபாட்டு வழக்கம் நிலவி வந்திருக்கிறது. வாழ்வில் தம்மால் புரிந்துகொள்ள முடியாத, தீர்வு காண முடியாத சிக்கல்கள் தோன்றும் போது அதைத் தீர்த்தருளுமாறு தாங்கள் வழிபடும் கடவுளுக்குச் செய்யும் பூசையாக இதனை நிகழ்த்தி இருக்கிறார்கள்.

ஐவகை நிலத்தில் வாழ்ந்த மக்களும் அவரவர் நிலத்திற்குரிய தெய்வங்களுக்குப் படையலிட்டுக் குறையைத் தீர்த்தருளுமாறு வெறியாடி வழிபட்டு வந்திருக்கின்றனர். இது பெரும்பாலும் மலையும் மலைசார்ந்த இடமுமான குறிஞ்சி நிலத்தில் அதிகமாக இருப்பதைக் காணலாம்.

இந்த வெறியையே மையமாக வைத்துப் பாட்டுகள் பாடியதால் ஒரு சங்க காலப் புலவர் “வெறி பாடிய காமக்கண்ணியார்” என்று அழைக்கப்படுகின்றார். ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணையைப் பாடிய கபிலர் அதில் ‘வெறிப்பத்து’ என்று பத்துப் பாடல்கள் கொண்ட ஒரு பகுதியையே படைத்துள்ளார்.

வேலன் வெறியாட்டுச் சடங்கு முறை

வெறியாட்டில் ஆலய பூசாரியே வேலன் என்பவராக உள்ளார். அவர் கையில் முருகனின் வேலினைக் கொண்டு இருப்பார். வேலை ஒரு சின்னமாக எடுத்துக் கொண்டு வருவதினால் அவரே வேலன்.

கழுத்தில் பச்சை நிற இலைகளினால் ஆன மாலை, காட்டு மல்லிகை மற்றும் வெண்தழை அதாவது வெள்ளை இலைகளையும் மாலை போல அணிந்து கொண்டு அவர் மீது முருகன் ஆக்ரமித்துக் கொண்டு உள்ளது போல சாமியாடி நடனம் ஆடுவார். அவருடைய மார்பு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு இருக்கும்.

அப்படி சாமி ஆடுபவரை படிமட்டன் என்பார்கள். அந்த விழாவைக் கொண்டாடும் இடத்தை வெறியார்களம் என்பார்கள். அந்த விழா நடு இரவில் வீடுகளில் உள்ள முற்றம், அதாவது வீடுகளுக்குள் உள்ள திறந்த வெளிக் கூடத்தில் நடக்கும். அதில் ஒருபுறத்தில் கடல் மண்ணைக் கொண்டு வந்து கொட்டி அலங்கரித்து இருப்பார்கள். அதன் ஒரு பக்கத்தில் சேவல் கொடி நடப்பட்டு இருக்கும். அந்தக் கொடி மரத்தின் மீது மலர் மாலைகளினால் அலங்கரித்து, மணம் மிக்க ஊதுபத்திகளையும் ஏற்றி வைத்து இருப்பார்கள். அது முருகனை வரவேற்று அமரச் செய்யும் இடம் ஆகும். அவருடைய வாகனம் மற்றும் அவரது யானையையும் சேர்த்து போற்றி புகழ்ந்து இசைகள் இசைக்கப்படும். - `கடம்பு அமர் நெடுவேல் புலவரை அறியட புகழ் புட்ட கடம்பு அமர்ந்து`. அங்குள்ள மரத்தில் கட்டப்பட்டு உள்ள ஆட்டை வெட்டி அதன் ரத்தத்தை தினை என்ற தானியத்துடன் கலந்து, அதை பரப்பி வைத்து, பலி எனும் பெயரில் மாமிசத்தைப் படைப்பார்கள். பாடல்களைப் பாடியும், இசைக் கருவிகளை இசைத்தும் முருகனைப் போற்றி பாடுவார்கள். மலர்களைத் தூவியும் அவரை வணங்குவார்கள். குறவர் இனப் பெண்கள் நடத்தும் வெறியாட்டு நிகழ்ச்சியைப் பற்றி விரிவாக முருகாற்றுப்படையில் கூறப்பட்டு உள்ளது. அவற்றைத் தவிர மேலும் சில விளக்கங்களும் அதில் தரப்பட்டு உள்ளன.

அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடமோ அச்சம் தரும் வகையில் இருக்கும். முருகனை அழைக்கும்போது அந்த இடத்தை நன்கு அலங்கரித்து வைத்தும், பல விதமான உணவுகளைக் கொடுத்தும், இசைகளை இசைத்தும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. சம்பிரதாயமாக சேவல் கொடி ஏற்றப்படுகிறது, அதன் மீது நெய்யும், வெள்ளை எள்ளையும் கொண்டு திலகம் இடுகிறார்கள், மந்திரங்களை கூறிக் கொண்டே பூக்களால் அர்ச்சனை செய்கிறார்கள்.

ஒவ்வொருவரும் இரண்டு வண்ண உடைகளை ஒன்றன் மீது ஒன்றாக அணிந்து கொள்கிறார்கள். கை மணிக்கட்டில் காப்பு எனப்படும் சிவப்பு நூல்களை கட்டிக் கொள்வார்கள். இரண்டு கொழுத்த ஆடுகளை வெட்டிய ரத்தத்தை புதிதாக சமைத்த அரிசி உணவுடன் கலந்து அதை பலி எனும் பெயரில் படைப்பார்கள். அதைத் தவிர பல்வேறு வகைகளான அரிசி உணவையும் தருவார்கள்.

செவ்வரளி மற்றும் நல்ல மணமுள்ள பூக்களைக் கொண்டு பின்னிய மாலையை அனைத்து இடங்களிலும் கட்டித் தொங்க விடுவார்கள். அந்த மலைப் பகுதியில் உள்ளவர்கள் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும், பசி பட்டினி இல்லாமல், எந்த விதமான நோய்களும் இல்லாமல் இருக்க வேண்டும், நல்ல மழை பெய்ய வேண்டும், நிலவளம் செழுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் அவரிடம் வேண்டிக் கொள்வார்கள்.

வேலனும் அந்தக் குறவர்கள் மற்றும் அங்குள்ள இளம் பெண்களுடனும் சேர்ந்து நடனம் ஆடுவார். அவர்களின் கைகளைப் பிடித்துக் கொண்டு அங்குள்ள வேங்கை மர அடிக்கு அழைத்துச் சென்று, அங்கும் கள்ளைக் குடித்து விட்டு ஆடுவார். அங்குள்ள ஆண்களும் பெண்களின் கையைப் பிடித்துக் கொண்டு தோண்டக பறை என்ற மத்தள இசைக்கு ஏற்ப ஆடுவார்கள்.

குரவை நடனம் குறித்து பல இடங்களிலும் கூறப்பட்டு உள்ளது . அங்குள்ள பெண்களுடன் பாறைகள் மீது சென்று நடனம் ஆடுவது முருகனுக்கு பிடித்தமானது. மேலே குறிப்பிட்டுள்ள முறையில் செய்யப்படும் வழிபாடு முருகனை மலைவாழ் மக்கள் வணங்கிய விதத்தை எடுத்துக் காட்டுகிறது.

முருகனு டைய பூசாரியான ‘வேலன்’ முருகனின் ஆயுதமான வேலைத் தாங்கி ஆடுவதால், அவன் ‘வேலன்’ எனப் பெறுகிறான். முருகனை அழைத்து அவன் புகழைப் பாடிக்கொண்டு வரும்போதே அவன் ஒரு வகையான மருளுக்குள்ளாகிறான். முருகு அவன் மேல் ஆவேசித்ததாகக் கருதப்படுகின்றது. அந் நிலையில், அவன் வேலைக் கையில் தாங்கி மருளோடு ஆடுகின்றான்; இறுதியில், முருகனின் அருட்பிரசாதமாக பலியாக முருகனுக்குப் படைக்கப்பட்ட பூக்களைத் தருகின்றான். இது ஒரு சாந்தி வழிபாடாகத் தோன்றுகின்றது.

முருகனுடைய பூசாரியான வேலன் நடத்தும் இம்மருளாடல் வெறியயர்தல், வெறியாடல், வெறியாட்டு எனச் சங்க இலக்கியங்களில் குறிக்கப் பட்டுள்ளது. ‘வெறி’ என்னும் சொல்லே ‘மணம்’ என்னும் பொருள் தரும் பழந்தமிழ்ச் சொல்லாகும். இச்சொல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், கோண்டா, குவி, பிராகூய் போன்ற பல திராவிட மொழிகளிலும் இடம்பெற்றுள்ளது..

