முன்னுரை
புதினமோ, கதையோ, சிறுகதையோ எதுவாயினும் அது, தான் தோன்றிய காலத்தில் வாழ்ந்த சமுதாயத்தைப் பற்றியதாக இருக்கும். ‘நெருப்புத் தடயங்கள்’ என்றும் புதினங் காட்டுஞ் சமுதாயம் யாது என்பதையும் அதன் பின்புலம் யாது என்பதையும் ஆராய்வதே இவ்வியலின் நோக்கம்.
இலக்கியமும் சமுதாயமும்
இலக்கியங்கள் யாவும் சமுதாயத்தில் நடந்த அல்லது நடக்கின்ற நிகழ்ச்சிகளைச் சுவைபடக் கூறுவனவாகும். சமுதாயத்தின் ஒரு கால கட்டத்தில் நிகழ்ந்த அல்லது நிகழுகின்ற நிகழ்ச்சிகளைக் காட்டும் ஒரு சமுதாயப் படங்காட்டும் கருவி என்று கூடச் சொல்லலாம்.
“மனிதர்கள் வாழ்க்கையில் கண்டவை, அவர்கள் கண்டு அனுபவித்தவை, உடனே கவர்ச்சி ஊட்டுபவை, நிலையாக நின்று கவர்ச்சி ஊட்டுபவை எவையோ, அவைகளைப் பற்றிச் சிந்தித்தவை, சிந்தி;த்து உணர்ந்தவை இவைகளைப் பற்றி அறிவிப்பதே இலக்கியமாகும்”1 என்னும் ஹட்சனின் கூற்று ஈண்டு நினைக்கத்தக்கது.
மனிதன் சமுதாயத்தில் கண்டதையும், அனுபவித்ததையும் வைத்துக் கொண்டே இலக்கியங்கள் படைக்கிறான். ஆகவே, மனிதனையும், சமுதாயத்தையும் அறிய இலக்கியம் நமக்கு உதவுகின்றது. காலத்திற்கேற்றவாறு சமுதாயமும் இலக்கியமும் மாறுகின்றன. சமுதாயமும் இலக்கியத்துள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும். எனவே, “இலக்கியம் ஒரு சமுதாய நிலையம்”2 என்பார் கூற்று சாலப் பொருந்துவதேயாகும்.
புதின இலக்கியம் மக்களின் வாழ்க்கையைச் சமுதாயத்தை அப்படியே படம்பிடித்துக் காட்டும் ஒரு புகைப்படக் கருவி எனலாம்.
“நாவல் வாழ்க்கையின் ஓர் உண்மையான திறனாய்வாளன்”3
“நாவல் ஒரு காலகட்டத்தின் உணர்ச்சி வெளிப்பாடு”4
“நாவல் என்பது இன்றைய வாழ்க்கையின் நடப்பியல் சித்திரம் ஆகும்”5
என்னும் கூற்றுக்கள், பல்வேறு காலங்களில் நிலவிய சமுதாயத்தை அறிய உதவி செய்வது, புதின இலக்கியங்கள் என்பதை வெளிப்படுத்துகின்றன.
சமுதாயத்தில் காணப்படும் குறைநிறைகளை ஏதாவது ஒரு வழியில் மக்களுக்கு அறிவிக்கப் படைப்பாளர்கள் விரும்புகிறார்கள். அதனால், எழிற்காட்சிகளையும் அவல நிலைகளையும் அன்றாட மக்களின் வாழ்க்கையில் கண்ட நிகழ்ச்சிகளையும் புதினமாக வடித்துத் தருகிறார்கள். புதின இலக்கியம் அதிக கல்வியறிவு இல்லாத மக்களும் படித்து மகிழும் ஒருவகை இலக்கியம். இதனால் தங்களின் கருத்துக்களைக் கொண்டு உடனே சமுதாயத்தை மாற்றி அமைக்க முடியாது போனாலும், மாற்றியமைக்க வேண்டும் என்று எண்ணிய தங்களின் எண்ணத்தையாவது பிறரிடம் புதினத்தின் வழிப் பரப்ப முயலுகிறார்கள்.
