I
சென்ற கட்டுரை தொடர் எதிர்பார்த்த வாதப்பிரதிவாதங்களைப் பரந்தளவில் கிளப்பவே செய்திருந்தது. புலம்பெயர் அரசியலின் தன்மை-தாக்கம், இவை பொறுத்த பல்வேறு எண்ணப்பாடுகள் கட்டுரைத் தொடரில் பரவலாக முன்வைக்கப்பட்டிருந்தன. இவற்றில் ஒன்று முழங்காலையும், மொட்டைத் தலையையும் தொடர்புபடுத்த இக்கட்டுரை தொடர் முயற்சிக்கின்றதா என்று அழுத்தமான முறையில் தன் கேள்வியை உள்ளடக்கத் தவறவில்லை. அதாவது, ஹைலன்ஸில் மேற்கொள்ளப்பட்ட சிதைவுகளுக்கும், வடமாகாண சபையினது செயல்திறனின்மையால் எழுந்த சூனியமாக்கல் நிகழ்வுகளுக்கும் இடையே இருக்கக்கூடிய தொடர்புகளையும் இதன் பின்னணியில் இருந்து இயக்கியிருக்க கூடிய எந்தவொரு புலம்பெயர் அரசியலின் தீவிர முகத்தையும் பொறுத்தே இக்கேள்விகள் முன்வைக்கப்பட்டிருந்தன. காரணம் சென்ற கட்டுரை தொடர் மேற்குறித் த கேள்விகளையும் அதற்குரிய காரணங்களையும் ஆராய முற்பட்டதே அன்னாரின் கட்டுக்கடங்கா கோபத்துக்கு காரணமாக அமைந்து போனதாய் இருக்கக்கூடும்.
ஆனால் கேள்விகளை திராணியுடன் கேட்டுக்கொள்ள தெரிந்திராத எந்த ஒரு சமூகமும் நாளடைவில் இடிந்து குட்டி சுவராகப் போய்விடும் என்பது ஏற்கனவே நாம் பார்த்த ஒன்றுதான். இந்தப் பின்னணியிலேயே எழுப்பப்பட்ட கேள்விகள் பொறுத்து கனதியான எதிர் தர்க்கங்களை முன் வையாது, வெறுமனே இது முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சு போடப்படும் முயற்சி என அவசரமாய் ஆரூடம் சொல்லும் போக்கும் இடம்பெற்றிருக்கின்றது. ஆனாலும் முழங்காலுக்கும் மொட்டைதலைக்கும் முடிச்சு போடும் நிகழ்வென்பது வரலாற்றில் சற்று ஆழமாக பார்க்கத்தக்கதுதான்.
ஏனெனில் கால ஓட்டத்தில், அநேக விடயங்கள், இப்படித்தான், சம்பந்தா-சம்பந்தமற்று, தொடர்புகளற்று, வெறும் முழங்கால்களும் மொட்டைதலைகளுமாய் காட்சியளிப்பதாய்த் தெரிகின்றன. உதாரணமாக, இரசாயனவியல் உலகை எடுத்துக்கொண்டால், நீரின் உருவாக்கத்தில் ஐதரசனும், ஒட்சிசனும் தேவைப்படுவது போலவே இச்செயன்முறையின் விளைபொருளாக, நீருடன் நெருப்பும் உருவாகி விடுவது ஒரு வகையில் முழங்காலுக்கும் மொட்டைதலைகளுக்கும் முடிச்சசுப் போடும் விடயம்தான். ஏனெனில், ஒரு புறம் நீரின் உருவாக்கம். மறுபுறம் நெருப்பின் உருவாக்கம். அதாவது இரண்டு நேரெதிர் பொருள்களின் பிறப்பு ஒன்றாகவே இங்கு நிகழ்ந்தேறுவதுதான் இங்கே சிக்கலைத் தோற்றுவிக்கின்றது. ஆனால், இராசயனவியலில் ஏற்படும் இவ்வுண்மைகள், அதாவது, இப்படியான எதிர்மறை நிகழ்வுகள், தத்துவ அறிஞர்களால் கையேந்தப்பட்டு, உதாரணங்களாக, அவை வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்ட கூடிய, உதாரண நிகழ்வுகளாக முன்னிறுத்தப்படுகின்றன. அதாவது, ஒரு சாதாரண மனித அறிவுக்கு பூரண தொடர்பற்ற விடயங்களைக் காட்சி தரும் இவ்விடயங்களின் பின் மறைந்திருந்து ஒன்றாக ஜீவிதம் நடத்தும் சக்திகளை வெளிப்படுத்த மேற்படி உதாரணங்கள் இத்தத்துவவாதிகளுக்கு தேவைப்படும் ஒன்றாகவே இருந்திருக்கின்றது.
