வெளியே பனி கொட்டிக் கொண்டிருந்தது. பனிப்புகாரில் பாதை தெளிவாகத் தெரியவில்லை. பனிமூட்டத்தில் போகிறபாதை தெளிவாகத் தெரியாவிட்டாலும் செல்லவேண்டிய இடத்தை அடைவதில் சுகி குறியாக இருந்தாள்.
மனசு தவிப்பதைவிட இந்தக் குளிரிலும் உடம்பு தகிப்பதே பெரிய வேதனையாக இருந்தது. எப்படியும் மனதில் இருப்பதை சுபாவிடம் கொட்டிவிட வேண்டும் என்ற ஆதங்கத்தோடுதான் அக்காவின் வீடு தேடி வந்திருந்தாள்.
‘ஏன்டி இத்தனை நாளாய் ஊமையாய் இருந்தாய்?’ சுபா தங்கையை அதட்டினாள்.
கட்டிலில் உட்கார்ந்திருந்த சுகி கண்களைத் துடைத்துக் கொண்டு அக்காவை நிமிர்ந்து பார்த்தாள்.
‘எப்படி அக்கா இதை வெளியே சொல்லுறது?’
‘இப்பமட்டும் என்னவாம், வெளிக்கிட்டு என்னோட வா, போவம்.’
‘எங்கேயக்கா..?’
‘டாக்டரிட்டைதான்!’
‘வேண்டாமக்கா, நான் எங்கேயும் வரவில்லை.’
‘குடும்ப வைத்தியரிட்டைப் போனியா?’
‘போனேன்..!’
‘என்னவாம்?’
‘எல்லாம் செக் பண்ணிப் பாத்தாச்சு!’ சுகி விம்மினாள்.
‘என்ன சொன்னவர் எண்டு சொல்லிப்போட்டு அழேன்’
அவள் சற்று நேரம் மௌனம் காத்தாள். இதற்கு என்ன பதில் சொல்வது? எப்படிச் சொல்வது?
‘உன்னிலை ஏதாவது பிழையா?’ என்றாள் சுபா
அவள் பதில் சொல்லாமல் தலை குனிந்திருந்தாள்.
‘பலோப்பின் குழாயில ஏதாவது தடையா..?.’
‘இல்லை’ என்று மறுத்தாள்.
‘கருப்பையில் ஏதாவது கோளாறா?’
அதற்கும் மறுத்தாள்.
‘நல்ல ஆரோக்கியமாகத் தானே இருக்கிறாய், அப்போ என்னதான் பிரச்சனை என்று சொல்லித் தொலையேன்’ சுபா பொறுமை இழந்து கத்தினாள்.
சுகியின் மௌனம் எதையோ சொல்லத் துடிப்பதுபோல இருந்தது.
‘கொஞ்ச நாளாய் நானும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், மனசுக்கை இப்படியே வைச்சுக் குமைஞ்சு கொண்டிருந்தால் உனக்குக் கெதியாய் டிப்பிறசன்தான் வரும், சொல்லிப்போட்டன்.’ குரலை உயர்த்தி அதட்டினாள் சுபா.
தங்கையின் வீட்டில் என்னதான் நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத இயலாமையால் தங்கைமீது கோபப்பட்ட சுபா ஒரு கணம் நிதானித்துப் பொறுமை காத்தாள்.
சுகி எப்பொழுதுமே கொஞ்சம் தயக்கம் காட்டித்தான் எதையும் சொல்வாள். தன்னுடைய வார்த்தைகள் மற்றவர்களைப் பாதித்துவிடுமோ என்ற அச்சம் எப்பொழுதும் அவளிடம் இருந்தது.
‘முள்ளிலே சிக்கிய சேலையின் நிலையில்தான் சுகி இருக்கிறாள் என்பதால் கவனமாகச் செயற்பட வேண்டும், அவசரப்பட்டால் எல்லாமே மறைக்கப்பட்டு விடலாம். எனவே கோபப்படாமல் நிதானமாகத்தான் அவளிடம் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும்’ என்று முடிவெடுத்தாள்.
ஒரு குடும்பத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்படும் பிரச்சனைகளில் பாலியல் சிக்கல்களும் முக்கிய காரணமாகிறது என்பதை சுபா அறிந்து வைத்திருந்தாள். பொதுவாக பெரும்பாலான பாலியல் பிரச்சனைகள் மனம் சார்ந்ததாகவே இருந்தாலும், உடல் ரீதியான காரணங்களும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால் இந்தப் பிரச்சனை ஆண் பெண் என்ற வேறுபாடில்லாமல் இருபாலரையும் பாதிக்கிறது.