“மக்களின் துன்பத்தைத் துடைக்க என் எழுத்தைக் கருவியாக்கப் போகிறேன். சமுதாயப் புரட்சிக்காகப் பெரிய பெரிய மலைகளை என்னால் புரட்ட முடியாவிட்டாலும், சமுதாயத்தின் வெப்பத்தை தணிக்கும் தென்றலாக நான் இருக்கலாமல்லவா?”6 என்று அகிலன் கூறியிருப்பது நோக்கத்தக்கதாகும். சமுதாயத்திற்கு ஏற்பட்டிருக்கும் துன்பத்தைப் போக்க விரும்பும் மருத்துவராகத் தென்றலாக இருக்க ஆசிரியர் விரும்புவதால், அவர்கள் சமுதாயத்தின் பல்வேறு நிலைகளையும், புதினத்தின்பால் பிடித்துக் காட்டுகிறார்கள். ஆகவே, சமுதாயத்தின் உண்மைளோடும் உணர்வுகளோடும் புதினங்கள் பிறக்கின்றன.
“சமூக வரலாற்றுப் பொருள்களில் நாவலும் ஒன்று. நடப்பியல் இலக்கியத்திற்கு அறைகூவல் விடுத்த இலக்கிய வடிவம் நாவல். மனிதன் தன்னூpமைகளைப் பெற வேண்டியும், தன் அடிப்படைத் தேவைகளைத்தேடி வாழ வேண்டியும், போராடுகின்ற வாழ்க்கைப் போராட்டங்கள் நாவல்களில் கதைக்கரு வளர்ச்சிக்குக் காலந்தோறும் துணை புரிகின்றன. சமுதாயத் தொடர்பு இல்லாமல் பிறக்கின்ற இலக்கியங்கள் காலத்தை வெற்றி கொண்டு நீடு வாழ்தல் அரிது”7 என்னும் டான்யா நடராசனின் கூற்று உண்மையேயாகும்.
- எழுத்தாளர் சு.சமுத்திரம் -
சமுதாய நோக்கு
ஒரு மரம் தோப்பாகாது பல மரங்கள் சேர்ந்த தொகுதியே தோப்பென அழைக்கப் பெறும். அதுபோல, வாழ்வின் அனைத்து அடிப்படைத் தேவைகளையும் தாமாகவே நிறைவு செய்துக்கொள்ள இயலாது. இப்படிப்பட்ட மனிதன் ஒரு குடும்பத்திலோ பலவற்றுடனோ இணையும் பொழுது நன்மைகளேயன்றிப் பல அல்லல்களையும் சந்திக்க நேரிடுகிறது. காரணம் அனைவரும் ஒரே சிந்தனை வளமும், ஓரே போக்கும் கொண்டவர்கள் அல்லரன்றோ! எனவே, பலவேறுபட்ட மனிதர்களுடன் கலந்து வாழும் பொழுது நன்மை தீமைகளுக்கிடையே பற்பல அனுபவங்களையும் அவன் பெறுகின்றான்.
“சமுதாயம் என்பது வரையறுக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அதில் தனிமனிதனுடன் சமூகமும் ஒருவகையில் தனித்துவம் பெற்றிருந்தாலும் இன்னொரு வகையில் ஒன்றைச் சார்ந்தது. மனிதனுக்கு மனிதன் ஏற்படுத்தும் உள் இணைப்பும், ஒருவர் இன்னொருவருக்குத் தூண்டுகோலாக அமையும் செயற்பாடும், சமுதாய நடைமுறையில் தவிர்க்க முடியாதவையாகும். எந்த ஒரு சமுதாயமும் ஒருவருக்கொருவர் தொடர்பிலாது அமைய இயலாது”8 என்பர். இவ்வுணர்தலில் ஏற்படும் வாழ்வும், பிறர் புகழ்ச்சியும் அளவுக் கேற்ப ஒற்றுமை வேற்றுமையென வேறுப்படுத்துகின்றன. இத்தகைய நோக்குடன், இப்புதினத்தை ஆராய்ந்து பார்க்கும்போது அது நடப்பியல் போக்குடன் அமைந்துள்ளமை புலனாகும்.
