நடராசன் சேர் இவ்வுலகை நீத்துவிட்டார் என்ற செய்தியை அறிந்தபோது, தாங்கொணாத் துயர் என் தொண்டையை இறுக்கியது. அதிர்ச்சியில் இருந்து மீண்டெழும்போது, அவருடன் உறவாடிய நினைவுகள் ஒன்றையொன்று முந்திக்கொண்டு நெஞ்சில் அலை மோதத் தொடங்கின.
என் வாழ்வில் மறக்க முடியாத அவர், எனது உயிரியல் பாட ஆசிரியர். என்னுள்ளிருந்த எழுத்து ஆற்றலை இனங்கண்டு, என்கழுத்தைப் பிடித்து எழுத்து உலகில் இழுத்துத் தள்ளிவிட்ட பெருந்தகை. தமிழை உயிராகவும், பகுத்தறிவை உணர்வாகவும் கொண்டு வாழ்ந்த விஞ்ஞான ஆசிரியர். என்னில் மிகுந்த அன்பு கொண்டு கண்காணித்து என் வளர்ச்சியில் அக்கறை செலுத்தியவர். 1980 ஆம் ஆண்டு, நாயன்மார்கட்டில், அவரது இல்லத்திற்குச் சென்று சந்தித்தபோது, தன்வீட்டில் ஒருநாள் தங்கிச் செல்லவேண்டுமென்று அன்புக் கட்டளையிட்டு என்னைச் தங்கச் செய்து, மகிழ்வு கொண்டு என்னையும் மகிழவைத்தார். எனது திருமணம் நிச்சயிக்கப்பட்டபின்னர், மணப்பெண்ணுடன் அவரைச் சென்று சந்தித்து ஆசி பெற்று வந்தேன். அதுவே அவரை நேரிலே இறுதியாகச் சந்தித்த நாளாகிவிட்டது.
ஓர் ஆசிரியர் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக, உன்னதமான ஆசிரியப் பணியில் ஈடுபட்டிருந்த உத்தமர் அவர். மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தில், எட்டாம் வகுப்பில் பொதுவிஞ்ஞானத்தையும், ஒன்பதாம் பத்தாம் வகுப்புக்களில் (க.பொ.த. சாதாரண தரம்) உயிரியலையும் எங்கள் வகுப்பினருக்கு கற்பித்தார். இந்த இரண்டு பாடங்களைக் கற்பித்த ஒரே காரணத்திற்காக மட்டுமல்ல, கண்டிப்பான ஒரு தந்தையைப் போல, அன்பான ஒரு தாயைப்போல, கண்ணியமான ஒரு தமயனைப்போல, இடுக்கண் வருங்கால், களைகின்ற ஒரு நண்பனைப்போல எங்களை அரவணைத்து வளர்த்தெடுத்த பெருந்தகையாக அவர் விளங்கினார் என்பதாலும், மறக்கமுடியாத ஆசிரியராக அவர் எங்கள் இதயங்களில் குடிகொண்டிருந்தார்.
சிறந்த ஆசிரியர்கள் பலரிடம் கல்விகற்கும் பேறு எங்களுக்குக் கிடைத்தது. அவர்களில் மிக உயர்ந்த ஆசிரியராகத் திகழ்ந்தவர் நடராசன் சேர் அவர்கள். வேட்டியும், அதே வெள்ளை நிறத்தில் (வாலாமணி என்று சொல்லப்பட்ட) முழுநீளக்கைச் சட்டையும், மூக்குக் கண்ணாடியும் அணிந்த அந்த மெல்லிய, உயர்ந்த உருவம் வகுப்பிற்குள் வரும்போதே எங்கள் முகமெல்லாம் பூவாகப் பூக்கும்.
கடந்த இரண்டு வருடங்களாக எம்மை அச்சுறுத்தி வருகின்ற பெருந்தொற்றும் அதனூடாக எம்மீது திணிக்கப்பட்ட உள்ளிருப்பு வாழ்வும் எமது வாழ்வில் மட்டுமல்ல நாம் இயங்குகின்ற எமது சமூக, அரசியல், பண்பாட்டு தளங்களிலும் கூட பல்வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தன. இப் பெருந்தொற்று காலகட்டத்தில் மாபெரும் வல்லரசுகள், அரசாங்கங்கள், மிகப் பணபலம் படைத்த பன்னாட்டு நிறுவனங்கள் கூட இயங்கமுடியாமல் முடக்கம் பெற்றிருந்த நிலையில் சமூக, பண்பாட்டு தளங்களில் இயங்கிய எமது சிறிய அமைப்புக்களும் முடங்கிப் போனதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. முக்கியமாக நேரடி நிகழ்வுகளாக நிகழ்த்தப்பட்ட இலக்கியக் கூடுகைகளும் பல்வேறு விதமான கலந்துரையாடல்களும் முடக்கம் பெற்று, அவை மெய்நிகர் நிகழ்வுகளாக காணொளி வாயிலாக நடைபெறும் நிகழ்வுகளாக மாற்றம் பெற்றன. இதனால் உள்ளூர் ஆளுமைகளைக் கொண்டே மட்டும் நிகழ்த்தப்படக் கூடிய நேரடி நிகழ்வுகள் ஆனது மெய்நிகர் நிகழ்வாக மாற்றம் பெற்ற போது அது உலகெங்குமுள்ள ஆளுமைகளை இலகுவாக ஒன்றிணைத்து மாபெரும் கூடுகைகளாக இடம்பெற்றன. இது இந்நிகழ்வுகள் குறித்த ஒரு முக்கியமான நேர்மறை அம்சமாகும். இது போன்ற பல்வேறு நேர்மறை அம்சங்களினாலும் மக்களிடையே பலத்த வரவேற்பினை பெற்றிருந்த இம்மெய்நிகர் நிகழ்வுகளானது காலப்போக்கில் கட்டுக்கடங்காமல் வரம்பு மீறிப் பல்கிப் பெருகியமையாலும், அனுபவங்கள் அற்ற, ஆளுமைகள் அற்ற பலரும் இதனை செய்ய தலைப்பட்டமையாலும் இந்நிகழ்வுகளில் காத்திரத் தன்மை மறைந்து, பெறுமதியற்ற நிகழ்வுகளாக மாறிப் போய் விட்டிருந்தது. அத்துடன் இந்நிகழ்வுகளில் பங்கேற்ற பலரது அசிரத்தையானதும் தான்தோன்றித்தனமான செயற்பாடுகளும் கூட இந்நிகழ்வுகளை மிகவும் கேலிக் கூத்தாக மாற்றிப் போட்டு விட்டிருந்தது. இந்நிலையில் நேரடி நிகழ்வுகள் இனிமேலும் நடைபெறாதா என்ற எதிர்பார்ப்பினை பலரின் மத்தியிலும் ஏற்படுத்தியிருந்தன.
