யாழ்ப்பாணத்தின் வரலாறு, பாதுகாப்பு, பொருளாதாரம், நாட்டாரியல் இப்படிப் பல விடயங்களுடனும் பின்னிப் பிணைந்த சிறப்புடையது, ஹம்மன் ஹீல் என்றும் பூதத்தம்பி கேட்டை என்றும் வழங்கப்படும் கடற்கோட்டை பாக்கு நீரிணையூடாகச் சென்ற பன்நாட்டுக் கடற்பாதையில் இருந்து யாழ்ப்பாணப் பரவைக் கடலுள் நுழையும் வழியை அரண்செய்தது இக்கோட்டை இங்கிருந்து தென்மேற்காக நெடுந்தீவு சென்று அங்கிருந்து ராமேஸ்த்திற்கோ அல்லது மன்னார், கொழும்பிற்கோ செல்லலாம். வடக்கில் கோடிக்கரைக்கோ நாகப்பட்டினத்திற்கோ போய் அங்கிருந்து கிழக்காக, பத்தாவது அகலக்கோட்டைப் பின்பற்றித் தென்கிழக்காசியாவிற்கும் சீனாவிற்கும் போகலாம். நேர் வடக்கில் இந்தியாவின் கிழக்குக் கரையோரமாக எந்தத்துறை முகத்திற்கும் போக முடியும். மேற்குத் திசையில் தொண்டி, அதிராம் பட்டினத்திற்கும் தென் கிழக்கில் யாழ்ப்பாணத்திற்கும் பூநகரிக்கும் போகலாம். காரைநகருக்கும், ஊர்காவற்துறைக்கும் இடையில் பரவைக் கடலின் தலைவாயிலில் அமைந்த திட்டொன்றில் ஒல்லாந்தரால் கட்டப்பட்ட இந்தக் கோட்டையில் இருந்து, யாழ்ப்பாணக் கோட்டையைப் பார்க்கவும் முடியும். பாதுகாக்கவும் முடியும். இந்த இடத்தின் கடற்பாதை முக்கியத்துவம், பாதுகாப்பு முக்கியத்துவம் காரணமாக, கடற்கோட்டைக்கு நேர் எதிராக ஊர்காவற்றுறைப் பக்கம் எய்றி (Fort Eyrie) என்றழைக்கப்பட்ட ஒரு கோட்டையை போர்த்துக்கேயர் ஏற்கனவே கட்டியிருந்தார்கள். அது இப்பொழுது பாழடைந்த நிலையில் உள்ளது.
ஊர்காவற்றுறைக்கு முயலவள என்று வழங்கப்படும் பெயர் முயலள என்ற போர்த்துக்கேயச் சொல்லில் இருந்து வந்ததாகக் கருதப்படுகின்றது. இச்சொல், துறைமுகம் அல்லது துறைமுகமேடை எனப்பொள்படும் ‘கீ’ என்று உச்சரிக்கப்படும் Qyal என்ற ஆங்கிலச் சொல் இதற்குச் சமதையானது.
ஊர்காவற்றுறையென்று இன்று எழுத்துத் தமிழ் வடிவம் பெற்றிருக்கும் இந்த இடம்பெயர் , ‘ஊறாத்துறை’ என்றே பேச்சு வழக்கில் உள்ளது. 12ஆம் நூற்றாண்டுத் தமிழ்க்கல்வெட்டுக்களில் ஊராத்துறை என்று அழைக்கப்பட்டிருக்கிறது. ஸிகர தித்த என்று சூளவம்சத்திலும் ஹிராதொட அல்லது ஊராதொட என்று பூஜாவலிய, ராஜாவலிய, நிகாயஸங்கிரஹய போன்ற இலங்கையிலும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. (இந்திரபாலா: 1969)
நயினாதீவு கல்வெட்டு
1).............. நாங்கள் .......................