என்னதான் நாகரிகத்தில் முன்நின்றாலும், இன்றுள்ள சமூக அமைப்பு உளம் சார்ந்த நோய்கள் பற்றிப் பிறரிடம் பேசுவதையே தவறாக எண்ணுகிறது. கணவன், மனைவி இருவருக்குமிடையில் புரிந்துணர்வு இல்லாவிட்டால், சிறிய பிரச்சனை கூடப் பூதாகரமாகிவிடலாம்.
சுபாவும் இங்கேயே படித்தவள் என்பதால் இதைப் புரிந்து கொண்டு தங்கையின் விடயத்தில் சூழ்நிலைக்கேற்ப ஒரு மனநல ஆலோசகர் போலச் செயற்பட்டாள்.
சுகியும் இந்த மண்ணிலே வளர்ந்து படித்தவள். பாலியல் விழிப்புணர்வு உள்ளவள் என்பதால் சுபா தங்கையிடம் தயங்காமல் கேட்டாள்.
‘சரி, இது ஒன்றுமே இல்லை என்றால்..? நான் ஒன்று கேட்கட்டா?’
‘என்ன?’
‘கோபிக்கமாட்டியே?’
‘இல்லை, கேளக்கா!’
‘அப்போ அவனிலை ஏதாவது பிழையா?’
அதிர்ந்து போனவள்போல சட்டென்று சுபாவை நிமிர்ந்து பார்த்தாள் சுகி.
‘அ.. க்.. கா…!’ கலங்கிய அவளது கண் முன்னால் கூப்பிய கரங்கள் ஊஞ்சலாடின.
இப்படித்தானே கூப்பிய என் கைகளைப் பிடித்துக் கொண்டு அன்று அவன் கோபப்பட்டான். அன்று நடந்த அந்த சம்பவம் அவளது கண்முன்னால் விரிந்தது.
‘சொன்னால் கேட்கமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறாய் சுகி, இப்ப எப்படிப் பழகுகிறோமோ அதேபோல நாங்கள் நல்ல நண்பர்களாய்ப் பழகுவோமே’
‘அப்போ நீ என்னை ஏமாத்தப் பாக்கிறியா?’
‘உன்னை ஏமாத்தக் கூடாது என்ற படியால்தான் இந்தக் கலியாணமே வேண்டாம் என்று சொல்லுறேன்.’
‘நீ சுகமாய் சொல்லிவிடுவாய் பாதிக்கப்படப் போவது நானல்லவா’
‘இல்லை சுகி, கலியாணம் பேசுகினம் என்று சொன்னியே, உனக்குப் பொருத்தமானவனைத்தான் அப்பா தெரிந்தெடுத்திருப்பார். அதையேன் நீ மறுக்கிறாய்?’
‘அப்பா அம்மா தங்கட கடமையைச் செய்யினம், கலியாணம் கட்டப்போறது நான்தானே’
‘அவனை உனக்குப் பிடிச்சிருந்தால் கட்டிக்கோ’
‘என்ன சொல்லுறாய்? ஜோக்கா?’
‘இல்லை உண்மையாத்தான் சொல்லுறேன்’
‘அப்போ நாங்க பழகினதெல்லாம்?’
‘என்ன சுகி இப்படிச் சொல்லுறாய். எங்களுக்குள்ள இருந்த உறவு நட்பு மட்டும்தான், ஜஸ்ட் ஏ பிறன்ட்ஷிப் அவ்வளவுதான்’
‘அப்போ காதலர் தினத்திலன்று ஒற்றை ரோஜா கொண்டு வந்து என்னிடம் நீட்டினாயே, மறந்திட்டியா?’
‘ஆமா அது நட்பின் அடையாளமாகத் தான் நீட்டினேன். நீதான் அதைத் தப்பாய் எடுத்திட்டாய்.’
‘போதும் இப்படி சொல்லி என்னை ஏமாத்திவிடலாம் என்று நினைக்கிறியா?’
‘இந்த மண்ணில் ஆணோ பெண்ணோ கொஞ்சம் நெருங்கித்தான் பழகுவினம். பள்ளிகூடத்தில, வேலைசெய்யிற இடத்தில இதெல்லாம் சகஜம், அதுக்காக அவையைத்தான் கலியாணம் கட்டவேணும் எண்டில்லை.’
சுகிக்குக் கோபம் பொத்திக் கொண்டு வந்தது.
‘சுகி பிளீஸ், நான் சொல்லுறதைக் கொஞ்சம் கவனமாய் கேள், என்னால உன்னைத் திருப்திப்..!’
‘எனக்கு இந்த நொண்டிச் சாக்கு ஒண்டும் வேண்டாம். தப்பிக்கப் பாக்காதை, இந்தக் கலியாணம் நடக்காட்டி..!’ சுகி சன்னதம் கொண்டாள்.
‘சுகி இப்ப ஏன் இப்படிக் கோபப்படுகிறாய்?’