'வடலி' பதிப்பக வெளியீடாக வெளிவந்த சமூக, அரசியற் செயற்பாட்டாளர் ரகுமான் தொகுத்த ஈழப்போராட்டம் பற்றிய மூன்று தொகுதிகளின் நூல் வெளியீடு ஜூன் 25, 2022 அன்று 'டொராண்டோ'வில் நடைபெறவுள்ளது. மேற்படி நிகழ்வானது தமிழர் வகைதுறைவள நிலைய ஏற்பாட்டில் நடைபெறுகின்றது. அது பற்றி ரகுமான் ஜான் அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவலினை இங்கு பகிர்ந்துகொள்கின்றோம். ஈழத்தமிழர்தம் விடுதலைப்போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய ரகுமான் ஜானின் மேற்படி நூற் தொகுதி பின்வரும் தலைப்புகளில் வெளியானது:
1. ஈழப்போராட்டத்தின் கோட்பாட்டு, அரசியல் பிரச்சனைகள்.
2. ஈழப்போராட்டத்தின் அமைப்புத்துறை சார்ந்த பிரச்சனைகள்
3. ஈழப்போராட்டத்தின் மூலோபாய, தந்திரோபாய பிரச்சனைகள்.
முன்னுரை
ஆதி காலத்தில் மனிதர்கள் குகைகளிலும், காடுகளிலும் வசித்து வந்தனர். நாளடைவில் நாகரீக வளர்ச்சியின் காரணமாக ஆற்றங்கரைகளில் வீடுகளை அமைத்துக் கூட்டமாக வாழ்ந்தனர். காலப்போக்கில் ஏற்பட்ட மாற்றத்தினால் மக்கள் ஊர், சிற்றூர், பேரூர், நகரம், பட்டினம் என்ற அமைப்பு முறைகளைத் தோற்றுவித்தனர். இதனை அக்காலத்தில் எழுந்த நூல்களில் பதிவு செய்துள்ளனர். தமிழ்மொழிக்குச் செம்மொழி உயர்வினைத் தேடித்தந்த சங்க இலக்கியம் ஒரு தொன்மையான இலக்கியமாகும். சங்க இலக்கியத்தில் ஒன்றான எட்டுத்தொகையில் இடம்பெற்றுள்ள நற்றிணையில் காணப்படும் ஊர்ப் பெயர்கள் பற்றி இக்கட்டுரை அமைந்துள்ளது.
அரிசில்
அரிசிலங்குமரனார் என்னும் புலவர் நற்றிணையில் பாடல் பாடியுள்ளார். அரிசில் என்ற ஊர்ப்பெயர் இவ்வூரைச் சேர்ந்த புலவர் பெயருடன் இணைத்துக் கூறப்பட்ட நிலையில் சங்க இலக்கியங்களில் இப்பெயர் பெறப்பட்டது.
அரிசிலற் தென்றல் அன்ன இவள்
விரை யொலி கூந்தல் விட்டமை கவனே (நற்.141)
என்று அரிலங்குமரன் அரிசிலாற்றைப் பற்றி பாடியுள்ளார். அரிசில் தற்போது தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் தென்கிழக்கே நாலரை மைல் தொலைவில் அரிசிலாற்றங்கரையில் அரிசில் கரைப்புத்தூர் என்ற ஓர் ஊர் உள்ளது.
அவுஸ்திரேலியத் தமிழ் இலக்கிய கலைச்சங்கம், இலங்கை தமிழ் எழுத்தாளர்களின் நூல்களுக்கு பரிசளிக்கும் திட்டத்தினை கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தி வருகின்றது. இத்திட்டத்தின் கீழ் நடத்தப்பட்ட போட்டியில் 2019 – 2020 ஆம் ஆண்டுகளில் வெளியாகி தலா ஐம்பதினாயிரம் ரூபா பரிசுபெற்ற நான்கு நூல்கள் பற்றிய வாசிப்பு அனுபவப்பகிர்வு நிகழ்ச்சி இம்மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமை மெய்நிகரில் நடைபெறும்.