2) வந்து ஊராத்துறை
3) (யில்) பிரதேசிகள் வந்து
4) இருக்க வேணுமென்றும்
5) அவர்கள் ரஷைப்படn
6) வணுமென்றும் பல தை
7) றகளில் பிரதேசிகள் வந்து நந்து
8) றையிn(ல) கூடவேணு மென்று
9) (ம்) நாம் ஆனை குதிரை மேல் ஸ்நெஹ
10) (மு) ண்டாதலால் நமக்கு ஆனை குதிரை
11) கொடுவந்த மரக்கலங் கெட்டது
12) ண்டாகில் நாலத் தொன்று பண்டா
13) (ர) த்துக்குக் கொண்டு மூன்று கூறும
் 14) (உ) டையவனுக்கு விடக்கடவதாகவு
15) (ம்) வாணிய மரக்கலங் கெட்டதுண்
16) டாகில் செம்பாகம் பண்டாரத்துக்
17) (கு) க் கொண்டு செம்பாகம் உடைய
18) (வ) னுக்கு விடக்கடவதாகவும் இவ்
19) வவஸ்தை (ரு) ள்ளதனையுங்க
20) வில்லிலுஞ் செம்பிலும் எழுத்துவெ
21) ட்டி வித்து இவ்வவஸ்தை செய்துங் கு
சமஸ்கிருதப் பாகத்தின் மொழி பெயர்ப்பு
பெயர்ப்புவரி 22 – 23 சகல சிங்களத்துக்கும் சக்கரவர்த்தி யாகிய பகை அரசர்களுக்கு காட்டுத் தீயாயாகிய வேபராக்கிரம புஜோ (பாஹி)....
இந்திரபாலா.கா.(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுகள், 1969
ஸிகரஹா என்பது பன்றி எனப் பொருள்தரும் சமஸ்கிருதச் சொல். சூகரம் என்று தமிழ் நிகண்டுகளிலும் இச்சொல் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது. பிராகிருத வழக்காறுகளில் இது ஹ{ரா என்றும் ஊரா என்றும் உருமாறும். சிங்களத்தில் இது வழக்கிலுள்ள சொல். ஸ{கரதித்த (ஸ{கர தீர்த்தம்) என்று சூளவம்சம் குறிப்பிடுவது பன்றித்துறை என்பதற்குச் சமதையானது. பன்றியின் காற்குளம் என்ற பொருளில் கடற்கோட்டைக்கு ஒல்லாந்தர் ஹம்மன் ஹீல் எனப் பெயரிட்டது. கோட்டையின் வடிவமைப்பினால் மாத்திரம் அல்ல என்றே தோன்றுகின்றது.
ஏறத்தாழ 2000 ஆண்டுகளுக்கு மேலாக, கடற்கோட்டைப் பகுதியைக் கடந்து சென்ற பன்நாட்டுக் கடல்வணிகத்தின் தொல்லியற் தடங்களை நெடுந்தீவில் பெரியதுறை அருகிலுள்ள வெடியரசன் கோட்டையிலும் காரைநகரில் கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள வேரப்பிட்டியிலும் பொன்னாலையில் சம்புத்துறைக்குப் பக்கத்திலுள்ள திசைமழுவையிலும் காணலாம். பழைய துறைகளை ஒட்டியுள்ள இந்த மூன்று இடங்களிலும் காணப்படும் பௌத்த சின்னங்கள், கடல்வணிகத்திற்கும் பௌத்தத்திற்கும் இடையில் அக்காலத்தில் இருந்த நெருங்கிய தொடர்பைக் காட்டுகின்றன.
இருப்பினும், இப்பகுதியின் கடல்வழித் தொடர்புகள் பௌத்த தடயங்களின் காலத்திற்கும் முந்தியவை என்பதை, காரைநகரின் உட்புறத்தில் களபூமியில் கிடைத்த பெருங்கற்காலத் தடயங்களும் ஊர்காவற்றுறை அமைந்துள்ள வேலணைத்தீவின் தென்கிழக்கில் சாட்டியிலும் கும்புறுப்பிட்டியிலும் கிடைத்த மட்கலத்தடயங்களும் தெளிவுபடுத்துகின்றன.
