முன்னுரை
இறைவனின் படைப்பில் இவ்வுலகில் பல விலங்குகள் இன்பமாக வாழ்ந்து வருகின்றன. கம்பர் தம் இராமாயணத்தில் சில விலங்குகள் குறித்தும் அவற்றின் பண்புகள், இயல்புகள் குறித்தும் கூறியுள்ளார். அவற்றுள் ஆடு,ஆட்டுக்குட்டி, செம்மறிஆடு, வெள்ளாடு,ஆட்டுக்கடா, வரையாடு, பசு, எருமை, எருமைக்கடா, எருது, பன்றி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, குரங்கு,நீர்க்குரங்கு, நாய்,நீர்நாய், கழுதை, கோவேறு கழுதை, குதிரை, கவரிமான், நவ்வி மான், புள்ளிமான், சிங்கம், புலி, யானை, நரி,குள்ளநரி, கரடி, ஒட்டகம், எலி, பச்சோந்தி, ஆமை, பூனை, ஆமா, காட்டுப் பசு, ,ஓந்தி, உடும்பு,அணில்கள், யாளி,முயல் ஆகிய விலங்குகள் குறித்துக் கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளன. அவற்றுள் சிலவற்றை ஆராய்வோம்.

1. ஆடு
அனுமனின் வலிமையைக் கண்டு அஞ்சிய அரக்கர் கொல்கின்ற புலியினாலே துரத்தப்பட்ட ஆடுகள், அடைந்த துன்பத்தையே அடைந்தார்கள். பழமையான இலங்கை நகரம் அனுமனால் எரிந்தது.

“சூடுபட்டது தொல் நகர் அடு புலி துரந்த
ஆடுபட்டது பட்டனர் அனுமனால் அரக்கர்”
(இலங்கை வேள்விப் படலம் 516)

1.1 ஆட்டுக்குட்டி
முல்லை நிலத்து இடையர்கள் ஆட்டுக்குட்டியுடன் சிற்றிலையுடைய மரத்தடியில் ஒதுங்கியிருந்தனர்.திருடர்களைப்போல மறைந்துத் திரிவனவான பெரும்பேய்களும் ஒடுங்கி முட்கள் போலக் கூர்மையான பற்களை மென்று தின்ற வண்ணம் மிகுந்த பசியுடன் இருந்தன.

“வள்ளி புடை சுற்று உயர் சிற்றிலை மரந்தோறு
எள்ள வருமறிக் குருளொடு அண்டர்கள் இருந்தார்”
(கார்காலப்படலம் 521)

1.2. செம்மறி ஆடு
மென்மை உடைய பெண் செம்மறி ஆடுகள் பெற்ற அச்சம் அற்ற வரிகள் அமைந்த கொம்புகளை உடைய வலிமையான தலைகளையுடைய ஒன்றுக்கு ஒன்று சமமான கடாக்கள் ஒன்றை ஒன்று மோதின.

“துருவை மென்பிணை ஈன்ற துளக்குஇலா”
(நாட்டுப்படலம் 63)

1.3. வெள்ளாடு
இந்திரசித் அம்புகளினால் பெரிய ஓம விறகுகளை சமித்துகளை அமைத்தான். அதன் தீயிலே பெரிய தும்பை மலர்களைத் தூவினான். பின்பு கரிய எள்ளினைப் போட்டான்.கொம்பொடும் பற்களோடும் கூடிய கருநிறம் பெற்ற வெ ள்ளாட்டினது மிகுதியான உதிரத்தையும், சுவைக்க வேண்டிய தசையையும் முறையாக இட்டு, சிறந்த நெய்யினால் ஓமம் செய்தான்.

“அம்பினால் பெருஞ் சமிதைகள் அமைத்தனன் அனலில்
தும்பை மா மலர் தூவினன் காரி எள் சொரிந்தான்
கொம்பு பல்லொடு கரிய வெள்ளாட்டு இருங் குருதி
வெம்பு வெந்தசை முறையின் இட்டு எண்ணெயால் வேட்டான்”
(பிரம்மாத்திரப்படலம் 2545)

1.4 ஆட்டுக்கடா சண்டை
பரதன் கேகய நாட்டிலிருந்து சத்துருக்கணனோடு தலைநகருக்கு வந்தான்.கோசலநாட்டுக்கு வரும் வழியில் ஒன்றோடு ஒன்று மோதுகின்ற எருமைக் கடாக்கள், ஆட்டுக்கடாக்கள், வெற்றியினையே குறிக்கோளாகக் கொண்டு போரிடும் கோழிகள் ஆகியவற்றை சண்டையிடச் செய்வதற்காகவே நன்கு வளர்க்கின்ற வாழ்க்கை உடைய மக்களும் நெருங்கினர்.

“எறி பகட்டினம் ஆடுகள் ஏற்றை மா
குறி கொள் கோழி சிவல் குறும்பூழ் நெடும்”
(பள்ளியடைப்படலம் 797)

1.5 வரையாடு
பெரிய மலைஉச்சிக்குச் சென்று துள்ளும் மலையாடுகள் வேதம் போலத் தெளிவுற்ற பச்சை ஒளிபோல தம்மைச் சூழப் பெறுவதால், சூரியதேவனின் பச்சைநிறக் குதிரைகளை ஒத்தனவாக விளங்குகின்றன.

“மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை”
(சித்திரக்கூடப்படலம் 730)

2.பசுங்கன்று
வனம்புகு படலத்தில் மலையில் வாழும் புலியின் குட்டியும், சிந்திய இருளைப் பிணைத்து உருவாக்கியது என்று சொல்லத்தக்க-பெண் யானை பெற்றெடுத்த யானைக் கன்றுகளும், இடையர் வீட்டில் வாழும் பசுங்கன்றுகளுடன் பகை இல்லாதனவாகவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாதனவும், களித்து விளையாடும் பல காட்சிகளைப் பாராய் என்றான்.

“குன்று உறை வய மாவின் குருளையும் இருள் சிந்திப்
பின்றினது எனல் ஆகும் பிடி தரு சிறு மாவும்”
(வனம்புகு படலம் 690)

2.1 பசு
அயோமுகியின் சூழ்ச்சியினால் இலட்சுமணனைக் காணாமல் இராமன் வருந்தினான். மீண்டு வந்த இலட்சுமணனைக் கண்ட இராமன், இழந்த கண்கள் மீண்டும் வந்தது போன்ற மகிழ்ச்சி உடையவனாக, ஈன்ற தன் இளமையான கன்றினைப் பிரிந்து வருந்தி நின்று அதை ஆற்றிக் கொள்ளாமல் ஒலி செய்யும் நிலையில் அந்த கன்று தானே வர, அக்கன்றைக் கண்ட மகிழ்ச்சியாலும், பாசத்தாலும் பால் வெளிப்பட்டுச் சுரக்கின்ற மடியை உடைய பசுவினது தன்மையை உடையவன் ஆனான்.

“ஊற்று உறு கண்ணின் நீர் ஒழுக நின்றவன்
ஈற்று இளங் கன்றினைப் பிரிவுற்று ஏங்கி நின்று”
(அயோமுகிப் படலம் 1108)

2.3 எருமை
குளிர்ச்சி மிகுந்த நீரிலே மூழ்கிக் கிடந்து, பின்பு கரையேறி இப்பூமியில் திரிகின்ற சில மேகங்கள் என்று கூறும்படி, வருகின்ற கரிய எருமைகள் ஊரிலே தொழுவத்திலே தங்கிவிட்ட தம் கன்றுகளை நினைத்ததால், அவற்றின் மெல்லிய முலைகள் பாலைத் தாரை தாரையாகச் சொரிந்தன. அப்பாலைப் பெற்ற நெற்பயிர்கள் தழைத்து வளர்ந்தன.

“ஈர நீர் படிந்து இந் நிலத்தே சில
கார்கள் என்ன வரும் கரு மேதிகள்”
(நாட்டுப்படலம் 57)

2.4 எருமைக்கடா சண்டை
எருமைகள் பெற்றெடுத்த செந்நிறக் கண்களை உடைய ஓர் எருமைக் கடாவுடன், மற்றொரு எருமைக் கடா இவை கோபத்தை உடைய இடுகள் ஆகும். என்று சொல்லும்படி மோதி, முறையாக நெருங்கி ஒரு பொருளான இருள், இரண்டு பகுதியாகிக் கோபித்துப் போரிடுவதுபோலப் போரிட்டன. அக்கடாக்களின் போரினை வேடிக்கைப் பார்த்து, தம் முடிகளைச் சுற்றிய வண்டுகள் மேலெழுந்து ஆரவாரிக்க, சிலர் அப்போரின் சிறப்பைக்கண்டு மேகமண்டலம் வரை கேட்குமாறு ஆரவாரம் செய்தார்கள்.

“எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்னத் தாக்கி ஊழுற நெருங்கி ஒன்றாய்”
(நாட்டுப்படலம் 49)

2.5 எருது
ஆறு பாய்ந்து ஓடும் ஒலி, உழவர்கள் கரும்பு ஆலையில் வேலை செய்யும் ஒலி, அந்த ஆலையிலிருந்து கருப்பஞ்சாறு பாயும் ஒலி, எருதுகள் ஒன்றுக்கொன்று மோதிக் கொள்கின்ற ஒலி, நீர் நிலைகளில் எருமைகள் விழுவதால் உண்டாகும் ஒலி இன்னும் இவற்றைப் போன்றனவாகிய பல ஒலிகள் கோசலநாட்டில் கேட்கும்.

“ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன”
(நாட்டுப்படலம் 35)

வெற்றி பொருந்திய வாத்தியங்கள் எல்லா இடங்களிலும் மேகங்களைப் போல பேரொலி செய்தன.. வண்டியில் ஏற்றப்பட்ட பண்டங்களாகிய சுமைகள் அனைத்தையும், அவற்றை முதன்முறையாகக் கட்டிய கயிறுகள் அற்றுப்போக, வீசிவிட்டு அன்னப்பறவைகள் போன்ற பெண்கள் அஞ்சுமாறு தறிகட்டு ஓடி யோகிகளைப் போல வருத்தம் நீங்கின.

“கொற்ற நல்இயங்கள் எங்கும் கொண்டலின் துவைப்ப பண்டிப்
பெற்ற ஏறு அன்னப் புள்ளின் பேதையர் வெருவி நீங்க”
(எழுச்சிப்படலம்738)

2.6 காளை
காளையைப் போன்ற நடையை உடைய காவலன் தசரதனது மிகப் பெருஞ்சேனைக் கூட்டம், உலகில் வெற்றிடம் சிறிதும் இல்லை என்னும்படி திரண்டது.