'
வானலைகளில் ஒரு வழிப்போக்கன்" என்ற தலைப்பில் அப்துல் ஹமீத் எழுதிய ஊடக வாழ்க்கை அனுபவ நூல் அமெரிக்காவில் வெளியிடப்படவுள்ளது. இலங்கை வானொலியில் மிக இளவயதிலேயே அறிவிப்பாளராகிஇ வானொலியின் பல்வேறு துறைகளிலும் அளப்பரிய பங்களிப்புகளை நல்கிஇ ஒலிபரப்புத் துறையில் மட்டுமன்றிஇ தொலைக்காட்சித்துறைஇ திரைப்படத்துறை எனப் பல்வேறு தளங்களிலும் 54 ஆண்டுகளுக்குமேல் அழுத்தமான தடம் பதித்த அன்பு அறிவிப்பாளர் பி. எச். அப்துல் ஹமீத் தனது அரை நூற்றாண்டு கடந்த வாழ்க்கை அனுபவங்களை ஒரு நூலாக எழுதியுள்ளார்.
எழுத்தாளர் தேவகாந்தனைச் சிறுகதையாசிரியராக, நாவலாசிரியராக நாமனைவரும் அறிவோம். ஆனால் அவரது இதழியற் பங்களிப்பு பற்றி அதிகமாக இலக்கியச்சூழலில் கதைப்பதில்லை. ஏன்? தெரியவில்லை. தமிழ் இலக்கியச் சூழலில் அவரது இதழியற் பங்களிப்பு முக்கியமானது.
கனடாத் தமிழ் இலக்கியச் சூழலில் அவரது ஆண்டிதழான கூர் முக்கியமானது.அதேபோல் அவர் இந்தியாவில் இருந்தபோது தொண்ணூறுகளில் அவரை ஆசிரியராகக் கொண்டு வெளியான 'இலக்கு' சிற்றிதழ் முக்கியமானது. 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்!' என்பதைத்தாரக மந்திரமாகக்கொண்டு வெளியான இதழ்.
அதிக எண்ணிக்கையில் வெளிவந்திருக்காவிட்டாலும் , வெளிவந்த அனைத்து இதழ்களும் காத்திரமான இலக்கியச்சிறப்பு மிக்கவை. புதுமைப்பித்தன் மலர், பாரதியார் மலர், நா.பார்த்தசாரதி மலர், டானியல் மலர், பேராசிரியர் க.கைலாசபதி மலர்கள், ஆண்டு மலர், தி.ஜானகிராமன் மலர் என தரமான , இலக்கியச்சூழலில் நிலைத்து நிற்கக்கூடிய சிற்றிதழ் மலர்கள்.
இலங்கை மக்கள் நன்கறிந்த இந்திய எழுத்தாளர் கு. சின்னப்பபாரதி கடந்த 13 -ம் திகதி திங்கட்கிழமை மாலை (13 - 06 - 2022) சிந்திப்பதை நிறுத்திக்கொண்டார. இலங்கைப் படைப்பாளிகளையும் வாசகர்களையும் மிகவும் கவர்ந்தவர் சின்னப்பபாரதி. தமிழ் வாசகர்களை மாத்திரமன்றி சிங்கள வாசகர்களையும் கவர்ந்தவர். எழுத்தாளர் - மொழிபெயர்ப்பாளர் காலஞ்சென்ற உபாலி லீலாரத்தினாவின் மொழிபெயர்ப்பில் சிங்கள மொழியில் சின்னப்பபாரதியின் நாவல்கள் சில சிங்கள வாசகர்களுக்கு அறிமுகமாகின. அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுச் சாதனை படைத்தவை சின்னப்பாரதியின் நாவல்களாகும்.
1935 -ம் ஆண்டு நாமக்கல் மாவட்டம் வாழவந்தி பொன்னேரிப்பட்டிக் கிராமத்தி;ல் குப்பண்ணக் கவுண்டர் - பெருமாயி அம்மாள் விவசாயத் தம்பதிகளின் மகனாகப் பிறந்தவர் சின்னப்பபாரதி. ஆரம்பக் கல்வியை முடித்தபின் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உயர்கல்வியைத் தொடர்ந்தார்;. கல்லூரியி;ல் டாக்டர் மு. வரதராசனின் மாணவராகப் பயின்றதனால் தமிழ்ப்பற்று மிகப்பெற்று எழுதத் தொடங்கினார். ஆரம்பத்தில் கவிதை எழுதத் தொடங்கியவர் பின்னர் சிறுகதை - நாவல் எழுதும் ஆவல்கொண்டார். ரஷ்ய எழுத்தாளர்கள் - பாரதி ஆகியோரின் படைப்புகளால் ஈர்க்கப்பட்டவர். பாரதிமீது கொண்ட பற்றினால் சின்னப்பன் என்ற பெயரைச் சின்னப்பபாரதி என மாற்றிக்கொண்டார். கல்லூரிக் காலத்தில் மாணவர் போராட்டங்களில் கலந்துகொண்டவர் மார்க்சிஸப் பாதையை வரித்துக்கொண்டார். கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து செயற்படத் தொடங்கினார். கட்சியில் பல பொறுப்புகளை ஏற்றுச் செயற்பட்டார். நில உச்சவரம்புப் போராட்டத்தில் பங்கெடுத்து 650 கி. மீற்றர் நடைப்பயணம் போனார். இந்திரா பிரதமராக இருந்தவேளை கொண்டுவரப்பட்ட அவசரநிலைப் பிரகடனத்தின்போது கைதுசெய்யப்பட்ட எழுத்தாளர் இவரெனக் கூறுவர். கட்சியின் வேண்டுகோளை ஏற்று மலைவாழ் மக்கள் மத்தியில் வேலைசெய்தார். விவசாயிகளை ஒருங்கிணைத்து அவர்கள் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்தார். பல சந்தர்ப்பங்களில் உயிராபத்தையும் சந்திக்க நேர்ந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மோகன்லால் & கனகா நடிப்பில், பாடகர் மினிமினியின் குரலில் ஒலிக்கும் இப்பாடல் இடம் பெற்றுள்ள திரைப்படம்: வியட்நாம் காலனி. இசை: எஸ்.