முன்னுரை

ஒற்றன் என்பதற்கு உளவு பார்ப்பவன் உளவாளி என்று பொருள். ஒற்றாடல் ஆட்சியில் இருக்கும் தலைவனின், மன்னனின் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்.ஒவ்வொரு மன்னனும் தன் நாட்டிலும், பிற நாட்டிலும் ஒற்றர்களை வைத்திருப்பர். தன் நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அறியவும், வேறு நாட்டில் இரகசியமாக என்ன நடக்கிறது என்பதை, தான் அறிந்து கொள்ளவே இரகசிய ஒற்றர்களை வைத்திருப்பர். ஒரு நாட்டில் வேற்று நாட்டு ஒற்றர்கள் பிடிபட்டால், அவர்களைக் கொலை செய்யும் வழக்கமும் இருந்துள்ளது. ஒற்றர்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் ஒற்றர்கள் குறித்து ஆராய்வோம்.

புறநானூற்றில் ஒற்றன்

சோழன் நலங்கிள்ளியிடமிருந்து நீங்கி, நெடுங்கிள்ளியின் உறையூரை இளந்தத்தன் என்ற புலவன் அடைந்தான். அவனை நெருங்கி ஒற்றன் என கருதி, கொல்லத் துணிந்தான். அப்பொழுது புலவனைக் கொல்லாதவாறு நெடுங்கிள்ளியைத் தடுத்தார் கோவூர்கிழார்.

“ வள்ளியோர்ப் படர்ந்து புள்ளின் போகி,
நெடிய என்னாது சுரம் பல கடந்து
வடியா நாவின் வல்லாங்குப் பாடி
பெற்றது மகிழ்ந்து, சுற்றம் அருத்தி”
(புறநானூறு 47)

இதிலிருந்து பிற நாட்டு ஒற்றர்கள் என்ற ஐயம் ஏற்படின் அவர்களைக் கொலை செய்வதும் இருந்தது என்பதையும், அவ்வாறு இல்லை எனில் அவர்களை விடுதலை செய்ததையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

திருக்குறளில் ஒற்றர்கள்

வள்ளுவப் பெருந்தகையும் ஒற்றாடல் குறித்து தன் திருக்குறளில் குறித்துள்ளார். ஒற்றும் உரைசான நூலும் என்ற குறள் ஒற்றர்களுக்கென நூல்கள் இருந்ததைக் கூறுகிறது. மன்னர்கள் தாமே ஒற்றர்களை நியமித்திருந்தாலும் அவர்கள் சொன்னதை, உரை சான்ற நூல்களோடு ஒப்பிட்டு சரி பார்க்க வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். எல்லோரிடத்திலும் நிகழ்கின்றவை, எல்லாவற்றையும், எக்காலத்திலும் ஒற்றர்களைக் கொண்டு விரைந்து அறிதல் ஒரு மன்னனின் கடமையாகும். சந்தேகப்படுபவர்கள் என்ன தண்டனை கொடுத்தாலும் ரகசியத்தை வெளிப்படுத்தாத தன்மை உடையவராய் இருக்க வேண்டும்.பகை நாட்டு நிகழ்ச்சிகளை ஒற்றர் மூலமாகத் தெரிந்து கொண்டு, அவற்றின் பொருளை ஆராய்ந்து தெளியாத மன்னன், போரில் வெற்றி கொள்வதற்கு வழியே இல்லை.

“ஒற்றினான் ஒற்றிப் பொருள் தெரியா மன்னவன்
கொற்றங் கொளக்கிடந்தது இல்”(திருக்குறள்-ஒற்றாடல் 583)

அரசன் செயல்களைச் செய்பவர்கள், அரசனுக்குரிய சுற்றத்தினர், அரசனை விரும்பாத பகைவர் என்று சொல்லப்படும் அனைவரையும் ஆராய்வதே ஒற்றர்களின் கடமையாகும்.

“ வினைசெய்வார் தம்சுற்றம் வேண்டாதார் என்றாங்கு
அனைவரையும் ஆராய்வது ஒற்று” (திருக்குறள்-ஒற்றாடல் 584)

சந்தேகப்படாத உருவத்தோடு பார்த்தவருடையக் கண் பார்வைக்கு அஞ்சாமல், எவ்விடத்திலும் மனதிலுள்ளதை வெளிப்படுத்தாமல் இருக்கவல்லவனே ஒற்றனாவான்.

