வ.ந.கிரிதரனின் 'மண்ணின் குரல்' நூலுக்கான எழுத்தாளர் செ.கணேசலிங்கனின் 'அறிமுகம்'.
திரு.கிரிதரன் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக ஈழத்து சஞ்சிகைகள், பத்திரிகைகளில் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எழுதி நன்கு அறிமுகமானவர். பின்னர் புலம்பெயர்ந்து கனடா சென்று தமது படைப்பாற்றலை அங்கும் தொடர்ந்து ஈழத்திலும் வெளிப்படுத்தி வந்துள்ளார். அத்துடன் நின்றுவிடவில்லை. தொடர்ந்து தமிழ் நாட்டிலும் தமிழர் தொழில்முறையாகவும் புலம்பெயர்ந்தும் வாழும் உலக நாடுகளிலெல்லாம் அறிமுகமானார். ஆயினும் நான்கு குறுநாவல்கள் அடங்கிய இத்தொகுதியே அன்னாரின் படைப்பாற்றலையும் எழுத்து வன்மையையும் எளிதில் அளவிடக் கூடியதாக அமைந்துள்ளது எனக்கூறலாம்.
அவரது எழுத்துகளில் இயற்கையின் ஈடுபாட்டையும் வர்ணனயையும் பரந்து காணலாம். கவிஞர்களால் என்றும் இயற்கையின் அழகையையும் எழிலையும் மறந்துவிட முடியாது என்றே தோன்றுகின்றது. 'வன்னி மண்', வெறும் காடுகளின், பறவைகளின் வர்ணனை மட்டுமல்ல. அந்த மண்மேல் , ஈழத்து மண்மேல் அவர் கொண்ட பற்றையும் கூறும். 'வன்னி மண்' நாவலில் மட்டும் இப்போக்கு என்று கூறுவதற்கில்லை. மற்றைய மூன்று நாவல்களிலும் கூட அவரது கவித்துவப் பார்வையைக் காணலாம்.
அடுத்தது, மனிதாபிமானமும், செய்நன்றி உணர்வும். தவறு நடந்தபோதும் அவரது கதை மாந்தர்களின் பச்சாதாப உணர்வு முதன்மை பெ௳ற்று நிற்பதையும் நான்கு கதைகளிலும் பார்க்கலாம். 'வன்னி மண்' சுமணதாஸ பாஸ், 'அர்ச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலி\லும் வரும் சிறுவன், டீச்சர், 'கணங்களும் குணங்கலில் வரும் கருணாகரன், 'மண்ணின் குர'லில் வரும் கமலா யாவரிலும் தரிசிக்கலாம்.
யுத்த வேளையில் சட்ட விதிகள் , ஒழுங்குகள் செத்து விடுகின்றன என்பர். அங்கு நடைபெறுவது கொலைத்தொழில். மனித இனத்தின் மிக இழிந்த ஈனத்தொழில். அங்கு மனிதாபிமானம், நீதி, நேர்மை, நாணயம் எல்லாம் மறைந்து விடுகின்றன. இதுவே உண்மை நிலை. பகவத்கீதை யுத்தகள நீதியைப் புகட்டும் சமய நூல். நீதி நூல். 'கடமையைச் செய். பலனை எதிர்பாராதே' என்று கூறுவதாகக் கொள்வர். கடமை என்பது யுத்தக் களத்து கொலை, கட்டளையிடப்படுகிறது. பலன் வென்றவருக்கா? இறந்தவருக்கா? யுத்த வேளையிலும் சமூக வாழ்விலும் நடைபெறும் தவறுகள் மனித மனச்சாட்சியை உறுத்தவே செய்யும். அதுவும் எழுத்தாளரின் விழிப்பு நிலையை எழச்செய்துவிடுகிறது. தவ௳று நடந்தது கண் முன்னே நண்பர்கள், பழகியவர்கள் என்றால் மனச்சாட்சியைத் தொடர்ந்து குத்தவே செய்யும். குற்ற உணர்வு, நீதி விசாரணை தேடலை நோக்கி புற்றெழுப்பவே செய்யும். கிரிதரனின் நாவல்கள் யாவிலும் இத்தேடல் ஊடுருவி நிற்கிறது. நீதியைத் தேடுவதற்கு இதை ஒரு உத்தியாகவே கிரிதரன் கொண்டார் போலும். அதுவே அவரின் நாவல்கலில் இழையோடி நிற்கும் தனிச்சிறப்பாகவும் உள்ளது. டெஸ்காவ்ஸ்கியின் சில நாவல்கள் குற்ற உணர்வின் குறுகுறுப்பாகவே உள்ளதே உலக விமர்சகரின் மதிப்புப் பெற்றன.