எனக்குப் பிடித்த மேனாட்டுப் பாடகர்களில் ஒருவர் மிக ஜகர் (Mike Jagger) . 'ரொக்' இசையில் புகழ்பெற்ற இசைக்குழுவான 'தி ரோலிங் ஸ்டோன்ஸ்' குழுவை உருவாக்கியர்களில் ஒருவர். அவரது தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் முக்கிய பாடல்களில் ஒன்று 'Sympathy For The Devil' (சாத்தான் அல்லது பூதம் மீதான இரக்கம்). தி ரோலிங் ஸ்டோன்ஸின் ஆரம்ப காலப் பாடல்களில் ஒன்று இப்பாடல். 1968இல் லண்டனின் பார்வையாளர்களின் ஒலி/ஒளிப்பதிவு செய்யப்பட்ட பாடல்.
பாடகர் தன்னைச் சாத்தானாக உருவகித்துப் பாடும் பாடலின் வரிகளை உணர்ந்து இரசிக்கையில் பாடலும், பாடகரின் நடிப்பும், குரலும், நடன அசைவுகளும் சுவைக்கும். பாடலின் தொடக்கத்தில் 'Please allow me to introduce myself' (தயவுகூர்ந்து என்னை அறிமுகப்படுத்த விடு) என்று தன்னை அறிமுகப்படுத்தும் பூதம் (பாடகர் குரலினூடு) தொடர்ந்து வரும் தான் வேறுயாருமில்லை பூதமே என்பதைப் பார்வையாளர்களுக்கு உணர வைக்கின்றது.
அதற்கு அது வரலாற்று நிகழ்வுகளைத் துணைக்கழைக்கின்றது. உதாரணத்துக்கு ருஷ்யப் புரட்சி, கென்னடி படுகொலை, ஜார் மன்னர்களின் படுகொலை போன்ற நிகழ்வுகளையெல்லாம் துணைக்கழைக்கும் பூதம் அவை எல்லாவற்றுக்கும் காரணம் தானே என்கின்றது. இப்பட்டியலில் பூதம் எனக்கு ருஷ்யப் புரட்சியை உள்ளடக்கியதில் உடன்பாடில்லை. அதனைத்தவிர்த்துவிட்டே இப்பாடலை இரசித்தேன் மிக் ஜகருக்காக.
தான் நீண்ட காலமாக இருந்து வருவதாகவும் (I've been around for a long, long year), மானுடர்களின் ஆன்மா,நம்பிக்கையை பறித்திருப்பதாகவும் (Stole many a man's soul and faith) இவ்விதம் பல கூறும் பூதம் , தன்னால் நிகழ்ந்த வரலாற்று நிகழ்வுகளையும் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கின்றது. அத்துடன் கூறுகிறது 'உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். என் பெயரை ஊகித்திருப்பீர்கள் என்றும் நம்புகின்றேன்.' (Pleased to meet you, hope you guess my name) என்று கூறும் பூதம் 'ஆனால் உங்களால் என்னைப் புரிந்து கொள்ள விடாமக் தடுப்பது என் விளையாட்டின் தன்மை' (“But what's puzzling you is the nature of my game) இவ்விதம் கேலியும் செய்கிறது. தன்னையிட்டுப் பெருமிதப்பட்டுக்கொள்ளவும் செய்கிறது. பாடலின் இறுதியில் பூதம் பார்வையாளரைப் பார்த்து கேட்கும் 'என் பெயர் என்ன?' வென்று.
மிக் ஜகரின் துடிப்பு மிக்க நடன அசைவுகள், பல் வகை உணர்வுகளை வெளிப்படுத்தும் குரல், வசீகரம் மிக்க உடல், உள ஆளுமை, பாடும் திறன் , மேடையை முழுதாகத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வல்லமை, நீண்ட தலைமுடியுடன் கூடிய உடல்வாகு என்னை மிகவும் கவர்ந்தவை. தி ரோலிங் ஸ்டோன்ஸ் இசைக்குழுவின் சக வாத்தியக் கலைஞர்கள் ஒவ்வொருவரையும் , அவர்களது இசை வல்லமையையும் நான் இரசிப்பவன். இப்பாடலும் அவர்கள்தம் திறமையினை வெளிப்படுத்தும்.
https://www.youtube.com/watch?v=Jwtyn-L-2gQ
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.