‘இது மட்டும் நடக்காட்டி என்னை உயிரோடு பார்க்க மாட்டாய், சத்தியமாய் சொல்லுறன்’ என்று உரத்துக் கத்தியவள் விறுவிறென்று நடந்தாள்.
அவன் ஓடி வந்து அவளது கைகளைப்பற்றிச் சமாதானம் சொன்னான். எப்படியோ அன்று அவனை மிரட்டிச் சம்மதிக்க வைத்தாள் சுகி. அவன் சொல்ல வந்தது எதையுமே காதில் வாங்காமல் கலியாணமும் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் இன்று சுகியின் தேவை வேறாக இருந்தது.
காதலர்களுக்கு காதலிக்கும்போதோ, திருமணமான ஆரம்ப காலங்களிலோ எந்தக்குறையும் பெரிதாகத் தெரிவதில்லை. இருவரும் மற்றவரின் நல்ல பக்கத்தை மட்டும் பார்த்துக் கொள்வார்கள். சில குறைகள் இருந்தாலும் தங்களுடைய இல்லற வாழ்க்கை அதனால் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று பயத்தில் பலர் இந்தக் குறைகளை மறைத்து விடுவார்கள்.
கணவனிடம் இருந்த குறைகளைச் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் இருந்த சுகியின் சங்கடத்தைப் புரிந்து கொண்ட அக்கா சுபா அவளிடம் கதை கொடுத்து மெல்ல மெல்ல அவள் மனதில் உள்ளதை அறிந்து கொண்டாள்.
‘அப்ப ஏன்டி இதை இத்தனை நாளாய் எங்களிட்ட சொல்லவில்லை’
‘அவர் பாவமக்கா’
‘பாவமா? பாவம் பார்த்தா, உன்னுடைய வாழ்க்கை..?’
‘நானாய் விரும்பித்தானே அவரைக் கலியாணம் செய்தேன்’
‘நல்லாயிருக்கு, தன்னுடைய குறைபாட்டை உன்னிடம் மறைச்சது குற்றமில்லையா?’
‘அவர் சொன்னாரக்க, நான்தான் கேட்கவில்லை’
‘என்னடி சொல்லுறாய்?’
‘ஆமாக்கா அவர் தன்னுடைய இயலாமையை பற்றி என்னிடம் அப்போ சொன்னார். அதை நான்தான் வேடிக்கையாய் எடுத்துவிட்டேன். என்னைவிட்டுப் பிரிவதற்கு அவர் சொல்லும் சாட்டாய் இருக்குமோ என்று நான்தான் மறுத்துவிட்டேன்.’
‘அதற்கு நீ என்ன சொன்னாய்?’
‘எப்படியக்கா வெளிப்படையாய் சொல்லுறது. எங்க கல்யாணம் நடக்கணும் என்பதாலே, மனசை மட்டுந்தான் விரும்பிறேன் என்று அப்ப சொன்னேன். ஆனால் இப்பதான் புரிகிறது மனசு மட்டுமல்ல உடலுக்கும் தேவை இருக்கிறது என்கிறது’.
‘சுகி கலியாணம் என்கிறது ஆயிரங்காலத்துப் பயிர் என்று பெரியவங்க சும்மாவா சொன்னாங்க’
‘தெரியுமக்கா, எங்களுக்குள் புரிந்துணர்வு இருந்தால் இது ஒன்றும் பெரிய விடையமில்லை என்றுதான் நினைத்தேன்’.
‘இருக்கலாம், ஆனால் பரம்பரை பரம்பரையாய் சந்ததி தொடருமல்லே, உன்னுடைய பரம்பரைக்கு இத்தோட முற்றுப்புள்ளி வைக்கப்போறியா?’
‘நடந்தது நடந்து போச்சு, இப்ப என்ன செய்யச் சொல்லுறாய்?’
‘இருந்தாலும் அவனுக்கு மதி எங்கபோச்சு?’
‘கலியாணமே செய்ய மாட்டேன் என்று முற்றிலும் மறுத்துவிட்டாரக்கா, நான்தான் அவரை மிரட்டி இந்தக் கலியாணத்தைச் செய்தேன்’
‘அவனை நீ மிரட்டினியா?’
‘ஆமாக்கா, ஒருத்தருக்கும் தெரியாது, தற்கொலை செய்திடுவேன் என்று மிரட்டித்தான் இந்தக் கலியாணமே நடந்தது.’
‘நீ இந்தளவு தூரத்திற்குப் போனியா சுகி?’
‘அந்த நேரம் எனக்கு மானப்பிரச்சனை, சொந்த பந்தம் என்ன சொல்லுமோ என்ற பயம் வேறு, எனக்கு வேறு வழியே தெரியல்லே, அதனாலேதான் இந்தக் கலியாணம் நடந்தாலே போதுமென்று ஒற்றைக்காலிலே நின்றேன்.’
