மு. நித்தியானந்தன்- இலங்கை, தமிழகம், புகலிடம் அரை நூற்றாண்டுக்கு மேற்பட்ட பிரசன்னம்!- பவள விழாக்காணும் நாளில்,இனிய பிறந்த நாள் வாழ்த்து! - எம்.பௌசர் -
இலங்கையில் தமிழர் இனப்பிரச்சினை தீவிரம் பெற்ற 1980களில் , இலங்கை தமிழ்ச் சூழலின் கல்வி, அரசியல், சமூகம், இலக்கியத் தளங்களில் முன்னணியில் இருந்த ஆளுமைகளிலொருவராக மு. நித்தியானந்தன் இருந்தார். அந்தப் பெயர் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமையாக அப்போது இருந்தது. அன்றைய சூழலில் இந்த பல்தளங்களில் நடந்த பல முக்கிய பணிகளுக்கு நேரடியாகவும் , பகுதியாகவும் அவரது பங்களிப்பும் உழைப்பும் தலையீடும் இருந்து வந்திருக்கின்றன. அன்றைய சமகாலத்து முக்கிய ஆளுமைகளுடனும் அரசியல், சமூக, கலை இலக்கியப் போக்குகளுடனும் உறவும் உரையாடலும் செயற்பாடும் அவருக்கு இருந்திருக்கிறது. இந்த பெரும் ஆளுமை உருவாக்கம் அறிவாலும், தொடர்ச்சியான வாசிப்பாலும் தேடலாலும் , செயற்பாடுகளாலுமே சாத்தியமாகியது. அத்தகைய முக்கிய இருப்பு , இப்போதைய அவரது எழுபத்தைந்தாவது அகவை வரையும் தொடர்வது எல்லோருக்கும் வாய்த்துவிடும் பெறு அல்ல.
அவரைப்பற்றி எழுதுவதாக இருந்தால், ஒரு விரிவான நூலே எழுதி விட முடியும். அதற்கான விடயப்பரப்பும் பங்களிப்புக்குமுரிய வரலாறும் நம் கண்முன்னே உள்ளது. அந்தளவிலான விரிந்த இயக்கப் பரப்பு அவருடையது. தமிழ்கூறும் அறிவுலகம் தெரிந்து வைத்திருக்கும் , மதிக்கும் ஒரு ஆளுமை பற்றி விரிவாக எழுத இந்த பகுதி அதற்கு இடம் வழங்காது! எதைச் சொல்வது எதைத் தவிர்ப்பது என்கிற தெரிவு , அவரைப் பற்றி எழுதுவோருக்கு முன்னிருப்பது தவிர்க்க முடியாததே!