“விடை பொரு நடையினான் சேனை வெள்ளம் ஓர்
இடை இலை உலகினில் என்ன ஈண்டிய”
(எழுச்சிப்படலம் 689)

மாலைக் காலங்களில் பசுக்கூட்டங்களின் பெரிய காளைகள் வருவதுபோல, கருங்குவளை போன்ற கண்களை உடைய மங்கையர் சூழ்ந்து வர, அவர்கள் நடுவே இருந்தபடி ஆடவர் சோலைகளிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். (பூக்கொய் படலம் 872)

2.7 சிறிய காளை
மாயா சனகப் படலத்தின் மாயா சனகனை, உண்மையான தன் தந்தை என்று நம்பிய சீதை வருந்தி அழுதாள். கயிற்றினால் கட்டப்பட்டுள்ள கலப்பையிலே நுகதடியின் சுமையுடனே சூடேறப் பெற்றும், மிகவும் அடியுண்டும், சேறு நிறைந்த வயலை விட்டு நீங்காமல் அதிலேயே உழுதவாறு விழும் தன்மையுள்ள சிறிய காளையைப் போல, பகைவனால் கைப்பற்றப்பட்ட நாளிலேயே உயிரை விடாமல் போன தீவினை உடையவளான நான், உம்மையெல்லாம் விலைப் படுத்திவிட்டேன் என்று புலம்பினாள்.(மாயா சனகப்படலம் 1613)

3.பன்றி
முனிவர்களிடம் அன்பு கொண்ட ஆண் குரங்குகள் அன்புடன் பழங்களை எடுத்து வந்து கொடுக்கின்றன. பன்றிகள், கிழங்குகளைத் தோண்டிக் கொண்டு வந்து கொடுக்கின்றன.

“அரிய மாக் கனி கடுவன் அன்பு கொண்டு அளிப்ப
கரிய மா கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய்”
(சித்திரக்கூடப்படலம் 760)

3.1. காட்டுப்பன்றிகள்
காட்டுப் பன்றி வீட்டுப் பன்றியின் வேறானது.காட்டுப் பன்றி கிழங்குகளையும், பயிரையும் தின்று வாழும்.இது கொடிய விலங்காகும்.இருள் போன்ற கரிய நிறத்தையுடைய காட்டுப்பன்றிகள் தம் மலையில் வாழும் பெண்கள் வழித்து எறிந்த குங்குமக்குழம்பைத் தம் உடம்பில் பூசிக் கொண்டு, பின்பு அக்குங்குமக் குழம்பு போகுமாறு,மராமரத்திலும், சந்தனமரத்திலும் உடம்பைத் தேய்த்துக் கொள்ளும்.

“திமிர மா உடல் குங்குமச் சேதகம்
திமிர மாவொடும் சந்தொடும் தேய்க்குமால்”
(வரைக் காட்சிப்படலம் 817)

3.2. முள்ளம்பன்றி
இராமன், விராதனைத் தன் அம்புகளால் தாக்கினான். விராதனின் உடலில் தைக்க,, அந்த அம்புகளை நிமிர்ந்து தெரிக்கும்படி வீசினது முட்களைக்கொண்ட உடம்பை உடைய பெரிய பன்றி சிலிர்த்து உதறியதுபோல இருந்தது.

“எய்த்த மெய்ப் பெரிய கேழல் என எங்கும் விசையின்
தைத்த அக் கணை தெறிப்ப மெய் சிலிர்த்து உதறவே”
(விராதன் வதைப் படலம் 32)

4.குரங்கு
தேவமகளிர் தம் கணவரிடம் ஊடல் கொண்டு கழற்றி எறிந்த இரத்தின, முத்து மாலைகளையும் அங்குள்ள மரங்களில் வாழும் ஆண் குரங்குகள் எடுத்து அணிவிக்க, அவற்றை மகிழ்ந்து அணிந்து கொண்ட பெண்குரங்குகள் தம் அழகைக் கண்டு மகிழும்.

“அரம்பையர் வெறுத்து நீத்த அவிர் மணிக் கோவை ஆரம்
மரம்பயில் கடுவன்பூண மந்தி கண்டு உவக்கும் மாதோ”
(வரைக்காட்சிப்படலம் 804)

4.1 நீர்க்குரங்குகள்
நீர்க்குரங்குகள் காவிகளாகிய நாம் வள்ளலான இராமனைச் சாதாரண மனிதன் என்று எண்ணிக்கொண்டு, இகழ்ந்து இக்கடலில் தள்ளி விட்டோம். ஆராய்ச்சி இல்லாதவர் ஆனோம். என்று சொல்லி வெள்ளி போல் வெண்மையான பற்களைக்காட்டி இளித்த வண்ணம் வானத்தை அளாவத் துள்ளிக் குதித்து ஓடின.

“வெள்ளி வெண் பற்களைக் கிழித்து விண்உறத்
துள்ளலுற்று இரிந்தனகுரங்கு சூழ்ந்தில”
(வருணனை வழி வேண்டு படலம் 571)

5. நாய்
இராவணன், சீதையைக் கண்டு, மாறாக் காதல் கொண்டுத் தன்னை ஏற்றுக் கொள்ளுமாறு மன்றாடியபோது," சீதை இராமனுக்குக் கற்புக்கடமை கொண்டுள்ள எண்ணை வளர்த்து எரியும் வேள்வித் தீயில் புனிதரான முனிவர்கள் கடவுளுக்காக வழங்கும் அவி உணவை, ஒரு நாய் விரும்பியதைப் போல நீ விரும்பி. எத்தகைய இழிவான சொற்களைச் சொல்லிவிட்டாய்" என்று கூறியதை,,

                   " புவியிடை ஒழுக்கம் நோக்காய் பொங்குஎரி புனிதர் ஈயும்
                      அவியை நாய் வேட்டதென்ன என் சொனாய் அரக்க என்னா"
                                                                                              (சடாயு உயிர் நீத்த படம் 869)

என்பதன் மூலம் அறியமுடிகிறது.