பாலகிருஷ்ணன். மலையாளத் திரைப்படங்களில் விரவிக் கிடக்கும் இயற்கைச்செழிப்புள்ள மண்மணம் தவழும் காட்சிகள் எனக்கு மிகவும் பிடிக்கும். கூடவே காதல் போன்ற மானுட உணர்வுகளைக் கவிதையாக வடித்திருப்பார்கள். அதுவும் எனக்குப் பிடிக்கும். இப்பாடலும் பாடற்காட்சியும் அத்தகையதொன்றே. நடிகை கனகா சிறந்த நடிகை. அவர் தொடர்ந்தும் தன் வயதுக்கேற்ற பாத்திரங்களில் நடித்து நடிப்பில் பரிணாமம் அடைந்திருக்க வேண்டும் என்ற உணர்வு இப்பாடலைக் கேட்கையில் , பார்க்கையில் ஏற்படுவதைத்தவிர்க்க முடியவில்லை. பாடகியின் தனித்துவமான இனிய குரல் இதயத்தை மெல்ல வருடிச் செல்கின்றது. கூடவே இசையும்.
'தமிழ் டைம்ஸ்'ஆசிரியர் இராசநாயகம் அவர்களின் மறைவைப்பற்றியும் , அவரது ஆளுமைச்சிறப்பு பற்றியும் முகநூற் பதிவுகள் மூலம் அறிந்துகொண்டேன். இவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றேன். ஆனால் ஒருபோதுமே நேரில் சந்தித்ததில்லை. ஊடக தர்மம் பேணிய இதழாசிரியர்களிலொருவராக இவரை அடையாளம் காண முடியும்.
எனது 'ஒரு மா(நா)ட்டுப் பிரச்சினை' சிறுகதையின் ஆங்கில மொழிபெயர்ப்பினை (எழுத்தாளர் லதா ராமகிருஷ்ணன் செய்தது) 'தமிழ் டைம்ஸ்' ஜூலை 15,2001 இதழில் மீள்பிரசுரம் செய்திருந்தார். இணையத்திலிருந்து கண்டெடுத்து அதனைப் பிரசுரித்திருந்தார். தான் நம்பிய கருத்துகளுக்காக, அவற்றைச் சமரசம் செய்யாத ஒருவராக அவரை நான் இனங்காண்கின்றேன். அவர் இழப்பால் வாடும் அனைவர்தம் துயரை நானும் பகிர்ந்துகொள்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்.
மேலைநாட்டு ஆய்வாளர்களின் இந்தியவியல் தொடர்பான ஆய்வு முயற்சிகள், பல்வேறு துறைசார்ந்த புதிய திருப்புமுனைகள் ஏற்பட வழிவகுத்ததுடன் பிற்கால ஆய்வுகளுக்கு முன்னோடியாக அமைந்தமை வரலாறு எடுத்தியம்பும் நிலைப்பாடாகும். அவ்வடிப்படையில், இந்துக் கலைகள் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு அதனை மேலைத்தேச மக்களுக்கு அறிமுகம்செய்த சிறந்த பெண்மணியாக ஸ்டெல்லா க்றாம்ரிச் (Stella Kramrisch) திகழ்கின்றார். இவர் ஒரு அமெரிக்க முன்னோடி கலை வரலாற்றாசிரியர் ஆவார். 20ஆம் நூற்றாண்டில் இந்தியக் கலையில் முன்னணி நிபுணராக இருந்தவர். இந்தியக் கலைகள் தொடர்பான அவருடைய ஆய்வுப் புலமை இன்றுவரை ஒரு அளவுகோலாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தந்தையர் தினக் கவிதை!
பெற்றிடுவாள் அன்னை பெருதுவப்பார் அப்பா
உற்ற துணையாகி உழைத்திடுவார் அப்பா
கற்பனைகள் நிறைத்து கனவுகாண்பார் அப்பா
காலமெலாம் எம்மைச் சுமந்திடுவார் அப்பா
கைபிடுத்து எம்மைக் குருசேர்ப்பார் அப்பா
கற்பவற்றை கற்க கையணைப்பார் அப்பா
கல்வியென்னும் பயிரில் களையெடுப்பார் அப்பா
கற்றவரின் அவையில் அமருவென்பார் அப்பா
வளர்ச்சியினைக் கண்டு மனமகிழ்வார் அப்பா
தளர்ச்சியினைக் கண்டால் தாங்கிடுவார் அப்பா
விளைச்சலினை நோக்கி அழைத்திடுவார் அப்பா
விகற்பநிலை வந்தால் விலக்கிடுவார் அப்பா
முகவுரை
இன்றைய சூழலில் அடித்தளமக்கள் மற்றும் விளிம்புநிலை மாந்தர்களின் வாழ்வனைத்தும் போராட்டத்தால் மட்டுமே மீட்டெடுக்க முடியுமென்ற அவலநிலையில்தான் இச்சமுதாயம் இருந்துகொண்டிருக்கிறது. அந்த வகையில் வாழ்வனைத்தும் அநீதிகளையும், தீண்டாமைகளையும் புறக்கணிப்புகளையும் மட்டுமே எதிர்கொள்ளும் மாற்றுப்பாலினத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் இன்று ஓரளவேனும் புத்துயிர்ப்பு பெறத்தொடங்கியுள்ளனர் என்று சொன்னால் அம்மாற்றங்களுக்கு நவீனஇலக்கியங்கள் முக்கியக் காரணமாகத் திகழ்கின்றன எனலாம். பேடி, அரவாணி, திருநங்கை போன்ற பல்வேறு பெயர்களால் விமர்சனத்துக்குள்ளாகி வரும் மூன்றாம்பாலினர் தங்களுக்கான வாழ்வுரிமைகளை மீட்டெடுப்பதில் தற்போது பெரும் சிரத்தை எடுத்துவருகின்றனர். இதற்கு இலக்கிய வடிவில் அவர்களும், அவர்கள் மீது நல்லெண்ணம் கொண்ட படைப்பாளர்களும் உறுதுணையாக நிற்கின்றனர்.
