முருகபூபதியின் கதைத் தொகுப்பின் கதை : புலம்பெயர் வாழ்வியல் அனுபவத்தோடு ஈழ அரசியலையும் பேசும் கதைகள் ! - கானா பிரபா -
- ( சிட்னியில் அண்மையில் நடந்த இலக்கிய சந்திப்பில், கானா. பிரபா எழுதிய வாசிப்பு அனுபவத்தை சமர்ப்பித்தவர் : செல்வி அம்பிகா அசோகபாலன் ) -
இன்றைய ஈழத்து இலக்கியப் பரப்பில் ஒரு நடமாடும் வரலாற்று ஆவணமாகத் திகழ்பவர் எழுத்தாளர் முருகபூபதி. சொல்லப் போனால் கிட்டத்தட்ட ஐம்பது வருட கால ஈழத்து இலக்கிய மரபின் ஒரே சாட்சியமாக முருகபூபதி விளங்குகின்றார் என்றால் மிகையில்லை. வாராந்தம் அவர் பகிரும் இலக்கிய மடல்கள், சக எழுத்தாளர்கள், அரசியல் கொண்டோர் குறித்து அவரின் பகிர்வுகள் எல்லாமே முன் சொன்னதை நியாயப்படுத்தும். முருகபூபதியின் படைப்புகளும் ஒரு குறுகிய வட்டத்தோடு நின்று விடவில்லை. அதனால்தான் அவை கட்டுரை, நாவல், பயண இலக்கியம், சிறுவர் இலக்கியம், புனைவு சாரா இலக்கியம் என்பவற்றோடு, சிறுகதைகளாகவும் பன்முகப்பட்டு நிற்கின்றன. தமிழக, ஈழத்து இலக்கியவாதிகளின் நட்பையும், பரந்துபட்ட வாசகர் வட்டத்தையும் சம்பாதித்து வைத்திருக்கும் முருகபூபதி, இரண்டு தடவைகள் இலங்கையின் தேசிய சாகித்திய விருது பெற்ற பெருமையையும் தனதாக்கிக் கொண்டவர்.
முருகபூபதி சமீப ஆண்டுகளில் புனைவு சாரா இலக்கியங்களிலேயே அதிகம் மூழ்கிப்போய்விட்டார் என்ற குறையைக் களையுமாற் போல, “கதைத் தொகுப்பின் கதை” என்ற அவரின் சிறுகதைத் தொகுப்பு வெளிவந்துள்ளது. அவரது ஏழாவது கதைத் தொகுதியான இந்தத் தொகுப்பை இலங்கை ஜீவநதி வெளியிட்டிருக்கின்றது. மொத்தம் பதினைந்து சிறுகதைகள் திரட்டப்பட்டு இந்தத் தொகுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலிய மண்ணில் மேற்படிப்புக்காக வந்த புலமையாளர் கலாமணி அவர்களின் மகன் பரணீதரனை சிறுவனாக இந்த மண்ணில் கண்டவர் முருகபூபதி. தற்போது அதே சிறுவனை ஜீவநதி ஆசிரியர் பரணீதரனாகக் கண்டு, அவரே பின்னாளில் தன்னுடைய நூலை வெளியிடுவார் என்று முருகபூபதி அன்று நினைத்திருப்பாரா என்று இந்த நேரம் சிந்திக்கத் தோன்றுகிறது. அது முருகபூபதியின் நீண்ட இலக்கியப் பயணத்தையும் சொல்லாமற் சொல்லி வைக்கின்றது.