5.1. நீர்நாய்கள்
பம்பையில் உள்ள நீர்நிலையில் வாளைமீன்கள் வலியுடன் வீசிய வாள்களைப் போலப் பாய்ந்து சென்றன. ஒலிமிக்க அலைகளில் எல்லாம் உருண்டு செல்வனவாகிய நீர்நாய்கள், ஒலியையுடைய நடையொடு கூடிய கழைக்கூத்தாடிகள் போல, அவ்வாளை மீன்களின் மீது நடனத்தை அழகுறச் செய்தன. தவளைகள் அதைப் பார்த்து இது நன்றாய் இருக்கிறது என்று புகழ்ந்து கூறுவனவற்றைப் போல இரைந்து ஒலி எழுப்பின.

“வலி நடத்திய வாள் என வாளைகள் பாய
ஒலி நடத்திய திரைதொறும் உகள்வன நீர்நாய்”
(பம்பைப் படலம் 21)

6.கழுதை
கழுதை பெரும்பாலும் கெட்ட சகுனத்தை தரும் விலங்காகவே கம்பர் கூறுகிறார். திரிசடை தான் கண்ட கனவு குறித்து சீதையிடம், இராவணனனின் அழிவைக் குறிக்கும் அந்தக் கனவில் அந்த அரக்கன் எண்ணைய்த் தலையோடு கழுதைகளும், பேய்களும் கட்டிய தேரில் ஏறி,, இரத்தம் தோய்ந்த ஆடையுடன் தென்திசைக்குச் செல்ல அவனுடைய மக்களும், சுற்றத்தாரும் தொடர்ந்து வர அரக்கமகளிரின் தாலிகள் தாமாக அறுந்து விழுந்தன.

“எண்ணெய் பொன் முடிதொறும் இழுகி ஈறு இலாத்
திண் நெடுங் கழுதை பேய் பூண்ட தேரின்மேல்”
(காட்சிப்படலம் 368)

கழுதைகள் பூட்டிய தேரில் தென்திசையை நோக்கி இராவணன் சென்றதாகத், திரிசடை கனவு கண்டது தீய நிமித்தமாக கூறப்பட்டுள்ளது.

6.1 கோவேறு கழுதை
சுமித்திரை ’வேசரி’ என்ற கோவேறு கழுதை மேல் சென்றதை கம்பர் பாலகாண்டத்தில் கூறுகிறார். கழுதை மேல் ஏறுவது இழிவு என்றும், கோவேறு கழுதை மேல் ஏறுவது சிறப்பு என்றும் கருதினர். கோ- ஏறும் கழுதை என்றதால்,

அரசர்கள் ஏறும் கழுதை என்பது புலப்படுகிறது இந்த கழுதையை ’அத்திரி’ என்று சங்ககாலத்தில் அழைத்தனர்.

“விரி மணித் தார்கள் பூண்ட வேசரி வெரிநில் தோன்றும்
அரி மலர்த் தடங்கண் நல்லார் ஆயிரத்து இரட்டிசூழ”
(எழுச்சிப்படலம் 744)

7.குதிரை
தசரத சேனையின் குதிரைகள் துருக்கி நாட்டைச் சேர்ந்த துருக்கர்கள் கொண்டு வந்து விலைக்குத் தர வந்தவை. இளையவர்களால் உண்ணத்தக்க இனிய உணவை ஊட்டிப் பாதுகாக்கப்பட்டு நகரத்திலிருந்து அந்த இடத்திற்குக் கொண்டுவரப்பட்டவை.கேட்டோர் திடுக்கிடும் கனைப்பொலி உடையவை. அலங்கரிக்கப்பெற்றவை.அக்குதிரைகளை நிலமகளின் மார்பிலே அணிவித்த நேர்த்தியான மணிமாலை என்னும் சொல்லும் படி வரிசையாகக் கட்டினார்கள்.

“உண் அமுத உத்தியன ஒண்நகர் கொணர்ந்த
துண்ணெனும் முழக்கின துருக்கர் தர வந்த”
(சந்திரசயிலப்படலம் 774)

குதிரையின் இலக்கணம் நல்ல சுழியை உடையதாக இருக்க வேண்டும் என்பர்.

“சுழிக்கொள் வாம்பரி துள்ள ஓர் தோகையான்”
(எழுச்சிப்படலம் 711)

பால்நிறப் புரவியைச் சிறந்ததாகக் கருதினதையும், கம்பர் சொல்லிலிருந்து தெரிந்து கொள்ளலாம். குதிரைக்கு இயற்கையாக வரும் நோய்களிலிருந்து சிலவற்றை கம்பர் தீய நிமித்தமாகக் கொண்டு காவியத்தை பொருத்தியுள்ளார். ’ஆடுவார் புறவி’, என்று கம்பர் கூறிய இடங்களில் தாவி, ஒற்றுக்கு ஏற்ப அடி பெயர்ந்திட்ட ஆடிச் செல்லும் குதிரையைப் பற்றி கூறுகின்றார். யுத்த காண்டத்தில் ’அலங்கன்மா’ என்று கூத்தாடுகின்ற குதிரையைக் குறிப்பிட்டுள்ளார்.