நாளாக நாளாக உள்ளத்தைக் காதலிக்கிறேன் என்று சொல்வதெல்லாம் நடைமுறைக்குச் சாத்தியமாகாது, உடலின்பம் தேவைப்படும்போது, இயற்கையின் தேவைகள் பூர்த்தி செய்யப்படா விட்டால், குறைபாடுள்ள தம்பதியினருக்குள் கருத்து வேறுபாடு தோன்றலாம்.
அதன் வெளிப்பாடுதான் இத்தனை நாட்களும் பல்லைக் கடித்துக் கொண்டிருந்த சுகியின் இந்த அழுகையும் ஏக்கமும் என்பதை சுபா புரிந்து கொண்டாள்.
‘மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை வாழ, துணையின் உற்சாக ஒப்புதல் இல்லாமல் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம்’ என்று குடும்ப வைத்தியர் அன்று குறிப்பட்ட அந்த அறிவுரையையும் மீறித்தான் பிடிவாதமாக சுகி இந்தத் திருமணத்தைச் செய்தாள்.
‘தன்னை அவன் ஏமாற்றிவிடுவானோ என்ற பயயுணர்வு மட்டும்தான் அன்று அவளிடம் இருந்தது. ஆனால் இன்று அதை எல்லாம் கடந்து அவளது தேவை வேறாக இருந்தது. மனசு தவிப்பதைத் தாங்கிக் கொள்ளலாம், உடம்பு தகிப்பதை எவ்வளவு காலம்தான் தாங்கிக் கொள்வது?’ அதனால்தான் அக்காவிடம் வந்து வார்த்தைகளைக் கொட்டிவிட்டாள்.
‘உன்னுடைய அவசரபுத்தி, பிடிவாதம் எல்லாம் உன்னை எங்கே கொண்டுபோய் வைத்திருக்குத் தெரியுதா? என்றாள் சுபா.
‘தெரியுதக்கா, இப்ப என்ன செய்யட்டும்? என்றாள் சுகி.
‘டாக்டரிடம் கொண்டுபோய் காட்டச் சொல்லு. இப்பதான் எத்தனையோ வசதிகள் இருக்கே, உன்னிடம் ஒரு குறையும் இல்லாட்டிக் கவலையை விடு.’
‘பிள்ளைப்பாக்கியம் கிடைக்குமாக்கா?’
‘அதுதான் இப்ப எத்தனையோ வழி முறைகள் இருக்கு என்று சொன்னேனே!’
‘அவர் டாக்டரிடம் போகமாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார்.’
‘டாக்டரிடம் போகாவிட்டால், நீ சட்டத்தரணியிடம் போகவேண்டி வரும் என்று மிரட்டிப்பார். அதற்கும் சம்மதிக்காவிட்டால் அடுத்த படி என்னவென்று பார்ப்போம்’
‘வருவாரா..?’
‘எப்படி மிரட்டணும் என்று உனக்குச் சொல்லித்தரணுமா?’
‘பார்க்கலாம்’ என்று சொல்லிக் கொண்டே எழுந்தாள் சுகி.
ஆனாலும் தவறு தன்பக்கமும் இருந்ததால் கணவனைக் காட்டிக் கொடுக்க அவள் விரும்பவில்லை. இதைப்பற்றி யாரிடமும் சொல்லிவிட வேண்டாம் என்றும் அக்காவிடம் சத்தியம் வாங்கிக் கொண்டு வீடு நோக்கித் திரும்பினாள் சுகி.
பெண்களைப் பொறுத்த வரையில் பழமை பேசிக் கொண்டிருப்பதைவிட, காலத்திற்கேற்ற நல்ல மாற்றங்களை மனதார ஏற்றுக் கொள்ளத் தயாராக இருப்பது நல்லது தான் என்று நினைத்தாள்.
இது ஒன்றும் இந்த நாளில் பெரிய குறையில்லை, அக்கா சொன்னதுபோல வைத்தியரிடம் சென்றால் இது போன்ற குறைகளை நவீன வசதிகள் மூலம் நீக்கிவிடலாம் என்ற நம்பிக்கை மனதில் துளிர் விட்டிருந்தது.
தீராத குறைகள் என்று முன்பு நினைத்தது எல்லாம் இப்போது குறைகளாகவே தெரிவதில்லை. சூழ்நிலைக்கு ஏற்ப அறிவியல் வளர்ச்சியும், காலமும் மட்டுமல்ல, அவள் வாழும் நாடும் மாறிவிட்டிருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இப்போது பனி கொட்டுவது நின்று, மூடுபனி நீங்கி விட்டதால் போகும்பாதை அவளுக்குத் தெளிவாகத் தெரிந்தது. வீடு நோக்கி மட்டுமல்ல, ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கியும் நடப்பதுபோல, அவளது நடையில் ஒருவித வீச்சு இருந்தது.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.