இரண்டாம் இராசாதிராசசோழனது திருவாலங்காட்டுக் கல்வெட்டு
இவன் தன் படைநிலையான ஊராத்துறை, புலைச்சேரி, மாதோட்டம், வல்லிகாமம் , மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே படைகளும் புகுதவிட்டு படவுகளுஞ் செய்விக்கிறபடி கேட்டு இதுக்குப் பரிகாரமாக ஈழத்தான் மருமகனராய் ஈழ ராச்சியத்துக்குங் கடவராய் முன்பே போந்திருந்த சீவல்லவரை அழைப்பித்து இவர்க்கு வேண்டுவனஞ் செய்து இவரையும் இவருடனே வேண்டும் படைகளும் ஊராத்துறை வல்லிகாமம் மட்டிவாழ் உள்ளிட்ட ஊர்களிலே புகலிட்டுப் புலைச்சேரி மாதோட்டம் உள்ளிட்ட ஊர்களும், அழித்து ஈழத்தானினவாய் இவ்வூர்களில் நின்ற ஆனைகளுங் கொண்டு ஈழமண்டலத்தில் கீழ்மேல் இருபதின் காதமேற்படவுந் தென் வடல் முப்பதின்காதமேற்படவும் அழித்து இத்துறையில் இவன் மனிசராயிருந்தாரில் கொல்வாரையுங் கொன்று பிடிப்பாரையும் பிடித்து இவர்களையுஞ் சரக்காய்க் கைக்கொண்டனவும் பிடித்த ஆனைகளும் அழைப்பித்து இவன் தமக்குக் காட்டி ஈழமண்டலத்துக் காரியம் எல்லாப் படியாலும் இவன் (சோழத்தளபதியாகிய பழையனுருடையான வேதவன் முடையான் அம்மையப்பனான ‘அண்ணன் பல்லவராயன்) அழியச் செய்வித்த படிக்கும் (சதாசிவபண்டாரத்தார் பிற்காலச் சோழர் சரித்திரம்: 1967)
12ஆம் நூற்றாண்டில் ஊர்காவற்றுறையின் கேந்திர, வணிக முக்கியத்துவங்களை இரு தமிழ்க் கல்வெட்டுக்கள் அறியத்தருகின்றன. இரண்டாம் இராஜாதிராஜசோழனது (1163-1178) திருவாலங்காட்டுக் கல்வெட்டு, சோழர்களுக்கும் பராக்கிரமபாகுவிற்குமிடையில் நடைபெற்ற மோதலில் படைத்தளஙக்களுள் ஒன்றாக ஊராத்துறை இருந்ததை அறியத்தருகின்றது. தற்பொழுது நயினாதீவுக் கோயிலில் வைக்கப்பட்டுள்ள, முதலாம் பராக்கிரமபாகுவின் தமிழ் சமஸ்கிருதக் கல்வெட்டு, ஊர்காவற்றுறையில் பன்நாட்டு வணிகம் ஊக்குவிக்கப்பட்டதைத் தெரியப்படுத்துகின்றது. கடற்கோட்டைக்கு அணித்தாக, நீரோட்டங்கள் கலக்கும் அபாயகரமான ஏழாற்றுப் பிரிவில் அடிக்கடி மரக்கல விபத்துக்கள் நடந்ததையும் இக்கல்வெட்டைக் கொண்டு ஊகிக்க முடிகின்றது. இத்தகைய சந்தர்ப்பங்களில் சிதைந்த மரக்கலங்களில் வந்த பொருட்கள் எவ்வாறு பகிரப்பட்டன என்பதையும் இக்கல்வெட்டு தெரிவிக்கின்றது. சர்வதேசக்கடல் சார் சட்டங்களின் தோற்றுவாய்க்குரிய எடுத்துக் காட்டுகளில் ஒன்றாக இது விளங்குகின்றது.
காரைநகரில், கடற்கோட்டைக்கு அணித்தாகவுள்ள இராசாந்தோட்டத்தில் யாழ்ப்பாண அரசர்களுக்குச் சொந்தமான இருப்பிடமொன்று இருந்திருக்கிறது. இதற்கும், முன்னர் குறிப்பிடப்பட்ட வேரப்பிட்டிக்கும் இடையில், வியாவில் என்ற இடத்தில், ஐயனார் கோயிலொன்று யாழ்ப்பாணத்து அரசர் ஒருவரால் போர்த்துக்கேயர் இறுதியாக யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்குச் சற்று முன்னதாகக் கட்டப்பட்டது. இக்கோயில், போர்த்துக்கேர் காலத்தில் இடிக்கப்படாவிட்டாலும் ஒல்லாந்தர் காலத்தில் இடிக்கப்பட்டு அக்கற்களைக் கொண்டு கடற்கோட்டை கட்டப்பட்டது. இவை, காரைநகர் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகள் அறியத்தரும் செய்திகள். (கணபதீஸ்வரக் குருக்கள் நினைவுமலர்:1967)
காரைநகர்ச் சிவாச்சாரியார்களின் பரம்பரை ஏடுகளில் இருந்து...
வியாவில் ஐயனார் கோவில் கும்பாபிஷேகஞ் செய்த தினம் கலியப்தம் நாலாயிரத்து ஏழு நூற்று மூன்று, சாலிவாகன சகாப்தம் ஆயிரத்தைஞ் நூற்றுப் பதினெட்டு, பிரபாவாதி வருஷம் முப்பத்தைந்தாவது பிலவ வருடம் வைகாசி மாசம் 25ந் திகதி நடைபெற்றது........ (மங்களேஸ்வரக் குருக்கள்)
நானுமெனது தமையனாரும் கோயிற் ப+சை செய்து வரும் காலத்தில் தமிழ் இராச்சியம் போய்விட்டது. முத்துமாணிக்கம் செட்டியாரும் இறந்துவிட்டார். போர்த்துக்கீசர் என்னும் பறங்கியர் கிறிஸ்து வருஷம் 1618 ம் ஆண்டு காலயுத்தி வருஷம் ஊர்காவற்றுறைக்கு வந்தார்கள். அநேக வைசசமயக் கோயில்களை இடித்துப் போராட்டார்கள். இங்கேயுள்ள ஐயனார் கோயிலை இடிக்க வந்து கோபுரவாசலிற் கதவைத் திறக்கப்போனார்கள். அவர்களின் வாயிலிருந்து இரத்தம் புறப்பட்டு இறந்துவிட்டார்கள் அந்தப் பயணத்தினால் மறுபடி கோயிலை இடிக்க வரவில்லை....
(---சூரியநாராயணக் குருக்கள்)
------ பின்னர் போர்த்துக்கீசராச்சியம் போய் ஒல்லாந்தராச்சியம், வந்தது. அவர்கள் கிறிஸ்து வருஷம் 1858 ஆம் ஆண்டு ஏவிளம்பி வருஷம் சித்திரை மாதம் ஊர்காவற்றுறையைப் பிடித்தனர். ஊர்காவற்றுறை பிடிபட்ட ஒரு மாசத்திற்குள் அநேக சைவசமயக் கோயில்களையும் இடித்துவிட்டு இந்த ஐயனார் கோவிலை யும் இடிக்க வந்தபோது நாலுபேர் கண் தெரியாதவர் களாயும், இரண்டு பேர் நடக்கமாட்டாதவர்களாயும் போனார்கள். இது நடந்து கொஞ்சக்காலத்தின் பின் எங்களைப் ப+சை செய்யாது தடுத்தனர். அவர்கள் போனபிற்பாடு விக்கிரகங்கள் எல்லாவற்றையும் நில அறையில் வைத்து இரகசியமாய்ப் ப+சை செய்து வரும்போது ஒரு நாள் வந்து கோவிலையும் இடித்து கடலுக்குள்ளே ஓர் கோட்டையையும் கட்டினார்கள்.. (கனகசபாபதிக் குருக்கள்)
(ஆன்ம தர்சநம், கணபதீசுவரக்குருக்கள் நினைவு மலர் 1967)
வரிசையாக ஆட்களை நிறுத்தி, கற்களைக் கைமாற்றித் தூக்கிச் சென்று, கடற்கோட்டையைப் ப+தத்தம்பி முதலியார் ஒல்லாந்தருக்காகக் கட்டிக் கொடுத்தார் என்பதும் அந்தச் செல்வாக்கால் வந்த பொறாமை அவரது வாழ்வுக்கு உலை வைத்த காரணங்களுள் ஒன்றென்பதும் நாட்டார் இலக்கியத்தில் இடம்பெற்ற விடயங்கள்.
