நகர மாந்தரும், நகர் பற்றிய அவர்தம் மனப்பிம்பங்களும், பேராசிரியர் 'கெவின் லிஞ்ச்' இன் (Professor Kevin Lynch) நகரொன்றின் பிம்பக்' (The Image Of the City ) கோட்பாடு பற்றிய புரிதலும்!
- மொறட்டுவைப் ப்லகலைக் கழகத்தில் கட்டடக்கலை முடித்தபின்னர் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டம் மற்றும் நகர அமைப்பு அதிகார சபை ஆகியவற்றில் பணியாற்றிய காலங்களில் கொழும்பு மாநகர், புதிய பாராளுமன்றம் போன்ற பல நில அமைப்பு (Landscape) , நகர் அமைப்புத் (Town Planning) திட்டங்களில் பணியாற்றியுள்ளேன். அவற்றில் முக்கியமானதொன்று மேற்படி பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டின் அடிப்படையில் நகர் அமைப்பு வல்லுநரான டிக்சன், கட்டடக்கலை/ நகர் அமைப்பு வல்லுநரான சிவபாலன் (இவர் பின்னர் சிங்கப்பூரில் பணியாற்றியபோது மரணித்து விட்டார்) , கட்டடக்கலைஞரான வைரமுத்து அருட்செல்வன் ஆகியோருடன் இணைந்து மேற்கொண்ட கொழும்பு மாநகரின் பிம்பம் பற்றிய ஆய்வு. அது பலரின் பாராட்டுதல்களைப் பெற்றதும் நினைவுக்கு வருகின்றது. பேராசிரியர் லிஞ்சின் நகர் விம்பக் கோட்பாட்டினைச் சுருக்கமாக விபரிக்கும் கட்டுரை இது. -
நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஒரு பிரதியொன்று எவ்விதம் வாசகனொருவரின் அறிவு, அனுபவம், புரியும் தன்மை போன்ற பல்வேறு காரணிகளால் நிர்ணயிக்கப்படுகின்றனவோ அவ்விதமே நகர மாந்தரின் நகர் பற்றிய மனப்பிம்பங்களையும் பல்வேறு காரணிகள் தீர்மானிக்கின்றன. நகர மாந்தரின் நகர் பற்றிய உளப்பதிவுகள் அவர்களது அந்நகரினுடான அனுபவங்கள். அதன் விளைவாக உருவான நினைவுகள், அந்நகரிலுள்ள கட்டடங்கள். முக்கியமான இடங்கள், அங்கு வாழும் ஏனைய மக்கள், அங்கு நிகழும் பலவேறு விதமான செயற்பாடுகள். நகரின் முக்கியமான அடையாளங்களாகத் திகழும் சின்னங்கள்,... ... என இவை போன்ற பல காரணிகளின் விளைவாக உருவாகுகின்றன. நகர அமைப்பு வல்லுநர்கள் நகர்களைப் புனர் நிர்மாணம் செயகையில் அல்லது புதியதொரு நகரமொன்றினை நிர்மாணித்திடும்போது அங்கு வாழும் மாந்தரின் மேற்படி மனப்பிம்பங்கள் அல்லது பதிவுகள் பற்றிய போதிய அறிவினைப் பெற்றிருப்பது அவர்களது பணிக்கு மிகவும் இன்றியமையாதது மட்டுமல்ல பயனுள்ளதுமாகும். இவ்விதமாக நகர மாந்தரின் அவர் வாழும் நகர் பற்றிய மனப்பிம்பங்களை மையமாக வைத்து அந்நகரினை அறிவதற்கு இருபதாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் முயனறவர்தான் பேராசிரியர் கெவின் லிஞ்ச் Professor Kevin Lynch).

