உன்
பட்டு மேனியைத்
தொட்டுத்தொட்டு ரசித்தேன்.
நாளும் உன் அழகை ரசித்தேன்.
நீராடி நீ வந்தால்
நீர்த்திவலைகள் உன் மேனியிலே
முத்து முத்தாய்ப் படிந்திருந்து
நர்த்தனமாடும்
அழகை ரசித்தேன்.
அதிலே
காலைக் கதிரவனும் மையல் கொண்டு
கண்சிமிட்டும் போதினிலே
நாணிச்சிவந்திருக்கும் உன் மேனியழகில்
என்னை மறந்தேன்.
மெளனமாக
உன்னை ரசித்த நாட்கள் தான்
எத்தனையெத்தனை.
காலங்கள் கடக்கையிலே
மெதுவே நீ
தடம்புரண்டு
தூரம் போகிறாயென்றுணர்ந்தேன்.
காலம் காட்டிய வாழ்வின் வடுக்கள்
உன் மேனியில் பல கதைகள் சொல்ல,
என் மன வேகத்துடன் நீ ஓட முடியாமல்
தனிமையில் என்னை விட்டுச்
சீக்கிரம் போவாயென
நான் நினைக்கவேயில்லை.
மாம்சம் இருக்குமளவும்
அதற்கு நோவுண்டு.
என் மேனியே இன்று
என்னைவிட்டு நிரந்தரமாகப்
பிரிந்தாயோ?
உன்னைப் பிரிந்துதவிக்கும்
ஆத்மா நான்.
உன்னை நானினி
எங்கு காண்பேன்?
* ஓவியம் - செயற்கை அறிவு (AI)