மணமாகாத கன்னிப் பெண்களைச் சூர், அணங்கு போன்றவை தீண்டித் துன்புறுத்துவதாகப் பழந்தமிழ் மக்கள் நம்பினர். சூர், அணங்குகள் போன்றே திருமணமாகாத கன்னிப் பெண்களை முருகனும் தீண்டி அணங்குறுத்துவான் என்று பழந்தமிழ் மக்கள் நம்பினர். பெண் ஒருத்தி ஓர் ஆண்மகன்மேல் காதல் கொண்டு உறவு கொள்ளும் போது அவளுடைய உடலில் மாற்றங்கள் சில உண்டாகின்றன. அவற்றிற்குரிய உண்மையான காரணத்தை உணராத பெண்ணின் தாயும் செவிலி யும் அவள் முருகனால் தீண்டப்பட்டாள் என்று முடிவு செய்து முருகனுக்குச் சாந்தி செய்யும் எண்ணத்தோடு வேலனை அழைக்கின்றனர். வேலன் முருக வழிபாடான வெறியை எவ்வாறு நிகழ்த்த வேண்டும் என்று நன்கு அறிந்தவன். அதனைத் தொல்காப்பியம் ‘வெறியறு சிறப்பின் வெவ்வாய் வேலன்’ என்று குறித்துள்ளது.

பெண்ணைப் பெற்றவர்களின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட வேலன், அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்கின்றான். பெண்ணின் வீட்டின் முற்றத் தில் வெறியாடும் களம் அமைக்கப்படுகின்றது. முருகனுக்குரிய சேவல் கொடி அங்கே ஏற்றப்படுகின்றது. களம் மலர் மாலைகளால் அழகுபடுத்தப்படுகின்றது; வெறியாடும் வேலனும் தன்னைத் தழைகளாலும் பூக்களாலும் அணி செய்து கொள் கிறான். பல்வேறு வகைகளில் தன்னை அலங்கரித்துக் கொண்டு நறுமணப் புகையை எழுப்பி மணிகளை ஒலித்து முருகனை வேலன் அழைக் கின்றான். முருகன் அவன்மேல் ஆவேசமுற்றதும், அவன் ஒரு வகையான மயக்க நிலையில் துள்ளிக்குதித்து ஆடிப் பாடுகின்றான். வெறிக்களத்தில் கட்டப்பட்டிருக்கும் கொழுத்த ஆட்டுக்கிடாயின் கழுத்தை அறுத்து அதிலிருந்து பெருகும் குருதியினைச் செந்தினை அரிசியுடன் கலந்து முருகனுக்குப் பலியாக அதனைத் தூவுகின்றான்.

வேலன் முருகனுக்குப் பலியாகத் தூவப்பட்ட பூக்களை அணங்குறுத்தப்பட்ட பெண்ணுக்குப் பிரசாதமாகத் தருகின்றான். குறுந்தொகைப்பாடல் ஒன்றிலிருந்து பலியிடப்பட்ட கிடாயின் கழுத்திலிருந்து பெருகிய குருதியை எடுத்து அப்பெண்ணின் நெற்றியில் வேலன் தடவுகின்றான்

கட்டுவிச்சி

சங்க இலக்கியங்களில் வேலனாகிய ஆண் பூசாரியைப் போன்றே கட்டுவிச்சி என்னும் பெண் இடம் பெறுகின்றாள்.