அழிபாடுகளில் இருந்து எடுத்துவரப்பட்ட கற்கள் கடற்கோட்டையைக் கட்டப் பயன்பட்டிருக்கலாம் என்பதை, கோட்டைக்குள் காணப்படும் வேலைப் பாடமைந்த சில கற்களை வைத்து ஊகிக்கலாம். இவற்றுள் இரு கற்களில் சோழர்காலக் கல்வெட்டுக்கள் அறியப்பட்டுள்ளன. ஒன்று மாத்திரமே படிக்கப்பட்டுள்ளது. மற்றையதன் பெரும்பாகம் சாந்தினால் மூடப்பட்டுள்ளதால் முழுமையாகப் படிக்கப்படவில்லை. படிக்கப்பட்ட கல்வெட்டு முதலாம் இராஜேந்திரசோழன் காலத்தது. இலங்கையை வெற்றி கொண்ட சோழத் தளபதியின் பெயரை அறியத்தருகின்றது.
கடற்கோட்டைக் கல்வெட்டுக்கள்
முதலாவது கல்வெட்டு
ஸவஸ்திஸ்ரீ
ஈழமு(ழு)
(ங்)துவ்கொ
ண்டு ஈழ
த்தnசெர
யும் பெண்
டிர் பண்டார
மும் பிடிச்
சுக் கொடுபொ
ன அதிகார
த் தண்டநாச
கனார் ஐய
(ங்) கொண்டn (சொ)
(ழ) மூவேந்(த)
வெளார் மா
தொட்டமான
இராசராசபுர
ஸ்வ்திஸ்ரீ
ஈழமான மு
ம்முடி சொழ
மண்டல...
...ண...
குல....
இந்திரபாலா. கா:(யாழ்ப்பாணத்துக் கல்வெட்டுக்கள் 1969)
பாய்க்கப்பல் போய் நீராவிக்கப்பல் வந்த காலத்தில், பாக்குநீரிணையின் ஆழம் போதாததால் ஊர்காவற்றுறை பன்நாட்டு முக்கியத்துவத்தை இழந்தது. இருப்பினும், இந்தியாவின் கிழக்குக் கரையுடன் வணிகம் அண்மைக்காலம் வரை தொடர்ந்தது. யாழ்ப்பாணப் பரவைக்கடலின் சங்கு வங்காளம் வரை சென்றதையும், விசாகப்பட்டினத்து வடக்கன் மாடு இங்கு வந்ததையும் ஊர்காவற்றுறையில் இன்றும் காணப்படும் சங்குக் கழிவுக்குவியல்களாலும் இடிந்து போன கால்நடைத் தொற்று நோய்த்தடுப்புக் கட்டிடங்களாலும் அறிந்து கொள்ளலாம். ஊர்காவற்றுறையில் இறக்கப்பட்ட சரக்கு, மாட்டு வண்டித் தொடர்களில் அனுராதபுரம், கண்டிவரை சென்றதை எனது பாட்டனார் கூறக்கேட்டிருக்கின்றேன்.
