இலங்கையில் அமிர்தலிங்கம் அவர்கள் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த காலப்பகுதியில், அவரது உரைகளுக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் வழங்கின. இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக அப்போது ஒரு தமிழர் எதிர்க் கட்சித்தலைவராக தெரிவாகியிருந்தார். அவரது நாடாளுமன்ற உரைகளை சபாநாயகர் ஆனந்த திஸ்ஸ டீ அல்விஸின் துணைவியாரும் பார்வையாளர் கலரியில் அமர்ந்திருந்து செவிமடுத்து , அமிர் அவர்களுக்கு பாராட்டு கடிதங்களும் எழுதியிருக்கிறார்.
ஒரு தடவை வெளிவிவகார அமைச்சர் ஏ. ஸி. எஸ். ஹமீது தொடர்பாக ஏரிக்கரை இல்லம் ( Lake House ) வெளியிட்ட ஒரு செய்தி பாரதூரமான சர்ச்சைகளை உருவாக்கிவிட்டது. நாடாளுமன்றிலும் விவாதிக்கப்பட்டது. குறிப்பிட்ட பத்திரிகையின் ஆசிரியர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர். அவரை நாடாளுமன்றம் அழைத்து பகிரங்கமாக மன்னிப்பு கோர வைத்தது. அதனைக் கண்டித்து, அந்தச் சிங்கள சிரேஷ்ட ஊடகவியலாளருக்காக குரல் கொடுத்தவர் அமிர்தலிங்கம். அவர் மூவினத்தையும் சேர்ந்த ஊடகவியலாளர்களிடம் நன்மதிப்பினைப் பெற்றிருந்தவர்.
நான் வீரகேசரியில் பணியாற்றிய காலப்பகுதியில் அமிர் அவர்களுடன் நெருக்கமாக உறவாடியவர் நண்பர் அன்டன் எட்வேர்ட். தினமும் இவர் எழுதும் செய்திகள் முன்பக்கத்தில் வெளிவரும். இவரது செய்திகள் பெரும்பாலும் அரசியல் சம்பந்தப்பட்டிருக்கும். இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்தனா, பிரதி பாதுகாப்பு அமைச்சர் லலித் அத்துலத் முதலி மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் அமிர்தலிங்கம் ஆகியோர் சம்பந்தப்பட்ட செய்திகளை எழுதும் பொறுப்பு அன்டன் எட்வேர்ட்டுக்கு வழங்கப்பட்டிருந்தது. மும்மொழிகளிலும் சரளமாக உரையாடக்கூடியவர் அன்டன் எட்வேர்ட். பல அரசியல் தலைவர்களுடன் அடிக்கடி தொடர்பிலிருந்தவர்.
அவர்களில் ஶ்ரீமாவோ பண்டாரநாயக்கா, தொண்டமான், லலித் அத்துலத் முதலி, அமிர்தலிங்கம், வெ. யோகேஸ்வரன், விஜயகுமாரணதுங்க, ரோகண விஜேவீர மற்றும் சிறைச்சாலை ஆணையாளர் தெல்கொட ஆகியோர் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர்கள் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்புகொண்டு அன்டன் எட்வேர்டை கேட்கும்போது, அந்த அழைப்பினைப்பெற்று அன்டனை அழைத்து தொலைபேசி ரிஸீவரை கொடுத்திருக்கின்றேன்.
மிக நீண்ட இடைவெளிக்குப்பின்னர் அண்மையில் அன்டன் எட்வேர்டை இங்கிலாந்தில் சந்தித்தேன். அவரது இல்லத்தில் ஒருநாள் பொழுது இனிமையாக கழிந்தது. அவரும் அவரது துணைவியாரும் என்னை அன்போடு உபசரித்தனர். இவர்களுடன்தான் கடந்த 23 ஆம் திகதி லண்டனில் நடந்த ஒரு திருமண வைபவத்திற்கும் சென்றேன்.