இவ்வகையில், இதே போன்று, தொடர்பற்றதாய்க் காட்சியளிக்க கூடிய நிகழ்வுகள் அல்லது ஒன்றின் பின் ஒன்றால் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நிகழ்வுகள் திட்டமிட்ட ஒரு ரீதியில் ஊக்குவிக்கப்படலும் திட்டமிட்ட ரீதியில் செயலூக்கம் கொண்டு இயங்க வைக்க முற்படுதலும் நாளாந்தமாக நாம் காணக்கிட்டும் ஒரு நிகழ்ச்சி நிரல்தான். முக்கியமாக, போர்க்காலங்களில் அல்லது அரசியல் தொடர்பான விவகாரங்களில். உதாரணமாக மக்கள் ஓரிடத்தில் குவிக்கப்படல் வேண்டும் என்றால் (அழித்தொழிப்பதற்காக) அதற்கேற்ற முறையில் அவர்களுக்கு, நம்பும் வகையிலான பொய்களை- பொய்மைகளை புனைவுகளை ஏற்படுத்தி, அவர்கள் முன் வைத்தாக வேண்டும்- அவர்கள் அப்படி ஈர்க்கப்பட்டு, வந்து குவியும் பொருட்டு. இந்நடைமுறையானது அரசியலில் சாணக்கியம் என்றும் போர்க்காலங்களில் யுத்த தந்திரம் என்றும் போற்றி வரப்படுகின்றது.
மொத்தத்தில் முழுதாய் சம்பந்தமே அற்ற இரு விடயங்களின் அரங்கேற்றலானது எந்த அளவுக்கு நேரடித் தொடர்பற்று இருக்கின்றதோ, அந்தளவுக்கு ஏமாற்றும் வீகிதாசாரம் அதி உயரிய மட்டத்தில் அரசியல் சாணக்கியம் கொண்டதாகத் தன் உச்சத்தை எட்டி காட்சி தரும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால் முழங்காலையும் மொட்டைதலையையும் காட்சிப்படுத்தும் ஒரு பின்னணியில், குறித்த அரசியல் திட்டமானது நிறைவேற்றப்படுமென்றால் அல்லது ஊக்குவிக்கப்படும் என்றால் அதுவே தேவைப்படும் ஒரு நடைமுறையாகிறது.
சென்ற கட்டுரை தொடரானது காட்சி மட்டத்தில் இவ்விதமாய், இருந்த இரு ஒவ்வாத விடயங்களை இணைத்து வாதிக்க முன் வந்திருந்ததும் தற்செயலான ஒரு நடைமுறையல்;ல. உண்மையில் இது, இன்று நடந்தேறும் பல்வேறு விடயங்களில் வெளிப்படையாகவும் உள்ளடங்கியதாகவும் உள்ளது என்பது அவதானிக்க தக்க உண்மையாகும். இருந்தும் இதற்கு ஏற்றாற் போல் இன்று அரங்கேற்றப்படும் நடைமுறைகள் இம்முரணற்ற விடயங்களை தொடர்பாடல்களை மேலும் உறுதி செய்ய விளைவது போலக் காட்சி தருகின்றன.
II
சென்ற கட்டுரை தொடர் பின்வருமாறு கூறியிருந்தது:
“மலையக மக்களை இங்கிலாந்தே .. தேயிலை, இறப்பர் தோட்டங்களில் இருத்தி வைத்திருந்தது… இவர்களின் வாக்குரிமை பறிப்பிலும், நாடற்றவராய் இவர்களை நாறடித்த நிகழ்விலும் ஆங்கிலேயரின் மறைகரம் நின்று செயல்படவே செய்தது என்பதனை எஸ். நடேசன் போன்ற வரலாற்று ஆய்வாளர்கள் ஏற்கனவே பதிந்துள்ளனர்”
“இருந்தும் இவ்வுண்மைகளை மறைத்து இன்று ஒருதலைபட்சமாக சிறிமா-சாஸ்த்திரி நாடு கடத்தும் ஒப்பந்தத்துடன் மாத்திரம் எம்மக்களின் வரலாற்றை எல்லைப்படுத்தும் நிகழ்ச்சி நிரலும் அதனை தனித்து தூக்கிப்பிடிக்கும் அரசியலும் இடம்பெறவே செய்கிறது… இத்தகைய அரசியலில் புலம்பெயர் அரசியலின் தீவிர முகம் தலைக்காட்ட செய்கின்றதா என ஆய்வதும் சுவாரஸ்யமானதே”
மிக அண்மையில் அருட்தந்தை.மா.சக்திவேல் பின்வருமாறு ஒரு பிரகடனத்தை செய்கிருந்தார்:
“மலையக தமிழர் 1948க்கு முன்பிருந்து பல்வேறு வகையான இன அழிப்பினை சந்தித்து வருகின்றனர். 1964ம் ஆண்டு செய்துக்கொள்ளப்பட்ட சிறிமா-சாஸ்த்திரி ஒப்பந்தமும் இன அழிப்பே. இந்திய அரசின் உதவித்திட்டங்கள், அனுகூலங்கள் அதற்கு தீர்வாக அமையாது” (8.8.2023: தமிழ்வின்)
அதாவது, எஸ். நடேசன் முன்வைக்கக்கூடிய அரசியலுக்கு அல்லது அவர் கடுமையாக விமர்சித்திருக்கக்கூடிய அரசியல் பார்வைக்கு கிட்டத்தட்ட நேரெதிரான அரசியலை நாம் மேற்படி கூற்றில் காணக்கூடியதாய் உள்ளது.