“கடாஅ உருவொடு கண்ணஞ்சாது யாண்டும்
உகாஅமை வல்லதே ஒற்று” ” (திருக்குறள்-ஒற்றாடல் 585)

சிலப்பதிகாரத்தில் ஒற்றர்கள்

சிலப்பதிகாரத்தில் ஒற்றர்கள் இருந்ததை இளங்கோவடிகள் குறிப்பிட்டுள்ளார். மதுராபதி தெய்வம், கண்ணகியிடம் கோவலனின் முற்பிறப்பு குறித்து பேசுகிறது என்பதை கட்டுரைக் காதை மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. சிங்கபுரம், கபிலபுரம் என்ற ஊருக்கு வசு, குமரன் இருவரும் அரசர்களாக இருந்தனர். அவ்விருவர் நாட்டுக்கு இடைப்பட்ட ஆறு காவத தூரம் உள்ள பகுதிக்காக இருவரும் போர் செய்து வந்தனர். மக்கள் யாரும் அப்பகுதிக்குச் செல்ல மாட்டார்கள். செல்வத்தை ஈட்டும் விருப்பத்துடன் சிறந்த அணிகளைச் சுமந்து ஒற்றர்களைப் போல மாறுவேடம் கொண்டு, தன் காதலியுடன் கூடி கபிலபுரத்து வணிகனான சங்கமன் சிங்கபுரத்து வீதியில் விற்று பொருள் ஈட்டினான். முற்பிறவியில் நின் கணவன் வசு மன்னனுக்கு அரசவினை செய்பவனாக இருந்தான். அப்போது அவன் பெயர் பரதன். அவன் சங்கமனை பகைநாட்டு ஒற்றன் என்று கூறி பற்றி இழுத்துக் கொண்டு போய், வெற்றிவேல் மன்னனுக்குக் காட்டி கொன்று விட்டான்.

“பரதன் என்னும் பெயரெனக் கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பின னாதலின்
ஒற்றன் இவன்எனப் பற்றினன் கொண்டு
வெற்றிவேல் மன்னனுக்குக் காட்டிக் கொல்வுழிக்”
(கட்டுரைக் காதை 153-155)

இதிலிருந்து வேற்றுநாட்டு ஒற்றர்களைக் கொலை செய்யும் பழக்கம் இருந்தது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

சேரன் செங்குட்டுவன், கண்ணகிக்கு சிலை வடிக்க கல் எடுக்கச் செல்லும் செய்தியை வடநாட்டு மன்னர்களுக்கு ஓலை அனுப்பும்படியாக தனது அமைச்சர்களுக்கு உத்தரவிட்டான். அப்போது அமைச்சர் அழும்பிள்வேள், வேண்டாம் மன்னா வடபுறத்து மன்னர்களின் ஒற்றர்கள் நமது காவல்மிக்க தலைநகராகிய இவ்வஞ்சியின் வாயிலிடத்தே நீங்காது காத்துக் கிடப்பார். பகை வேந்தர்களின் ஒற்றர்களே இச்செய்தியைத் தத்தம் அவர் அரசர்களுக்குத் தெரிவிக்கும் தன்மை உடையவர்கள். ஆதலால் வடதிசை செலவு குறித்து, நம் நகரிலேயே பறையரைந்து அறிவித்தாலே போதும் என்று கூறினார்.

“காவல் வஞ்சிக் கடைமுகம் பிரியா
வம் பணி யானை வேந்தர் ஒற்றே
தஞ்செவிப் படுக்கும் தகைமைய வன்றோ”
(காட்சிக் காதை 174 – 176)

 

கம்பராமாயணத்தில் ஒற்றர்கள்

கம்பராமாயணத்தில் ஒற்று கேள்விப் படலம் என்று தனி ஒரு படலத்தையே கம்பர் இயற்றியுள்ளார். இராவணனிடத்தில் ஒற்றர்கள் இருந்துள்ளனர். இராவணன் கோபம் கொண்டதால் அங்கிருந்து வெளியேறிய வீடணன், இராமனிடம் அடைக்கலம் பெற்ற பின் வானர படையின் அளவையும், அவர்களின் செயல்பாடுகளையும் அறிந்து கொள்ள ஒற்றர்களைக் கடற்கரைக்கு அனுப்பி வைத்தான்.

