மணிமேகலைக்காப்பியத்தில் இடம்பெறும் இராசமாதேவி மாவண்கிள்ளியின் பட்டத்தரசி ஆவாள். அவள் மாவலி மரபைச் சார்ந்த அரசமரபில் பிறந்தவள். உதயகுமரனின் தாய். இராசமாதேவி மகனின் இழப்பால் கயமை குணம் உடையவளாகவும், மணிமேகலையை அடிமைப்படுத்தும் தன்மையுடையவளாகவும் மாற்றம் பெறுகிறாள். இறுதியில் தன்னுடைய தவறினை உணா்கிறாள். அவளது பண்பு நலன்களுக்கான மாறுபாட்டினை, இராசமாதேவியின் நடத்தை ஆளுமையை உளவியல் காரணங்களோடு ஒப்பிட்டு ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

உளவலி

உள்ளத்தில் துன்பம் மிகும் போது மனம்மிகுந்த வேதனைக்கு உள்ளாகிறது; இதனையே உளவியலாா் உளவலி என்பர். இந்த உளவலி உளஇயக்கங்களையே ஒட்டுமொத்தமாகப் பாதிக்கிறது எனலாம். “உடல்வலி போல மனவலி சாதாரணமானதல்ல. உடல்வலி உடலியக்கத்தில் பாதிப்பு ஏற்படுத்துவது போல உளவலி உளஇயக்கங்களையே பாதிப்பிற்கு உள்ளாக்குகின்றது. உளஇயக்கங்கள் பாதிப்பிற்குள்ளானால் உடல் வழிச் செயல்கள் அனைத்தும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே உள்ளத்தில் ஏற்படுகின்ற வலி வலிமைமிக்கதாக விளங்குகிறது.”1 என்பர். இராசமாதேவி தன் மகன் இறந்தான் என்ற செய்தியை அறிந்து மிகுந்த வருத்தமுடையவளாகவும், தன் ஒரே மகன் இறந்தான் என்ற நிலையில் ஆழ்ந்த உளவலி மிக்கவளாவும் மாற்றம் பெறுகின்றாள்.

“மன்னவ னருளால் வாசந் தலையெனும்
தன்னெடுங் கூந்தல் நரைமூ தாட்டி
அரசற் காயினுங் குமரற் காயினும்
திருநிலக் கிழமைத் தேவியர்க் காயினும்
கட்டுரை விரித்துங் கற்றவை பகர்ந்தும்
பட்டவை துடைக்கும் பயங்கெழு மொழியினள்
இலங்கரி நெடுங்கண் இராசமா தேவி
கலங்கஞ ரொமியக் கடிதுகென் றெய்தி
அழுதடி வீழா தாயிமை தன்னைத்
தொழுதுமுன் னின்று தோன்ற வாழ்த்தி”
(மணி.,சிறைவிடு காதை 1 – 10)

என்ற பாடல் அடிகள் வாயிலாக உதயகுமரன் இறப்பின் காரணமாக இராசமாதேவி தன்னுடைய உளவலியை அழுகை மூலமாக வெளிப்படுத்துவதனை அறியலாகின்றது. இராசமாதேவியின் துன்பத்தால் வருத்தமுற்ற மாவண்கிள்ளி தன் மனைவியின் உள்ளத்தை அமைதிப் படுத்தும் விதமாக வாசந்தவை என்றும் மூதாட்டியை அனுப்புகிறாா். வாசந்தவை அரசருக்குரிய இயல்பினை எடுத்துக்கூறி அதிலிருந்து தவறி மணிமேகலையின் மீது விருப்பம் கொண்டு உதயகுமரன் தவறுசெய்தான். அதன் பயனால் மரணம் அடைந்தான் எனக் கூறி இராசமாதேவியை ஆற்றுப்படுத்துகிறாள். இவ்ஆற்றுப்படுத்துதல் வாயிலாக மன்னன் இராசமாதேவியின் உளவலியை சரி செய்ய முயல்வதையும் இதன்வழி அறிய முடிகிறது.

மனச்சோர்வு

மனிதனுக்கு எதிர்பாராத ஏமாற்றங்கள் ஏற்படும் பொழுது அவனுடைய மனம் மிகுந்த துன்பமும் துயரமும் அடைகிறது. இதனை மனச்சோர்வு என்பர். “மனச்சோர்வு ஏமாற்றங்களால் ஏற்படுவதாகும். தாங்கமுடியாத நிலைக்கு ஈகோ தள்ளப்பட்டால் மனம் சோர்வடைந்து விடுகிறது. இதற்குப் பாதிப்பு மூலமாகிறது. பாதிப்பிலிருந்து விடபட முடியாத ஈகோ சோர்வடைந்து விடுகிறது. நாளடைவில் சோர்விலேயே ஆழ்ந்து விடுகிறது. இந்த மனச்சோர்வு அகநிலையில் இருந்து துக்கம், துயரம் ஆகிய இரண்டு நிலைகளில் வெளிப்படும்”2 என்பர். இராசமாதேவியிடம் தன் மகன் இழப்பு குறித்த உளச்சோர்வு காணப்படுவதை,

“இலங்கரி நெடுங்கண் இராசமா தேவி
கலங்கஞ ரொழியக் கடிதுசென் றெய்தி”
(மணி.,சிறைவிடு காதை 7 – 8)

என்ற அடிகள் விளக்குகின்றன. இராசமாதேவி தன் மகன் இறந்த நிலையில் விருப்பு வெறுப்புக்களுக்கிடையே வருத்தம் அடையக்கூடிய மனச்சோர்வு உடையவளாக இருப்பதை இதன் வாயிலாக அறிய முடிகிறது.