சுருக்கமாக கூறினால் இக்கொடுமைகளுக்கு மூலக்காரணமாக அமையும் இங்கிலாந்தின், அல்லது சர்வதேச அரசியலின் நேரடியான அல்லது மறைமுக பங்கேற்பு முற்றிலும் மறைத்து புதைக்கப்படுகின்றது. இரண்டாவதாய், ஒருதலைபட்சமான இந்திய எதிர்ப்புவாதம் ஒரு வகையில் மறைமுகமாய் ஆனால் அழுத்தமாய் இங்கே அரங்கேறுகின்றது.
மேற்படி இரு அம்சங்களையுமே எஸ். நடேசன் அவர்கள் தனது நிலைப்பாட்டில் முற்றாக நிராகரித்திருந்தார். இருந்தும் இவ்வரசியலானது இன்று முளை கொண்டு வலுவுடன் பயணிக்க செய்கின்றது என்பதும, இவ்வரசியலின் பின்னணியை இன்று ஊக்குவிக்கும் மறைக்கரங்கள் யாவை-எவையாக இருக்கின்றன என்பதும் எம்மிடை சம்பந்தப்பட்ட கேள்விகளாகின்றன. இத்தகைய கேள்விகள் ஒருபுறமிருக்க “இந்திய அரசியல் உதவித்திட்டங்கள் சலுகைகள் அதற்கு தீர்வாக அமையாது” என்று அழுத்தம் திருத்தமாய் மொழிய முன்வரும் அருட்தந்தை சக்திவேல் அவர்கள் “எதுதான் தீர்வு” என்று தன் பங்குக்கு எடுத்துரைப்பதிலும், மௌனமே சாதிக்கின்றார் என்பதும் குறித்துக்காட்டத்தக்கதாகின்றது. இருந்தும், 28.07.2023 இல் ஆரம்பமான மன்னார் நடைபவனி தனது இரண்டாம் கட்டத்தை மாத்தளையில் நிறைவு செய்த போது, மாத்தளையிலிருந்து பவனியானது நுவரெலியா வரை தனது இரண்டாவது கட்டத்தை ஆரம்பித்தது. அப்போது திரு.மனோகணேசன் அவர்கள் இப்பேரணியின் குறிக்கோள்கள் தொடர்பில் பின்வருமாறு அறிவித்தார்:
“மலையக மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்தியும், இந்திய வம்சாவளி மக்களும் இலங்கையர்களே என்ற அடையாளத்தை கோரியும் விசேட பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” (வீரகேசரி: 10.08.2023)
அதாவது, “இந்திய வம்சாவளி மக்கள் இலங்கையர்களே” என்ற அடையாளத்தை இவர்கோரியிருப்பது மிக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது. மலையக மக்களை இலங்கையர் என அழைக்கப்படுதல் வேண்டும் அல்லது மலையக மக்கள் என அழைக்கப்படுதல் வேண்டும் இல்லை இந்திய வம்சாவளித் தமிழர் என அழைக்கப்படுதல் வேண்டும் என்ற வாதப்பிரதிவாதங்கள் நீண்ட நெடுங்காலமாகவே மலையகத்தமிழர் அரசியலில் நிலவி வரும் ஒரு காட்சியாகத்தான் இருக்கின்றது.