குறிப்பாக, ‘சு.சமுத்திரம் எழுதிய வாடாமல்லி என்னும் நாவல் தமிழில் திருநங்கையர் குறித்து வெளிவந்த முன்னோடிப் படைப்பாகும். இந்நாவலுக்குப் பிறகே திருநங்கையர்கள் பலரும் தங்கள் வாழ்வனுபவங்களை சமூகத்திற்கு தன்வரலாறாகப் படைத்துத் தருவதற்கு முன்வந்துள்ளனர். மனிதர்களில் எதிர்மறை உணர்வுகளால் சிக்கித்தவிக்கும் சிறுகுழுவினரான திருநங்கையர்கள் தங்களின் வாழ்வியல் உணர்வுகளை இதுபோன்று இலக்கியங்களில் கருத்தாக்கங்களாக பதிவிடத் தொடங்கிய இம்முயற்சி குறைவுதான் என்றாலும் இலக்கியவெளியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தவகையில், திருநங்கையர்களின் வாழ்வியல் நிகழ்வுகளை முதன்முதலில் மிகவும் உணர்வுப்பூர்வமாக படைப்பாக்கிய சு.சமுத்திரத்தின் ‘வாடாமல்லி’ நாவலில் இடம்பெற்றுள்ள மூன்றாம் பாலினர் குறித்த பன்முகச்சிந்தனைகளை கண்டறிந்து விளக்கும் முயற்சி இக்கட்டுரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அண்மையில் மறைந்த தனது மனைவி மேசி ஜெயறோசாவைப்பற்றி எழுத்தாளர் அ.யேசுராசா அவர்கள் தனது முகநூற் பக்கத்தில் மனைவியின் நினைவு மலருக்காக எழுதிய கட்டுரையினைப் பகிர்ந்திருந்தார்.அதனைப் பதிவுகள் தன் வாசகர்களுடன் பகிர்ந்துகொள்கின்றது. - பதிவுகள்.காம் -
- 13. 06. 2022 அன்று, அன்பு மனைவி மேசியின் 31 ஆம் நாள் நினைவை அனுஷ்டித்தோம். காலையில் புனித மரியன்னை பேராலயத்தில் திருப்பலியும், பிறகு வீட்டில் வழிபாடும் நடைபெற்றன. உறவினர், நண்பர் வந்திருந்தனர். 36 பக்கங்கள் கொண்ட நினைவு மலரும் வெளியிடப்பட்டது. மேசியின் ஓவியத்தை வரைந்தவர், ஓவியரும் கவிஞருமான ‘யோகி.’ அந்த மலரில் இடம்பெற்ற எனது கட்டுரையை இங்கு தருகிறேன். மலரின் PDF பிரதியைப் பெற விரும்புவோர் உள் பெட்டியில் தொடர்பு கொள்ளலாம். எல்லோருக்கும் நன்றி! - அ.யேசுராசா -
அன்புள்ள மேசி ...!
நான் இருக்கிறேன் ; நீங்கள் இல்லை. பிரெஞ்சுத் தத்துவவாதி ஜீன் போல் சார்த்தரின் புகழ்பெற்ற, Being and Nothingness - ‘இருத்தலும் இன்மையும்’ நூற்பெயர், அர்த்தச் செறிவுடன் அடிக்கடி என் நினைவில் வருகிறது! நீங்கள் இல்லை ; ஆனால், மனவெளியில் உங்களுடன் என் உரையாடல் தொடர்கிறது...
ஒரே ஊரைச் சேர்ந்தவர்களாயினும், உங்களை எனக்கு நீண்டகாலமாய்த் தெரியாது. தபாற் திணைக்களப் பணி காரணமாய் கொழும்பு, பசறை, பேராதனை, கண்டி, மீண்டும் கொழும்பு என வாழ்ந்ததில் ஊரில் பலவற்றை அறியாதிருந்தேன்! விருப்பத் தேர்விலான பணி ஓய்வின்பின் ஊரில் இருந்தபோது, 1989 இல், ‘திசை’ வார வெளியீட்டில், கலாசாரப் பக்கங்களுக்குப் பொறுப்பாக – துணை ஆசிரியராகப் பணியாற்றினேன். ‘திசை அலுவலகம்’ உங்கள் வீட்டுக்கு அண்மையில், மார்ட்டின் வீதி – பிரதான வீதி மூலையில் இருந்தது. காலையில் பணிக்குவந்த சில நாள்களில், அலுவலகத்துக்கு எதிர்ப்புறம், கையில் கோவைகளுடனும் சில புத்தகங்களுடனும் ஓர் இளம்பெண், நகரத்துக்குச் செல்லும் பேருந்துக்காகக் காத்திருப்பதைக் கண்டிருக் கிறேன். எப்படியென்று நினைவில்லை ; அந்தப் பெண் எமது எசெக்கியேல் ஆசிரிய ரின் மூத்த மகளென்றும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைக்குச் செல்பவ ரென்றும் தெரியவந்தது. ஆயினும், பிறகும் உங்களை நான் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படவில்லை.