8.கவரி மான்
பக்கமலையின் பல இடங்களில் கவரிமான்களின் பால் போலும் வெண்ணிறமுடைய வால்கள் விரைவாக அசைவன அவற்றைப் பாராய் என்றான் இராமன்.

“கவரிபால் நிற வால் புடைபெயர்வன கடிதின்”
(சித்திரக்கூடப்படலம் 732)

8.1 நவ்விமான்
நடனம் செய்யும் மயில் போல, நடந்து வருகின்ற மானின் பார்வை பெற்ற மங்கையரும் வாலிப வீரர்களும் தம்முள் கலந்து திரிந்தனர்.

“நடிக்கும் மயில் என்ன வரும் நவ்வி விழியாரும்”
(சந்திரசயிலப்படலம் 776)

8.2 புள்ளிமான்
மாயா சனகப் படலத்தில் சீதையின் முன் விழுந்து இராவணன் வணங்கியபோது, புலி தன்னருகே வரக் கண்ட புள்ளிமானைப் போல மனக்கலக்கம் எய்திய சீதை உடல் முழுவதும் நடுங்கினாள்.

“வல்லியம் மருங்கு கண்ட மான் என மறுக்கமுற்று
மெல்லியல் ஆக்கை முற்றும் நடுங்கினள் விம்முகின்றாள்”
(மாயா சனகப் படலம் 1591)

9.சிங்கம்
மேகங்கள் தங்கும் அந்த மலை, யானையைப் போன்றது.ஆகாயத்தில் விரைந்து செல்கின்ற கிரணங்கள் உடைய சூரியன்.யானைகள் மீது பாய்கின்ற சிங்கத்தை ஒத்தது. செவ்வானம், அந்தச் சிங்கம் பாய்ந்ததால் தோன்றிப் பரந்த செந்நிற இரத்தம் போலத் திகழ்ந்தது.

“மஞ்சு ஆர் மலை வாரணம் ஒத்தது வானின் ஓடும்
வெஞ் சாயையுடையக் கதிர் அங்கு அதன்மீது பாயும்”
(வரைக்காட்சிப்படலம் 827)

10.புலி
மலையில் வாழும் குறத்தியர் அங்கை நிலத்தைத் தோண்டி, கிழங்கை எடுத்தனர்.அப்பொழுது கொடிய விலங்குகள் வராமலிருக்க ஆடவர்கள், புலிகள் நெருங்கி வாழும் பக்கத்தில் எல்லாம் வலிமையான பறை முதலிய தோற்கருவிகளை முழங்க அவற்றின் ஒலி எங்கும் கலந்து எதிரொலிக்கும்.

“கல்லி அங்கு அகழ் காமர் கிழங்கு எடா
வல்லியங்கள் நெருங்கு மயங்கு எலாம்”
(வரைக்காட்சிப்படலம் 822)

காட்டில் தாய்ப்புலி கு ட்டிக்கருகில் இல்லாமல் வெளியே சென்றிருந்தாலும் குட்டிகள் கவறப்படாது. புலிக்குட்டியைக் கவர பயப்படுவர். (சூர்ப்பணகைப்படலம் 318)

அசோகவனத்தில் அரக்கியர் நடுவே சிறையிருந்த சீதை வாடி மெலிந்து ஊண், உறங்கம் இல்லாமல் ‘புலிக் குழாத்திடை அகப்பட்ட மானைப் போல் செய்வதறியாது, இராமனை எண்ணி தொழுவதும், சொருவதும், அழுவதுமாகத் துன்பக்கடலில் ஆழ்ந்திருந்தாள்.

10.1 புலிக்குட்டி
வனம்புகு படலத்தில் மலையில் வாழும் புலிக் குட்டியும், பெண் யானை பெற்றெடுத்த கன்றுகளும், இடையர் வீட்டில் வாழும் பசுங்கன்றுகளும் பகை இல்லாதனவாகவும் ஒன்றை விட்டு ஒன்று பிரியாதனவாகவும் களித்து விளையாடும் பல காட்சிகளைப் பாராய் என்று இராமன் சீதையிடம் காண்பித்து சொல்லிக் கொண்டே வந்தான். (வனம்புகு படலம் 690)

11.யானை
யானையின் மத நாற்றம், ஏழிலை பாலை மரத்தின் பூ நாற்றத்தை ஒத்திருக்கும் என்ற அறிய செய்தியைக் கம்பர் குறிப்பிடுகிறார்.

“பாத்த யானையின் பதங்களிற் படுமதம் நாறக்
காத்த அங்குசம் நிமிர்ந்திட கால் பிடித்தோடி
பூத்த ஏழிலைப்பாலையைப் பொடிப் பொடியாகக்
காத்தி ரங்களாற் றலர்ந்தொடும் தோய்த்த தோர் களிறு”
(சந்திரசயிலப் படலம் 767)

ஏழிலை பாலையிலிருந்து மதநீரானது மணம் போன்று நாற்றம் வீசியதனால், அதனைத் தாங்க முடியாத ஒரு யானை தன்னைத் தடுக்கின்ற பாகன் கை அங்குசம் நிமிர்ந்து விடும் படி, அந்த நாற்றம் வந்த வழியே பற்றிக் கொண்டு, ஓடி போய் அந்த மணம் வீசுவதற்குக் காரணமான பூக்கள் பூத்த ஏழிலைப் பாலை மரத்தைத் தன் முன்னங்கால்களால் பொடிப் பொடியாக்கி தேய்த்தது. யானைகள் அச்சப்பட்டு சினம் கொள்ளும்போது காதுகளைத் தாழ்த்தி வாலை நிவர்த்தி வேகமாகச் செல்லும் என்று வனத்துறை அறிஞர்கள் கூறுகின்றனர். தும்பிக்கையை மேலே தூக்கிப் பிளிறி ஓடும் என்பர் கம்பர்.