காதலையும், தாழ்ந்தோனையும் வெறுக்குஞ் சமுதாயம்
வினைத்தீர்த்தானும், பொன்மணியும் காதலர்கள். ஒரே சாதியைச் சேர்ந்தவர்கள். இருந்தாலும், அவர்களுடைய காதலைப் பெற்றோர்கள் ஏற்பார்களோ மாட்டார்களோ! என்று பயப்படுகிறார்கள். காரணம், வினைதீர்த்தான் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். பொன்மணியின் வீட்டில் வேலைக்காரனாக இருப்பவன். இவர்களுடைய காதல் பெற்றோர்களுக்குத் தெரியாமல் வளர்ந்து வருகிறது. ஒரு நாள் தீடீரென்று காதலர்கள் இருவரும் தலைமறைவாகி விடவே, பொன்மணியின் அண்ணன் முத்துலிங்கம் அவர்களைத் தேடி வெட்டிப் போட வேண்டும் என்று எண்ணுகிறானே தவிர, அவர்களை வாழச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்கு வரவில்லை.
“நம்ம பொன்மணியை வேலைக்காரப் பயல் வினைதீர்த்தான் கூட்டிக்கிட்டு ஓடிட்டான். தென்காசியில் அவங்களைப் பார்த்ததா மண்டையன் சொல்லிட்டுப் போறான். நான் நாலாகரையும் கத்தி, கம்போட ஆட்களை அனுப்பியிருக்கேன். அடுத்துக் கொடுத்த அந்த செறுக்கிமவன் இன்னைக்கு ராத்திரிக்குள்ள கொன்னு… குழி தோண்டி புதைக்கப்பட்டால் நீ இன்ஸ்பெக்டருமில்ல, நான் இன்ஸ்பெக்டர் அண்ணனுமில்லை. உம்….புறப்படுடா, துப்பாக்கி வச்சிருக்கியா?”9 என முத்துலிங்கம் இன்ஸ்பெக்டரான தன் தம்பி தாமோதரனைப் பார்த்துக் கூறுகிறார். இங்கே தாழ்ந்தவன் உயர்ந்த வீட்டின் பெண்ணை அழைத்துச் சொன்று விட்டானே என்ற அந்தஸ்துப் பிரச்சனை உண்டாவதைக் காண முடிகிறது.
“பன்னாடப்பய…. இப்டிப் பண்ணுவான்னு நான் நினைக்கல. நமக்கும் கல்யாண வயசுல ஒரு தங்கச்சி இருக்காள்னு நினைக்காமல், குடியைக் கெடுத்திட்டான். தங்கச்சியாய் நினைக்க வேண்டியவளைத் தாரமாய் நெனச்சுட்டான்”10
என்று ஊராரும், காதலை வெறுப்பதை நம்மால் உணரமுடிகிறது. தங்கை வாழாவிட்டாலும் ஒரு தாழந்தவனுடன் வாழக் கூடாது என்று முத்துலிங்கமும், தாமோதரனும் நினைப்பதைக் காணமுடிகிறது.
பஞ்சாயத்து முறை
ஒவ்வொரு கிராமத்திலும் பஞ்சாயத்து ஒன்று இருக்கும். ஊர்ப் பெரிய மனிதர்கள் சிலர் ஒன்று கூடி ஓர் ஊரில் நடக்கும் வழக்குகளை ‘கோர்ட்டுக்கு’ எடுத்துச் செல்லாமல் தங்களுக்குள்ளே வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறுவர். இதையே மாணிக்கம் அவர்கள் கூறும்போது, “ஒவ்வொரு சிற்றூரிலும் பஞ்சாயத்து ஒன்று இருக்கும். ஊர்ப் பெரிய மனிதர்கள் சிலர் பஞ்சாயத்து தலைவராக இருப்பார்கள். ஊர் மக்களுக்குள், குடும்பச் சண்டை மொழித் தகராறு, வாய்க்கால் தகராறு, பாகப்பிரிவினைத் தகராறு ஆகியன அடிக்கடித் தோன்றும். அப்பொழுதெல்லாம் சிக்கலைத் தீர்க்க அவர்கள் பஞ்சாயத்தை நாடுவது வழக்கம். இரண்டு கட்சிக் காரர்களையும், கூட்டிப் பஞ்சாயத்து வழங்கும் தீர்ப்புக்கு கட்டுப்பட்டு நடப்பதாக அவர்களிடம் முதலில் எழுதி வாங்கிக் கொண்டு பிறகு பஞ்சாயத்தின் விசாரணை தொடங்கும்”12 என்பர்.
முத்துலிங்கம் கொடுமை படுத்தியதால் மாடக்கண்ணு இறக்க நேரிடுகிறது. கலாவதி பைத்தியமாக காரணமாகிறது. ஊரில் பஞ்சாயத்தும் கூடுகிறது. கூடிச் சமரசம் காணும்போது,
“ஏதோ நடந்தது நடந்து போச்சு, இனிமேல் அதை மாற்ற முடியாது. முத்துலிங்கத்தையோ மற்றவர்களையோ தூக்கில போடுறதுனால் போன உயிர் திரும்பப் போறதில்ல, ஒரு வேளை அப்படித் திரும்புமுன்னு ஒரு நிலைமை இருந்தால் நானே இவர்களைத் தூக்குல தொங்கப் போடுவேன்”13 என்றும் சமரசம் கூறி முடிவு கூறும்போது,
“எல்லோரும் நல்லா கேட்டுக்கங்க, மகன் வினைதீர்த்தான் இன்னொருத்தன் பொண்ணோட ஓடிப்போன அவமானம் தாங்காமல் மாடக்கண்ணு கிணத்துல விழுந்து தற்கொலை செய்துகிட்டார். அவருக்கு நீச்சல் தெரியும், அதனால் கையக் காலைக் கட்டிக்கிட்டு கிணத்துல குதிச்சார். இதுதான் பங்சாயத்தார் தீர்ப்பு”14 என்றும் பஞ்சாயத்துத் தீர்ப்பு முடிகிறது. இப்பஞ்சாயத்தில் உயர்ந்தவர்களுக்குச் சாதமாகப் பஞ்சாயத்துக் கூறி இருப்பதைக் காண்கிறோம்.
அதிகாரத்தை உரிமையாக்குஞ் சமுதாயம்
இதில் வரும் இன்ஸ்பெக்டர் தாமோதரன் தன் அண்ணன் முத்துலிங்கம் ஒரு கொலையைச் செய்திருந்தும், அவனைக் கைது செய்யாமல் அதற்கு மாறாக அரசியல் தலைவர்களோடு சேர்ந்து தப்பிக்க விடுகிறான். இதனால், தாமோதரன் கடமை தவறியவனாக ஆகிறான்.
தமிழரசியும் ஒரு போலிஸ் அதிகாரியும் உரையாடும்போது, “நீங்க எங்கே போனால் எனக்கென்ன, கூப்பிட்ட நேரமில்லாம் நீங்க வரணும் அவ்வளவு தான் சொல்வேன். போலிசிற்குன்னு சில பொறுப்புண்டு, ஒங்கள எங்களுக்கு வசதிப்பட்ட நேரத்துல விசாரிக்கப் போலிசுக்கு உரிமை உண்டு. என்று போலிஸ் அதிகாரி கூற அதற்குத் தமிழரசி, நீங்க கடைசியாய் சொன்னீங்க பாருங்க ‘உரிமை’ அந்த வார்த்தையிலே தான் சார் அடிப்படைக் கோளாறே இருக்கு. நீங்க கடமை செய்யுறதுக்காகக் கொடுத்திருக்கிற அதிகாரங்களை உரிமையாய் நினைக்கறீங்க. கடமையாற்றுவதை ஏதோ சலுகை காட்டுறதாய் நினைக்கறீங்க. இதுதான் இந்த நாட்ல…. போலிஸ் டிபார்ட்மெண்ட்ல மட்டுமில்ல… எல்லா டிபார்ட்மெண்ட்லயும் இருக்கிற அடிப்படைக் கோளாறு. நீங்க சொல்றதைப் பார்த்தால், யாரோ ஒருவர் எவரையோ ஒருவரைப்பற்றி ஒரு புகார் கொடுத்திட்டால் போதும் நீங்களே ஒருவரை ‘அக்கூஸ்டா’ நெனைத்து என்ன வேணுமானாலும் செய்யலாம். இதுதான் இன்றை சட்டமுன்னால், இந்த நாடு நாடல்ல, பெரிய லாக்கப் அறை, அகலமான குற்றவாளிக் கூண்டு, திறந்த வெளிச்சிறைச் சாலை”15 என்று கூறுகிறாள். போலிஸ் துறையைப் பற்றி ஆசிரியர் கூறுவதிலிருந்து சமுதாயத்தில் காவல்துறை அதிகாரிகள் தங்களுக்கு அளிக்கப்பட்ட அதிகாரத்தைத் தங்கள் உரிமையாக கையாளுகிறார்கள் என்பது ஆசிரியரால் சுட்டிக்காட்டப்படுகிறது.
பெண்களின் நிலை
இச்சமுதாயத்தில் தாங்கள் விரும்பிய ஆண்மகனுடன் வாழ எவ்வளவு போராட வேண்டியிருக்கிறது என்பதையும், ஒரு பெண் எவ்வளவு தான் முற்போக்கு வாதியாக இருந்தாலும் சமுதாயத்தில் எவ்வாறு சீரழிக்கப்படுகிறாள், எதிர்க்கப்படுகிறாள் என்பதையும், ஒரு பெண் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து விட்டால் அவள் எப்படிப்பட்ட கொடுமைக்கு உள்ளாக்கப் படுகிறாள் என்பதையும் இப்புதினத்தில் வரும் சமுதாயத்தின் மூலம் அறிகிறோம்.
முத்துலிங்கத்திற்கும் தமிழரசிக்கும் இடையே நடக்கும் உரையாடலை வைத்துப் பார்ப்போம்,
“பொன்மணிகிட்ட ஒரு வார்த்தை கேட்டீங்களா? வாழப் போறவள் அவள், அவளுக்குச் சம்மதமான்னு… (தமிழரசி) அதிகமாப் படிச்சால் புத்தி போயிடும் போலுக்கு…. பெண்புத்தி பின்புத்தி என்கிறது மாதிரி பேசுறியே… பொன் மணியைச் சாகடிக்கவா போறோம், அந்தக் கழுதைக்கிட்ட ஏன் கேட்கணும்? தூக்கி வைக்கிற பொதியைச் சுமக்க வேண்டியது தான் அதனோட வேலை”16… (முத்துலிங்கம்) இப்படிப் பெண்களைக் கழுதைக்கு ஒப்பிடும் சமுதாயத்தை இப்புதினத்தில் காண்கிறோம்.
மக்கள்
இப்புதினம் காட்டுஞ் சமுதாயத்தில் வரும் மக்கள் உயர்ந்தோராகவும், தாழ்ந்தோராகவும் காட்டப்படுகின்றனர். அவ்விரு வகையினருள், உயர்ந்தோர்கள் தாழ்ந்தோருக்குக் கொடுமை விளைவிப்பதும், தாழ்ந்தோர்கள் கொடுமையை அனுபவித்துப் பின்பு, வெகுண்டு எழுந்து உயர்ந்தோரை எதிர்த்துப் போர்க்குரல் கொடுப்பதும் காண்கின்றோம்.
இதுகாறும் கூறியவற்றின் ‘நெருப்புத் தடயங்கள்’ என்னும் புதினம், உயர்ந்தோர் மற்றும் தாழ்ந்தோரின் வாழ்க்கையை விவரிப்பதன் மூலம் ஒட்டு மொத்தச் சமுதாயத்தைப் படம் பிடித்துக் காட்டுவது புலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் அது காதலை வெறுக்குஞ் சமுதாயமாகவும், அதிகாரத்தை உரிமை யாக்குஞ் சமுதாயமாகவும், ஏழைகளைக் கொடுமைப் படுத்துஞ் சமுதாயமாகவும் ஒருதலைப் பட்சமாகப் பஞ்சாயத்துக்கூறுஞ் சமுதாயமாகவும் இருப்பது எடுத்துக் காட்டி விளக்கப்படுள்ளது.
புதினத்தின் பின்புலம்
சங்க காலச் செய்யுட்கள் முதற்பொருள், கருப்பொருகள், உரிப்பொருள் என்பனவற்றைப் பின்புலமாகக் கொண்டும் சமுதாய வாழ்வைக் கொண்டும் எழுந்துள்ளன. மனித வாழ்வின், சில அல்லது பல நிகழ்ச்சிகள் வழியே வாழ்க்கை உண்மைகளை உணர்த்தும் இலக்கியம் புதினம்.
நம் முன்னோர்களின் நோக்கம், நாட்டுப் பாடல்கள் முதலாக நவீனம் வரையில் காணும் இலக்கியங்களுள் அறிய முடிகிறது. மனிதனின் பழக்க வழக்கங்களையும், வாழ்க்கை முறைகளையும் இயற்கைப் பின்னணி அல்லது சூழ்நிலையில் வைத்து தான் உணர முடியும். இச்சூழல் தான் இலக்கியத்தில் பின்புலம் எனப்படுவது. இந்தப் பின்புலத்தைச் “சமுதாயப் பின்னணி, பௌதிகப் பின்னணி என இரு வகையாகப் பிரிக்கிறார் ஹட்சன்”17 என்னும் அறிஞர்.
