'எஸ்.ரி.ஆர் (சி.தியாகராஜா) - நினைத்ததை முடித்தவர்' நூல் எனக்கு நேற்று கிடைத்தது. அதற்காக எஸ்.ரி.ஆர் அவர்களின் புதல்விகளிலொருவரான திருமதி விஜிதா கேதீஸ்வரநாதனுக்கு நன்றி. நூல் மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பட்டு வெளியாகியுள்ளது. நூலின் ஆக்கங்களை விஜிதா கேதீஸ்வரநாதனும், 'தமிழ்த் தேசியப் பசுமை இயக்க'த் தலைவரும், சூழலியலாளரும், நண்பருமான பொ.ஐங்கரநேசனும் தொகுத்துள்ளார்கள்.
எஸ்.ரி.ஆர் பற்றிய இந்நினைவு மலர் பல வகைகளில் முக்கியத்துவம் மிக்கது. நூல் இரு பகுதிகளாகப் பிரிக்கப்படுள்ளது. முதற் பகுதியில் கலை, இலக்கியும், சமூக மற்றும் அரசியல் ஆளுமைகள் பலரின் எஸ்.ரி.ஆர் பற்றிய நினைவுகள் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளன. பொ.ஐங்கரநேசன், கம்பவாரிதி ஜெயராஜ், மறவன்புலவு க.சச்சிதானந்தன், வீ.ஆனந்தசங்கரி, மாவை சோ.சேனாதிராசா, டாக்டர் வி.ஜி.சந்தோஷம், நவரத்தினம் கிரிதரன், கலோபூஷணம் ராசையா பீதாம்பரம், மாலி, சங்கர், தேசமானுய வீ.ஶ்ரீசக்திவேல், வே.கந்தசாமி, செ.இராகவன், சி.கந்தசாமி, தம்பு துரைராஜா, தம்பி ஐயா தேவசாஸ், அனந்த பாலகிட்ணர் 7 எஸ். ராஜேந்திரன் செட்டியார் ஆகியோரின் நனவிடை தோய்தல்கள் நூலிலுள்ளன.
- எஸ்.ரி.ஆரின் இளமைத்தோற்றம். -
எழுத்தாளர் தம்பி ஐயா தேவதாஸின் நினைவு கூரலில் எஸ்.ரி.ஆர் 1982இல் நல்லூர் மனோகரன் என்பவருடன் இணைந்து 'நெஞ்சுக்குத் தெரியும்' என்னும் தமிழ்த்திரைப்படத்தைத் தயாரித்த விடயத்தையும், 1983 இனக்கலவரம் காரணமாக அது இடையில் நின்ற விபரத்தையும் அறிய முடிகின்றது. இதுவொரு முக்கியமான ,இதுவரை அறியப்படாத தகவல். சங்கரின் 'தியாகு மாமா' நினைவு கூரலும் முக்கியமான தகவல்களை உள்ளடக்கியுள்ளது. கஸ்தூரியார் வீதியிலமைந்துள்ள இரு மாடிக்கட்டடமான பெரிய வீடு பார்ப்பதற்கே திரையரங்கு போன்றது. அதன் மாடியில் நூறு பேர் பார்க்கக்கூடிய திரையரங்கு, தேக்கு மரப்பலகைகளால் மறைக்கப்பட்ட சுவர்கள், 75 பேர் அமர்ந்து உரையாடக் கூடிய விருந்தினர் கூடம் இவற்றையெல்லாம் விபரிக்கும் இம மனப்பதிவிலிருந்து இன்னுமொரு விடயத்தையும் அறிந்துகொள்கின்றோம். எஸ்.ரி.ஆரின் திரையரங்குகளில் விற்பதற்காக கச்சான், ரொபி போன்றவற்றைத் தயாரிக்கும் சிறியதொரு தொழிற்சாலையும் அவ்வீட்டின் பின்புறம் இயங்கிக்கொண்டிருந்த விபரம்தான் அது. மேலும் திரையரங்கச் சுவரின் ஒரு பக்கம் முழுவதும் சிவன் - பார்வதி ஓவியம் வரையப்பட்டிருந்தது. அதனை வரைந்தவர் எஸ்.ரி.ஆரின் நண்பரான ஓவியர் மணியம். ஓவியர் மணியம் அக்காலகட்டத்தில் யாழ் நகரத் திரையரங்குகளுக்குக் 'கட் அவுட்டு'கள் வரைந்து கொண்டிருந்தவர். காவல்காரன், மாட்டுக்கார வேலன், அடிமைப்பெண், பட்டிக்காடா பட்டணமா, நாளை நமதே, நீரும் நெருப்பும் ஆகிய திரைப்படங்களுக்கான அவரது 'கட் அவுட்டு'கள் மறக்க முடியாதவை.