மணமகன் எம்முடன் முன்னர் வீரகேசரியில் பணியாற்றிய ஶ்ரீகாந்தலிங்கத்தின் புதல்வர். ஶ்ரீகாந்தலிங்கம், இ. தம்பையா, மு. பாலச்சந்திரன் ஆகியோர் 1984 ஆம் ஆண்டளவில் சட்டக்கல்லூரியிலிருந்து வீரகேசரி ஆசிரிய பீடத்துக்கு அலுவலக நிருபர்களாக இணைந்தவர்கள். இவர்களுடன் அக்காலப்பகுதியில் சட்டக்கல்லூரியில் படித்தவர்தான் தற்போது அமெரிக்காவிலிருந்து நாடுகடந்த தமிழ் ஈழம் என்ற அமைப்பினை நடத்திவரும் அதன் பிரதமர் ( ? ) ஶ்ரீகாந்தலிங்கத்தையும் ருத்திரகுமாரனையும் எங்கள் நீர்கொழும்பூர் இந்து இளைஞர் மன்றத்தின் கலைமகள் விழா பட்டி மன்றத்திற்காக அழைத்துச்சென்றிருக்கின்றேன்.
இவ்வாறு மறக்கமுடியாத பல சுவாரசியமான செய்திகளை இங்கிலாந்தில் நண்பர் அன்டன் எட்வேர்ட்டுடன் பகிர்ந்துகொண்டேன். சில செய்திகளை நான் நினைவூட்டியபோது, அவரது கண்கள் வியப்பினால் விரிந்தன. எனது நினைவாற்றலை பாராட்டினார். அன்டன் எட்வேர்ட்டின் தந்தையார் சுவாமி அடியார் பெரியநாயகம் எட்வேர்ட் ( அமரர் – எஸ். பி. எட்வேர்ட் ) வீரகேசரியின் தொடக்க காலத்தில் அங்கே இயக்குநர் சபையில் அங்கம் வகித்தவர். அத்துடன் விளம்பரப்பிரிவிலும் பணியாற்றியவர். வீரகேசரியின் பதிப்பாளராகவும் இயங்கினார். அவரது நினைவுகளை புதல்வன் அன்டன் எட்வேர்ட் என்னுடன் பகிர்ந்துகொண்டார்.
வீரகேசரியில் பயணித்த நாமிருவரும் விதிவசத்தால் நாடு கடந்து வந்து சுமார் 36 வருடங்களின் பின்னர் இங்கிலாந்தில் சந்தித்தோம். இங்கு வருவதற்கு முன்னர், கனடாவில் பத்திரிகையாளர்கள் டீ. பி. எஸ். ஜெயராஜ், ஆ. சிவநேசச் செல்வன், மு. பாலச்சந்திரன், எஸ்.திருச்செல்வம் ஆகியோரை சந்தித்த கதைகளையும் இங்கிலாந்தில் நண்பர் அன்டன் எட்வேர்ட்டுடன் பகிர்ந்துகொண்டேன்.
அன்டன், வீரகேசரி வாரவெளியீட்டின் முன்பக்கத்தில் எழுதிய உண்மைகள் உறங்குவதில்லை, அரசியல் அதிர்வேட்டுக்கள் முதலான பத்தி எழுத்துக்கள் அக்காலப்பகுதியில் சில அரசியல்வாதிகளையும் கேலி செய்திருந்தது. ஒரு தமிழ் அமைச்சர் வீரகேசரி நிருவாக இயக்குநரின் வீட்டுக்கு காலைவேளையிலேயே சென்று, அழாக்குறையாக முறையிட்டு, அந்தப் பத்தி எழுத்துக்களில் தன்னைப்பற்றி எழுதவேண்டாம் எனவும் சொல்லியிருக்கிறார். இச்செய்திகள் அனைத்தும் நீண்ட இடைவெளிக்குப்பின்னர் எமது உரையாடலில் இடம்பெற்றன.
நண்பர் சட்டத்தரணி ஶ்ரீகாந்தலிங்கத்தின் புதல்வரின் திருமண நிகழ்வில் நாம் அமர்ந்திருந்த மேசையில் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் புதல்வர் மருத்துவர் பகீரதனும் தமது துணைவியாருடன் இருந்தார். இவரை 1984 ஆம் ஆண்டு அமிர்தலிங்கம் – மங்கயற்கரசி தம்பதியர் சென்னை எம். எல். ஏ. விடுதியில் தங்கியிருந்த காலப்பகுதியில் சந்தித்திருக்கின்றேன். அந்த மேசையில் கலைஞர்கள் பாலேந்திரா – ஆனந்தராணி தம்பதியரும் எம்முடன் அமர்ந்திருந்தனர். அந்த திருமண வைபவத்தில் நான் சந்தித்த ஈழத் தமிழர்கள் அனைவரையும் இலங்கையின் இன நெருக்கடி நாட்டைவிட்டே துரத்திவிட்டது. விதி எம்மை அந்நிய நாட்டில் சந்திக்கவைத்துள்ளது.
அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவேளையில் அன்டன் எட்வேர்ட் , உண்மைகள் உறங்குவதில்லை பத்தியில் எழுதிய குறிப்பு எனக்கு நினைவுக்கு வந்தது. அவ்வேளையில் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயல் அதிபராகவும் விளங்கியவர் அமிர். கூட்டணி ஒரு முக்கிய அரசியல் தீர்மானம் குறித்து அமிரின் வாசஸ்தலத்தில் ஆராயவிருந்தது. இந்த விடயத்தை அமிர் இரகசியமாக நகர்த்தவிருந்தார். ஆனால், நண்பர் அன்டன் எட்வேர்ட்டுக்கு அச்செய்தி எப்படியோ கசிந்துவிட்டது. அமிரிடமிருந்து அதனை எவ்வாறாயினும் கறந்து பத்திரிகையில் வெளியிடுவதற்கு அன்டன் எட்வேர்ட் முயன்றார். அதற்காக அமிரின் வாசஸ்தலத்துக்கு பல தடவை தொலைபேசியில் தொடர்புகொண்டார். காலையில் தொடர்புகொண்டபோது தலைவர் குளியல் அறையில் இருக்கிறார் என்று திருமதி மங்கையற்கரசி சொல்லியிருக்கிறார். மதியம் தொடர்புகொண்டபோது, தலைவர் பாத்ரூமில் இருப்பதாக செயலாளர் பேரின்பநாயகம் சொல்லியிருக்கிறார். மீண்டும் இரவு தொடர்புகொண்டபோது, அங்கிருந்த ஊழியர் ஒருவர் தலைவர் குளியல் அறையில் எனச்சொல்லியிருக்கிறார்.
அன்டன் எட்வேர்ட்டுக்கு கோபம் கொப்பளித்துவிட்டது. “இந்த உலகத்திலேயே உங்கள் தலைவர்தான் சுத்தமான தலைவர் போலும் “ எனச்சொல்லிவிட்டு, தொடர்பைத் துண்டித்திருக்கிறார். அத்துடன் நில்லாமல், தனது உண்மைகள் உறங்குவதில்லை பத்தியிலும் இந்த விடயத்தை எழுதிவிட்டார். அதனைப்படித்த அமிர்தலிங்கம், அன்டன் எட்வேர்டை செல்லமாகக் கடிந்துகொண்டார்.
இந்த பழைய நினைவுகளை அந்தத் திருமண விருந்தில் நான் சொன்னதும் அமிரின் புதல்வர் மருத்துவர் பகீரதன் உட்பட அனைவரும் சிரித்தனர்.
அமிரின் செல்லப்பிள்ளைகளில் அன்டன் எட்வேர்ட்டும் ஒருவர். அமிரும் யோகேஸ்வரனும் 1989 ஜூலை மாதம் 13 ஆம் திகதி கொல்லப்பட்டபோது நான் அவுஸ்திரேலியாவிலிருக்கின்றேன். இருவரையும் 1981 கலவர காலத்தில் சந்தித்திருக்கின்றேன். இருவரதும் படுகொலையும் என்னை அதிர்ச்சியடைய வைத்திருக்கின்றன. அந்தத் தினத்தை நான் எப்படி மறக்க முடியும். அது எனது பிறந்த தினம் . ( 1951 ஜூலை 13 ). அன்டன் எட்வேர்ட், செய்தி அறிந்து மறுநாள் ( 1989 ஜூலை 14 ) காலையில் சம்பவ இடத்திற்கு ஓடிச்சென்றவர். அன்டனின் ஊடகத்துறை வாழ்வில் உடன் பயணித்த பல அரசியல் தலைவர்கள், ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். எமது நீண்ட பயணங்களில் நாம் கடந்துவந்த பாதையில் பலரை இவ்வாறு இழந்திருக்கின்றோம். எம்மிடம் எஞ்சியிருப்பது அவர்கள் பற்றிய நினைவுகள் மாத்திரம்தான்.
( தொடரும் )
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.