“களிரெ லாம் படக்கை தலை மேலுறப்
பிளிறியோடும். பிடியன்ன பெற்றியாள்”
(கரன் வதைப் படலம் 380)

யானைகளின் ஊடல்:
மகளிர் மட்டுமல்ல யானைகளும் ஊடல் கொண்டதைக் கம்பர், அழகுள்ள மகளிரது அகிற்புகையும், கஸ்தாரிப் புழுகும், செம்பஞ்சுக் குழம்பும் அகழியில் மிகுதியாகச் சேர்ந்திருந்தன. அதனால் அதில் நீராடிய ஆண் யானைகள் புதிய மணத்தையும், நிறத்தையும், பெற்றன. அதைக்கண்ட பெண் யானைகள் அவை வேறு பெண் யானைகளோடு கலவி கொண்டு வந்தன என்று கருதி ஊடல் கொண்டன என்பதை ஊர்தேடுபடலத்தில் 246 ஆவது பாடலில் கம்பர் குறிப்பிடுகிறார்.

பெண்கள் மட்டுமல்ல பெண்யானைகளும் ஊடல் கொண்டதை அறியமுடிகிறது.

12.நரி
நரியை ஊளையிடும் விலங்காகவும், பிணத்தைத் தின்னும் விலங்காகவும் கம்பர் கூறியுள்ளார்.யானைகளைக் கொண்ட போர்க்களத்தில் புகுந்தனவாகிய கரிய நரிகள் பிணமாமிச உணவை விரும்பியனவாய் நின்றன.

“கரி உண்ட களத்திடை உற்றன கார்
நரிஉண்டி உகப்பன நட்டனவால்”
(நிகும்பலை யாகப் படலம் 2912)

போர்க்களத்தில் தலையற்ற முண்டங்களின் தொகுதியும், பேய்களின் தொகுதியும், கணவரைக் காணாமல் அழுது சிவந்த கண்களை உடையவராய்த் தேடியும் மகளிரின் தொகுதியும், பிணக் குவியலால் மனத்தே மகிழ்ந்த பூதங்களின் தொகுதியும், நரிகளின் தொகுதியும், உயர்ந்து விளங்கினவே அல்லாமல், அந்தப் பிணக் காட்டில் தங்கிய உயிர்கள் பிற எவையும் இல்லை.(பிரம்மாத்திரப் படலம் 2583)

12.1 குள்ள நரி
படைத்தலைவர் வதைப் படலத்தில் அரக்கி ஒருத்தி, தன் கணவனைக் காண்பதற்காக அவனைத் தேடிப் போர்க்களம் செல்வாள். அங்கே, கணவனின் உடலும், கை, கால் முதலிய உறுப்புகளும் தனித் தனியே வெட்டப்பட்டு கிடப்பதைக் கண்டு, அவற்றைத் தழுவிக் கொண்டு ஓரிடம் அடைவாள். அக்கணவரின் குடலையும் ஈரலையும், கண்களையும் ஒரு குள்ள நரி கவர்ந்து செல்ல, அந்நரியைத் தொடர்ந்து செல்லும் ஆற்றல் அற்றவளாய் பெருமூச்சு விட்டுத் தன் உயிரை நீத்தாள்.

“குடலும் ஈரலும் கண்ணும் ஒர் குறு நரி கொள்ளத்
தொடர ஆற்றலள் நெடிது உயிர்த்து ஆர் உயிர் துறந்தாள்”
(படைத் தலைவர் வதைப்படலம் 2305)

13.கரடி
வில்லினின்று வெளிப்பட்டுத் தொடர்ந்து அம்புகள் பலவும், கரடியின் பெரிய பற்கள் பதிந்தனபோலப், புதிய புழுதியிற் கிடப்பனவான முடியணிந்த அரக்கத் தலைவர்களின் தலைகள், ஒளி மிக்க மின்மினிப்பூச்சிகள் முழுவதும் மேலே மொய்த்துள்ள வலியப் பாம்புப் புற்றுகளை ஒத்திருந்தன.

“வில் தொத்திய வெங்கணை எண்கின் வியன்
பல் தொத்தியபோல் படியப் பலவும்
முற்றச் சுடர் மின்மினி மொய்த்துள வன்
புற்று ஒத்த முடித் தலை பூழியன”
(நிகும்பலை யாகப் படலம் 2908)

அலைவீசும் கடல் போலும் அரக்கர்களைக் கடிகள் (வாவர் படைக்குத் துணையாய் அமைந்தவை) நெருங்கி அவர்களுடைய மணி முடியினைப் பெயர்த்து தள்ளுதலால், மலை மீது உயர்ந்து வளர்ந்துள்ள புற்றுகளைக் கரடிகள் கூறிய நகங்களால் நிலைபெயருமாறு தள்ளுவனவற்றை நிகர்த்தன.(நிகும்பலை யாகப்படலம் 2914)

14. ஒட்டகம்
இறக்குவதற்கு அரிய பெரும்சுமையைத் தாங்கி வரும் ஒட்டகங்கள், கள்ளை உண்ணும் மக்கள் பாலை விரும்பாமல் கள்ளை விரும்புவது போலச் சிறந்த இனிமை வாய்ந்த தளிர்கள் எவற்றையும் தின்னாமல், கசக்கும் வேப்பிலை முதலியவற்றைத் தேடி, தம் உள்ளத்தைப் போலவே வாயும் உலர்ந்து வருந்தின.

