மிக நீண்ட நாட்களின் பின் கனடா மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களின் ஒன்றுகூடல் ‘கலேஸ்நைட்’ இரவு விருந்துபசாரம் நவெம்பர் மாதம் 14 ஆம் திகதி 2021, மாடி கிறாஸ் பாங்குவிட் மண்டபத்தில் நடந்தேறியது. இந்த விருந்துபசாரத்தில் மகாஜனக் கல்லூரி பழைய மாணவர்களும், தெல்லிப்பழை யூனியன் கல்லூரி பழைய மாணவர்களும் கலந்து கொண்டனர்.
கோவிட் - 19 பேரழிவு காரணமாக இரண்டு வருடங்களாக கனடாவில் மக்கள் வீடுகளில் முடக்கப்பட்ட நிலையில் இருந்தனர். கனடாவில் இயங்கும் மகாஜனக்கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கும், யூனியன் கல்லூரி பழைய மாணவர் சங்கத்திற்கும் இடையே கனடாவில் நடைபெறும் சினேகபூர்வமான துடுப்பாட்ட விளையாட்டுப் போட்டியில் கடந்த 3 வருடங்களாக தொடர்ந்தும் மகாஜனக்கல்லூரி வெற்றி ஈட்டியதைக் கொண்டாடும் முகமாக இந்த ஒன்றுகூடலுடன் கூடிய விருந்துபசாரம் ஒழுங்கு செய்யப்பட்டது. தனிப்பட்ட முறையில் எல்லோரையும் தொலைபேசியில் அழைத்து விருந்துபசாரத்திற்கு அங்கத்தவர்களை வரவழைத்த நிர்வாகசபை அங்கத்தவரான கி. பாலஸ்கந்தன் அவர்களையும், நிர்வாகசபை அங்கத்தவர்களையும் எல்லோரும் பாராட்டினார்கள்.
கனடா தேசிய கீதம், கல்லூரிக்கீதம் ஆகியவற்றுடன் விழா ஆரம்பமானது.
சங்கத்தலைவர் ச. புவனச்சந்திராவின் வரவேற்புரையைத் தொடர்ந்து, கல்லூரியின் பழைய விளையாட்டு வீரர்களான பி. பாலசிங்கம், வி.ரி. மகாலிங்கம் போன்ற சிலர் தங்கள் காலத்து விளையாட்டு போட்டி அனுபவங்களை விருந்துனருடன் பகிர்ந்து கொண்டனர். யூனியன் கல்லூரி பழைய மாணவர் சார்பாக யாழ்கோபன் பாலசுந்தரம் உரையாற்றினார். அவர் தனது உரையில் மகாஜனக் கல்லூரி வீரர்கள் உதைபந்தாட்டத்தில் வெற்றி பெற்ற போது, யூனியன் கல்லுர்ரி மாணவர்கள் தெல்லிப்பழை சந்தியில் இருந்து மகாஜனக் கல்லூரிவரை அவர்களை ஊர்வலமாக அழைத்துச் சென்று கௌரவம் செய்ததை நினைவு கூர்ந்தார்.
எழுத்தாளர் குரு அரவிந்தன் தனது உரையில் தனது காலத்தில் மகாஜனக்கல்லூரி உதைபந்தாட்டத்தில் பங்கு பற்றி வெற்றி பெற்ற போது, கொக்குவில் சந்தியில் நடந்த ஒரு அசம்பாவிதத்தைக் குறிப்பிட்டு, தோல்விகளையும் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும், அதைத்தான் விளையாட்டுப் போட்டிகள் எமக்கு எடுத்து அறிவுறுத்துகின்றன. இன்று யூனியன் கல்லூரி பழைய மாணவர்கள் எம்முடன் கலந்து கொண்டதில் நாம் பெருமைப்படுகின்றோம், காலம் எல்லாவற்றையும் கடந்து செல்லும் என்று குறிப்பிட்டார். இதைத் தொடர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் மட்டுமல்ல, படிப்பிலும் பழைய நிலைக்கு மகாஜனா திரும்ப வேண்டும் என்று காப்பாளர்களான என். சாந்திநாதன், கே.ஜெயேந்திரன் ஆகியோர் குறிப்பிட்டு வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தனர்.
இந்த விழாவில் துடுப்பாட்ட வீரர்கள் விருது கொடுத்துக் கௌரவிக்கப்பட்டனர். ராஜினி விமலகாந்தன் நிகழ்ச்சியைச் சிறப்பாகக் கொண்டு நடத்தினார். விருந்துபசாரத்தைத் தொடர்ந்து நிர்வாகசபை அங்கத்தவர் சார்பில் ரதி சாம்பவலிங்கம் அவர்களின் நன்றியுரையுடன் பாராட்டுவிழா இனிதே முடிவுற்றது.
Kuru Aravinthan: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.