யுவான் வாங் (Yuwan Wang-5) சீனக்கப்பலின் இலங்கை வருகை , பிராந்திய மற்றும் பூகோள அரசியற் பின்னணி பற்றியதோர் அவதானிப்பு! (3 & 4) - ஜோதிகுமார் -
3
அதாவது சர்வதேச நெருக்கடிகள், தனது உச்சத்தை தொட்டு, இழுப்பறி நிலைமைகள், யுத்த மேகங்களை உருவாக்கி வருகையில் இந்தியா போன்ற நாடுகளின், நடு நிலைமைத் தன்மை(?) பொருத்துக் கொள்ள முடியாததாகின்றது.
அதாவது, இலங்கையின் இராஜதந்திரத்தில், இலங்கைத் தமிழர் கேள்வியை, இந்தியாவிலிருந்து எப்படி கத்தரித்து விடுவது அல்லது எப்படி அந்நியப்படுத்தி விடுவது என்பது முதன்மை நடைமுறையாக இருப்பதை போலவே, ஒரு, ரஷ்ய-சீன கூட்டில் இருந்து இந்தியாவை விலகிச்செல்ல செய்வதும், அதனை தனது செல்வாக்கின் எல்லைகளுக்குள் கொணர்ந்து நிறுத்துவதுமே அமெரிக்காவின் ஆசியாவுக்;கான அடிப்படை இராஜதந்திரமுமாகின்றது. இச்சூழலிலேயே, யுவான்வாங்-5 கப்பலின் வருகை என்பது, இவ்ராஜதந்திரத்தின், பல்வேறு தோற்றப்பாடுகளை உள்ளடக்கியதாக இருந்தது.
இக்கப்பல் வந்துசேர்ந்த ஓரிரு தினங்களின் முன்னரே இந்தியாவின், ட்ரோனியர் விமானம் இலங்கைக்கு வந்து சேர்ந்து விட்டது. இது இலங்கைக்கு வழங்கப்பட்ட பரிசா அல்லது பரிசு வடிவில் அமைந்துள்ள ட்ரோஜோன் குதிரையா என்பதெல்லாம் ஏற்கவே ஆய்வாளர்களால் சின்னாப்பின்னப்படுத்தப்பட்டு வாதிக்கப்பட்டுள்ளது. போதாதற்கு, கப்பலின் வருகையைத் தொடர்ந்து, இராமேஸ்வர கண்காணிப்பும் பயிற்சியும் தீவிரப்படுத்தப்பட்டது. (இது, இந்திய சிந்தனைகளையும் அதிருப்தியையும் அறிவிக்கும் ஒரு தோற்றப்பாடு என கூறப்படுகின்றது). ஆனால், இவையணைத்தும், ஓர் தோற்றப்பாடே ஆகும். உண்மையான அரசியல், ஆழமானது. மிக நுணுக்கமாக பயணிப்பதாய் இருந்தது.
கப்பலின் வருகையானது, இந்தியாவால் எதிர்க்கப்பட்டது என்பதும் அதனைத் தொடர்ந்து இலங்கை, கப்பலை தனது துறைமுகத்தில் தரிக்க மறுப்பு தெரிவித்தது என்றும், ஆனால் அம்மறுப்பை மீறி சீன கப்பலானது இலங்கையை நோக்கி பலவந்தமாக தன் பயணத்தை தொடர்ந்தது எனவும் பரவலாக கதை அடிப்படலாயிற்று.