ஒற்றர்களைக் கண்டுபிடித்த வீடணன்

அரக்கர்களாகிய ஒற்றர்கள் தம் உருவில் வராமல் குரங்கின் உருவில் வந்து, குரங்கு சேனையில் கலந்து விட்டனர். ஆனால் இராமபிரானிடம் அடைக்கலம் பெற்ற வீடணன் அவர்கள் பாசறையில் திரிவதை உணர்ந்து அவர்களைப் பிடித்துக் கொண்டான். அவர்களைச் சேர்த்து மடக்கப்பட்ட விரல்களை உடைய கைகளால் வானர படையினர் கண்டு மனம் இறங்குமாறு குத்தி, மேலும் ஒரு தீமையும் செய்யாதவாறு மாணைக் கொடியினாலேச் சேர்த்துக் கட்டி, அந்த வஞ்சகரை அழைத்து வந்து இராமபிரான் முன் நிறுத்தினான்.

ஒற்றர்களை இராமன் முன் அழைத்து வரல்

இவர்களைக் கண்ட இராமன், வீடணனிடம் பகைவர்கள் என்று மனதில் கொள்ளாதவனாய் இந்தக் குரங்குகள் பலரும் வெறுத்து கூறும் தீங்கைச் செய்தனவோ என்று இரக்கத்துடனேப் பார்த்துக் கேட்டான். நம்மை அடைக்கலம் என்று அடைந்தவர் குற்றம் செய்தாலும், அவர்களுக்கு நாம் தவறு செய்யக்கூடாது வருத்தம் வேண்டாம் விடுவீராக என்று சொன்னான். (ஒற்றுக் கேள்விப்படலம் 713)

உடனே வீடணன் இவர்கள் நம் நட்பினரான குரங்கினத்தவர் அல்ல. இராவணனால் அனுப்பப்பட்ட ஒற்றர்கள். இவர்கள் சுகன், சாரன் எனும் பெயரை உடையவர்கள் என்றான்.

“தகை நிறைவு இல்லா உள்ளத்து இராவணன் தந்த ஒற்றர்
சுகன் இவன் அவனும் சாரன் என்பது தெரியச் சொன்னான்”
(ஒற்றுக் கேள்விப்படலம் 714)

உடனே அந்த ஒற்றர்கள் இராமனை நோக்கி வீரனே, இராவணனின் தம்பியாகிய இவன் வஞ்சனையால் அண்ணனுக்கு வெற்றி தேடித் தர, அடைக்கலம் என்ற பெயரில் உன்னிடம் வந்துள்ளான். நாங்கள் வானரர்களே என்று கூறினர். வீடணன் ஒரு மந்திரத்தை உச்சரித்த அளவில், அவர்கள் குரங்கு வடிவம் நீங்கி, அரக்கர் உரு பெற்றார்கள். இராமன் ஒற்றர்களை நோக்கி சிரித்த முகத்துடன் அஞ்சாதீர், நீவிர் இங்கு வந்தது ஏன்? எல்லாவற்றையும் விளக்கமாகக் கூறுங்கள் என்று கேட்டான். (ஒற்றுக் கேள்விப்படலம் 717)

ஒற்றர்களின் பதில்

இராவணனுக்காக எங்கள் தீவினையால் ஒற்று அறிந்து உண்மையை உணர்ந்து தெரிவிக்க இங்கு வந்தோம் என்று கூறினர். (ஒற்றுக் கேள்விப்படலம் 718)

ஒற்றர்களிடம் இராமன் கூறியவை

இராவணனிடம் நீங்கள் சென்று, இலங்கை செல்வத்தை நான் வீடணனுக்கு அளித்ததைச் சொல்லுங்கள். இலங்கை வர அணை கட்டியதையும், வில் வீரர்கள் வந்துவிட்டதையும், அவனுக்குச் சொல்லுங்கள். நாங்கள் அறியாததால் அவன் உயிரோடும், உறவோடும் இவ்வளவு காலம் இருக்க நேர்ந்தது என்பதையும் சொல்லுங்கள். (ஒற்றுக் கேள்விப்படலம் 720 இராவணனுக்குத் துணையாக யார் வந்தாலும், அறம் அல்லாதவற்றை செய்தவனான இராவணனைப் பல துண்டங்கள் ஆகுமாறு செய்ய இருப்பதையும் அவனுக்குச் சொல்லுங்கள்.