காலனித்துவம் போய்த் தேசியங்கள் வந்த காலத்தில் ஊர்காவற்றுறையின் வணிகம் நின்று போனாலும் கேந்திர முக்கியத்துவம் போய்விடவில்லை வணிகத்தையும் கடற்பாதைகளையும் பராமரிக்கவும் பாதுகாக்கவும் தேவைப்பட்ட கேந்திர அமைவிடம் அவற்றைத் தடுக்கவும் தேவைப்பட்டது. வடபுலத்திற்கான இலங்கைக்கடற்படையின் தலைமையகம் கடற்கோட்டைக்கு மிகவும் அண்மித்த நிலப்பகுதியான காரைநகர், நீலங்காட்டில் அமைந்தது. இக்காரணத்தினாலேயே, 1971 ஆம் ஆண்டு து.ஏ.P. கிளர்ச்சியின் போது கைதான ரோகண விNஜிவீரவும் சகாக்களும் பாதுகாப்புக் கருதி கடற்கோட்டையிலேயே சிலகாலம் சிறைவைக்கப்பட்டனர் என்பதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.
மிகப்பழங்காலந்தொட்டு மேற்கிற்கும் கிழக்கிற்குமான கடற்பாதை, மன்னார் வளைகுடா – பாக்குநீரிணைய+டாகச் சென்றது. அபாயகரமானது என்பதால் ஆழ்கடல் பாதைகள் ஆதிகாலத்தில் இயன்றளவு தவிர்க்கப்பட்டன. இலங்கையின் தென்கிழக்கு மூலையில் , காந்தப்பாறைகள் என அறியப்பட்ட புசநயவ டீயளநளஇ டுவைவடந டீயளநள காரணமாக இலங்கைப் பாதுகாப்பும் மன்னார் வளைகுடாவின் முத்தும் பாக்கு நீரிணையின் சங்கும் கிழக்கையும் மேற்கையும் இங்கு சந்திக்க வைத்தன.
இந்தியாவின் மேற்குக் கரையினரும் கிழக்குக் கரையினரும் பரஸ்பரம் வந்து போனதும் கிரேக்கரும் உரோமரும் வந்ததும் அரபுக்களும் சீனரும் வந்ததும் பின்னர் ஐரோப்பியர் வந்ததும் மன்னார் வளைகுடா பாக்குநீரிணைக் கடற்பாதைய+டாகவே பெரிதும் நடைபெற்றதை அதன் இருபுறக் கரைகளிலும் காணப்படும் எண்ணிறந்த தொல்லியற் தடங்களால் அறிந்து கொள்ளலாம்.
இராமர் அணை என்றும் ஆதாமின் பாலம் என்றும்அழைக்கப்படும் சேதுவை இவர்கள் மன்னார்த்தீவிற்கும் மாந்தைக்கும் இடையில் உள்ள கால்வாயால் அல்லது இராமேஸ்வரம் தீவுக்கும் இராமநாதபுரத்துக்கும் இடையில் உள்ள பாம்பன் கால்வாயால் கடந்தனர். பெரிய துறைமுகம் எனப்பொருள் தரும் மாதோட்டம் என்ற மாந்தையிலும் பாம்பன் கால்வாயின் பெருநிலப்பகுதியில் உள்ள அழகன் குளத்திலும் அறியப்பட்ட தொல்லியற் தடங்கள், அவை பல நூற்றாண்டுகளாக பல நாட்டினரும் வந்துபோன பெரும் நகரங்களாக விளங்கின என்பதைத் தெரியப்படுத்துகின்றன.
ஏறத்தாழ ஒல்லாந்தர்காலப் பிற்பகுதியில் மாந்தைக் கால்வாய் சேறடைந்து போக, பாம்பன் கால்வாய் மட்டும் தொடர்ந்து இயங்கியது. தமிழ்நாட்டுப் பாரம்பரிய வணிகர்களான செட்டியர்களின் தாயகம் எனப்படும் செட்டிநாடு, பாம்பன் கால்வாய்க்கு வடக்கிலும் மற்றொரு பாரம்பரிய வணிகர்களான முஸ்லீம்களின் பழைமை முக்கியத்துவம் வாய்ந்த நகரமான கீழக்கரை, பாம்பன் கால்வாய்க்குத் தெற்கிலும் அமைந்திருப்பது தற்செயலானவையன்று.
