ரஷ்ய ,உக்ரைன் யுத்தச் சிந்தனைகள்! - ஜோதிகுமார் -
பகுதி இரண்டு!
5
போரின் மூன்றாவது சுற்று இப்படியாய் முடிவடைந்த நிலையில் அடுத்த நான்காவது சுற்று, ரஷ்யாவின் இலத்திரனியல்-மின்னியல் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது. எலன்-மஸ்க் (Elon Musk) தனது Starlink செய்மதிகளை உக்ரைனுடன் தொடர்புபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவைப்படும் Terminalகளையும் உக்ரைனுக்கு தந்துதவி ரஷ்ய தாக்குதல்களால் செயலிழந்து போன உக்ரைன் அலைவரிசைகளை மீள உயிர்ப்பிக்க உதவப் போவதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, ரஷ்யா, கீவ்வின் மிக உயர்ந்த தொலைதொடர்பு கோபுரத்தை துல்லிய குண்டுவீச்சுகளால் தாக்கியழித்து, அங்கே பணியாற்றிய ஐந்து ஊழியரையும் கொன்றொழித்து விட்டதாய் உக்ரைனே அறிவித்தது. அதாவது எலன் மஸ்க்கின், Starlink செய்மதிகளின் தொடர்பாடல், ரஷ்யா படைத்தரப்பால் ஏட்டிக்குப் போட்டியான நிலையில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பதிலடியான நடைமுறை மேற்கொண்டதன் மூலம், மேற்படி நான்காம் சுற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போரை, விண்வெளி நோக்கி விஸ்தரிக்க எடுக்கப்பட்ட நகர்வு, முதலடியிலேயே நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்கா தனது அதிசக்தி வாய்ந்த அணு ஏவுகணையான Minutemanஐ 6ம் திகதி ஏவி சோதனை செய்யப் போவதாக அதிரடியாக அறிவித்தது. இதனை உக்ரைன் போரின் ஐந்தாம் சுற்றாக நாம் வரையறுத்துக் கொள்ளலாம். அதாவது, ஒவ்வொரு சுற்றிலும், போரின் உக்கிரத்தை அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்த்துவது, போரின் பங்கு பற்றுனர்களால், மேற்கொள்ளப்பட்ட பிரஞ்ஞை அற்ற, ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடாயிற்று.