மேனாட்டுப்பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை பற்றி... - வ.ந.கிரிதரன் -
இன்று செம்மொழியான தமிழ் தொடர்ந்து வாழ்கின்றதென்றால் காரணம் என்ன? நான் குறிப்பிடும் தமிழ் காப்பியங்களில், இலக்கியத்திலுள்ள தமிழ். பிறமொழிச்சொற்களை உள்வாங்கி ,வளமுடன் திகழும் தமிழ். இந்தத்தமிழ் இன்றும் நிலைத்து நிற்கின்றதென்றால் காரணம்..
தமிழகத்திலும், இலங்கையிலும் வாழும் தமிழர்களால்தாம். இவர்களில் அதிகப்பங்களிப்பு வழங்கியவர்கள் என்ற பெருமையைத் தமிழகத்தமிழர்களுக்குத்தான் கொடுக்க வேண்டும். இந்நாடுகளில் வாழ்ந்த, வாழும் தமிழர்கள்தாம் பிறநாடுகளில் குடியேறி அங்கும் தமிழுக்குப் பங்காற்றுகின்றார்கள்.
அண்மைக்காலமாக மேற்கு நாடுகளில் வாழும் தமிழர்கள் அந்நாடுகளில் இருக்கும் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைப்பதற்காகச் செயலாற்றி வருகின்றார்கள். முக்கிய காரணங்களில் ஒன்று உலகளாவியரீதியில் தமிழுக்கான அங்கீகாரம் இதன் மூலம் கிடைக்கும் என்பதுதான். தமிழகப்பிரபலங்கள் தொடக்கம் தமிழக அரசு வரைக்கும் நிதியுதவியை அளித்து வருகின்றார்கள். மொழி வளர்ச்சிக்கு இத்தகைய உதவிகள் அவசியமே. ஆனால் தற்போதுள்ள சூழலில் இதற்கான முக்கியத்துவமென்ன?தேவையென்ன?
தமிழை இதுவரை காலமும் பேணிப்பாதுகாத்து வந்த தமிழர்கள் வாழும் தமிழகம், இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ்த்துறை உள்ளது . அங்குள்ள பல்கலைக்கழகங்கள் போதிய நிதியுதவியின்றி மொழி ஆராய்ச்சிகளில் அதிக அளவில் ஈடுபடுவதற்கு முடியாமல் சிரமப்படுகின்றன. தமிழ் மொழியை வளர்ப்பவர்கள் தமிழில் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதும் பேராசிரியர்கள் மட்டுமல்லர். கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பல்வேறு துறைகளிலும் எழுதி மொழிக்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்களும்தாம்.