கனடாவிலே ரொறன்ரோவை மையப்படுத்திய வாழ்க்கைச் சூழலிலே எனக்கும் எனது துணைவியார் கௌசல்யாவுக்கும் கிடைத்த கெழுதகை நண்பர்கள் சிலரில் மிக முக்கியமான ஒருவர் பேராசிரியர் சுப்பராயன் பசுபதி அவர்கள். அறிவியல் துறைசார் கல்வியாளரான அவர் தமிழ் மொழி, இலக்கியம், கலைகள் முதலான பண்பாட்டுத் துறைகளிலும் ஆழ்ந்த புலமை கொண்டவராவார். அவ்வாறான பண்பாட்டுத் துறைகள்சார் புலமை அம்சங்களை ஆய்வரங்குகள் ஊடாகவும் வலைப்பூக்கள் வழியாகவும் சமகால அறிவுலகுக்கு அவர் வாரிவழங்கி வருகிறார்.
இவ்வாறான அவருடைய ஆளுமையம்சங்கள் அவர்மீது எமக்கு மிகப்பெரிய மரியாதை உணர்வைத் தோற்றுவித்ததோடு அவரை எமக்கு நெருக்கமானவராகவும் ஆக்கின. நாம் இயங்கி நிற்கும் இயல், இசை ஆகியனசார் கல்வித்துறைகளில் அவ்வப்போது எமக்கெழும் ஐயங்களை யெல்லாம் அவரிடம் தெளிவுபெற்று வருகிறோம். அவ்வகையில் அவருக்கும் எமக்கும் இடையிலான உறவானது நட்பு என்பதான பொதுநிலையை விட மேலானதாகும். எமது நம்பிக்கைக்குரிய வழிகாட்டி யாகவும் ஆலோசகராகவும் கூட அவர் திகழ்ந்துவருபவர்.
இத்தகு பெருமதிப்புக்குரிய பேராசிரியர் அவர்கள் தமது ’சங்கச்சுரங்கம்-3’ என்ற தலைப்பிலான இந்நூலாக்கத்துக்கு அணிந்துரை வழங்குமாறு என்னைக் கேட்டுக்கொண்டமை எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ஒரு கல்வியாளனுக்குக் கிடைக்கக் கூடிய அதியுயர் அங்கீகாரமாக இதனை நான் கருதுகிறேன் அவ்வகையில் முதலில் பேராசிரியரவர்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அணிந்துரை என்பது ஒரு நூற்கட்டமைப்பின் நுழைவாயில் ஆகும். ஒரு நூலானது எழுத்துநிலையில் நிறைவடைந்த நிலையில் -சமூக வெளிக்கு அறிமுகமாகும் முன்னர் - சமூகம் சார்ந்த நிலையில் அதற்குசக் கிடைக்கும் முதலாவது அங்கீகாரமாகத் திகழும் எழுத் தாக்கம்,அது. இவ்வுரையே குறித்த அந்நூலுக்குச் சமூக மத்தியில் கிடைக்கும் விமர்சனப் பதிவாகவும் திகழ்வதாகும் பண்டைய தமிழ் மரபிலே இது ’பாயிரம்’ மற்றும் ’சாற்றுகவி’ முதலிய பெயர்களாலும் இது வழங்கப்பட்டு வந்துளது.