“சண்டம் கொள் வேகமாகத் தனி விடை உவணம் தாங்கும்
துண்டம் கொள் மௌலித் துளவினானோடும் தொல்லை
அண்டங்கள் எவையும் தாங்கிக் காப்பினும் அறமிலாதாற்
கண்டங்கள் பலவும் காண்பென் என்பதும் கழறுவீரால்”
(ஒற்றுக் கேள்விப் படலம் 721)

ஜடாயுவைக் கொன்றவன் அதனால் அவனையும், அவன் சுற்றத்தையும், பிற படைகளையும் முழுவதுமாக அழித்து, அவனைக் கொன்று, உடலைத் தேவர்களுக்கு அளிப்பேன் என்பதையும் கூறுங்கள்.(ஒற்றுக் கேள்விப்படலம் 722)

சீதையைச் சிறை வைத்த அவனைச் சுற்றத்துடனே கொன்று, எரி நகரம் என்றும் அழியாத நிலையில் வைப்பேன் என்பதையும் கூறுங்கள். (ஒற்றுக் கேள்விப்படலம் 723) ஒற்றர்களைப் படை இருக்கும் எல்லா இடங்களிலும் புகுந்து படையின் அளவை நன்றாக கண்டீர். இனி நீங்கள் வேறொரு தீங்கும் செய்வதில்லை என்றால், அஞ்ச வேண்டாம் என்று நான் சொன்ன அபயம் உண்டு என்று இராமன் ஒற்றர்களைப் பார்த்துக் கூறினான். வீடணன் முதலியோரைப் பார்த்து சொல்லாலும், மனதாலும், கையாலும் இந்த ஒற்றர்களை நம் படையினர் வருத்தாதவாறு விரைந்து அனுப்பி வையுங்கள் என்று மொழிந்தான். அந்த ஒற்றரும் தப்பித்தோம் என்று சென்றனர். (ஒற்றுக் கேள்விப் படலம் 724)

இராவணனிடம் ஒற்றர்கள் செய்தி கூறல்

இராவணனின் கேள்விக்கு ஒற்றர்கள் கடலை ஓர் இமைப்பொழுதில் கடந்து போய், குரங்கு படை நெருங்கி இருக்கும் பாசறைச் சூழல்களில் அந்த வானரரைப் போலவே வடிவம் கொண்டு பகைவர்கள் அறியா வகையில் சென்றோம்.

உன் அடியவராகிய நாங்கள் அந்தப் பெரிய படையை விருப்பத்தோடு முழுவதும் காணத் தொடங்கினோம். ஆனால் பழைய கடலின் தன்மையைக் காண்பதற்காக எல்லாப் பக்கங்களிலும் பறந்து செல்லும் மிக்க வேகத்தை உடைய கருடனைப் போன்று காண இயலாதவர் ஆனோம். பகைவரின் படை அளவு முதலியவற்றைச் சொல்வதற்கு நாங்கள் வரவேண்டும் என்ற கருத்து உண்டோ? ( வர வேண்டுமோ) கடல் போன்ற கவலையின் முடிவைக் காணாது துன்பமடைந்து அவர்கள் கடலை அடைத்து அணைகட்டிய போது, ஆரவாரம் கொண்டு எழுந்த நீர்த் திவலையே இங்கு வந்து அறிவித்ததன்றோ.

இராமன் தன்னிடம் வந்து தன்னை நோக்கி வரம் வேண்டிக் கிடக்கவும், வருணன் வந்து உதவவில்லை என்ற பழிமொழியை எண்ணி, இராமன் தன் தோள்களாகிய மலைகளை நோக்கித் தன் கையில் உள்ள அம்பை நோக்கி வில்லைப் பார்த்த அளவில் கடல் வெந்தது.