[-பதிவுகள் இணைய இதழின் அக்டோபர் 2008 , இதழ் 106இல் வெளியான இக்கட்டுரை இங்கு ஒரு பதிவுக்காக மீள்பிரசுரமாகின்றது. இக்கட்டுரை ஏற்கனவே 'தாயகம் ' சஞ்சிகையிலும் வெளிவந்திருக்கிறது. - பதிவுகள்] இலங்கை இந்தியா போன்ற வளர்முகநாடுகளில் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளிலொன்று இந்த வீட்டுப் பிரச்சினை. இத்தகைய வளர்முகநாடுகளில் வாழும் மக்களில் பெரும்பான்மையினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழ்பவர்கள். இதனால் வீடுகளைக் கட்டினால் மட்டும் போதாது? குறைந்த செலவிலும் கட்ட வேண்டும். இதன் காரணமாகக் 'குறைந்த செலவு வீடுகளின்' (Low Cost Housing) தேவை வளர்முகநாடுகளைப் பொறுத்த வரையில் மிகவும் அவசியமாகின்றது. பல்வேறு வளர்முக, அபிவிருத்தியடைந்த நாடுகளிலெல்லாம் இத்தகைய குறைந்த செலவுக் குடிமனைகளைக் கட்டுவதெப்படி என்பது பற்றியெல்லாம் ஆய்வுகள், பரிசோதனை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன. வெற்றியடைந்திருக்கின்றன. மேலும் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டுமிருக்கின்றன. இத்தகைய வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வீடமைப்புத் திட்டங்கள் மிகுந்த அவதானத்துடன் உருவாக்கப்பட வேண்டும். நாட்டில் கிடைக்கக்கூடிய வளங்களை அதிக அளவு பாவிக்கக்கூடியதாக, அதே சமயம் உருவாகக் கூடிய சேதங்களின் அளவைக் குறைக்கக் கூடியதாக, மேலும் கூடிய அளவு பயனைத் தரக்கூடியதாக, கட்டடம் கட்டுவதற்குரிய கால அளவைக் குறைக்கக் கூடியதாக இத்திட்டங்கள் அமைந்திருக்க வேண்டும். வீட்டைக் கட்டுவதுடன் மட்டும் பிரச்சினை தீர்ந்து போய்விடுவதில்லை. அவற்றில் வாழப்போகும் மக்களுக்கேற்றபடி வீடுகள் அமைந்திருக்க வேண்டும். இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அமைக்கும்போது அவற்றில் வாழப்போகும் மக்களின் சமூக வாழ்க்கை முறை, அவர்களின் தேவைகள், மற்றும் வீடுகள் அமையவிருக்கின்ற பிரதேசங்களின் காலநிலை, அப்பகுதிகளில் கிடைக்கக்கூடிய மூலவளங்கள் என்பன பற்றியெல்லாம் கவனத்தில் கொண்டே அத்தகைய திட்டங்களை அமைக்க வேண்டும்.
சென்னைப் பல்கலைக்கழகத்தின் பண்டை வரலாறு மற்றும் தொல்லியல் துறை 1970 முதல் 1976 வரை பற்பல பருவங்களில் காஞ்சிபுரத்தில் தொல்லியல் அகழாய்வை மேற்கொண்டது. காஞ்சிபுரத்துடனான பல்லவர் கூட்டு என்பதில் கவனம் குவிக்கும் நோக்கில் பேராசிரியர் முனைவர் டி. வி. மகாலிங்கம் தலைமையில், பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தியும் இணைந்து, தொல்லியலாளரும், தொழினுட்பரும் (technicians) கொண்ட ஒரு அணி இந்த அகழாய்வை மேற்கொண்டது. காஞ்சிபுரத்தில் உள்ள முதுபழமை வாய்ந்த சங்கர மடமும் காஞ்சிபுரத்துடனான தன் கூட்டு அதன் தொடக்கம் முதலே இருந்தது என்ற கோருரிமைகளைக் (claims) கொண்டிருந்தது.
கன்னியாகுமரிக்குத் தெற்கே கிடக்கின்ற இந்தியப் பேராழியின் கொந்தளிப்புக் கடல்நீர் கிறித்து ஊழிக்கு முன்னீடு பல ஆயிரஆண்டுகள் (millenniums) செழித்திருந்த தமிழருடைய ஒரு கனத்த தொன்னிலைசார் நாகரிகத்தின் மீதிமிச்சங்களை தன் ஆழத்தே மறைத்துக் கொண்டு உள்ளது. இந்தியாவின் இடக்கிடப்பியல் (topography) பண்டை நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவால் இந்நாளைய நிலம் மற்றும் நீரின் அமைவில் இருந்து வேறுபட்டிருந்தது. தமிழ் நாடு நாவலந்தீவு என அறியப்பட்ட ஒரு பெருந் தீவின் மீதென் பகுதியாக இருந்தது. இத்தீவு வடக்கே விந்திய மலைகளால் கட்டுவரம்பிடப்பட்டு தெற்கே ஆத்திரேலியா வரையும், மேற்கே தென் ஆப்பிரிக்கா வரையும் விரிந்திருந்தது. இத்தீவு இந்தியப் பேராழியில் 5,000 கல்தொலைவுகளுக்கு (miles) மேலாகவே அகற்சி பெற்றிருந்தது. கங்கைச் சமவெளி ஒரு பெரும்பரப்பான மாக்கடல் நீர்ப்போர்வையால் மூடியிருந்த காலம் ஒன்றும் இருந்தது அதோடு இரசபுத்தாரவைச் சுற்றிலும் பல ஆயிரம் ஆண்டுளுக்கு ஊழிவெள்ளம் நீடுநிலைத்திருந்தது. இது திரு எச். ஜி. வெல்சு (H.G.Wells) என்பாரால் "Outline of History" என்ற நூலுள் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. அவர் தென்இந்தியாவானது பஞ்சாபு, காசுமீர், காந்தாரம் ஆகியவற்றிடம் இருந்து அரபிக்கடலையும் வங்காள விரிகுடாவையும் இணைக்கின்ற ஒரு பெரும்பரப்பு மாக்கடல் தொடரால் துண்டிக்கப்பட்டிருப்பதை காட்டினார். கங்கைச் சமவெளியை கடல் மூடியிருந்த போது இதுவே இந்தியாவின் இடக்கிடப்பியலாக சற்றொப்ப 25,000 முதல் 35,000 ஆண்டுகளுக்கு முன்னம் இருந்தது.
[ பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, "Lemuria : The Last and the Lost Continent of Tamils" என்ற தலைப்பில் வரைந்த கட்டுரையின் தமிழாக்கம் இது. தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக வெளியீடான "அருங்கலைச் சொல் அகரமுதலி" உதவியோடு தமிழாக்கித் தட்டச்சு செய்தவர் சேசாத்திரி ] இலெமூரியாக் கண்டம் அல்லது வேறுவகையில் குமரிக்கண்டம் என்று அழைக்கப்பட்டு வரும் நிலப்பரப்பு இந்நாள்களில் அறிஞர் கைகளில் மிகப் பெரும் கவனம் பெற்று வருகின்றது. இக்கள ஆய்வில் முன்னோடியானவர் பசுமலை சோமசுந்தர பாரதியார். அவரைப் பின்பற்றி எம். எசு. பூர்ணலிங்கம் பிள்ளை நெடுங்காலத்திற்கு முன்னம் 'தமிழ் இந்தியா' என்ற நூலை யாத்தார். க. அப்பாதுரையும் இப் பொருண்மைக்கூறு (subject) ஆய்வில் பங்களிப்பு ஆற்றியவர் தாம். இலெமூரியாக் கண்டம் குறித்து முனைவர் பட்டத்திற்கு வழிநடத்துகின்ற ஆய்வேடுகளும் உள்ளன.
முன்னுரை
யாழ்ப்பாண வரலாறு பற்றியும் நல்லூர் இராசதானி பற்றியும் அறிந்து கொள்ள உதவும் பழைய சரித்திர நூல்களாக யாழ்ப்பாண வைபவ மாலை, கைலாயமலை, பரராசசேகரன் உலா, வையாபாடல், இராசமுறை போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுள் சில நூல்கள் தற்போது வழக்கில் இல்லை என்பது வருத்தம் தரும் செய்தியாகும்.
தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின், அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது. இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன. இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன. இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று - முந்து காலத் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய தளங்கள் இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம் ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். சிறப்பாக, ஆற்றுப் படுக்கைகள், கடற்கரைகள் என எங்கெல்லாம் தோண்டுகிறோமோ அங்கு நமக்கு இரும்புக் காலப் பண்பாடும் மட்கலமுமே காட்சிப்படுகின்றன.
களப்பிரர் படையெடுப்பால் தமிழகத்தில் தமிழ மூவேந்தர் ஆட்சி குலைந்து சங்க காலம் முடிவுற்ற பின்பு எல்லாத் துறைகளிலும் கோலோச்சிய தமிழ் என்ற நிலை மாறி தமிழ் அரசின் ஆட்சி மொழி, மத வழிபாட்டு மொழி என்று இல்லாமல் போகும் அவலநிலை தோன்றியது. களப்பிரரும், பல்லவரும் தமிழருக்கு அயலான பிராகிருதத்தை அரசவை மொழி ஆக்கினர். தமது அரசாணைகளையும், நிலக் கொடை ஆவணங்களையும் பிராகிருதத்திலேயே வெளியிட்டு மக்கள் மொழியாம் தமிழைப் புறக்கணித்தனர். பல்லவர் பின்பு சமற்கிருதத்தை ஆதரித்தனர். ஆயினும் பல்லவருக்கு அடங்கிய சிற்றரசர்களும் வேளிரும் எளியோரும் தமிழைப் போற்றிப் பாதுகாத்தனர். இதற்கு சான்றாக அமைந்தவை தாம் போரிலும், பூசலிலும் பங்கெடுத்து வீரச்சாவு எய்திய மறவர்களின் நினைவாக எடுப்பிக்கப்பட்ட நடுகல் கல்வெட்டுகள்.
யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம். காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.
