பொது வேட்பாளர் கோரிக்கையும் தமிழ் அரசியலும்! - ஜோதிகுமார் -
I
அண்மையில் இடம்பெற்ற மூன்று நிகழ்வுகள் முக்கியமானவை: தமிழரசு கட்சியின் தேர்தல், லோகன் பரமசாமியின் வீரகேசரி கட்டுரை & கலாநிதி அமீர்அலியின் 'விடிவெள்ளி'யில் வெளியான கட்டுரை.
இவை மூன்றும், இவ்வருடத்தின் ஜனவரி மூன்றாம்-நான்காம் கிழமைகளில் நடந்தேறி உள்ளன. இம்மூன்றின் முக்கியத்துவமும் தமிழ் அரசியலின் செல்திசை நோக்கி இவை கூடியிருக்க கூடிய அதேவேளை, அதற்குரிய விமர்சனங்களையும் இவை உள்ளடக்கச் செய்தன. தமிழ் தேசியம் என்பது ஒரு 30-40 வருடகாலமாய் தொடர்ந்து வரும் ஒன்றாகவே இந்நாட்டில் காணப்படுகின்றது. (பெருந்தேசியவாதத்தை போலவே).
தனிநாடு என்பதும் சமஷ்டி என்பதும் சுயநிர்ணயம் என்பதும் காலத்துக்கு காலம் தமது புது வடிவை ஏந்தியிருந்தாலும், பெரும்பாலும் இவை பெருந்தேசியவாதத்திற்கு எதிரான ஓர் எதிர்ப்பலையே. இதனாலோ என்னவோ இக்கோட்பாடுகளும் நகர்வுகளும் தமிழ் மக்கள் வாழ்வில் பாரிய தாக்கங்களை அல்லது வடுக்களை ஏற்படுத்தி தமிழ் மக்களின் வாழ்வை அவ்வவ் காலக்கட்டங்களில் நிர்ணயிப்பதாக இருந்துள்ளன. இச்சூழ்நிலையிலேயே அண்மைக்காலத்தில் ஜனாதிபதி தேர்தல் என்ற விடயமும் இது பொறுத்து தமிழ் மக்களின் தற்போதைய நிலைப்பாடு என்ன என்ற கேள்வியும் உருவாகி உள்ளது. இப்பின்னணியில் தமிழ் தேசியம் என்பது பகிஸ்கரிப்பு என்ற வேலைத்திட்டத்திலிருந்து முன்னேறி, பொது வேட்பாளர் என்ற கருத்தாக்கத்தை நோக்கி நகர்ந்துள்ளது.