1860 இல் நீராவிக் கப்பல்கள் ஓடத் தொடங்கின. 1869 இல் சுயெஸ் கால்வாய் திறக்கப்பட்டது. கொழும்புத் துறைமுகமும் இலங்கையைச் சுற்றி செல்லும் கடற்பாதையும் தனி முக்கியத்துவம் பெற்றன. பாக்குநீரிணைப்பாதை அறவே கைவிடப்பட்டது. துறைமுகங்கள் செல்வாக்கிழந்தன. வணிகப்பெரு மக்கள் வேறிடங்களுக்குச் சென்றுவிட்டனர்.
மன்னார் வளைகுடா – பாக்குநீரிணையை மீண்டும் பன்நாட்டுக் கடற்பாதையாக்கும் சேதுசமுத்திரத்திட்டம் நூறாண்டுகளுக்கு மேலாகப் பேசப்பட்டு வருவதொன்று. சேதுசமுத்திரத் திட்டம் வந்தால், கொழும்பின் இழப்பைச் சரி செய்யவும் தூத்துக்குடியுடன் போட்டியிடவும் காங்கேசன்துறையை விரிவாக்கவென்று, அறுபதுகளின் பிற்பகுதியில், டட்லிசேனநாயக்கா வந்து காங்கேசன்துறை மருத்துவமனைப் பகுதியில் அத்திவாரமிட்டதைப் பார்த்து நினைவுக்கு வருகிறது. அத்திவாரக்கல் இப்பவும் இருக்கலாம்.
இப்பொழுது சேதுசமுத்திரத் திட்டம் மீண்டும் முனைப்பாகப் பேசப்படுகிறது. இந்தியா மட்டும், தன்னுடைய கடற்பகுதியில் செய்யப்போவதாக , பல்வேறு அபிவிருத்திக் காரணங்கள் சொல்லப்பட்டாலும் பாதுகாப்பு என்பதே முனைப்பான காரணம் என்பதில் ஐயமில்லை. இதில், தனக்குப் பங்கு என்ன என்பது இலங்கை அரசின் கவலை. இருவருக்கும் பொதுவான பாதையாக இருக்கலாம் என்றும் இலங்கை அரசின் நிலப்பாலத்திட்டத்தை இதனுடன் இணைக்கலாம் என்றும் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல பன்நாட்டு நிறுவனங்களும் பங்கு கொள்ளக் காத்திருக்கின்றன. டெல்லியிலும் சென்னையிலும் கொழும்பிலும் இதைத் தீர்மானித்துவிடலாம் என்ற போக்கும் தெரிகின்றது.
எது எவ்வாறாயினும் சேதுசமுத்திரத் திட்டத்தால் வரப்போகும் கால்வாய் எங்கள் தீவகத்தின் புழைக்கடைய+டாகத்தான் போகப் போகின்றது. பாக்கு நீரிணையின் பாரம்பரியப் பங்காளிகள், அதன் இருபுறமும் வாழும் மக்கள், பாக்குநீரிணை இவர்களது பொருளாதார உரிமை மட்டுமல்ல, பண்பாட்டு உரிமையும் கூட, திட்டத்தில் இவர்களுக்குப் பங்கு என்ன என்பது தெளிவாகவில்லை. பாதிப்பு என்ன என்பதும் தெளிவாகவில்லை. சூழல், பொருளாதார, பண்பாட்டு விளைவுகள் மிகக் கவனமாக ஆராயப்பட வேண்டியவை. எங்களுக்கு இன்று அவசியம் தேவைப்படுவது இத்திட்டத்தின் விளைவுகள் பற்றி விழிப்புணர்வு.
நன்றி: எரிமலை, ஜனவரி 2006