தமிழகத்தில் 100 க்கும் மேலான இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடத்தப்பட்டு உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நிலத்தின், அதன் மக்களின் தொடக்க கால வரலாற்றையும் பண்பாட்டையும் குறித்த ஒளிவெள்ளத்தை பாய்ச்சி உள்ளது. இந்த அகழாய்வுத் தளங்கள் பழங்கற்காலத்தில் தொடங்கி அப்படியே இறங்கி தொடக்க இடைக்காலம் வரையான பண்பாட்டு நிரலை வெளிப்படுத்தி உள்ளன. இந்த தளங்கள் மலை அடிவாரம், ஆற்றுக் கரைகள், கடற்கரை ஆகிய பகுதிகளுக்கு அண்மையில் இடம் கொண்டுள்ளன. இருந்தபோதிலும், மிகச் சில வரலாற்று - முந்து காலத் தளங்களே அகழாய்வு செய்யப்பட்டு உள்ளன. எஞ்சிய தளங்கள் இரும்புக் காலம், தொடக்க வரலாற்றுக் காலம் ஆகியவற்றை சார்ந்தவை ஆகும். சிறப்பாக, ஆற்றுப் படுக்கைகள், கடற்கரைகள் என எங்கெல்லாம் தோண்டுகிறோமோ அங்கு நமக்கு இரும்புக் காலப் பண்பாடும் மட்கலமுமே காட்சிப்படுகின்றன.
இத் தளங்களைக் காலக்கணக்கிடுவது (dating) இன்னமும் முடிவாகவில்லை ஏனென்றால் இந்த ஆகழாய்வில் இருந்து எந்த புலப்பாட்டுச் சான்றும் கிட்டவில்லை. இருந்தபோதிலும், ஒரு சில தளங்கள் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு காட்டி உள்ளன. அவை தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்து ஆதிச்சநல்லூர் சான்றளிப்பது போல் 1,600 BCE க்கும் முற்பட்டதாக இல்லை என முடிவு கட்டி உள்ளன. அகழாய்வு செய்யப்பட்ட இரும்புக் காலத் தளங்களிலேயே ஆதிச்சநல்லூர் ஆகழாய்வுகள் சிறப்பு கவனத்தைப் பெறத் தக்கனவாக உள்ளன. அதுவே தமிழகத்தில் அண்மைக் காலம் வரையில் அகழாய்ந்த தளங்களிலேயே மிகப் பழமையானது. அண்மைக் கால அகழாய்வின் முடிவு, தமிழ் நாட்டில் தமிழ் நாகரிகத்தின் பழமை, வளர்ச்சி ஆகியவற்றின் மீது ஒரு மீவலிய விளைவை பெற்றிருந்தது.
தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களின் சுற்றுப் பகுதிகள் கற்கால ஊழியில் தொல்பழமையான இடத்தைப் பெற்றிருந்தன. சிறப்பாக, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகியவற்றின் சுற்றுப் பகுதிகள் நுண்கற்காலத்து மாந்தர் வாழிடங்களின் சான்றெச்சங்களைக் (vestiges) கொண்டுள்ளன. அங்கு நுண்கல் வகை சார்ந்த கற்கருவிகளை உள்ளிணைத்த மணற்குன்றுகள் உள்ளன. அக் கற்கருவிகள் செம்பட்டைக் கல் (Jasper), படிமக்கல் (agate), சூதுபவழம் (Carnellian), படிகக்கல் (crystal) மற்றும் கல்மம் (quartz) ஆகிய குறைமணிக் (Semi precious) கற்களால் ஆனவை. இவ்வகை கற்கருவிகள் இப்பகுதியில் மட்டுமே காணப்படுகின்றன. அவை சற்றொப்ப 12,000 முதல் 10,000 B.C.E. காலத்தன எனக் காலக்கணக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுவே நம் முந்து - வரலாற்று மூதாதைகள், சிறப்பாக, திராவிடர்கள் பிந்து அரப்பா நாகரிகக் கால பண்பாட்டுடன் ஒப்பிடத்தக்க பண்பாட்டுத் தனிகூறுகளைக் கொண்டிருந்த இடம். அரப்பா நாகரிகப் பண்பாட்டின் வீழ்ச்சி தமிழ் நிலத்தின் தென்கோடியில் அமைந்த ஆதிச்சநல்லூரின் திராவிட நாகரிகப் பண்பாட்டின் எழுச்சியோடு ஒன்றிப்பதாகத் (coincide) தோன்றுகின்றது.