திருமணம் செய்யாது தனியனாக – இந்தியாவில் புதிய இடங்களுக்குப் பயணம்செய்து சுதந்திரமாக வாழும் மனநிலையில் இருந்தேன்; குடும்பத்தில் அம்மாவுக்கும் சகோதரிகளுக்கும் நான் திருமணம் செய்யாததில் மனக்குறை இருந்தது. 1992 இன் இறுதிப் பகுதியில் ஒருநாள், சென். ஜேம்ஸ் ஆண்கள் பாடசாலையில் முன்னர் என்னுடன் படித்த மரியாம்பிள்ளை, எசெக்கியேல் மாஸ்ரரின் மகள் – ரீச்சர் என உங்களைக் குறிப்பிட்டு, ஏன் அவரைக் கலியாணம் முடிக்கக்கூடாது என்று கேட்டார். வீட்டில் இதனைச் சொன்னபோது உங்களை நன்கு அறிந்த எனது இரண்டாவது தங்கை, மிகுந்த மகிழ்ச்சியுடன், கட்டாயம் நான் இந்தக் கலியாணத்தைச் செய்ய வேண்டுமென மீண்டும் மீண்டும் வற்புறுத்தினாள் ; அம்மாவும் விரும்புவதை உணரமுடிந்தது. அம்மாவின் மனக் கவலையைப் போக்கவேண்டுமென்ற உணர்வும் தோன்றியது. என்றாலும், “யோசிக்க வேணும் ; ஒரு மாதத்துக்குப் பிறகு முடிவைச் சொல்லுகிறேன்” என்று கூறிவிட்டேன்.
முதுபெரும் முற்போக்கு எழுத்தாளர் தோழர் கு. சின்னப்ப பாரதி (88) மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவருடைய மறைவு முற்போக்கு கலை இலக்கிய உலகிற்கு பேரிழப்பாகும்.
ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் தன்னை இணைத்துக் கொண்ட அவர் பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து பணியாற்றினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், கரும்பு விவசாயிகள் சங்கம் போன்ற அமைப்புகளில் முக்கிய பங்காற்றியவர். தோழர் பி. சீனிவாசராவ் தலைமையில் நில உச்சவரம்பு கோரி கோவையிலிருந்து சென்னைக்கு சென்ற நடை பயணக்குழுவில் இடம்பெற்றவர். இறுதிவரை உறுதியான மார்க்சிஸ்ட்டாக வாழ்ந்தவர்.
உடல் - அரசியல் இரண்டும் இரு வேறுபட்ட தளங்கள் உடல் தோன்றியபோது அரசியல் தோன்றவில்லை. ஆனால் அரசியல் உடலை முன்னிறுத்தித் தோன்றியது எனலாம். அரசியல் என்பது என்ன? அதிகாரத்தை நிலை நிறுத்துதலை அல்லது செயல்படுத்துலை அரசியல் எனக் கூறலாம். ஆனால் இது மட்டும் தான் அரசியலா என்றால் இல்லை., அதற்குள் பல்வேறு பட்டுணர்வுகள் அல்லது கருத்துகள் நிலவுகின்றன. அதிகாரம் செய்தலும் அரசியல் அந்த அதிகாரத்திற்கு எதிராக குரல் எழுப்புவதும் அரசியல்.
உடல் அரசியல் எனில் எதைக் கூறலாம்? எந்த வரையறைக்குள் அதை நிலைப்படுத்துவது என்ற பல சிந்தனைகள் உள்ளன. மனித உயிர் தனக்கான வாழ்வை வாழவும் கொண்டாடவும் முக்கிய கருவியாக இருப்பது உடல். அந்த உடல் தனிமனித நனவிலி மற்றும் விருப்பம் சார்ந்து மட்டும் இயங்கக்கூடியதா எனக் கேட்டால் இல்லை. அவ்வுடல் சமூகம் வரையறுத்த பண்பாடு அதிகாரம் அனைத்திற்கும் உட்பட்டு இருக்கக் கூடியதாகும். உடலின் இயக்கம் மனம் மற்றும் அறிவு சார்ந்து இயங்க கூடியது. ஒரு தனி மனிதனை எவ்வாறு சமூக மற்றும் பொதுவெளியில் ஒரு கட்டுக்குள் இயக்க இயலுகிறது., என்ற கேள்விக்கு அரசு அதிகாரம் அல்லது சமூக பண்பாடு எனப் பதிலுரைக்கலாம்.
காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள 'இலங்கைத்தமிழ் நாவல் இலக்கியம்' நூலில் எழுத்தாளர் தேவகாந்தன் புலம்பெயர்ந்தோர் படைப்புகள் பற்றிக் குறிப்பிடுகையில் படைப்புகளை இரண்டு காலகட்டங்களாகப் பிரித்துள்ளார்.
