ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்! - சந்திரகௌரி சிவபாலன் (கௌசி), B.A, Dip.in. Edu, ஜேர்மனி -
ஆங்கிலேயர், போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர் தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிருந்து மாறிப் போர்ச்சூழலின் காரணமாகப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும், பணி நிமிர்த்தமாகப் புலம்பெயாந்த இந்தியத் தமிழர்களும் இலகுவாகப் புலம்பெயர்ந்து தாம் வாழுகின்ற நாட்டினரின் பண்பாட்டிற்குத் தாமாகவே மாறக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது என்னும் விடயம் பொதுவாகவே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அம்சமாகும் என்று கூறி என்னுடைய உரைக்குள்ளே நுழைகின்றேன்.
ஜெர்மனியில் வாழுகின்ற தமிழர் பண்பாட்டு மாற்றம் என்ற விடயத்தை முதலில் எடுத்து நோக்குவதற்கு முன் பண்பாடு என்றால் என்ன? ஜெர்மனியர் பண்பாட்டுக் கூறுகள் எவை? தமிழர்களுடைய பண்பாட்டுக் கூறுகள் எவை? தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் தற்போது எவ்வாறு மாற்றத்தைக் கண்டுள்ளது என்பவற்றை எடுத்து நோக்க வேண்டும்.
1350 கோடி ஆண்டுகளுக்கு முன் உலகம் தோன்றியது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் தோன்றிவிட்டன. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினத்துக்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர்கள் தோன்றினார்கள் எனச் “சேப்பியன் மனித குலத்தின் ஒரு சுருக்க வரலாறு” என்னும் நூலிலே யுவா நோவால் ஹராரி என்பவர் கூறுகின்றார். பரிணாம வளர்ச்சியின் பின்னே மனித இனம் தோன்றியது. அது பிறந்து இறந்து பின் புதிதாய்ப் பிறந்து எனத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றது. ஆரம்பகாலத்தில் உண்ணவும், உறங்கவும் வாழ்ந்த மனிதனின் சிந்தனை வளர்ச்சியுற்றதன் காரணத்தால், மனிதனின் பண்பாட்டுக் கூறுகளில் காலத்துக்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. காலநிலை, பௌதீக சூழலினால், பண்பாட்டுக்கூறுகளில் மாற்றம் ஏற்படுகின்றது. பண்பாடு என்பது எழுதப்படாத சட்டம் என்பதை சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார்.