காலமும் கணங்களும்: இலக்கிய உறவில் ஒரு ஞானத்தந்தை தலாத்து ஓயா கே. கணேஷ் (1920 – 2004 )! நூற்றாண்டு கடந்தும் பேசப்படும் இலக்கிய ஆளுமை பற்றிய நினைவுகள்! - முருகபூபதி -
( ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஒலிக்கும் ஐ. ரி. பி. சி. வானொலியில் “ எம் தமிழ் உறவுகள் “ நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகிய உரை. நேர்கண்டவர்: எஸ்.கே. ராஜென் )
பாலாவின் இயக்கத்தில் வெளியான பரதேசி திரைப்படத்தைப்பார்த்த எனது இரண்டாவது மகள் பிரியா மிகவும் கலவரமடைந்து “ அப்பா…நாம் விரும்பி ருசித்து அருந்தும் தேநீருக்குப் பின்னால் துயரம் நிறைந்த பெரிய வரலாறே இருக்கிறதே…பரதேசி படம் என்னை மிகவும் பாதித்துவிட்டது ” என்றாள்.
தேநீரின் நிறம் சிவப்பு. அதன் மூலப்பொருளை உற்பத்தி செய்யும் மக்களின் குருதியிலிருந்து - உழைப்பிலிருந்து பிறந்த பானம். பிரித்தானியர் இந்தியாவிலிருந்து தமிழ்மக்களை கூலி அடிமைகளாக அழைத்துவந்து இறுதியில் அவர்களை நாடற்றவர்களாக்கிவிட்டுச்சென்ற வரலாற்றை மகளுக்குச் சுருக்கமாகச்சொன்னேன்.
மறைந்த இலக்கியவாதி கே.கணேஷ் அவர்களைப்பற்றி எனது காலமும் கணங்களும் தொடரில் எழுதும்போது பரதேசி படமும் கணேஷ் நீண்ட நாட்களுக்கு முன்னர் எனக்கு எழுதியிருந்த பின்வரும் கவிதையும் நினைவுக்கு வந்தன.
உழைக்கின்ற மக்கள் நிலையோ தாழ்வு
உழைக்காத துரைமார்கள் சுகபோக வாழ்வு
மழைக்காற்று மதிக்காது வடிக்கின்ற மேல்நீர்
மனம்குளிர நாமுண்ணும் ஒரு கோப்பைத்தேநீர்
இந்தக்கவிதையை இயற்கையும் பசுமையும் கொஞ்சும் மலையகத்தை சித்திரிக்கும் ஒரு Picture Postcard இல் எழுதி 1988 ஆம் ஆண்டு எனக்கு அனுப்பியிருந்தார் நண்பர் கே.கணேஷ். இலங்கை மலையகத்தில் பெண்கள் கொழுந்து பறிக்கும் அழகியகாட்சி அந்த அட்டையில் பதிவாகியிருந்தது.