“தள்ள அரும் பரம் வாங்கிய ஒட்டகம்
தெள்ளு தீம் குழை யாவையும் தின்கில”
(எழுச்சிப்படலம் 716)

15.எலி
சினம் கொண்ட தோற்றமுடைய குகன், ‘இந்தப் படையெல்லாம் எலிகள் ஆகும். நான் இவற்றை விழுங்கும் பாம்பாவேன்.’ என்று கூறி, வலிமை மிக்க கூறிய நகங்களைக் கொண்ட புலிகள் எல்லாம் ஓரிடத்தில் திரள்வதுபோலத் தம் அருகே ஒன்று சேர்ந்து கூடுமாறு, ஆரவாரம்மிக்க தன் படையை மகிழ்ந்து கூவி அழைத்தான்.

“எலிஎலாம் இப்படை அரவம் யான் என
ஒலி எலாம் சேனையை உவந்து கூவினான்”
(கங்கை காண் படலம் 994)

16.பச்சோந்தி
பச்சோந்தியினையும், எள் பூவையும், குமிழ மலரையும் இச்சீதையின் மூக்கானது ஒத்திருக்கும் என்றால், பச்சோந்தி முதலிய அப் பொருள்கள் ஒளிரும் பொன்னையும், மணிகளையும் போல விளங்குக் காணப்படமாட்டா. அங்ஙனம் ஒளி செய்வதற்குரிய கரணமும் பச்சோந்தி முதலியவற்றிற்கு இல்லை. வல்லமையுடைய ஓவியம் எழுதுவோர்க்கும் தீட்ட இயலாத இம்மூக்கின் தன்மையை ஆராய்ந்து பார்த்து, நீ அவள் மூக்கின் அழகை உணர்ந்து கொள்வாயாக என்றான் இராமன்.

“ஓதியும் எள்ளும் தொள்ளைக் குமிழும் மூக்கு என்றால்
சோதி செம் பொன்னும் மின்னும் மணியும் போல் துளங்கித் தோன்றா”
(நாடவிட்டப்படலம் 789)

17. ஆமை,
அன்றலர்ந்த அழகிய தாமரை மலர்க்கூட்டத்தில் ஆமை மீது ஏறிவரும் தேரையைப் போல, தரையில் படும் வால்களை உடைய பெண்யானைகளின் மீது அழகிய மேகலை என்னும் ஆபரணம் அணிந்த பெண்களோடு குள்ளப் பெண்களான சித்தர்களும் சென்றார்கள்.

“காமர் தாமரை நாள்மலர்க் கானத்துள்
ஆமைமேல் வரும் தேரையின் ஆங்கு அரோ”
(எழுச்சிப்படலம் 719)

18.பூனை
அரக்கனாகிய விராதன், வஞ்சனை மிகுந்த கொடிய பூனையின் பெரிய வாயிலேச் சிக்கிக் கலங்கும் கூட்டுக்கிளி போலச் சுற்றி அழுகின்ற சீதையைக் கீழே விட்டு விட்டு, மனம் சிதைத்தவன் போல, சிறிது நேரம் நின்று சிந்தனை செய்து, மை மலை போன்றவனான இராமன் எதிரே வந்து கோபித்தான்.

“வஞ்சகக் கொடிய பூசை நெடுவாயில் மறுகும்
பஞ்சரக்கிளி எனக்கதறு பாவையை விடா”
(விராதன் வதைப் படலம் 24)

19.தவளை
எருமைகள் ஊரில் விட்டு வந்த கன்றுகளை நினைத்துக் கத்த, அப்போது தாய் அன்பினால் ஒழுகியப் பாலை அந்த அன்னக்குஞ்சுகள் உண்டு தூங்க பச்சை நிற தவளைகள் தாலாட்டும்.

“பால் உண்டு துயிலும் பச்சைத் தேரை தாலாட்டும் பண்ணை”
(நாட்டுப்படலம்45)

சூர்ப்பணகைப் படலத்தில் சேற்றில் உள்ள சங்கு தன் கணவனாகிய ஆண் தவளையின் அருகே இருப்பதைக் கண்ட மனைவியாகிய கருக் கொண்ட பெண் தவளை, தன் கணவன் சங்கை விரும்புவதாக நினைத்துக் கொண்டு, சினம் அடைந்தது என்று கூறப்பட்டுள்ளது. (சூர்ப்பணகைப்படலம் 338)

20.அணில்
அகத்தியப் படலத்தில், பஞ்சவடியில், பழங்களை வழங்கும் மிக இளமையான வாழைப்பழங்கள் உள்ளன. அணிலின் வாலைப் போன்ற செந்நெல் கதிர்கள் உள்ளன.