நூலின் உள்ளடக்கம், அதனை ஆக்கியவரின் தகைமை, சமூக வெளியில் அவ்வாக்கத்துக்குரிய முக்கியத்துவம் ஆகியவற்றை எடுத்துப் பேசுவதே அணிந்துரை வகைசார் எழுத்துகளின் பொதுப் பண்பாகும். பேராசிரியர் பசுபதியவர்களின் இந்தநூலைப் பொறுத்தவரை அவரின் தகைமை பற்றிப் பேசவேண்டிய தேவை எனக்கில்லை. ஏனெனில் அவர் தமிழ்உலகால் நன்கறியப்பட்டவர்.அவரால்எழுதப்பட்டு முன்னரே வெளிவந்த வையான ’கவிதை இயற்றிக் கலக்கு’, ’சொல்லயில்’, ’சங்கச் சுரங்கம் 1,2’ ஆகிய தலைப்புகளிலான ஆக்கங்கள் அவரை எழுத் துலகுக்குச் சிறப்பாகவே அறிமுகஞ் செய்துள்ளன. எனவே என்னுடைய பணி இங்கு இலகுவாகிறது. இந்த நூலின் உள்ளடக்கம் மற்றும் சமூக வெளியில் அதன் முக்கியத்துவம் ஆகியன பற்றிய எனது சில மனப்பதிவுகளை மட்டும் இங்கு முன்வைக்க முற்படுகிறேன்.
பேராசிரியரின் ’சங்கச் சுரங்கம் – 3’ (சங்கப்பாடல்களுக்கான ஒரு நகைச்சுவை அறிமுகம்) என்ற தலைப்பிலான இவ்வாக்கமானது தமிழின் சங்க இலக்கியப் பரப்பின் மீதான அவருடைய ஆழ்ந்த ஈடுபாட்டின் வெளிப்பாடாக அமைந்ததாகும். சங்கஇலக்கியப் பரப்பானது ‘எட்டுத்தொகை’ மற்றும் ‘பத்துப்பாட்டு’ ஆகிய தொகுதிகளிலமைந்துள்ள 18இலக்கிய ஆக்கங்களைக் கொண்டதாகும். இவ்விலக்கியப் பரப்பிலுள்ள பாடல்களில் மிகப் பெரும்பான்மையானவை கி.பி. 300ஆம் ஆண்டின் முன் எழுந்தவை எனக் கொள்ளப்படுவனவாகும். இப்பாடல்களே தமிழிலே இன்று எமக்குக் கிடைக்கும் எழுத்தாக்கங்களிலே காலத்தால் முற்பட்டவை என்பது தமிழ் ஆய்வுலகம் முழுநிலையில் ஒப்புக் கொண்ட வரலாற்றுண்மையாகும்.
மேற்படி சங்கப்பாடல்களின் சிறப்பம்சங்கள் எனப்படுவனவற்றுள் முக்கியமான ஒன்று, ‘அவை அக்காலச் சமூக வாழ்வியலின் பிரதிபலிப்பாக - அதாவது அக்கால மாந்தரின் இயல்பானஉணர் வெழுச்சி களின் பதிவுகளாக - திகழ்வன’ என்பதாகும். இன்னும் தெளி வாகக் கூறுவதானால் ‘ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகச் சூழலின் இயல்பான சமூக நடைமுறைகளையும் அவைசார்ந்த நிலைகளில் அக்கால மாந்தரிடம் உருவாகிய மனக்கிளர்ச்சிகளையும் காட்சிப்படுத்தி நிற்கும் எழுத்தோவியங்களாக அவை திகழ்கின்றன’ எனலாம்.
சங்கப் பாடல்களுக்குப்பின் 19ஆம் நூற்றாண்டு வரை எழுந்தனவாக எமக்குக் கிடைக்கும் தமிழிலக்கிய ஆக்கங்களில் மிகப்பெரும்பா லானவை‘அவற்றின் சமகால சமூகவாழ்வியல் அம்சங்களின் பிரதி பலிப்புகள்அல்ல’.அவை போதனைப் பண்புடனும் புராண நிலைப்பட்ட இலட்சியப் பாங்கான கற்பனைகளின் தளத்திலும் உருவானவையாகும். அவ்வகையில் சங்க இலக்கியங்களின் ’வாழ்வியற்பிரதிபலிப்பு’ என்ற அம்சமானது விதந்துரைக்கத்தக்க சிறப்புடையதாகும்.