இங்ஙனமாக, ஆதிச்சநல்லூர் தமிழ் நிலத்துத் தொடக்க வரலாற்று வரைபடத்தில் முந்து தலைமை நிலையைப் பெறுகின்றது. அண்மையில் ஆதிச்சநல்லூரில் 2004 - ஆம் ஆண்டு மற்றும் அதைத் தொடர்ந்தும் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழாய்வுகள் செய்திப் பத்திகளில் இடம் கொண்டன, அதோடு அரசின் கவனத்தையும் பொது மக்களின் கவனத்தையும் ஈர்த்தன. தொல்லியல் ஆராய்ச்சிகளைப் பொறுத்தமட்டில் ஆதிச்சநல்லூர் ஒரு தொடரல்லாத தடைநிலை (checkered) வரலாறு உடையது.
இனி, ஆதிச்சநல்லூர்த் தொல்லியல் அகழாய்வு வரலாற்றையும் அவற்றின் வரலாற்று முதன்மையையும் ஆய்வோம். ஆதிச்சநல்லூர் தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து 24 அயிர் மாத்திரி (கிலோ மீட்டர்) தொலைவில் தென்கிழக்கு திசையில் இடம் கொண்டுள்ளது. இவ்வூர் திருநெல்வேலி - திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் இடம் கொண்டுள்ளது. இத்தளம் அதற்கும் மேல் இதன் மேற்குப்புறத்தில் அமைந்த தாமிரபரணி ஆற்றுக் கரையில் இடம் கொண்டுள்ளது. இங்கு பேர் எண்ணிக்கையிலான புதைகலன்கள் (முதுமக்கள் தாழிகள்) கண்டறியப்பட்டன. அங்கு முற்காலத்தே வாழ்ந்த மக்களுடையது எனும் பொருளில் இதனைத் தாழிக்காடு என்கின்றனர்.
தொல்லியல் அகழாய்வுகள் இந்தப் புதை தளத்தில் 1876, 1899, 1903, 1904 மற்றும் 1906 ஆகிய ஆண்டுகளில் நிகழ்த்தப்பட்டு உள்ளன. பின்னர் 1914 ஆம் ஆண்டில் அயல்நாட்டவர் இங்கு தொல்லியல் அகழாய்வுகளை நிகழ்த்தினர். அண்மைக் காலத்தில், இந்தியத் தொல்லியல் அளவீட்டுத் (ASI) துறை இத்தளத்தில் 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் அகழாய்வுகளை நடத்தியது.
1914 ஆம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட அகழாய்வுகள் 9,000 க்கு அதிகமான தொல்பொருள்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தன. அவற்றுள் தாழியிற் புதைத்தல் தொடர்பான மட்கலன்கள், பொன்னாலான பொருள்கள், செம்பு வடிவங்கள், முருகப் பெருமானின் மூன்று முனை வேல், தாய்த் தெய்வத்தின் மட்கல வடிவங்கள், தொங்கும் விளக்குகள், முதலாயவை அடங்கும். இங்கத்து மட்கலத் தொழிலில் கருப்புநிற மட்கலன், சிவப்புநிற மட்கலன், தென்னிந்திய இரும்புக் கால நாகரிகத்தின் தனிக்கூறான கருப்பு - சிவப்பு நிற மட்கலன் ஆகிய வகைகள் அடங்கும்.
அண்மைய (2004 மற்றும் 2005) அகழாய்வுகள் 150 க்கும் மேற்பட்ட புதைத்தல் கலன்களையும், கருப்பு - சிவப்பு நிற மற்றும் கருப்புநிற மட்கலன்களையும், செப்பு வளையல்கள், செம்புக் கோடாரிகள், இரும்பு வேல்கள் இவை தவிர, புதியகற்கால கற்கருவிகள் ஆகியனவற்றையும் மேற்பரப்பிற்கு கொண்டு வந்தன. சிறு அளவு நெல் உமியும், அரிசியும் தவசங்களும் அகழாய்வில் கண்டறியப்பட்டன. இங்கு கிடைத்த பானைஓடுகள் எழிலூட்டும் வேலைப்பாடுகளையும், கீரல்குறிகளையும் இவை தவிர, மூல தமிழ் எழுத்துகளையும் பெற்றிருந்தன.