“கன்னி இள வாழை கனி ஈவ கதிர் வாலின்
செந்நெல் உள தேன் ஒழுகு போதும் உளதெய்வப் “
(அகத்தியப் படலம் 173)

21.யாளி
தமிழ் இலக்கியங்களில் ஆளி என்ற விலங்கு பற்றிய செய்திகள் இடம் பெற்றுள்ளன. ஆளி பற்றி பல கருத்துக்கள் நிலவுகின்றன. ஆளி என்பது சிங்க முகமும், யானை உடலும் கொண்ட விலங்கு என்று அகராதியில் பொருள் கூறப்பட்டுள்ளது. இவ்விலங்கு ’ஆளி’ என்றும், ’யாளி’ என்றும் வழங்கப்பட்டுள்ளது.அயோமுகிப் படலத்தில் அயோமுகி, தான் பிடித்த வலிய சிங்கங்களையும், யாளிகளையும், பாம்பாகிய கயிற்றில் மாறி மாறித் தொடுத்து அமைத்த சிலம்பினைத் தன் கால்களில் அணிந்தவள்.

“பற்றிய கோள் அரி யாளி பணிக்கண்
தெற்றிய பாதச் சிலம்பு தரித்தாள்”
(அயோமுகிப்படலம் 1068)

கரன் வதைப் படலத்தில் யாளிகள் கட்டப்பட்டவையும், சிங்கங்கள் கட்டப்பட்டவையும், வலிமைமிகுந்த யானைகள் கட்டப்பட்டவையும், புலிகள் கட்டப்பட்டவையும்,நாய்கள் கட்டப்பட்டவையும், நரிகள் கட்டப்பட்டவையும், பூதங்கள் கட்டப்பட்டவையும், குதிரைகள் கட்டப்பட்டவையும் தேர்களின் கூட்டங்கள் நெருங்கின என்று கூறப்பட்டுள்ளது.

22. முயல்
வெற்றியுடைய வானரங்களின் பெரும்படைத் தலைவர்கள், தம் பாதங்களால் முயல் களங்கத்தைக் கொண்ட சந்திரன் தவழும் பெரிய மலைகளைப் பறிப்பதற்கு அசைப்பதால், அந்த மலையிலிருந்த மேகக்கூட்டங்கள் அலறி ஓடின.

“சயக் கவி பெரும்படைத் தலைவர் தாள்களால்
முயல் கறை மதி தவழ் முன்றில் குன்றுகள்”
(சேது பந்தனப் படலம் 624)

முடிவுரை
நாம் வாழும் இவ்வுலகில் விலங்குகள் பல உள்ளன. கம்பராமாயணத்தில் ஆடு, ஆட்டுக்குட்டி, செம்மறிஆடு, வெள்ளாடு,ஆட்டுகடா, வரையாடு, பசு, எருமை, எருமைக்கடா, எருது, பன்றி, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி குரங்கு, நீர்க்குரங்கு, நாய்,நீர்நாய், கழுதை, கோவேறு கழுதை, குதிரை, கவரிமான், நவ்வி மான், புள்ளிமான், சிங்கம், புலி, யானை, நரி,குள்ளநரி, கரடி, ஒட்டகம், எலி, பச்சோந்தி, ஆமை, பூனை ஆமா காட்டுப் பசு, ,ஓந்தி, உடும்பு,அணில்கள், யாளி, முயல் ஆகிய விலங்குகள் குறித்தும், அவற்றின் பண்புகள், குணங்கள் இயல்பு குறித்தும் கூறப்பட்டுள்ளது.

துணை நூற்பட்டியல்

1. இராமன் பன்முகநோக்கில், அ.ச.ஞானசம்பந்தன்,சாரு பதிப்பகம், சென்னை,2016.

2. காலமும் கணக்கும் நீத்த காரணன் கம்பன், கட்டுரைத் தொகுப்பு, (பதிப்பாளர்கள் பழ.பழனியப்பன், சொ.சேதுபதி) கபிலன் பதிப்பகம்  
    புதுச்சேரி, சென்னை.

3.கம்பன் புதிய தேடல், அ.அ. ஞானசந்தரத்தரசு,தமிழ்ச்சோலைப் பதிப்பகம், புதுக்கோட்டை, 2012.

4. எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

5. கவிச்சக்கரவர்த்தி கம்பன் ஒரு பார்வை, தமிழ்நேசன்,வள்ளிபதிப்பகம், சென்னை,2019.

6. பூவண்ணன், கம்பராமாயணம் மூலமும் தெளிவுரையும் தொகுதி 1, 2, 3, 4, 5, 6,7, 8 வர்த்தமானன் வெளியீடு, சென்னை, 2011.

7. செல்வம்.கோ,கம்பன் புதையல், சாரு பதிப்பகம், சென்னை 2016.

8. க.மங்கையர்க்கரசி, கம்பராமாயணத்தில் ஊடல்
Link -  https://irjt.iorpress.org/index.php/irjt/article/view/587/303

9. க.மங்கையர்க்கரசி, கம்பராமாயணத்தில் நாய் இழிபொருளில் உவமை,அரண் மின்னிதழ் - Link https://www.aranejournal.com/article/6058

10. க.மங்கையர்க்கரசி, இலக்கியங்கள் காட்டும் கோவேறு கழுதை, அரண்  மின்னிதழ்- Link https://aranejournal.com/article/5941

11. க.மங்கையர்க்கரசி, கம்பராமாயணத்தில் மான்கள், பதிவுகள் மின்னிதழ்
- https://www.geotamil.com/index.php/2021-02-11-18-03-56/7733-23

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R