தொடர் நாவல் - நவீன விக்கிரமாதித்தன் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்! - வ.ந.கிரிதரன் -
அத்தியாயம் (17) நடுக்காட்டில் வழிதப்பிய நாயகன்!
"கண்ணம்மா, எதற்காக இங்கு வந்து பிறந்தோம்?" திடீரென நான் கேட்கவே மனோரஞ்சிதம் சிறிது திடுக்கிட்டுப் போனாள்.
"என்ன கண்ணா? உனக்கு என்ன நடந்தது? ஏனிந்தக் கேள்வி? அதுவும் இந்தச் சமயத்தில்" என்று கேட்கவும் செய்தாள். அத்துடன் என் தோள்களைப் பிடித்துக் குலுக்கினாள்.
"கண்ணம்மா, எனக்கு அடிக்கடி வரும் கேள்விதான். இதிலொன்றும் ஆச்சரியப்படுவதிற்கில்லையே. நீ இவ்விதம் திடுக்கிடுவதுதான் வியப்பைத் தருகிறதடீ"
"கண்ணா, சில விடயங்களில் கேள்வி கேட்கக் கூடாது. இருப்பின் இரகசியமும் அவற்றிலொன்று"
'கண்ணம்மா, எனக்கு அதில் உடன்பாடில்லை. கேள்வி கேட்பது பகுத்தறிவு படைத்த மனிதரின் பிரத்தியேக உரிமை. எப்பொழுதும் பாவிக்க வேண்டிய உரிமை. இருப்பிலொரு தெளிவினை அடைதற்கு இவ்விதமான கேள்விகள் அவசியமில்லையா கண்ணம்மா?"
"கண்ணா, என்னைப்பொறுத்தவரையில் அவசியமில்லை. ஏன் இவ்விதம் நம் இருப்பு இருக்கிறது? எதற்காக வந்து பிறந்தோம்? இருப்பில் அர்த்தமுண்டா? இவை போன்றா கேள்விகளுக்கு ஒருபோதும் சரியான விடைகள் கிடைக்கப்போவதில்லை. ஏனென்றால் நாம் படைக்கப்பட்டுள்ள , உருவான விதம் அப்படியிருக்கிறது கண்ணா? எப்படி எறும்பொன்றால் எம்மைப் புரிந்துகொள்ள முடியாதோ அதுபோல்தான் எம் நிலையும்.எமக்கு மேலான நிலையிலுள்ள பலவற்றைப் புரிந்துகொள்ளும் நிலையில் நாமில்லை. கிடைத்ததை ஏற்றுக்கொண்டு, இன்று புதிதாய்ப் பிறந்தோமென்று எண்ணி, நடந்ததைப்பற்றிச் சிந்தனையை நீக்கி , இருப்பை எதிர்கொள்வதுதான் நல்லதென்பேன் கண்ணா."