சங்க இலக்கியங்களின் மேற்படி ‘வாழ்வியற் பிரதிபலிப்பு’ என்ற அம்சத்தால் பேராசிரியரவர்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளார். அவைதரும் அநுபவ நிலைகளைச் சமகால நிகழ்வுகளுடன் பொருத்தி நோக்க முற்பட்ட அவர் அவற்றிடையே புலப்படும் பொருத்தப்பாடுகளைக் கண்டு வியந்துள்ளார். அவ்வாறு வியந்த நிலைகளை அவர் சமகால இலக்கிய வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள முற்பட்டுள்ளார். குறிப்பாக, ‘சங்க இலக்கியப் பரப்பின் மீது ஈடுபாடு கொண்டிராத இன்றைய தலைமுறை வாசகர்களை மனங்கொண்டு’ தமது அவ்வாசிப்பநுபவங்களை அவர் எடுத்துரைக்க முற்பட்டுள்ளார். சங்கச் சுரங்கம் 1,2,3 எனத் தொடரும் அவருடைய எழுத்துச் செயற்பாடுகளின் உருவாக்கப் பின்புலம் இதுதான்.
மேலே, ‘சங்க இலக்கியப் பரப்பின் மீது ஈடுபாடு கொண்டிராத இன்றைய தலைமுறை வாசகர்களை மனங்கொண்டு’ எனக் குறிப்பிட் டமைக்கான சிறுவிளக்கமொன்றை இங்கு முன்வைப்பது அவசியம் எனக் கருதுகிறேன். மேற்படி சங்க இலக்கியப் பரப்பின் வாசகர் வட்டமானது ஏனைய வகைகள் சார் எழுத்துகளின் வாசர் பரப்புகளுடன் ஒப்பிடும் நிலையில் மிகச் சிறியது என்பது வெளிப்படை. ’கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் தமிழை ஒரு பாடமாகப் பயிலும் மாணவர்கள், அவர்களுக்குக் கற்பிக்கும் ஆசிரியர்கள், அவ்விலக்கியப் பரப்பு தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளுவோர், இலக்கியச் சொற் பொழிவாளர்கள் மற்றும் அரசியல் நோக்கில் தமிழ்ப் பெருமை பேசுபவர்கள் ஆகிய வகைகள்சார் சில ஆயிரம் வாசகர்கள்’ என்ற வட்டத்துக்குள் மட்டுமே சங்க இலக்கியப்பரப்பானது கவனத் தைப் பெற்றுவருகின்றது. அவ்வகையில் ,பொதுவாக சிறுகதை, நாவல், கவிதை முதலியவற்றில் ஈடுபடும் பெரும்பான்மையான சமகால வாசக ருலகுக்கு மேற்படி சங்க இலக்கியப் பரப்பானது அந்நியப்பட்டு நிற் கிறது என்பதே இன்றைய சமூக யதார்த்தமாகும்.
அதற்கான முக்கியகாரணி சங்கப் பாடல்களின் மொழிநடையாகும். அப்பாடல்களில் மிகப் பெரும்பான்மையானவை நமது சமகாலத்தின் சராசரி வாசிப்புக்குரிய சரளமான மொழிநடையிலிருந்து பெரிதும் வேறுபட்டவையாகும். அவற்றின் மொழிநடையானது அக்காலத் தமிழ்ப் புலமைசார்ந்த செறிவான மொழிநடையாகும். எனவே அவற்றின் உள்ளடக்கஅம்சங்களையும் அவற்றில் பயின்றுள்ள அணிநலன்களையும் இன்றைய சராசரி மொழி நடையில் எடுத்துரைத்தால் மட்டுமே சமகால வாசகர்கள் அவற்றை அணுகிச் சுவைப்பது சாத்தியமாகும். இவ்வாறான காலத்தேவையை நன்குணர்ந்த ஒரு தமிழறிஞருடைய ‘சமூகக் கொடை’யாகவே பேராசிரியர் பசுபதி அவர்களுடைய சங்கச் சுரங்கம் 1,2,3 என்ற தலைப்பிலான ஆக்கங்கள் நமது கவனத்துக்கு வருகின்றன.