பௌதிகப் பின்னணி
தொழிற்சாலையில் தொழிலாளர் பற்றிய புதினத்தில் இத்தகையரோடு தொடர்புடைய எந்திரம், தொழிற்சாலை-அமைப்பு, சூழ்நிலை, வேலைநேரம், வாழ்க்கை வசதிகள், அலுவலக வசதி போன்றவைகளும், கட்டடத் தொழிலாளர் பற்றிய புதினத்தில் அவர்கள் பயன்படுத்தும், கொலுறு, மட்டப்பலகை, கலவை எந்திரம், சட்டிகள், மண்வெட்டி, கம்பி, செங்கல், மரம் போன்றவைகளும் பின்னணியாகப் பௌதிகப் பின்னணி அமையப் பெற்றால் அப்புதினம் சிறக்கும்.
தற்காலத்தில்
தற்காலத்தில் வெளிவரும் புதினங்கள் அதிகமாக நகரச் சூழ்நிலையையே பின்னணியாகக் கொண்டு எழுதப்படுகின்றன. கிராமச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு எழுதுபவர்கள் கூட நகரங்களில் இருந்துதான் எழுதுகிறார்கள். இதற்குக் காரணங்கள் அச்சுக்கூட வசதி, மற்றும் புதினங்களை வாங்கிப் படிப்பவர்கள் கிராமப் பகுதியில் இருப்பதைவிட நகரங்களில் அதிகமாக இருப்பது தான்.
நெருப்புத் தடயங்களில் - பின்புலம்
எந்த ஒரு புதினமும் சமுதாயம் என்ற அடித்தளத்திலிருந்து தான் அரும்பி முகிழ்க்கிறது எனலாம். ‘நெருப்புத் தடயங்களிலும் திருநெல்வேலிப் பகுதித் தமிழர்ச் சமுதாயம் அதன் பின்புலமாகியுள்ளமை படிப்போர்க்குப் புலனாகும்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள குட்டாம்பட்டி என்னும் கிராமத்தில் இருக்கும் மூன்று குடும்பங்களுக்கிடையே உள்ள உறவுகளையும், அக்குடும்பங்களுக்குக்கிடையே நடக்கும் நிகழ்ச்சிகளையும் மையமாகக் கொண்டும் அவ்வூர்ச் சமுதாயத்தைப் பின்னணியாகச் கொண்டும் ஆசிரியர் இப்புதினத்தைப் படைத்துள்ளார். ஒரு பெண்ணும், ஓர் ஆணும் ஊரை விட்டு ஓடிவிடுதல் எந்த அளவிற்குச் சமுதாயத்தில் தாக்கத்தை உண்டாக்குகிறது என்பதை உணர்த்த ஆசிரியர் இக்கதையை வளர்த்துச் செல்கிறார்.
வினைதீர்த்தானும், பொன்மணியும் ஓடிவிடுகின்றனர். வினைத்தீர்த்தான் பொன்மணியின் வீட்டில் வேலைக் காரணாக உள்ளவன். இதனால், பொன்மணியின் அண்ணன் முத்துலிங்கம், வினைதீர்த்தான் குடும்பத்தைக் (மாடக்கண்ணு, கலாவதி) கொடுமைப்படுத்துகின்றான். இவனுக்குப் பக்கபலமாக அவனுடைய தம்பியும், காவல் துறை அதிகாரியுமான தாமோதரனும் அவனுடைய போலிஸ் நண்பர்களும் அமைகின்றனர்.
இச்செயலை வினைதீர்த்தானின் பெரியப்பா மகளும் சென்னைக் கல்லூரி ஒன்றின் பேராசிரியருமான தமிழரசி கண்டிக்கிறாள். அவள் மீதும் பழி சுமத்தப்படுகிறது. அவளும் குற்றவாளியாக ஆக்கப்படுகிறாள். காவல்துறை அதிகாரிகள் தமக்குக் கொடுக்கப்படும் அதிகாரத்தைச் சுயநலத்திற்காகப் பயன்படுத்தி, மேலும் சித்திரவதை செய்கிறார்கள். பொருளாதார வசதியில் தாழ்ந்தவர்கள் உயர்ந்தவனால் எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதைக் கலாவதி, மாடக்கண்ணு, முத்துலிங்கம் போன்றோரின் மூலம் ஆசிரியர் உணர்த்;துகிறார்.