தன்னலவெளிப்பாடு

மனிதர்கள் அனைவருக்கும் தன்னல உணர்வு என்பது இயல்பான ஒன்றாகும். தாய்க்கும் தன்னல உணர்வு இருக்கும் என்பது உளவியலார் கருத்தாகும். இராசமாதேவி தன் மகன் உதயகுமரன் இறந்தான் என்ற செய்தியை அறிந்ததும் மிகுந்த கோபம் அடைகிறாள். தன் மகனின் இறப்பிற்கு காரணமான மணிமேகலையை பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் கொள்கிறாள். இதனை,

“பிறர்பின் செல்லாப் பிக்குணிக் கோலத்து
அறிவு திரிந்தோன் அரசியல் தானிலன்
கரும்புடைத் தடக்கை காமன் கையுற
அரும்பெறல் இளமை பெரும்பிறி தாக்கும்
அறிவு தலைப்பட்ட ஆயிழை தனக்குச்
சிறைதக் கன்று”
(மணி.,சிறைவிடு காதை 25 – 30)

என்னும் பாடலடிகள் விளக்குவதாக அமைகின்றன. இராசமாதேவிக்கு மணிமேகலையைத் தன்னுடன் வைத்துக் கொண்டு அவளை அடிமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உருவாகிறது. ஆயினும், அதை மனத்தில் மறைத்துத் தன் மகனை வெறுப்பது போல் பேசிதான் எண்ணியவாறு மணிமேகலையை வஞ்சித்து கொடுமைப்படுத்தவும், அடிமைப்படுத்தவும் விழைகிறாள். தன் மகனின் இறப்பிற்குக் காரணமான மணிமேகலையை வஞ்சிக்க எண்ணும் அரசியின் தன்னல உணா்வினை இதன் வாயிலாக அறியலாகின்றது.

தாக்குதல் உணர்வு

தாக்குதல் உணர்வு என்பது பிறரைத் தாக்க வேண்டும் எனும் நிலையிலுள்ள ஒரு மனநிலையாகும் என்பர். “தாக்குதல் உணர்வு பிறரைத் தாக்க வேண்டும் என்பது போன்ற ஒரு மனோ நிலையாகும். பகைவர் உள்ள போது இது இயல்பானதாக இருக்கலாம். ஆனால் எந்த விதமான முகாந்திரமோ அபாயமோ இல்லாத போது ஒருவனிடம் இந்த மாதரியான உணர்ச்சி காணப்படுகிறதென்றால் அது நோய்க்குறியாகும்”3 என்பர். தாக்குதல் எண்ணம் ஒருவனிடம் பலமாக இருப்பது இரண்டு விதங்களில் வெளிப்படலாம்.

“1. பிறரை தாக்கும் மனோபாவம்
2. தன்னைத் தானே தாக்கிக் கொள்ளும் மனோபாவம்”4

இராசமாதேவியிடம் தன் மகன் இறந்ததற்கு காரணமான மணிமேகலையைத் தாக்கும் மனோபாவம் காணப்படுவதனை அறிய முடிகிறது.

“என்னோடு இருப்பினும் இருக்க இவ் இளங்கொடி
தன்ஓடு எடுப்பினும் தனக்குநர் இல்”
(மணி.,சிறைவிடு காதை 35 – 36)

என்ற அடிகள் இராசமாதேவியின் சூழ்ச்சித் திறனைக் காட்டுகின்றன. இராசமாதேவி தன் மாளிகையில் மணிமேகலைக்கு மயக்க மருந்து கொடுத்து கல்லா இளைஞன் ஒருவனை அழைத்து அவளுக்குத் தீங்கு விளைவிக்கும் படி ஏவுகின்றாள். இதனை,

“கல்லா விளைஞ னொரு வனைக் கூஉய்
வல்லாங்குச் செய்து மணிமே கலைதன்
இணைவள ரிளமுலை யேந்தெழி லாகத்துப்
புணா்குறி செய்து பொருந்தின ளென்னும்
பான்மைக் கட்டுரை பலர்க்குரை யென்றே
காணம் பலவுங் கைநிறை கொடுப்ப”    
(மணி.,சிறைவிடு காதை: 43 – 48)

என்ற பாடலடிகள் வழி அறிய முடிகின்றது. அதும்டுமல்லாது இராசமாதேவி மணிமேகலைக்கு மேலும் பல்வேறு தொல்லைகள் கொடுக்கின்றாள். மணிமேகலையே தன் மகன் இறப்பிற்குக் காரணம் என்று மணிமேகலையின் அறிவை வேறுபடுத்திப் பித்துப் பிடித்து அலையச் செய்து ஊர்மக்கள் எல்லாம் இவளைக் கல்லால் எறிந்தும், கோலால் அடித்தும் விரட்டும் நிலையை ஏற்படுத்த வேண்டும் என்ற வன்மம் உடையவளாக விளங்குகின்றாள்.

