அஞ்சலி: 'சின்னக் கலைவாணர்' விவேக் மறைவு! - ஊர்க்குருவி -
நடிகர் விவேக் மாரடைப்பினால் மறைந்து விட்ட செய்தி துயரகரமானது. மாரடைப்பு சிலரைச் சிலரைச் சடுதியாகத் தூக்கிச் சென்று விடுகின்றது. ஏற்கனவே விவேக் இருதய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாரா அல்லது இதுதான் முதன் முறையா தெரியவில்லை. விவேக் 59 வயதில் நம்மை விட்டுப்பிரிந்துள்ளார். அவரது மறைவு என் தந்தையாரின் மறைவினை நினைவு படுத்தியது. என் தந்தையார் எம் பதின்ம வயதில் எம்மைவிட்டு , மாரடைப்பினால் சடுதியாகப்பிரிந்தபோது அவருக்கு வயது 58.
மானுடர் வாழ்வு நிரந்தரமானதல்ல. நிச்சயம் முடிவுண்டு. இருக்கும்வரை இன்புற்று இருப்பதுடன், 'எல்லோரும் இன்புற்றிருப்பதன்றி வேறொன்றறியேன் பராபரமே' என்றும் இருப்பது இருப்பது இருப்புக்குப் பயன் தருவது. நடிகர் விவேக் அவர்களின் இருப்பு எமக்கு மகிழ்ச்சியை, சிரிப்பினைத் தந்த அதே சமயம் சிந்திக்கவும் வைத்தது. அதற்காக அவருக்கு எம் நன்றி எப்பொழுதுமிருக்கும். மக்கள் கலைஞர்கள் மடிவதில்லை. அவர்கள்தம் கலைகளினூடு எம்முடன் நிரந்தரமாக நிலைத்து நிற்பார்கள். இன்று வரை அவரைப் பார்த்து இரசித்ததைப்போல் இனியும் பார்த்து இரசிப்போம். மகிழ்வோம்.
அவரது நினைவாக அவர் கவிஞர் வைரமுத்துவைப்போல் நடித்த காணொளியொன்றினை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். கலைஞர்களை அவர்கள் உயிராக நினைத்து வாழ்ந்த அவர்கள்தம் கலையினூடு நினைவு கூர்வதே மிகச்சிறந்ததென்பேன். அவர் கவிஞர் வைரமுத்துவை உள்வாங்கி நடித்த அவரது நடிப்பாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது. உண்மையில் அவர் திரையுலகுக்கு வருவதற்குக் காரணமே அவரது கவிஞர் வைரமுத்துவைப்போல் நடித்த நடிப்பே என்பதை இக்காணொளியில் அவரே கூறியுள்ளார். அதனைப்பார்த்தபின்னரே இயக்குநர் கே.பாலச்சந்தர் அவரைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தினாராம்.
அதே சமயம் இன்னுமொன்றினையும் இங்கு கூறிட விரும்புகின்றேன். கவிஞர் மனுஷ்யபுத்திரன் அவர்கள் நடிகர் விவேக் பற்றி எழுதிய இரங்கற் கவிதையில் பின்வருமாறு கூறியிருக்கின்றார்: