காலமும் மனிதர்களும் நூலின், ஒரு துளியாக, நூல் பக்கம் 191 இல் இருந்து:
“எங்கிருந்தோ வந்து தயாராகவிருந்த பொருளாதார வாய்ப்புகளை அபகரித்துக் கொண்ட மக்கள் அல்ல மலையக மக்கள். அவர்கள் எந்தவொரு நாகரிக சமுதாயத்தினதும் உருவாக்கத்தின் மூலத்தை போலவே காடுகளை அழித்து வளமாக்கி புதியதொரு பொருளாதார துறையை அடைந்தவர்கள். இவர்கள் அமைத்த இந்த பொருளாதார துறையும் அதைச் சார்ந்த அமைப்புகளும் இன்றும் இந்நாட்டின் ஆதாரமாயிருக்கின்றன. இம்மக்களின் வரலாறும் உருவாக்கமும் யாரையும் போலவே இவர்களும் இந்த மண்ணின் மக்கள் என்பதை ஆதாரப்படுத்துகின்றன. நமது வரலாறு குறித்த கண்ணோட்டம் நம்மிடையே தன்னம்பிக்கையினையும் உறுதியினையும் வளர்க்க உதவும்” (– எல்.சாந்திகுமார் - மலையகத்தின் வரலாறும் சமூக உருவாக்கமும்- தீர்த்தக்கரை – 1980 நவம்பர்-டிசம்பர்).
மேற்படி திரு.எல்.சாந்திகுமார் அவர்களின் மலையக மக்கள் குறித்த புரிதல் போக, அவரது மலையக சமூக உருவாக்கம், மலையகத் தேசியம், இடதுசாரி அமைப்புகளின் ஸ்தாபன பிரச்சினைகள், தேசிய சிறுபான்மை இனங்கள் குறித்த கண்ணோட்டம் என பல்வேறான சிந்தனை ஓட்டங்கள் மலையத்தின் இலக்கிய ஆளுமைகளால் மட்டுமின்றி தமிழ் இலக்கிய உலகிலுள்ள அனேகரால் தீர்க்கமான சிந்தனைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்பட்டுள்ள வேளையில், திரு பதுளை சேனாதிராஜா அவர்களுக்கு இக்கருத்துக்கள் "திருப்தியளிக்கவில்லை" என வருத்தம் கொள்கிறார்.
இதுதான் வியக்க வைக்கின்றது. இப்படி பலராலும் போற்றப்பட்டு, ஏற்கனவே தடம் பதித்துள்ள, தீர்த்தக்கரை போன்ற சஞ்சிகையையும், அதற்கு ஆணி வேராக திகழ்ந்த சாந்திகுமாரின் படைப்புகளையும் இப்படி இவர் விளங்கவில்லை என கூறுவது புதிரானது. ஒரு வேளை, பல் ஆண்டு காலமாய் இவர், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின், நிரந்தர ஊழியராக இருந்ததின் விளைபயனோ, இது என்பதும் தெரியவில்லை.
ஆனாலும், காலமும் மனிதர்களும் என்ற இந்நூல், எமது அறிவு தேடலுக்கான வெளியை திறந்து விடுவது. அது மிகவும் நிதானமான வாசிப்பிற்கானது.