“அறிவு திரிந்து இவ் அகல் நகர் லெ்லாம்
எறிதரு கோலம்பாள் செய்குவல் என்றே
மயல் – பகை ஊட்ட மறுபிறப்பு உணர்ந்தாள்
அயர்ப்பது செய்யா அறிவினள் ஆக”
(மணி.,சிறைவிடு காதை 39 – 42)

என்ற பாடலடிகள் இராசமாதேவியின் வன்மச் செயல் மணிமேகலைக்கு ஊறு செய்யக்கூடியதாகவும், அவளை பழிவாங்க வேண்டும் என்ற தாக்குதல் உணர்வு உடையதாகவும் அமைந்திருப்பதை விளக்குகின்றன.

சூழலுக்கேற்ற நடத்தை மாறுபாடு

ஒவ்வொருவரின் வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்ப அவர்களின் நடத்தைகளும் மாறுபாடடைகின்றன என்பர். “சூழ்நிலையின் பாதிப்பு மனிதனின் நடத்தையையும், மனிதனின் நடத்தை சூழ்நிலையைப் பாதிப்பதாகவும் உள்ளதை அறிய உளவியல் நமக்குப் பெரிதும் உதவுகிறது”5 என்று உளநூலார் கருதுகின்றனர். இராசமாதேவி தன் மகன் இறந்த சூழ்நிலையில் மிகுந்த துன்பத்துடன் காணப்படுகிறாள். இதனால் மணிமேகலைக்குத் தீங்கு விளைவிக்கின்றாள். நாளடைவில் மணிமேகலையின் நற்குணங்களை அறிந்து தான் செய்த தீமையை எண்ணி வருந்தும் தன்மை உடையவளாக மாற்றம் பெறுகிறாள்.

“செய்தவ தாட்டியைச் சிறுமை செய்தேன்
என் மகற்கு உற்ற இடுக்கண் பொறாது
பொன் நேர் அனையாய் பொறுக்க என்று அவள் தொழ”
(மணி.,சிறைவிடு காதை 64 – 66)

என்ற பாடல் அடிகள் இதனை விளக்குகின்றன. தன் மகனுக்கு நேர்ந்த துன்பத்தைப் பொறுக்க இயலாமல் இவ்வாறு செய்ததாகவும், அதனைப் பொறுத்துக் கொள்ளுமாறும் இராசமாதேவி வேண்டுவதனை இதன் வழி அறியமுடிகின்றது.

முடிவுரை

இராசமாதேவி எதையும் ஆழ்ந்து ஆராயாமல், உள்துடிப்புக்கு ஏற்ப விரைந்து செயல்படவேண்டும் என்ற எண்ணமுடையவளாக இருப்பதை அறியமுடிகிறது. மணிமேகலையே தன் மகன் உதயகுமரனின் இறப்பிற்கு காரணம் என்று எண்ணி எவ்வித ஆராய்ச்சிக்கும் இடமளிக்காமல் மணிமேகலையைத் தண்டிக்க வேண்டும் என்ற உள்துடிப்பு உடையவளாகக் காணப்படுகிறாள். மேலும் மணிமேகலைக்கு தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று திட்டம் தீட்டி அச்செயலை எல்லாம் திட்டமிட்டு நிறைவேற்றக்கூடிய ஆளுமை உடையவளாகவும் திகழ்கிறாள். இராசமாதேவி பல்வேறு விதமான மனப்போராட்டங்களுக்கு ஆட்பட்டவளாகவும், மனச்சோர்வு உடையவளாகவும் செயல்படுவதன் வாயிலாக அவளது நடத்தை ஆளுமையில் பிறழ்வு நிலைகளே மிகுதியும் இடம்பெற்றிருப்பதனை அறியமுடிகின்றது.

சான்றெண்விளக்கம்

1.பெ. தூரன், அடிமனம், ப.16.
2.குமாரசாமி,சி.என்., தமிழ்நாட்டுப் புறப்பாடல்களில் ஒத்துணர்வு, ப-181.
3.தி.கு. இரவிச்சந்திரன், சிக்மண்ட்ஃப்ராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல், ப.364.
4.சந்திரமோகன்., சிந்தனையாளர் ப்ராய்டு, ப.145
5..சந்திரமோகன்., சிந்தனையாளர் ப்ராய்டு, ப. 146

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R