ஈழத்தின் சிறார் இலக்கியம் குறித்த மதிப்பீட்டில் கவிஞர் இக்பால் அலியின் வகிபாகம்: ஓர் ஆய்வு! - பேராசிரியர் ஜமாஹீர், பேராதனை பல்கலைக்கழகம் -
- கவிஞர் இக்பால் அலி -
ஆய்வுச் சுருக்கம்
ஈழத்தின் சிறார் இலக்கியப் பரப்பில் கவிஞர் இக்பால் அலியின் வகிபாகத்தைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். ‘இக்பால் அலியின் சிறார் இலக்கியத்தின் பாடுபொருள் மற்றும் எடுத்துரைப்பு பிற சிறார் இலக்கியங்களிலிருந்து வேறுபடுகிறது.’ என்ற கருதுகோளினைக் கொன்டு இக் கட்டுரை அமைகிறது. இக்கட்டுரைக்கு இதுவரை வெளிவந்துள்ள இக்பால் அலியின் சிறார் பாடல்கள் கொண்ட நூல்களை முதன்மைத் தரவுகளாகவும் இப்பாடல் நூல்களுடன் தொடர்புடைய திறனாய்வுகள், கட்டுரைகள் மற்றும் ஆய்வேடுகள் துணைமைத் தரவுகளாகவும் அமைகின்றன. கட்டுரையானது விபரிப்பு மற்றும் உள்ளடக்கப் பகுப்பாய்வு முறையியல்களைப் பின்பற்றியும் விளக்கப்படுகின்றது. ஈழத்து சிறார் இலக்கியத்தின் வழி மனித குலத்தின் மேம்பாடுதான் இக்பால் அலியின் வலியுறுத்தல் என்பதே இக்கட்டுரையின் முடிவாகும்.
பிரதான சொற்கள்: சிறார் இலக்கியம், அன்பு பெருக, மூன்று சக்கரக்காரன், குரங்குத் தம்பி, செல்லக் குட்டி
அறிமுகம்
இக்பால் அலி 1984ஆம் ஆண்டு முதல் இலக்கிய படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபட்டு வரும் ஒரு கவிஞர், எழுத்தாளர்இ ஊடகவியலாளர், மானுட சமத்துவச் சிந்தனையை கலை இலக்கியங்களின் வழி முன்னெடுத்து வருபவர். இவர் இலங்கை சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகவும் தொழில் நிமித்தம் காரணமாக பறகஹதெனிய மற்றும் கண்டியை வாசிப்பிடமாகவும் கொண்டவர். இலக்கிய உலகிற்கு இக்பால் அலியை அறிமுகம் செய்தவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மேனாள் தமிழ்த்துறை தலைவர் பேராசிரியர் துரைமனோகரன் ஆவார். குறிப்பாகஇ பேராசிரியர் துரைமனோகரன் எழுதிய ‘இலங்கையின் இலக்கிய வளர்ச்சி’ என்ற நூலிலும் இக்பால் அலி வெளிக்கொணர்ந்த பல நூல்களுக்கு அவர் எழுதிய அணிந்துரைகளிலும் இதனை அறியலாம்.