அவர் இந்நூல்களின் ஊடாக மேற்படி சங்கப்பாடல்கள் சார்ந்த தமது வாசிப்பநுபவங்களைச் சமகால வாசகருலகுக்கு நெருக்கமாக இட்டுவர முயன்றுள்ளார். குறிப்பாக, சங்க இலக்கியப் பரப்பிலே தம்மைக் கவர்ந்த ஒருபகுதிப் பாடல்களை இன்றைய வாசகருக்குரிய மொழியிலே ‘கதை தழுவிய கட்டுரை’ப்பாங்கில் அவர் எடுத்துரைக்க முற்பட்டுள்ளார்.
இலக்கிய நிலைப்பட்ட எழுத்தாக்கங்களை அவை உருவாகும் நிலைசார்ந்து பொதுவாக இருவகைப்படுத்தலாம். ஒருவகை எழுத்துகள், குறிப்பிட்ட சூழலில் ‘பொங்கிப் பெருகும் உணர்வெ ழுச்சிகளின்’ – அதா வது ஆவேச நிலைகளின் - வெளிப்பாடுகளாக அமைவன. இன்னொரு வகை எழுத்துகள் ‘வாழ்வியல் அநுபவங்களாலும் இலக்கிய வாசிப்புகளாலும் முதிர்ச்சி எய்திய’ இலக்கிய மனங்களின் உணர்வுப் பகிர்வுக’ளாக உருவாவனவாகும். பேராசிரியரின் ‘சங்கச் சுரங்கம்’ என்ற தலைப்பிலான இவ்வெழுத்துகள் மேற்படி இரண்டாவது வகைசார்ந்தவை என்பது வெளிப்படை. அதாவது தாம் சுவைத்ததை ஏனையோரையும் சுவைக்கச் செய்யவேண்டும் என்பதான - ‘யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பதான - உணர்வுத்தளத்தின் உருவாக்கம் இது. இவ்வாறு நோக்கும்போது இவ்விலக்கிய ஆக்கமுறைமையானது ‘இலக்கியம் தோற்றுவித்த இலக்கியம்’ என்ற கணிப்புக்குரியதாகிறது.
சங்கப்பாடல்கள் பலவற்றையும் சமகால வாசகர்களுக்கு நெருக்கமாக இட்டுவரும் முயற்சிகள் கடந்த ஏறத்தாழ 80 ஆண்டுக் காலமாக நிகழ்ந்து வருவதொன்றுதான். தமிழறிஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் ஆகியோருட் சிலரால் பாடநூல் நோக்கிலும் ‘ரஸனை’ நோக்கிலும் இவ்வகை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளன. அவற்றுட் பெரும்பான்மையானவை ‘பாட்டும் பொருளுமாக’-அதாவது சொற்பொருள் விளக்கங்களாக-வும் நயங்காணும் விரிவுரைகளாகவும் அமைந்தனவாகும்.ஆனால் இங்கு பேராசிரியர் மேற்கொண்டுள்ள இம் முயற்சியானது அத்தகைய செயன்முறையினின்று பெரிதும் வேறுபட்ட தாகும்.
பேராசிரியரின் இச்செயன்முறையிலே பாடல்களும் உள. அவற் றின் தெளிபொருள்களும் அருஞ்சொல்விளக்கங்களும் கூட இடம் பெற்றுள்ளன. ஆனால் அவற்றுக்கு மேலாக, குறித்த சங்கப்பாடல் தரும் அநுபவத்துடன் சமகால வாழ்வியல் அநுபவங்களும் இணைக்கப் படுகின்றன. அதாவது சமகால சமூக-பண்பாட்டு உணர்வோட்டங்கள் மற்றும் அவை தொடர்பான நடைமுறைகள் ஆகியவற்றின் ஊடே குறித்த ஒவ்வொரு பாடலும் தரும் அநுபவங்கள் தொடர்புறுத்திக் காட்டப்படுகின்றன. இவ்வாறான தொடர்புறுத்தல் முயற்சிகளே ‘கதை தழுவிய கட்டுரைகள்’ என்ற கட்டமைதியில் வெளிப்பட்டுள்ளன.