= தன் மனைவி சரஸ்வதியுடன் எஸ்.ரி.ஆர் -
அடுத்த பகுதி 'எண்ணம் போல் வாழ்வு' என்னும் எஸ்.ரி.ஆரின் சுயசரிதையினை உள்ளடக்கியுள்ளது. இது இம்மலரின் முக்கியமான உள்ளடக்கம் மட்டுமல்ல பலவிதங்களில் முக்கியமானதும் கூட. தந்தை தில்லையர் தியாகர் சின்னத்தம்பி. நயினாதீவில் பிறந்தவர். தாய் தையலம்மை. புங்குடுதீவைச் சேர்ந்தவர். தன் சுயசரிதையினூடு எஸ்.ரி.ஆர் அவர்கள் யாழ்ப்பாண நகரின் வரலாற்றுத் தகவல்கள் பலவற்றை ஆவணப்படுத்தியுள்ளார். குறிப்பாக சுண்டுக்குளி பகுதியில் இயங்கிய மகேந்திரா திரையரங்கு, அதன் பங்காளிகளில் ஒருவராகத் தானுமிருந்த விடயம், அதன் பிரதான பங்காளியான இரத்தினசபாபதி யாழ் ராணி திரையரங்கை ஆரம்பித்த தகவல், யாழ் மிட்டாய்க்கடைச் சந்தி, யாழ் வைத்தீஸ்வரா வித்தியாசாலை வைத்தீஸவரா கல்லூரியாக மாறிய விபரம் இவ்விதமாக நூல் முழுவதும் தகவல்கள் நிறைந்திருக்கின்றன. நகரில் சண்டியன் தெய்வேந்திரத்தின் ஆதிக்கம் பற்றியும் சிறிது விபரிக்கின்றது. இச்சுயசரிதை மூலம் எஸ்.ரி.ஆரின் பாடசாலைப் பெயர் வீரசிங்கம் என்பதையும் அறிய முடிகின்றது.
இந்நூல் இன்னுமொரு வகையிலும் முக்கியத்தும் மிக்கது. எட்டாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தி அண்ணனின் யாழ் பஸ் நிலையத்திலிருந்த ராஜா கூல் பாரில் வேலை பார்த்த சிறுவன், எவ்விதம் பஸ் நிலையத்துக்கருகிலிருந்த வாகை மரத்தடியில் தோடம்பழம் விற்று சுய தொழிலை ஆரம்பித்தான், பின்னர் எவ்விதம் சொந்தமாக ராஜா ஸ்னோ ஹவுஸ் கடையினை ஆரம்பித்தான் , எவ்விதம் ராஜா திரையரங்கு கட்டி, பின்னர் படிப்படியாக வவுனியா, மட்டக்களப்பு, திருகோணமலை என ஏனைய இடங்களிலும் திரையரங்குகள் கட்டி உயர்ந்தான் என்னும் வரலாற்றை நூல் விரிவாகப் பதிவு செய்திருக்கின்றது. அத்துடன் அவரது முதற் காதல் அனுபவத்தையும், அவ்வனுபவம் வெற்றியடைந்து அக்காதலி சரஸ்வதியே அவரது மனைவியாகவும் அமைந்து எவ்விதம் அவரது மண வாழ்க்கை , ஆறு குழந்தைகளுடன் மகிழ்ச்சியுடன் கழிந்தது என்பதையும் 'எண்ணம் போல் வாழ்வு' சுவையாக விபரிக்கின்றது.
இச்சுயசரிதையின் இன்னுமொரு முக்கிய அம்சம். எஸ்.ரி.ஆர் தன் சொந்த அனுபவங்களை விபரிக்கையில் ஒளிவு மறைவின்றி விபரிக்கின்றார், எவ்விதம் யாழ் மாநகரசபையிடமிருந்து 'லைசென்ஸ்' போன்றவற்றைப் பெறும் சமயங்களில் தந்திரமாகக் காரியங்களைச் சாதித்தார் என்பதை, தனது வாகனச் சாரதிக்கான அனுமதிப் பத்திரத்தைப் பெறுகையில் எவ்விதம் பெற்றார் என்பதை ஒளிவு மறைவில்லாமல் உள்ளது உ ள்ளபடியே எடுத்துரைக்கின்றார். எவ்விதம் ஊழல் அக்காலத்தில் நிலவியது என்பதை ஒரு வித அங்கதச்சுவையுடன் , அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டே விபரிக்கின்றார்.
