முன்னுரை
கம்பராமாயணத்தில் விலங்குகள், பறவைகள்,நீர்வாழ்வன குறித்துக் கூறியுள்ளதைப் போல சில பூச்சிகள் குறித்தும் கம்பர் கூறியுள்ளார். அவற்றுள் குழவி,விளக்கு விட்டில் பூச்சி,மின்மினிப்பூச்சி,சிலந்திப் பூச்சி, வண்டு,தும்பி, மிஞிறு,இந்திரகோபப்பூச்சி,ஈ, எறும்பு, சிவப்பு எறும்பு,சிற்றெறும்பு,கரையான் முதலிய பூச்சிகள் குறித்து கம்பர், தம் இராமாயணத்தில் கூறியுள்ள பூச்சிகள் குறித்து ஆராய்வோம்.
குளவி
குளவியானது புழுக்களைப் பிடித்துக் கொட்டிக் கொட்டி தன் வடிவம் ஆக்குதல் போல, இராமன் தன் சரங்களால் அரக்கர்களை அழித்து, தேவர்கள் ஆக்கினான். இராமபாணம் பட்டோர் எல்லாம் தேவரானார்கள்..
"அஞ்சிறை அறுபதம் அடைந்த கீடத்தைத்
தஞ்சு எனத் தன் மயம் ஆக்கும் தன்மை போல்
வஞ்சகத்து அரக்கரை வளைத்து வள்ளல்தன்
. செஞ் சரத் தூய்மையால் தேவர் ஆக்கினான்"
(கரன் வதைப் படலம் 484)
இது கர-தூடணருடன் நிகழ்த்தியப் போரில் நடந்தது.
விளக்கு விட்டில் பூச்சி
விளக்கு எரியும்பொழுது தானாகச் சென்று அதன்மேல் விழுந்தழியும் விட்டில்பூச்சி, கம்பரில், ஒரு கதைமாந்தர்மேல் பிறர் செல்லும் விரைவுக்கும். அவ்வாறு சென்றபின் அவரோடு மோதியழிதலுக்கும் உவமையாகியுள்ளது.