கட்டுவிச்சி கழங்கு நெல் முதலிய வற்றை முறத்தில் வைத்து எண்ணிப் பார்த்துக் குறி கூறுபவள்; அதனால் இவள் ‘கட்டுவிச்சி’ எனப் பெறுகின்றாள். இவள் குறிஞ்சி நிலத்தைச் சேர்ந்தவள்; இவள் கட்டுப்பார்த்துக் குறிசொல்லும் போதுதான் வழிபடும் தெய்வங்களை விளித்துப் (அகவி-அழைத்து) பாடுவதால் இவள் ‘அகவன் மகள்’ என்றும் அழைக்கப் பெறுகின்றாள். இவள் முதுமை அடைந்தவள்; இவள் தலைமயிர் நரைத்திருக்கின்றது; இவள் சங்கு மணிகளால் ஆகிய மாலையை அணிந்துள்ளாள்; இவள் தன்கையில் ஒரு சிறு கோலை ஏந்தியிருக்கின்றாள்; அவள் குறி சொல்லத் தொடங்கும் முன் கோலை ஆட்டி ஆட்டித் தெய்வத்தை அகவிப்பாடுகிறாள்; தான் வழிபடும் தெய்வத்தை அழைக்கின்றாள்; அத்தெய்வம் இருப்பதாகக் கருதும் மலையைப் பாடுகின்றாள். சங்க இலக்கியங்களில் அகவுநர் கையில் ஒரு கோல் இருப்பதாகக் குறிக்கப் பட்டுள்ளது. புறநானூற்றில் இடம்பெறும் அச் சொல்லுக்கு ‘அவர் தம் பிறப்பை உணர்த்தும் கரிய கோல்’ (புறம் 152:18) என்று உரை வரையப்பட்டுள்ளது. பதிற்றுப்பத்து அதனை ‘நுண்கோல்’ (43:27) என்கிறது. பதிற்றுப்பத்து உரையாசிரியரும் புறநானூற்று உரையாசிரியரைப் போன்றே உரை செய்துள்ளார். இவ்வுரை பொருத்தமானதன்று என்று இவ்வாய்வாளன் கருதுகின்றான்.

தன் முன்னால் உள்ள தலைவர் களின் பிறப்பையும் அவனது முன்னோர் களின் சிறப்பையும் தான் வழிபடும் தெய்வத்தின் உதவியால் அகவன் மகள் அழைத்துக் கூவிப்பாடு கின்றாள் என்பதே பொருந்தும். அவ்வகையில், இது ஒரு மந்திரக்கோலாகப் பயன்பட்டுள்ளது.

தலைவனோடு காதல் கொண்டதால் உடல் வேறுபாடுற்ற தன்மகளின் நோய்க்குக் காரணம் என்ன என்று பெண்ணின் தாயும் செவிலியும் கட்டுவிச்சியை அழைத்துக் கேட்கின்றனர். அவள் கட்டு வைத்தும் கழங்கு வைத்தும் தலைவி உற்ற நோய்க்குக் காரணம் கூறுகின்றாள். திருமுருகாற்றுப்படையில் முருக வழிபாடு நடத்தும் அகவன் மகள் ‘குறமகள்’ என்றே குறிக்கப் பெறுகின்றாள். இவள் முருகனை வழிபடும் முறை காண்பார்க்கு அச்சம் தருவதாக உள்ளது; இவள் முருகனுக்குரிய மந்திரத்தை யாரும் கேட்க முடியாதபடி தனக்குள் மெல்ல உரைக்கின்றாள்; அவள் முருகனைக் குனிந்து வணங்கி மலர்களைத் தூவி வழிபடுகின்றாள். இது இன்றும் பெருஞ் சமய வழிபாட்டில் ‘மந்திரபுஷ்பம்’ எனப்படு கின்றது. பூக்களைப் பலியாகத் தூவும் முன் அவள் தன் கைவிரல்களில் பெருவிரல் தவிர மற்ற நான்கு விரல்களையும் மடக்கிக் கொண்டு இரண்டு பெருவிரல்களையும் தன் நெஞ்சில் வைத்து முத்திரை காட்டுவதாகத் திருமுருகாற்றுப்படையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவளும் வேலனைப் போன்று காப்புக் கட்டிக் கொள்கிறாள்; ஆட்டுக்கிடாயைப் பலியாகக் கொடுத்து அதன் குருதியை வெள்ளரிசியில் பிசைந்து பலியாகத் தூவுகின்றாள்; பல இசைக் கருவிகள் முழங்கு கின்றன; நறுமணப் புகையைத் தூபமாகக் குறமகள் எழுப்புகின்றாள்; முருகனுக்குரிய மலையைக் குறிஞ்சிப் பண்ணில் பாடுகின்றாள்.

இவ்வாறு வெறியாட்டும் அதனுடைய தொடர்புடைய முருக வழிபாடும் சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பார்வை நூல்கள்

    திருமுருகாற்றுப்படை விளக்கம் - கி. வா ஜகந்நாதன்,

    Amuta Nilaiya Limiṭeṭ, 1993

    பரிபாடல் - புலியூர்க் கேசிகன், திருமகள் நிலையம்

    அகநானூறு - – ந.மு.வேங்கடசாமி நாட்டார். கௌரா பதிப்பம்.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R