ராஜா திரையரங்கை எஸ்.ரி.ஆர் ஃபிலிம்ஸ் என்னும் வர்த்தகப் பெயரில் ஆரம்பிக்கப்பட்டபோது ஏற்பட்ட சவால்களை (காணி பெறுவதிலிருந்து கட்டடம் கட்டுவது, திரைப்படங்களைப் பெறுவது வரை) , அச்சவால்களை எவ்விதம் அவர் முறியடித்தார், எம்ஜிஆரின் திரைப்படங்கள் எவ்விதம் அவரது வளர்ச்சிச்கு உதவின எனப் பல விடயங்களை நூல் எடுத்துரைக்கின்றது. எம்ஜிஆர் சுடப்பட்டு மருத்துவ நிலையத்திலிருந்தபோது அவரைச் சென்று சந்தித்த அனுபவத்தையும் தன் சுயசரிதையில் பகிர்ந்திருக்கின்றார் எஸ்.ரி.ஆர். அவர் ராஜா திரையரங்கை ஆரம்பித்துத் திரைப்படங்களைப் பெறுவதற்காக எவ்வளவு சவால்களை அப்போது பெரிய நிறுவனங்களாக விளங்கிய சினிமாஸ், சிலோன் தியேட்டர்ஸ் போன்றவற்றிலிருந்து எதிர்கொள்ள நேர்ந்தது, அவற்றை எவ்விதம் அவர் முறியடித்து வெற்றிக்கொடி நாட்டினார் என்பதையும் நூல் விரிவாக விபரிக்கின்றது. குறிப்பாக எம்ஜிஆரின் ஒளிவிளக்கு திரைப்படத்தைத் திரையிடத் திரையரங்குகள் பெறுவதிலிருந்த் சிரமத்தை அவர் விபரித்தபோது அதே ஓளி விளக்கு யாழ் ராஜா திரையரங்கில் இரு தடவைகள் 100 நாட்கள் ஓடிப் பெருவெற்றியடைந்தது என்பது நினைவுக்கு வந்தது. ராஜா திரையரங்கத்தின் வரலாற்றில் மறக்க முடியாத இரு திரைப்படங்கள் காவல்காரன் & ஒளி விளக்கு.
- ராஜா திரையரங்கில் 'ஒளி விளக்கு' 'கட் அவுட்' -
தனது புதல்விகளின் பெயர்களில் 'சாந்தி' , சுகந்தி, அமுதா, வசந்தி ஆகிய திரையரங்குகளை, மனைவியின் பெயரி சரஸ்வதி ஆகிய திரையரங்குகளை எஸ்.ரி.ஆர் ஆரம்பித்ததையும் இச்சுயசரிதை மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது. இந்நூலில் வவுனியாவின் 'வசந்தி' திரையரங்கு 1973இல் தொடங்கப்பட்டது என்று எஸ்.ரி.ஆரின் சுயசரிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது. நான் வவுனியாவிலிருந்து யாழ் இந்துக்கல்லூரியில் படிப்பதற்காகச் சென்றது 1971இல். அப்பொழுதே வசந்தி தியேட்டர் இயங்கத்தொடங்கி விட்டது. என் மாமா ஒருவரின் நண்பரான அமர்நாத் என்பவர் அப்போது அங்கு மனேஜராக இருந்ததாக நினைவு. நான் நினைக்கின்றேன் வசந்தி இயங்கத்தொடங்கிய ஆண்டு 1970. அச்சுபிழை அல்லது தவறுதலாக 1973 என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமென்று தோன்றுகின்றது.
இச்சுயசரிதையின் இன்னுமொரு முக்கியமான அம்சமாக அது விபரிக்கும் எஸ்.ரி.ஆரின் அரசியல் பங்களிப்பைக் கூறலாம். எஸ்.ரி.ஆர் தீவிரமான தமிழர்சுக்கட்சி உறுப்பினர். தான் தீவிர தமிழரசுக் கட்சி உறுப்பினர் என்பதையும், ஒரு போதும் அவருக்கு வாக்களித்திருக்கவில்லையென்பதை அறிந்திருந்தும் அல்ஃபிரெட் துரையப்பா தன் மீது மிகுந்த அன்பினை வைத்திருந்தார் என்று ஓரிடத்தில் கூறுகின்றார். பின்னர் 1977இல் அவர் கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு யாழ் மாநகரபை உறுப்பினராக வெற்றி பெற்றதை விபரிக்கின்றார். 1989இல் கூட்டணித்தலைவர்களான அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டபோது , அவர்களது மரணச்சடங்கை யாழ்ப்பாணத்தில் தான் நடத்தியதாக விபரிக்கின்றார். இது முக்கியமானதொரு விடயம். எஸ்.ரி.ஆரின் துணிச்சலான ஆளுமையினை எடுத்துக்காட்டுவது.
- தன் குழந்தைகளுடன் எஸ்.ரி.ஆர் -
இந்நினைவு மலரிலுள்ள எஸ்.ரி,ஆரின் சுயசரிதையான 'எண்ணம் போல் வாழ்வு' தனி நூலாக வெளிவருவது மிகுந்த பயனை அளிக்குமென்பதென் கருத்து. பள்ளிப்படிப்பை எட்டாம் வகுப்புடன் நிறுத்திய சிறுவன் ஒருவன் எவ்விதம் பல்வகையான சுய தொழில்களையும் செய்து, எதிர்பட்ட சவால்களையெல்லாம் துணிச்சலுடன் எதிர்கொண்டு, இறுதியில் வெற்றிகரமான ஏழு திரையரங்கங்களின் உரிமையாளராக , சமூக, அரசியல் பிரக்ஞை மிக்க ஆளுமைகளில் ஒருவராக வளர்ச்சியடைந்தான் என்பதை விபரிக்கும் இச்சுயசரிதை வாழ்க்கையில் முன்னேற விரும்பும் எவருக்கும் சிறந்ததொரு வழிகாட்டியாகத் திகழுமொரு நூல் என்பதால் இது தனி நூலாக வெளிவருவது மிகுந்த நன்மையினைத் தருமென்பதென் எண்ணம்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.