‘கதை தழுவிய கட்டுரைகள்’ என இவற்றைச் சுட்டுவதற்குக் காரணம் இவை சிறுகதைபோலவே தொடங்கித் தொடர்கின்றமை யாகும். ஓவ்வொரு கட்டுரையிலும் பேராசிரியரவர்கள் தாமும் ஒரு பாத்திரமாக இயங்குகிறார். தம்முடைய மாணவர்கள், நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் முதலான பல நிலைகள் சார்ந்தோருடன் உரையாடும் பாங்கில் கதையம்சத்தை அமைத்துக்கொள்கிறார். உரை யாடல்களின் ஊடாக அக்கதையம்சத்தை வளர்த்துச் செல்கிறார்.அவ்வா றான உரையாடல்களில் இடம்பெறும் சமகால வாழ்வியல் அநுப வங்களும் அவற்றுடன் தொடர்புடைய பிரச்சினை அம்சங்களும் வாசகர்களுக்கு ஒரு இயல்பான -நடைமுறைகள் சார்ந்த- நெருக்கத்தை ஏற்படுத்துகின்றன. அவ்வாறான நெருக்கத்தின் ஊடாக தாம் அறிமுகம் செய்யவுள்ள பாடலுக்கு அருகில் வாசகர்களை அவர் இட்டுவந்து விடுகிறார்.
பேராசிரியரவர்கள் தமிழிலக்கியங்களைக் கற்பிக்கும் ஆசிரியராக வும் நண்பர்களுடன் இலக்கியம் மற்றும் கலைகள்சார் உரையாடல்களை நிகழ்த்துபவராகவும் திகழ்பவராவார். அதனால் மாணவர்கள் மற்றும் நண்பர்கள் முதலியவர்களுடன் உரையாடல் களைத் தொடங்குவதும் அவற்றை இயல்பான நிலையில் உணர்வு பூர்வமாக வளர்த்துச் செல்வதுமான உத்திமுறைகளுடன் கதை சொல்வது அவருக்கு இலகுவாகிவிடுகிறது. இதனால் ‘இவை கதையன்று.உண்மை நிகழ் வுகளே’ என வாசகர்களை உணரச் செய்வதில் அவர் வெற்றி பெற்றுவிடுகிறார்.
இத்தொடர்பிலே குறித்த ஒரு கதைக்கான பின்புலக் குறிப்பை மட்டும் இங்கு சுருக்கமாகச் சுட்ட விழைகிறேன்.
பேராசிரியருக்கு அவருடைய இளம்நண்பரொருவரின் தொலை பேசி அழைப்பொன்று வருகிறது.“சார் நான் உங்கள் வீட்டிற்கு வருகிறேன். ஒரு சங்கப்பாடலின் பொருள் என்ன என்று தெரிந்து கொள்ளவேண்டும்.” என்கிறான் அவன்.
‘ஓர் ஏர் உழவனார்’ என்பாரால் இயற்றப் பெற்றதான அப்பாடல் குறுந்தொகையின் 131ஆம் பாடலாகும். பணியொன்றின் காரணமாகத் தலைவியைப் பிரிந்து வெகுதூரம் சென்றுள்ள ஒரு தலைவன் அப்பணி நிறைவடைந்த பின் தலைவியிடம் விரைவில் திரும்ப விழைகிறான். ஆனால் தலைவி இருக்குமிடம் வெகு தொலைவில் இருப்பதால் உடனடியாகத் தலைவியிடம் வந்தடைய முடியாத நிலை. ஆதனால் அவன் எய்தும் மனத்தவிப்பை உணர்த்தும் பாடல் அது.
