ஜெய்சங்கரின் வரவின் பின்னால் அந்தரிக்கும் சக்திகள் - ஜோதிகுமார் -
எதிர்ப்பார்க்கப்பட்டது போல், ஜெய்சங்கரின் வருகையின் பின், பல்வேறு சக்திகள், பேச்சுவார்த்தையின் தாக்கத்தை முற்றாக இல்லாதொழிக்கவோ என்னவோ, கங்கணம் பூண்டாற் போல், வரிந்து கட்டி களத்தில் இறங்கியுள்ளது இப்போது தெரியவந்துள்ளது. இதில், முதலாவது வெடி ஓசை, ஜனாதிபதி அவர்களாலேயே ஏற்படுத்தப்பட்டது. அதாவது, ஜெய்சங்கர், பேச்சுவார்த்தை முடித்து நாட்டை விட்டு கிளம்பிய கையோடு, அன்னார், தமிழ் தலைவர்களை பேச அழைத்துள்ளார். ஜனாதிபதியின், பேச்சுக்கான இவ் அழைப்பை பலர் நிராகரித்துள்ள வேளை, சம்பந்தனும் சுமந்திரனும், கிளம்பி ஜனாதிபதி அவர்களை சந்தித்துள்ளனர். இதற்காரன காரணம், சுமந்திரன், ஜெய்சங்கரிடமே தெரிவித்துள்ளது போல், பேச்சுவார்த்தைக்கு இந்நாட்டின் உயர்பீடம் அழைக்கும் போது, அப்பேச்சுவார்த்தைகள் மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், நாங்கள் அதில் பங்குபற்றாவிட்டால், பேச்சுவார்த்தைக்கு செல்ல தயாரில்லாதவர்கள் - அதுவும் அழைத்த போதும் கூட, என்ற அவபழிக்கு ஆளாகும் சூழ்நிலையிலேயே, இவ்வாறு கலந்து கொள்ள வேண்டிய நிர்பந்தங்கள் எழுகின்றன என்று கூறப்பட்டாற் போலும் இருக்கலாம். இருந்தும், இது, தமிழ் தலைவர்களிடையே பிளவுகளை உருவாக்க கூடியது என்பதில் ஐயமில்லை.
இது விடயத்தின் ஒரு பக்கம். விடயத்தின் மறுபக்கமே, சுவாரஸ்யமானது - சாணக்கிய நகர்வு சம்பந்தமானது.
யாழில், தனது பொங்கல் விழாவில், 13 உடனடியாக அமுல்படுத்தப்படாது என்ற தனது நிலைப்பாட்டை அவிழ்த்து விட்ட ரணில் விக்கிரமசிங்க அவர்களின் கூற்றுக்கு நேர் விரோதமான நிலையில், அண்மையில் வருகை தந்த ஜெய்சங்கரின் நிலைப்பாடு இருந்துள்ளது. அதாவது ’13 உடனடியாக முழுமையாக அமுல்படுத்தப்பட்டாக வேண்டும்’ என்பது அவரது நிலைப்பாடாகின்றது. இத்துடன் நிறுத்தாது, அன்னார் உடனடியாக இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டாக வேண்டும் என்ற அழைப்பும் அவரால், அன்னார் கையில் திணிக்கப்பட்ட கதையுமானது. அப்படி எனில், தான் இந்தியா செல்லும் முன், சில விடயங்களை இங்கே முடித்தாக வேண்டும் - (காட்டுவதற்கேனும் அல்லது பேசுவதற்கேனும்). முக்கியமாக, 13வது திருத்த சட்டத்தின் அமுலாக்கத்தை அல்லது மாகாணசபை தேர்தலை - இழுத்தடிப்பது – என்பதற்கு வழிவகை செய்யும் வகையில், சில நகர்வுகள் இங்கே மேற்கொள்ளப்பட்டாக வேண்டி உள்ளது.