ஒவ்வொரு மாலைப்பொழுதும்
அவன் வீட்டிலேயே என் பொழுது கழியும்..
அவனின் பாட்டி தரும் தேநீர் சுவையாக இருக்கும்.
கொடியில் காய்ந்த உடைகளை
அவனின் தங்கை
ஒரு புன்னகையுடன் எடுத்துச் செல்வதுண்டு.
நிச்சயமாய் காதல் இல்லை.
நூலக நூல்களைப் பரிமாறுவதுடனான நட்பே.
அவளும் தன் அறையிலிருந்து கேட்கட்டுமே என்று
வானொலியின் ஒலிஅளவை அதிகரித்துவைப்பான்.
ஆறு மணியானால் பாட்டி பாக்குரலில்
இடிப்பது கேட்கும்.
எட்டு மணியானால் சுருட்டின் வாசம்
அவளிடமிருந்து காற்றில் வந்து
மூக்கைத் திணறவைக்கும்.
மழை அதிகரித்திருந்தது.
வீடு வர நேரம் போய்விட்டது.
அம்மா முறைத்தாள்.
அப்பாவின் இருமல் ஒலித்தது.
மறுநாள் இராணுவம்
என்னைக் கைதுசெய்ய வந்திருந்தது.
நண்பனின் வீட்டில் கைக்குண்டுகள்
கண்டுபிடிக்கப்பட்டதாக சொன்னாரகள்.
பாடல்கள்கேட்பது மட்டுமே...
அவனுடன் எதுவும் பேசுவதில்லையே..
ஆனாலும்...
கைதுசெய்தார்கள்.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.