இதன் பொருளை அறிய விழைந்த அந்நண்பன் ஒரு மென்பொருள் பொறியாளன்.பணிநிமித்தமாகப் பலநாடுகளில் பயணங்கள் மேற்கொண் டிருப்பவன். அவனுக்கும் இப்பாடலுக்கும் உள்ள தொடர்பு அவனும் ஒரு தலைவன் - அதாவது சங்கப்பாடல்களில் வருவது போல ஒரு காதலன் - என்பதேயாகும். மேற்படி பாடலின் பொருளை அவன் பேராசிரியரிடம் கேட்டறியவிழைவதற்கான காரணம் சென்னையிலே தமிழாசிரியை யாகப் பணியாற்றும் அவனது காதலி ஆவாள்.
நான்காண்டுகளாக அவனைப் பிரிந்த நிலையில்; அவன் வரவுக்காக அவள் காத்திருக்கிறாள். அவனோ பல நாடுகளுக்கும் பயணங்கள் மேற்கொள்வதிலேயே ஆர்வங் கொண்டவனாக உள்ளான். எனவே அவனுள்ளத்தில் தன்னைப்பற்றிய நினைவுகளைத் தூண்டும் நோக்கில் அவள் இப்பாடலைச் சுட்டி, “இதன் பொருளை உங்கள் ஊர் தமிழ் சாரிடம் சென்று அறிந்துவா” எனக் கட்டளையிட்டுள்ளாள். அவன் இப்பாடலைப் பொருளுணர்ந்து சுவைத்தால் தன்னிடம் விரைவில் வரமுற்படுவான் எனபது அவளுடைய எதிர்பார்ப்பாகும்.
இது தான் மேற்படி பாடல் எடுத்துரைப்புக்கான கதைப்பின்புல அம்சமாகும். அப்பாடலின் பொருள், அதிலுள்ள உவமை நயம், அந்த மென்பொறியாளன் தனது காதலியை நோக்கி விரைவதற்கான உளத் தூண்டுதல் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இக்கதை விரிகிறது. அவ்வகையில் அச்சங்கப்பாடல் இன்றைய சூழலில் ஒரு ’காதல் தூதாகவும்’ பயன்படுகிறது. ஒரு பாடலின் பொருள் விளக்கமாக அமையவேண்டியஇக் கட்டுரை கதைக்கான கட்டமைப்புடன் உரு வாக்கம் பெற்ற முறைமை இதுதான். (பார்க்க: இத்தொகுப்பின் 2வது கட்டுரை)
இவ்வாறே ஒவ்வொரு பாடல்களுக்கான கட்டுரைகளும் வெவ்வேறு வகைக் கதையம்சங்களுடன் கட்டமைதிகள் பெற்றுள்ளன.
பேராசிரியர்பசுபதி அவர்களுடைய இவ்வாறான செயன்முறை களில் பாடல் தேர்வு என்ற வகையிலே புலப்படும் சிறப்புகள் என்ற வகையில் இரு அம்சங்களை அவதானிக்க முடிகிறது. அவற்றுள் ஓன்று, ’அகத்திணை’ சார் பாடல்களுக்கு அவர் வழங்கியுள்ள முதன்மை நிலையாகும். பாடல் தேர்வு முறையில் புலப்படும் இன்னொரு அம்சம் சங்கப் பாடற் பெரும் பரப்பிலே குறுந்தொகைப் பாடல்கள் மீது அவர் கொண்டுள்ள தனி ஈடுபாடு ஆகும்.
முதலாவது தொகுப்பிலே இடம்பெற்ற கட்டுரைகளில் அகம் மற்றும் புறம் ஆகிய இரு திணைகள் சார் பாடல்களிலும் கவனம் அவர் செலுத்தியமை தெரிகிறது. (சங்கச் சுரங்கம் -1 தொகுப்பிலுள்ள 20 கட்டுரைகளில் 10 கட்டுரைகள் பத்துப்பாட்டு என்ற தொகுப்பு சார்ந்தன வாகும். மீதி 10ஆம் குறுந்தொகை சார்ந்தவை. பத்துப்பாட்டு தொகுப்பில் ஏழு பாடல்கள் ’புறம்’ சார்ந்தவை. மீதி மூன்றும் ’அகம்’ சார்ந்தனவாகும். குறுந்தொகை முழுவதுமே அகம் சார்ந்தன என்பது வெளிப்படை.