1. மேற்கில் புலம்பெயர்ந்தோர் நாவல்கள் - ஆரம்ப காலம்
2. இரண்டாம் அலையின் முக்கியமான காலம்
ஆரம்ப கால நாவலாசிரியர்களாக ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் ('ஒரு கோடை விடுமுறை'), பார்த்திபன் ('வித்தியாசப்படும் வித்தியாசங்கள்', 'ஆண்கள் விற்பனைக்கு'), இ. தியாகலிங்கம் ('நாளை', 'அழிவின் அழைப்பிதழ்') ஆகியோரைக் குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் அலையின் நாவலாசிரியர்களாக ஷோபா சக்தி ('கொரில்லா, ம், இச்சா), தமிழ்நதி (கானல்வரி), இளங்கோ (மெக்சிகோ), மெலிஞ்சி முத்தன் (;வேருலகு, அத்தாங்கு, உடக்கு),வ.ந.கிரிதரன் (குடிவரவாளன்), பொ.கருணாகரமுர்த்தி (அனந்தியின் டயறி), ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் (தில்லையாற்றங்கரையில்), விமல் குழந்தைவேலு (வெள்ளாவி, கசகறணம்), நொயல் நடேசன் (வண்ணாத்திக்குளம், அசோகனின் வைத்தியசாலை), தேவகாந்தனின் (லங்காபுரம், யுத்தத்தின் முதலாம் அதிகாரம், கதாகாலம்,கந்தில்பாவை, நதிமேல் தனித்தலையும் சிறுபுள்) ஆகியோரைக் குறிப்பிட்டிருக்கின்றார்.
எனது குடிவரவாளன் நாவலை பற்றிக் குறிப்பிடுகையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:
"1983 இன் இனக்கலவரத்தின்பின் கனடாவில் அகதித் தஞ்சம் கேட்கப் புறப்படும் இளங்கோவுக்கு, அமெரிக்க விமான நிலையத்தில் தொடர் பயணம் தடுக்கப்பட ஓராண்டைக் கழிக்க நேர்கிறது. அவனது அந்தத் தடுப்பு முகாம் அனுபவங்களூடாகப் படைப்பை விரித்திருக்கின்றார் ஆசிரியர். இவ்வகைப்பயணங்கள் அமெரிக்காவில்,கிழக்கு ஜேர்மனியில் ,இத்தாலியில், மெக்சிகோவில் என தடைப்பட்டுப்போக அவ்வனுபவங்களின் மேலாய் நிறைய நூல்கள் தமிழில் எழுந்திருக்கின்றன. ஆயினும் தனது 'மண்ணின் குர'லில் வந்த குறுநாவல்களைப்போலன்றி 'குடிவரவாள'னில் தன் அனுபவங்களைக் கலைத்துவமாக்க அவரெடுத்த முயற்சி நூலின் பக்கங்கள்தோறும் புலனாகின்றது. தடுப்பு முகாம் மண்ணில் ஓர் அகதியின் அனுபவங்களும் வித்தியாசமானவையாகவே பதிவாகியுள்ளன."
இலண்டனில் ஜூன் 11, 2022 அன்று விம்பம் அமைப்பின் ஆதரவில் நடத்தப்பட்ட 'மலையக இலக்கிய மாநாடு' நிகழ்வுக்கான காணொளி:
4
இதே போன்று, கிளிம், மாஸ்கோவை விட்டகன்று, மாகாணத்தில் குடியேறிய பின் சந்திக்க நேரும் பாத்திரங்களில், மற்றுமொரு முக்கிய பாத்திரம் - வெலண்டைன். அதி அற்புதமான சித்திரிப்பு எனலாம். கலைந்த தலை, அலங்கோலமான உடை, உடல் முழுவதும் தூசி, தும்பு, புறாக்களின் எச்சங்கள் - முகம் வேறு பூசணியைப் போல் - கண்களும் பாவமற்று வெறும் கண்ணாடித் துண்டுகளை போல்… “உங்களுக்கு மலர்கள் பிடிக்குமா… ஓ… இங்கே, சுடுகாட்டில் இருக்குமே, அவ்வளவு நிரம்ப மலர்கள்…– கிளிம்மிடம், கூறிக் கொண்டிருப்பான் வெலண்டைன்.
“விடயத்தை பாருங்கள்… என் மனைவி ஓடி விட்டாள், என்னை விட்டு… புறாக்கள் தான் காரணம்… நான் என்ன செய்ய…”
“அவள் ஏதோ ஒரு ஜிம்னேசியத்தில் படித்தவள்தான்… தெரியாதா… இளம், பதின்வயது நங்கைகளை…ஏராளமான காதல் காவியங்களை படித்துக் குவித்திருப்பாள் போலும் - நண்பிகளுடன். எனது பெயரோ, ‘வெலண்டைன்’. இது போதாதா – அவள் தன் கற்பனைக் குதிரையை தட்டி விட. அதாவது, என்னை அவள் காதலித்திருக்க மாட்டாள்… என் பெயரைத்தான் காதலித்திருப்பாள் - ஆனால், பாருங்கள், ‘வெலண்டைன்’ என்ற காந்தர்வ பெயருக்கும் எனக்கும் உள்ள ஒட்டுறவை… அட கடவுளே…”
இப்படியாய் கிளிம்முடன் ஏனோ அவன் மனம் விட்டு பேசத் தொடங்குகிறான் - தனித்து இருப்பதால் போலும்!. பின் அவன், தான் புறாக்கள் வளர்ப்பது ஏன் என்பதையும் மிக கிரமமாக கிளிம்முக்கு எடுத்துரைக்கின்றான்.