பேரெண்ணிக்கையில் வெண்கலத்தால் ஆன பொருள்களும் புலி, எருமை, வெள்ளாடு, மான், சேவல் முதலாயவற்றை ஒத்த வடிவுகளும் முந்தைய அகழாய்வில் கண்டறியப்பட்டன. மேற்சொன்ன பழம்பொருள், செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் தமிழ்நாட்டில் புதியகற்கால நாகரிகத்தைப் பின்தொடர்ந்து வெண்கல மற்றும் செம்பு ஊழிகள் (ages) நிலைப்பட்டிருந்ததைச் சுட்டுகின்றது.
இத்தளத்தின் கரியம் 14 (C 14) காலக்கணக்கீடு, அகழாய்வாளர் திரு. தியாக. சத்தியமூர்த்தியால் 1570 BCE என பதிவு செய்யப்பட்டு உள்ளது. இத்தளமே காலத்தால் பழமையானது அதோடு, புதியகற்காலம், நுண்கற்காலம், இரும்புக் காலம், செம்பு - வெண்கலக் காலம் தவிர, இரும்புக் கால நாகரிகங்களின் சான்றெச்சங்களையும் உடையதாக நாம் அறியும் தளமும் இது ஒன்றே ஆகும். அதைமுன்னிட்டு, ஆதிச்சநல்லூர் மக்கள் எல்லா மாழைகளையும் (Metals) பயன்கொண்டனர், அவற்றின் பயன்பாட்டையும் அறிந்து இருந்தனர். இங்கு திரட்டிய மாழைப் (Metal) பொருள்கள், ஆதிச்சநல்லூர் விறுவிறுப்பான உள்நாட்டு வணிக நடுவமாகவும், நகரமாகவும் திகழ்ந்தது என்பதைச் சுட்டுகின்றன.
இத்தளத்தில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மட்கலத் தாழிகள், ஆதிச்சநல்லூர் மக்கள் நிரம்பிய நகரமாகவும், நாடறிந்த நகரமாகவும் செழிப்புற்று விளங்கியது என்ற உண்மையைப் புள்ளியிட்டு குறிப்பிடுகின்றது. கருப்பு - சிவப்புநிற மட்கலன்களுடன் கூடிய பழந் தமிழ் எழுத்துப் பொறிப்போடு உள்ள பானைஓடுகள் பிந்து அரப்பா நாகரிகமும் தமிழ் நாகரிகமும் ஒருமைப் பண்பு உடையன என்பதைச் சுட்டுகின்றன. இவற்றில் பிந்து அரப்பா தளங்களில் காணப்படும் கீரல்குறிகளை அதிகம் ஒத்த கீரல்குறிகளைக் கொண்ட பானைஓடுகளும் உள்ளன.
ஆதலால், ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் நடு இந்தியாவில் காணப்படுவது போன்றே புதிய கற்காலத்தைப் பின்தொடர்ந்து வெண்கல - செம்புக் காலம் நிலைப்பட்டிருந்ததை வெளிப்படுத்தி உள்ளன. இந்த அகழாய்வுகள் தமிழ் நாகரிகமும் பிந்து அரப்பா நாகரிகமும் ஒன்றற்கு ஒன்று தொடர்புடையன என்பதை நிறுவி உள்ளன.
இந்திய நாகரிகத்தின் தொடக்கம் குறித்து சூழ்ந்துள்ள புதிர்மறைவுச் செய்தியின் மடிப்பை அவிழ்க்க இத் தளத்தில் மேலும் அகழாய்வுகள் நிகழ்த்தப்பட வேண்டும். இஃது அரப்பா மற்றும் தமிழ் நாகரிகத்தை இணைக்க, அதற்கான கால்வாய்களைத் திறந்துவிட்டுள்ளது.
இச்செய்திகளைத் தொகுத்து வழங்கியவர் பேராசிரியர் முனைவர் சா. குருமூர்த்தி, பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை, சென்னைப் பல்கலைக் கழகம் (ஓய்வு). தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழக வெளியீடான 'அருங்கலைச் சொல் அகரமுதலி' உதவியுடன் இதைத் தமிழாக்கி தட்டச்சு செய்தவர் சேசாத்திரி
பார்வை நூல்; கல்வெட்டு இதழ், ஏப்ரல் 2009.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.