ஆனால் பின்னர் வந்த சங்கச் சுரங்கம் 2ஆம் தொகுப்பும் அதன் பின்னர் இப்போது வெளிவரும் 3ஆம் தொகுப்பும் ‘அகம்’ சார்ந்த பாடல்களை மட்டும்கொண்டவையாகும். 2ஆவது தொகுப்பிலுள்ள கட்டுரைகளில் 19 பாடல்கள் குறுந்தொகையிலிருந்து தேர்ந்து கொள்ளப்பட்டவை. மீதி ஒருபாடல் ஐங்குறுநூறு என்ற அகத்திணை ஆக்கத்திலிருந்துதேர்ந்துகொள்ளப்பட்டதாகும்.மூன்றாவதான இத்தொகுப் பானது முழுவதும் குறுந்தொகைப் பாடல்களையே கொண்டதாகும். இவ்வாறான தேர்வானது அவர் குறுந்தொகைப் பாடல்களுக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.
’அகம்’ சார்ந்த பாடல்களில் பேராசிரியர் காட்டியள்ள தனி ஈடுபாட்டுக்கான காரணி என நான் ஊகிப்பது, ‘அத்திணைசார்பாடல்கள் புலப்படுத்தும் உணர்வுகள் ’காலம் கடந்தும் வாழ்கின்ற’ நிலைமை யேயாகும். அதாவது சங்ககாலக் காதலன் - காதலியராயிருப்பினும் சரி, சமகாலக்காதலன்-காதலியராயிருப்பினும்சரி, அவர்களுடைய ஏக்கங்க ளும் எதிர்பார்ப்புகளும் எதிர்கொள்ளும் சவால்களும் அவசநிலைகளும் கூட சிற்சில குணமாற்றங்களுடன் ஒரேவகையானவையாகவே திகழ்வன என்பது வெளிப்படை. ஆனால் ’புறம்’ சார் வாழ்வியல் அம்சங் களுக்கு இத்தகு சிறப்பு இல்லை. ஏனெனில் அவ்வம்சங்கள், காலமாற்றத்தோடும் நாகரிக மாற்றங்களுடனும் பலநிலைப் புதிய பரிமாணங்களை எய்திவருவன என்பதே வரலாறு தரும் செய்தியாகும்.
எனவே சங்கப் பாடற்பரப்பின் அநுபவ அம்சங்களை ’சிந்தாமற் சிதறாமல் சமகால அநுபவநிலைக்கு ஏற்ப எடுத்துரைக்க முற்படும்’ ஒருவருக்கு அப்பரப்பின் அகப்பாடல்களே முதன்மையான தேர்வுகளாக அமையமுடியும். பேராசிரியருடைய பாடல் தேர்வும் அதனையே உறுதிசெய்வதாக நான் கருதுகிறேன்.
குறுந்தொகை மீது பேராசிரியர் கொண்டுள்ள தனி ஈடுபாட்டுக்கான முக்கிய காரணமாக நான் ஊகிப்பது அத்தொகைநூலின் ‘கவித்துவத் தகுதி’ என்ற அம்சத்தையேயாகும். சங்க இலக்கியப் பரப்பிலே குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு, புறநானூறு, பதிற்றுப்பத்து, கலித்தொகை முதலிய ஒவ்வொரு தொகை நூலுக்கும் ஒவ்வொரு வகைச் சிறப்புகள் உள. இவற்றுள் குறுந்தொகை மற்றும் புறநானூறு ஆகியவற்றின் சிறப்பென்பது அவற்றிற் புலப்படும் இயல்பான உணர்வெழுச்சிகளேயாகும். அகத்திணை எனப்படும் ‘காதலுணர்வுசார் மனக்கிளர்ச்சி’களை இயல்பாக வெளிப்படுத்தும் நிலைகளில் குறுந்தொகையும் புறத்திணை எனப்படும் ‘உலகியல் மற்றும் சமூகம் சார்ந்த உணர்வெழுச்சிகளை’ வெளிப்படுத்தும் நிலைகளில் புறநானூறும் மேற்குறித்த ஏனைய தொகை நூல்களைவிட கவித்துவ நிலையில் சிறப்பானைவை எனக்கொள்ளப்படுவனவாகும்.