உன் தம்பியாகிய வீடணனே, தேரிலே செல்லும் கதிரவனும், விமானத்தில் செல்லும் சந்திரனும், இராமனின் பெயரும் இருக்கும் வரையிலும் கடலால் சூழப்பட்ட இலங்கையின் பெருஞ்செல்வத்தைப் பெற்றான். முன்பு தூதராக வந்த அனுமன் அளவற்ற காரணத்தால் இராமனின் தோளாற்றலை விளக்கித் தெரிவித்தான். அங்ஙனம் இருக்க கடலை அணைக்கட்டித் தடுத்தான் என்பதைக் கொண்டு அது அவனால் தற்போது புதிதாய் ஏற்பட்ட வலிமை என்று எண்ணுதல் தக்கதாகுமோ.

தேவர்கள் அமிழ்தத்தை உண்ட சமயத்தில், அவர்கள் நடுவில் இருந்த அசுரனை அறிந்து மிக்க வல்லமை கொண்ட மாயவனான திருமாலுக்குச் சூரிய சந்திரன் காட்டிய தன்மை போல, நின் தம்பி வீடணன், குரங்குக் கோலம் கொண்ட எங்களை அறிந்து சினம் கொண்டவனாய் இராமனுக்குத் தெரிவித்தான்.

“பற்றி வானர வீரர் பனைக் கையால்
எற்றி எங்களைஏண் நெடுந் தோளிறச்
சுற்றி ஈர்த்து அலைத்துச் சுடர்போல் ஒளிர்
வெற்றி வீரற்குக் காட்டி விளம்பினான்”
(ஒற்றுக் கேள்விப்படலம் 750)

எங்களைப் பிடித்து வானர வீரர்களைக் கொண்டு பனைமரம் போன்ற கைகளால் எம் பெரிய தோள் ஒடியுமாறு குத்திக் கைகளை இழுத்துச் சுற்றி வைத்து வருத்தி, அந்த வீடணன், கதிரவன் போன்ற வெற்றி வீரனான இராமனுக்குக் காட்டி இன்னார் என தெரிவித்தார். அந்த இராமன் ’என் அம்புகளால் முன்பே இராவணன் அடைந்துள்ள வரங்களை எல்லாம் அழிப்பேன்’ எனச் சொன்னான். நாங்கள் குரங்கின் வடிவில் திரியும் அரக்கர் என அறிந்ததும், அவன் அருள் செய்ததால் உயிர்ப் பெற்றோம். இது நாங்கள் ஒற்றறிந்து வந்த செய்தி என்று கூறினர்.

மேலும் அவ்வொற்றர்கள் பகைவரிடத்தில் கண்ட எல்லாவற்றையும், தேவனான இராமன் கூறிய அனைத்தையும் பிழை இல்லாது கூறினர். பின்னும் அவர்கள் ’மாறுபாட்டுடனே குற்றம் யாவையும் நீங்குக, இன்று முதல் நின் ஆயுள் மேலும் மேலும் வளர்வதாக என்று வாழ்த்தினர்.

ஒற்றர்கள் தகவல் தொடர்பு சாதனங்கள்

வாலி, சுக்ரீவனிடம் போரிடச் செல்ல புறப்பட்டபோது தாரை, வாலியைத் தடுத்தாள். அப்போது வாலி, இராமன், தன் தந்தையே அரசுரிமை வழங்க மாற்றாளாகிய கைகேயியின் கட்டளைப் படி காடு வந்தவன். தம்பியரை உயிராக நினைப்பவன் என்று கூறுகிறான். அயோத்தியில் நடந்ததை ஒற்றர்கள் மூலம் அறிந்திருந்தான் என்பதை அறிய முடிகிறது. (வாலி வதைப்படலம் 259)

