ஆய்வு: காதலர் கொஞ்சுமொழியில் பாலீற்று மாற்றம்! - முனைவர் ச.முத்துச்செல்வம், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, தியாகராசர் கல்லூரி, மதுரை - 09. -
பூக்கோள உயிரினங்கள் அனைத்திற்கும் பொதுவாக இயற்கை அளித்த பரிசு உணர்வு. அவ்வுணர்விலும் காதல் உணர்வு சிறப்பிற்குரியது. இவ்வியற்கை அற்புதப் பிறவியாக மனிதனைப் படைத்து காதலைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அக்காதலைப் பரிமாறிக்கொள்ள மொழியையும் கொடுத்துள்ளது. இத்தகைய மொழி காலந்தோறும் மனிதப் பண்பாட்டிற்கேற்ப மாறும் இயல்பினையுடையது. இம்மொழி மாற்றத்தில், காதலர்கள் பயன்படுத்தும் சொற்களில் பாலீற்று விகுதிகள் எவ்வகையில் மாற்றம் பெற்றுள்ளன என்பதனை ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.
கருதுகோள்
மொழிமாற்றம் ஏற்படுத்தும் காரணிகளில் காதலும் ஒன்றாகின்றது என்பதே இவ்வாய்வின் கருதுகோளாகும்.
பால் விகுதிகள்
கிளவியாக்கத்தில் பாலுணர்த்தும் எழுத்திற்கெல்லாம் இலக்கணம் கூறுகின்ற பொழுது,
“இருதிணை மருங்கின் ஐம்பாலறிய
ஈற்றுநின் றிசைக்கும் பதினோரெழுத்தும்
தோற்றந் தாமே வினையொடு வருமே” (தொல்.தெய்வ.10)
சொல்லாக்கத்தில் வழுவின்றி வாக்கியங்களை எழுதுவது சிறப்பிடம் பெறுகின்றது. (தொல்.சொல்.தெய்வ. நூ. 5, 6, 7, 8, 9) போன்ற ஐந்து நூற்பாக்களும் ஐம்பால் ஈறுகள் (ன, ள, ர, ப, மார், து, டு, று, அ, ஆ, வ) பற்றிக் குறிப்பிடுகிறது. இங்குப் பால் ஈறுகளின் பங்கு முக்கிய இடம் பெறுகின்றது. பால் ஈறுகள் பால்களைக் காட்டுவது மட்டுமின்றி எண்ணையும் காட்டுகிறது. இவ்வீறுகளை வழுப்படாமற் எழுதுவதற்கென்று பெயரியலிலும் வினையியலிலும் பொருத்திக் காட்டியுள்ளார். இதனை,