“பாருங்கள்… நான், ஒரு அசடு… முட்டாள்… கற்பனை செய்யுங்கள்… தெளிவான நீல வானம்… அதன் கீழே நான்…என் புறாக்களை மேலே பறக்க விடுகிறேன்… அவை வட்டமடித்து வட்டமடித்து உயர, உயர வானில் படிப்படியாக பறந்து ஏறுகின்றன… மேலே… மேலே… அவற்றுடன் என் பாவப்பட்ட ஆத்மாவும் கூடவே சிறகடித்துப் பறக்கின்றது, அவற்றை தொடர்ந்து… விளங்குகிறதா… என் ஆன்மா… இங்கேத்தான் அந்தப் புள்ளி – அதாவது… என் இதயத்தை வெடிக்க செய்யும், அப்புள்ளி… மயக்கம் கூட வந்துவிடும்…அப்போது ஒரு வகை அச்சம் வேறு எழுகிறது… அவை வராவிட்டால்…திரும்பாவிட்டால்”
- விழிப்பு' வாசிக்கையில் மனத்தைத் தொடும் சிறுகதைகளிலொன்று இச்சிறுகதை. வாசிக்கும்போது மிகச்சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதை உணரமுடிகின்றது. இச்சிறுகதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் உயிர்த்துடிப்புடன் படைக்கப்பட்டுள்ளன. மண் வாசனையுடன் கூடிய சிறுகதை. நடை வாசிக்கையில் இதயத்தை வருடிச் செல்கின்றது. வாசித்துப் பாருங்கள். - ஆசிரியர், பதிவுகள்.காம் -
- தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத் -
தெலுங்கு மூல ஆசிரியர் : பி.அஜய் ப்ரசாத்
பி.அஜய் ப்ரசாத் (முழு பெயர் - பாதர்ல பிரசன்ன அஜய் ப்ரசாத்) ஆந்திரமாநிலம், குண்டூர் மாவட்டம், நகரிகல்லு கிராமத்தில் ஜூன் 9இ 1972இல் பிறந்தவர். 2005ஆம் ஆண்டு முதல் தெலுங்கில் சிறுகதைகளை எழுதி வருகிறார். இவரின் கதைத் தொகுதி 2018ஆம் ஆண்டு “லோயா மற்றும் சில கதைகள்” என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. இவரின் இரண்டாவது கதைத் தொகுதி “காலி பொரலு” ஆகும். இவரின் கதைகள் ஆங்கிலம், இந்தி, பெங்காளி மொழிகளில் வெளிவந்துள்ளன.
மொழிபெயர்ப்பாளர்: க.மாரியப்பன்
பொருநை க.மாரியப்பன், திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சியில் ஏப்ரல் 4, 1976இல் பிறந்தவர். ஆந்திரமாநிலம், திராவிடப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழி மற்றும் மொழிபெயர்ப்பியல் துறையில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். மொழிபெயர்ப்பாளர், திறனாய்வாளர், இலக்கிய விமர்சகர். சமீபத்தில் ஏப்ரல் 23, 2022 இல் இவரின் தெலுங்கு சிறுகதைத் தொகுப்பு மொழிபெயர்ப்பு நூல் ‘மஹாவித்துவான்’ வெளிவந்தது.
மேற்கே சூரியன் மலையிலிருந்து இறங்கியவுடன் கிழக்கே பௌர்ணமிச் சந்திரன் கீழிருந்து மேல் எழுந்தது. பகல்முழுவதும் வெயிலில் காய்ந்த மரங்கள் சாய்ந்தரம் குளிர்ந்த காற்றுக்கு தலையசைத்து நின்றன. கருப்புக் காடைகள் சிறகுகளை விரித்து வட்டமிட்டு சுற்றிக் கொண்டு கூடுகளை அடைந்தன.
இருட்டும் வரை பகல் எல்லாம் பிச்சைக்கு ஊரெல்லாம் சுற்றி, பையை நிறைத்து எப்பொழுதும் போல தாரோட்டிலிருந்து ஊர் எல்லை வரை செல்லும் ஒற்றையடிப் பாதையை நோக்கி நடந்தார் பைராகி. அவரின் உடல் மீது இருக்கிற காவியாடை கசங்கி, அழுக்காகி, மண் நிறத்திற்கு மாறியிருந்தது. கருப்பாக, ஒல்லியாக, காய்ந்து போன குச்சியாக இருந்தார் அவர். வியர்வையில் நெற்றி மீதிருந்த விபூதி, குங்குமம் அரித்துப்போய் இருந்தது. கருப்பும் வெள்ளையுமாகக் கலந்திருந்த நீளத் தாடி, சாய்ந்திர வெயிலில் அவரின் நிழலோடு கூட வந்து கொண்டிருந்தது.
பகல்முழுவதும் மக்கள் ஓர் ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு நடந்து போகிற ஒற்றையடிப்பாதை பொழுதாகப் பொழுதாக ஆள் ஆரவாரம் இன்றி நிசப்தமாய் கொண்டிருந்தது. பைராகி ஒற்றையடிப்பாதையைத் தாண்டி, ஊர் எல்லையில் புதருக்கு நடுவில் பாதி சிதலமடைந்திருந்த வீட்டிற்குள் நுழைந்தவுடன் முழுவதுமாகப் பொழுது இருட்டியது.