மாற்றான் தாயின் ஆணையால் இராமன் காடு வந்தான் என்பதை இராவணன் கூறுவதும், கௌதம முனிவர் மனைவி அகலிகையே இந்திரனுடன் இருந்ததால் அவளுக்கு யாதொரு கேடும் வரவில்லை என்று இராவணன் கூறுவதும், ஒற்றர்கள் மூலம் தகவல் தெரிந்து வைத்துள்ளான் என்பதை அறிய முடிகிறது.(மாயா சனகப்படலம் 1589) முதல்முறையாக இராவணன், இராமனுடன் போர் புரிந்து தோற்றுப் போய் வருந்தி கொண்டிருந்தான். அப்போது பாட்டன் மாலியவான் அவனிடம் பேசும் போது இராவணன்,படை கருவிகளை எறிந்து செய்யும் போரில், எண்ண முடியாத வெள்ளம் என்னும் கணக்கினரான அரக்கர்களின் உயிர்கள் ஒழியும்படி அவ்வுயிர்களைக் கவர்ந்த போதும், என்னை இந்த அவமானத்துக்கு உள்ளாக்கும் அம்பை எய்த போதும், அந்த இராமனுக்குக் கூனியின் கூன் நிற்கும்படி மண் உருண்டையை வில்லின்று தெறித்த போது இருந்த நிலையை ஒத்திருந்ததே அல்லாமல், போருக்குரிய கோபம் இருந்த தன்மை தெரியவில்லை என்கிறார்.

“எறிந்த போர் அரக்கர் ஆவி எண்இலா வெள்ளம் எஞ்சப்
பறித்தபோது என்னை இந்தப் பரிபவம் முதிகில் பற்றப்
பொறித்த போது அன்னான் அந்தக் கூனி கூன் போக உண்டை
தெறித்தபோது ஒத்தது அன்றிச் சினம் உண்மை தெரிந்தது இல்லை“
(கும்பகர்ணன் வதைப்படலம் 1229)

அயோத்தியில் இராமன் சிறுவயதாக இருந்தபோது, கூனியின் முதுகில் மண் உருண்டை வில்லினின்று தெறித்தான் என்பதையும் இராவணன் தெரிந்து வைத்திருந்தான்.

இவ்வாறு ஒற்றர்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்பதையும் அறிந்து கொள்ள முடிகிறது.

முடிவுரை

ஒற்றர்கள் மன்னனுக்கு தேவை என்பதையும், ஒரு நாட்டு ஒற்றன் வேறு நாட்டில் பிடிபட்டால் அவனைக் கொலை செய்துவிடுவதையும் சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் காணமுடிகிறது. ஆனால் கம்பராமாயணத்தில் இராவணனின் ஒற்றர்கள் வானரப் படையில் குரங்குபோல கலந்ததையும், அவர்களை வீடணன் அடையாளம் கண்டு பிடித்து இராமன் முன் நிறுத்தியதையும், அவர்களும் நாங்கள் வானரர்களே. வீடணன்தான் உன்னிடம் அடைக்கலம் என்ற பெயரில் தன் அண்ணன் வெற்றிபெற இப்படிச் சொல்கிறான் என்றனர். மந்திரத்தினால் அவர்களின் உண்மை உருவம் வெளிப்பட, இராமன் அவர்களைத் தானும் கொல்லாமல், மற்றவர்களாலும் அவர்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லாமல் பார்த்துக் கொண்டான்.ஒற்றர்களிடமே,இலங்கைச் செல்வத்தை தான் வீடணனுக்கு அளித்ததையும், இராவணனை அழிக்க இருப்பதையும் கூறி இராவணனிடம் இத் தகவலைத் தெரிவியுங்கள் என்று கூறி அவர்களைத் தூதர்களாக அனுப்பினான் என்பதையும், ஒற்றர்கள் தகவல் தொடர்பு சாதனங்கள் போல் செயல்பட்டுள்ளனர் என்பதையும் நாம் கம்பராமாயணத்தின் மூலம் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

1. பாலசுப்பிரமணியன்.கு. வை (உரை.ஆ) புறநானூறு மூலமும் உரையும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பிரைவேட்) லிமிடேட் சென்னை, 2004.
2.பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1,2,3,4,5,6,7,8. வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011
3. ஸ்ரீ. சந்திரன். ஜெ.சிலப்பதிகாரம் மூலமும் தெளிவுரையும், தமிழ் நிலையம், சென்னை, 2012.
4. ஸ்ரீசந்திரன்.ஜெ. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொகுதி 1,2,3, தமிழ் நிலையம், சென்னை,2007.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R