இருந்தும், ஒன்றை முற்றாக நிராகரித்தும், ஒன்றை பெரிதாக தூக்கிப்பிடிக்கவும் துடிக்கும் மேற்படி நிகழ்ச்சி நிரல்களுக்கு குறித்த ஓர் அரசியல் பின்னணி உண்டு என்பதனை நிர்ணயிக்கும் மலையக ஆய்வாளர்கள், மேற்படி கேள்வி தொடர்பில், இரு பார்வைகளை அங்கீகரிக்கும் ஓர் செயற்திட்டத்தை முன்வைத்துள்ளனர். அதாவது, நாட்டில் இன்று நிலவும் சட்டதிட்டங்களுக்கு, ஏற்ப ஆவணமயமாக்கலுக்கு தேவைப்படும் அல்லது வேண்டப்படும் வகையில் இந்திய வம்சாவளி தமிழர் என்ற பதமும், சமூகவியல் காரணங்களை பொறுத்து மலையகத் தமிழர் என்ற பதமும் தேவைப்படுவதாக இவர்கள் எடுத்து கூறியுள்ளனர். அதாவது, தமது சமூக உருவாக்கம் அல்லது தமது தேசியம் என்ற அடிப்படையில் மலையகத் தமிழர் என்ற பதமும் தேவைப்படுவதாக உள்ளது. அதாவது, பிறப்புச் சான்றிதழில் பதிவது தொடர்பிலான விவரணங்களுக்காய் அல்லது அது தொடர்பிலான சட்டம் சம்பந்தப்பட்ட விவரணங்களுக்காய் இந்திய வம்சாவளி தமிழர் என்ற பதமும் பாவித்தலில் இருக்கும் நடைமுறையானது யதார்த்தத்தில் தேவையுறும் ஒன்றாக இருக்கின்றது.
ஆனாலும், திரு.மனோகணேசன் அவர்கள் இலங்கையர் என்ற அடையாளத்தை வழங்குமாறு மாத்திரம் கோரிக்கை விடுவது என்பதானது சற்றே கரிசனைக்குரியதுதான் என்பதில் சந்தேகமில்லை. இது வெறுமனே சூதுவாதற்ற முறையில், இயல்பாக முன்வைக்கப்டும் ஓர் அரசியலா அல்லது இதற்கும் ஓர் அரசியல் பின்னணி உண்டா என்பது கேள்வியாகின்றது. ஏனெனில், அவர் சட்டம் கோரக்கூடிய அல்லது இச்சமூகம் கோரக்கூடிய விடயங்கள் பொறுத்து மௌனம் சாதிப்பதாகவே உள்ளது. இந்த மௌனங்கள் எவை எவற்றை உள்ளடக்கக்கூடும் என்பதும் கேள்வியானதே.
“இலங்கையர் என்ற அடையாளத்தை கொடுங்கள்” என இவர் கூறும் போது, இந்தியாவை இவ்விடயங்களில் இருந்து அகற்றும் ஒரு நடைமுறையையும் இவர் இங்கே கைக்கொள்கின்றாரா அல்லது அப்படியான ஒரு அரசியல் இங்கு கைக்கொள்ளப்படுகின்றதா என்பதும் கேள்விக்குரிய ஒன்றாகவே இருக்கின்றது. அதாவது, வட மாகாண சபையை வினைத்திறனற்றதாயடித்த அரசியலுக்கும், ரணிலின், இந்தியாவை அகற்றும் அரசியலுக்கும், இனி இலங்கையர் என்ற அடையாளத்தை கொடுங்கள் என்று மொட்டையாக வினவுவதற்கும் இடையிலான தொடர்பாடல்கள் யாவை இருக்கின்றனவா-என்பது போன்ற கேள்விகள் வந்தமைவதாக இருக்கின்றது.
ஏனெனில், இலங்கையர் என்ற அடையாளத்தை கோராது இருந்தும், காலங் காலமாக இலங்கையராகவே இருந்து வந்துள்ள வட- கிழக்குத் தமிழர்களின் இன்றைய நிலைமை இந்நாட்டில் எவ்விதம் இன்று உருப்பெற்று காட்சி தருகின்றது என்பதெல்லாம் கரிசனை மிக்க வினாக்களாகின்றன. இவை யாவும் தொடர்பற்ற மொட்டை தலைகளும் முழங்காலுமாய் காட்சியளித்ததாலும் கூட, இங்கே தொடர்புபடும் அரசியலானது உதாசீனப்படுத்த முடியாதது. இப்பின்னணியிலேயே, குறுந்தூர் பொங்கல் அடுப்புக்களை சப்பாத்துக்காலால் உதைத்துத் தள்ளிய அரசியலுக்கும், ஹைலன்ட்ஸ் சிதைவுகளுக்கும் இடையிலான தொடர்புகள் கவனமாக ஆயப்பட வேண்டியனவாகின்றன.
தொடரும்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.