ஒரு நேர்மையான கடமையோடு செயலாற்றும் காவல் அதிகாரி தாமோதரன் தன் குடும்பத்திற்காகக் கடமை தவறித் தன் அண்ணன் முத்துலிங்கம் கொலைக் குற்றவாளி என்று தெரிந்தும் சட்டத்திலிருந்து தப்பிக்கச் செய்வது, எந்த அளவிற்கு ஏழைச் சமுதாயம் துன்பப்படக் காரணமாயிருக்கிறது என்பதை இப்புதினத்தின் மூலம் ஆசிரியர் விளக்கியிருக்கிறார்.
சமுதாயத்தில் பொருளாதாரத்தில் உயர்ந்தவன் பக்கமே அரசியல் வாதிகளும், காவல் துறையும் இருக்கின்றன. இத்தகைய சமுதாயப் பின்னணி இப்புதினத்தில் படைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறான சமுதாயப் பின்னணிக் கிராம மக்கள் வாழ்க்கையைச் சித்திரித்து இப்புதினம் படைக்கப்பட்டுள்ளது. கிராமம், ஊர்மக்கள், காவல்துறை, காவல்துறை அதிகாரிகள், அரசியல், அரசியல்வாதிகள், ஊர்ப் பஞ்சாயத்துப் போன்றவை இப்புதினத்தில் சமுதாயப் பின்னணியாகப் படைக்கப்பட்டுள்ளன.
முடிவுரை
இதுகாறும் கூறியவற்றான் இப்பதினத்தின் ஆசிரியர், தம் காலகட்டத்தில் இருந்த ஏழைகளைப் கொடுமைப்படுத்துதல், காதலை வெறுத்தல், காவல் அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துதல், அரசியல் வாதிகள் பணக்காரர்களின் பக்கமே இருத்தல், ஊர்ப் பஞ்சாயத்து ஒருதலைப் பட்சமாக இருத்தல் போன்ற சமுதாய வாழ்க்கைக் கூறுகளால் தாக்கப்பட்டு, இப்பதினத்தை எழுதியுள்ளமையும், சமுதாயத் தீமைகளும், ஒழுக்கக் கேடுகளும், பழிவாங்கும் கொடுமைகளும் நீங்க வேண்டும் என்பதே இவற்றைச் சித்திரிக்கும் ஆசிரியரின் நோக்கமாதலும், மேலும், புதினத்தின் பின்னணி, அதன் வகைகள் ஆகியவைகளும், மனித வாழ்க்கை முறையும் பின்புலம் ஆவதும் விளக்கப்படுகின்றன. நெருப்புத் தடயங்கள்’ என்னும் புதினத்தின் கதை, சமுதாயப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டது என்ற கருத்து ஆய்ந்து நிறுவப்பட்டுள்ளது.
அடிக்குறிப்புகள்
1. W.H.Hudson, An Intorduction to the study of Literature, p.10.
2. குளோரியா சந்தரமதி, இலக்கியக் கொள்கை. ப.181
3. இரா. தண்டாயுதம், நாவல் வகை, ப.67
4. மேற்படி, ப.67
5. சி.பாலசுப்பிரமணியன், அறவோர் மு.வ., ப.93
6. அகிலன், சிநேகிதி, ப.51
7. டான்யா நடராசன், புதினங்களில் தமிழ்ப் பண்பாடு, ப.4
8. ம.செ.இரபிசிங், புதினங்களில் தமிழ்ப் பண்பாடு, ப.4
9. சு.சமுத்திரம், நெருப்புத் தடயங்கள், ப.54
10. மேற்படி ப.63
11. மேற்படி ப.61
12. மேற்படி ப.53
13. சு.சமுத்திரம் நெருப்புத் தடயங்கள், ப.179
14. மேற்படி, ப.182
15. மேற்படி. ப.133
16. மேற்படி, ப.43
17. ந.பிச்சமுத்து, திறனாய்வும் தமிழ் இலக்கியக் கொள்கைகளும், ப.243.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.