ஈழத்தமிழர்களின் யாழ்ப்பாண அரசர்களின் காலத்தில் இராஜதானியாகத் திகழ்ந்த நல்லூர் இராஜதானியின் நகர அமைப்பு எவ்விதம் இருந்திருக்கலாமென்பதை வரலாற்று நூல்கள், வெளிக்கள ஆய்வுகள் (Field Work) , தென்னிந்தியக் கட்டடக் கலை நூல்கள் மற்றும் ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையில் விளைந்த தர்க்கத்தின் அடிப்படையில் உய்த்துணர முயன்றதின் விளைவாக உருவானதே இந்த நூல். இதன் முதற்பதிப்பு ஏற்கனவே 1996 டிசம்பரில் ஸ்நேகா (தமிழகம்) மற்றம் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகிய பதிப்பகங்களின் கூட்டு முயற்சியாக வெளிவந்திருந்தது. இது பற்றிய மதிப்புரைகள் கணயாழி, ஆறாந்திணை (இணைய இதழ்) மற்றும் மறுமொழி (கனடா) ஆகிய சஞ்சிகை இணைய இதழ்களில் வெளிவந்திருந்தன. இலங்கையிலிருந்து கே.எஸ்.சிவகுமாரன் இலங்கையிலிருந்து வெளிவரும் 'டெய்லி நியூஸ்' பத்திரிகையில் இதுபற்றியதொரு விமரிசனத்தை எழுதியிருந்தார். ஈழத்திலிருந்து வேறெந்தப் பத்திரிகை, சஞ்சிகைகளில் இதுபற்றிய தகவல்கள் அல்லது விமரிசனங்களேதாவது வந்ததாயென்பதை நானாறியேன். இருந்தால் அறியத்தாருங்கள் (ஒரு பதிவுக்காக).
சிங்கை நகர் நல்லூர் தமிழரசர்களின் இராஜதானியாக விளங்குவதற்கு முன்னர் விளங்கிய நகர். இதன் இருப்பு பற்றிப் பல்வேறு விதமான ஊகங்கள், கருதுகோள்கள் நிலவுகின்றன. ஒன்றிற்குப் பின் முரண்பாடான ஊகங்கள் ஆய்வாளர்களை மேலும் மேலும் குழப்பத்திலாத்தி வைப்பனவாகவுள்ளன. முதலியார் இராசநாயகம், சுவாமி ஞானப்பிரகாசர் போன்றோர் வல்லிபுரமே சிங்கை நகராக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் உள்ளதாகக் கருதுவர். பேராசிரியர் சிற்றம்பலமோ நல்லூரே சிங்கைநகரெனக் கருதுவார். கலாநிதி க.குணராசா, கலாநிதி ப.புஷ்பரட்ணம் ஆகியோர் பூநகரிப் பகுதியிலேயே சிங்கை நகர் அமைந்திருந்ததாகக் கருதுவர். ஆனால் கலாநிதி புஷ்பரடணத்தை மேற்கோள் காட்டி கலாநிதி குணராசா சிங்கை நகர் பூநகரிப் பகுதியில் இருந்ததை வலியுறுத்துவார். கலாநிதி புஷ்பரட்ணமோ கலாநிதி குணராசாவின் நூல்களை தனது சிங்கை நகர் வாதத்திற்கு வலு சேர்ப்பதற்காகக் குறிப்பிடுவார். ஆனால் இவர்கள் இருவருக்குமிடையிலும் கூட சிங்கை நகர் என்னும் பெயர் வந்ததற்கான காரணம், மற்றும் சிங்கை நகரின் தோற்றத்திற்கான காலகட்டம் ஆகியவற்றில் மாறுபட்ட குழப்பகரமான கருத்துகளே நிலவுகின்றன. இக்கட்டுரையில் இவர்களிருவரினதும் சிங்கைநகர் பற்றிய கருதுகோள்களில் காணப்படும் வலுவிழந்த தன்மைபற்றி சிறிது ஆராய்வோம். பின்னுமோர் சமயம் இது பற்றி மேலும் விரிவாக ஆய்வோம். கலாநிதி புஷ்பரட்ணத்தின் தர்க்கத்தில் காணப்படும் முரண்பாடுகள் சிங்கை நகர் பற்றிய சுவாமி ஞானப்பிரகாசர் மற்றும் முதலியார் செ.இராசநாயகம் ஆகியோரின் சிங்கைநகர் பற்றிய கருதுகோட்களுக்கே வலுசேர்ப்பதாக அமைகின்றன என்பது அடியேனின் நிலைப்பாடு. 

பதிவுகள். காம் மின்னூல் தொகுப்புகள்









