(பயணக் கட்டுரைகள்) என் கொடைகானல் மனிதர்கள்! (5): விடுதலை நகர் - ஜோதிகுமார் -
- இலங்கையிலிருந்து வெளிவந்த 'நந்தலாலா' , 'தீர்த்தக்கரை' ஆகிய சஞ்சிகைகளின் ஆசிரியர்களில் ஒருவரும் சட்டத்தரணியுமான திரு. ஜோதிகுமார் தனது பயணங்களில் சந்தித்த மனிதர்கள் பற்றிய கட்டுரைத்தொடர் 'என் கொடைகானல் மனிதர்கள்! - பதிவுகள்.காம் -
இந்த நான்கைந்து வருடங்களில் குறிக்கத்தக்க மாற்றத்தை, கண்டிருந்தது விடுதலை நகர். தெளிவான ஒரு காலை நேரத்தில் அவ் ஊரை நான் சென்றடைந்திருந்தேன். வானம் அற்புதமான நீல நிறத்தில் தெளிவாக இருக்க, கீழே தோட்டங்கள் தந்த பச்சை நிறம்… மேலும், காற்று மென்மையாக வீசி புத்துணர்ச்சியை தந்த ஓர் நளினமான காலை அது. பாதையின் ஒரு புறம், அன்று போலவே, இப்போதும், கண்ணுக்கெட்டிய தூரம் வரை, தோட்டங்கள், தோட்டங்கள், தோட்டங்கள். கொத்தி கிளறப்பட்டு, கற்கள் அகற்றப்பட்டு, பண்படுத்தப்பட்டு, மிருதுவாக்கப்பட்ட செம்மஞ்சள் கலந்த சிவப்பு மண், எண்ணற்ற பாத்திகளாக, நீண்ட வரிசையில், பயிரிடப்பட்ட பகுதிகளாக, பச்சை பசேலென்று, கரட்டாலும், பீன்ஸ்ஸாலும், பயறு வகைகளாலும், அழகு பூண்டு, ரம்மியமான தோட்டங்களாக காட்சி தந்தது. மனித உழைப்பு, இப்புல்லுக்காட்டை, இப்படி ஓர் சௌந்தர்யமாய்; மாற்றியிருந்தது.
“வெறும் கோரப் புல்லா மண்டிக் கெடந்த எடம்” என்று விரியும் தோட்டங்களை காட்டுவார் அண்ணாமலை.
தோட்டங்களின் குறுக்காக, இப்போது வாகனங்களும் செல்ல, ஆங்காங்கு பாதைகள் வெட்டப்பட்டிருந்தன. சில இடங்களில் ட்ரக்டர்களும் நின்றிருந்தன. தோட்ட பரப்பில், சில வீடுகளும் கூட புதிதாய் முளைத்திருந்தன. அவற்றின் முன்னால் சில வாகனங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஐந்தாறு வருடங்களின் முன் இவை இங்கே காணப்படாத ஒன்று.
பிரதான பஸ் பாதையில் இருந்து, விடுதலை நகரின் குடியிருப்புகளுக்காய் செல்லும் மண் பாதையில் இருந்து பார்க்கும் போது, அத்தோட்டங்களின் ஒன்றின் நடுவே மிக அகலமான குழி ஒன்றை தோண்டி கொண்டிருந்தார்கள் ஆட்கள் கூடி. இரண்டு மூன்று கிணற்றின் சுற்றளவைக் கொண்ட, மிக பிரமாண்டமான குழி அது. குழியை சுற்றி, குழியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மென்மையான மண் சுற்றிவர ஓர் சிறு குன்றுப்போல் குவிக்கப்பட்டிருந்தது குவியலாய். பெரிய ஒரு குழாயும் குழியில் இருந்து வெளியே புறப்பட்டு வந்திருந்தது.