இவை தவிர ஏனைய தொகை நூல்களிலுள்ள பாடல்கள் பலவும் குறித்த உணர்வம்சங்களின் இயல்பான வெளிப்படுகளாகக் கொள்ளப்படுவதில்லை. அவை புலமைசார் உத்திகளுடன் திட்டப் பாங்கான வகையில் கட்டமைதி பெற்றவையாகவே கணிக்கப் படுவனவாகும். எனவே சங்கக் கவிதைகளின் இயல்பான தொடக்க நிலையை -அதாவது, வாழ்வியல் அனுபவங்களை மட்டும் மையப்படுத்திய நிலையை - அடையாளங் காண விழைபவர்களுக்குக் குறுந்தொகை மற்றும் புறநானூறு ஆகிய தொகை நூல்களின் பாடல்களே தக்க சான்றுகளாக அமையக்கூடியனவாகும். எனவே கவிஞரான பேராசிரியரவர்கள் அகத்திணைசார் தமிழ்க் கவிதையின் தொடக்க நிலைகளைக் காட்டும் தொகைநூலான குறுந்தொகையில் தனி ஈடுபாடு காட்டியுள்ளமையை அவருடைய கவித்துவ உளப்பாங்கிற்குப் பொருத்தமான - இயல்பான - ஒரு செயற்பாங்காகவே உணர்கிறேன்.
சங்கப் பாடல்களைச் சமகாலச் சூழலுக்கு இட்டுவரும் இவ்வாறான செயற்பாங்கின் மூலம் அவர், அப் பாடல்களுக்குச் ‘சமகால வாழ்வை’ - அதாவது ‘சமகால வாழ்வியல்சார் பெறுமானத்தை’ - அளித்துவிடுகிறார். அதேவேளை, தாம் எடுத்துக்கொண்ட பாடல்களின் அநுபவ அம்சங்களுக்கு சிறுகதைப் பாங்கான வடிவங்களையும் தந்துவிடுகிறார். அவர் எடுத்தாளும் பாடல்களிற் சில சமகாலப் பிரச்சினைகள் சிலவற்றுக்குப் பொருத்தமான தீர்வுகளை அடையாளங் காட்ட வல்லனவாகவும் அமைந்துவிடுகின்றன என்பதும் நமது கவனத்துக்கு வருகிறது. ‘ஒரே கல்லில் பல மாங்காய்கள்’ எனலாமா!
பேராசிரியரின் இத்தகைய பயன்மிகு இலக்கியப்பணிகள் இன்றைய தமிழ்ச் சூழலுக்கு -குறிப்பாக, ‘தமிழர்களில் ஒருசாரார் தமது தேசிய பண்பாட்டுத் தளங்களை விட்டு விலகி, அனைத்துலக நிலையில் பல்லினப் பண்பாடுகளுடன் சகவாழ்வு மேற்கொள்ள முற்பட்டுள்ள’ சூழலுக்கு - மிக அவசியமானவை என்பதில் மாற்றுக் கருத்துகளுக்கு இடமில்லை.அவ்வகையில் இத்தகு ஆக்கமுயற்சிகளை மேலும் புத்தார்வத்துடன் அவர் தொடர வேண்டுமென்பதான அன்புக் கோரிக் கையை முன்வைத்து இவ்வணிந்துரையை நிறைவு செய்;கிறேன்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.