ஜூன் 21 கனடாவில் தேசிய பழங்குடி மக்கள் தினக்கொண்டாட்டம் - குரு அரவிந்தன் -
தேசிய பழங்குடி மக்கள் தினம் என்பது கனடாவின் முதற்குடி மக்கள், இன்யூட் மற்றும் மெடிஸ் பழங்குடியின மக்கள் ஆகியோரின் கலாச்சாரங்கள் மற்றும் அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரித்து கொண்டாடும் ஒரு நாளாக யூன் மாதம் 21 ஆம் திகதி இருக்கின்றது. கனடாவின் கவர்னர் ஜெனரல் ரோமியோ லெப்லாங்க் அவர்களால் பிரகடனப்படுத்தப்பட்ட பின்னர், 1996 ஆம் ஆண்டில் இருந்து இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
கனடிய பழங்குடி மக்கள் பாரம்பரியமாக தங்கள் கலாச்சார பாரம்பரியத்தை கொண்டாடும் ஒரு நாள் என்பது உட்பட பல காரணங்களுக்காக இந்த திகதி சட்டரீதியான விடுமுறையாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்த நாள் 2001 ஆம் ஆண்டு முதல் வடமேற்குப் பிரதேசங்களில் ஒரு சட்டப்பூர்வ பிராந்திய விடுமுறையாகவும், 2017 ஆம் ஆண்டு முதல் யூகோன் பகுதியில் இருந்தும் கொண்டாடப்படுகிறது. கனடிய பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூடோ இந்த நிகழ்வை தேசிய பழங்குடி மக்கள் தினம் என்று மறுபெயரிடுவதாக உறுதியளித்திருந்தார். ஆனாலும் ஏனைய பகுதிகளுக்குச் சட்டரீதியான விடுமுறை கொடுக்கப்படவில்லை.
இந்த நாள் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களுக்கு மிகவும் முக்கியமானது. இலங்கையில் சிறுபாண்மை இனத்தவரான ஈழத்தமிழர்கள் யுத்தம் என்ற போர்வையில் சொந்த நிலங்களைவிட்டு விரட்டியடிக்கப்பட்ட போது, அவர்கள் அனாதைகளாக போவதற்கு இடமின்றித் தவித்த போது, கனடியப் பழங்குடி மக்கள்தான் அவர்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டித் தங்கள் நிலத்தில் எங்களைக் குடியிருக்க வைத்தார்கள். இன்று கனடியத் தமிழர்கள் அரசியல் பொருளாதாரத் துறைகளில் சிறந்து விளங்குவதற்குக் காரணம் அன்று அவர்கள் பெருந்தன்மையோடு எங்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டி வரவேற்றதேயாகும்.