ருஷ்ய எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவ் அவரது முக்கிய நாவலான 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' (And Quiet Flows The Don) என்னும் நாவலுக்காக 1965ஆம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசினைப் பெற்றவர். இந்நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு அ.லெ.நடராஜன் அவர்களால் செய்யப்பட்டு, நியு செஞ்சுரி புக்ஸ் ஹவுஸ் பதிப்பக வெளியீடாக 'டான் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' என்னும் தலைப்பில் வெளிவந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது, ஆனால் இத்தமிழ் மொழிபெயர்ப்பு முழுமையானது அல்ல. நான்கு பாகங்களில் அமைந்துள்ள நாவலின் முதற் பகுதி மட்டுமே. தமிழ் மொழிபெயர்ப்பு நூலில் மூல நூல் பற்றிய விரிவான தகவல்கள் இல்லை. மொழிபெயர்ப்பு ஆங்கிலத்திலிருந்தா அல்லது ருஷ்ய மொழியிலிருந்தா மொழிபெயர்க்கப்பட்டது போன்ற விபரங்கள் இல்லை. இதனால் இதனை வாசிப்பவர் இதனை மூல நாவலின் முழுமையான மொழிபெயர்ப்பாகக் கருதும் நிலை ஏற்படும்.
நான்கு பாகங்களில் அமைந்துள்ள இந்நாவல் டொன் நதிப்படுக்கையில் வசிக்கும் கொசாக்கியரின் வாழ்வு எவ்விதம் முதலாம் உலக யுத்த காலகட்டம், ருஷ்யப் புரட்சிக்காலகட்டம் மற்றும் ருஷ்ய சமூக யுத்தக் காலகட்டம் ஆகிய காலகட்டங்களில் பாதிப்புக்குள்ளாகின்றது என்பதை மையமாகக்கொண்டு பின்னப்பட்ட விரிந்த நாவல்.
இந்நாவலின் மையச்சரடாக நாவலின் நாயகனான கொசாக்கியப் போர் வீரன் ஒருவனுக்கும், திருமண வாழ்வு சீராக அமையாத பெண்ணொருத்திக்குமிடையிலான காதல் அமைந்துள்ளதும் கவனத்தில் வைக்க வேண்டியதொன்று. நிச்சயமாக வாசிக்க வேண்டிய உலக இலக்கியப்படைப்புகளிலொன்று மிக்கெயில் ஷோலோகோவின் 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது.'
- ருஷ்ய எழுத்தாளர் மிக்கெயில் ஷொலோகோவ் -
இருபதாம் நூற்றாண்டின் சிறந்த படைப்புகளிலொன்றான 'டொன் நதி அமைதியாக ஓடிக்கொண்டிருக்கின்றது' நாவலை விமர்சகர்கள் லியோ டால்ஸ்டாயின் ' போரும் அமைதியும்' நாவலையொத்த நாவலென்று சிலாகிப்பர்.
இந்நாவலின் அனைத்துப் பகுதிகளையும் உள்ளடக்கிய ருஷ்ய திரைப்படம் இரு திரைப்படங்களாக 1957இலும். 1958இலும் வெளிவந்தன. இதனை இயக்கியவர் ஷேர்ஜி கெரசிமோவ் (Sergei Gerasimov) ஆங்கில உபதலைப்புகளுடன் கூடிய இத்திரைப்படத்தின் முழுமையான வடிவம் யு டியூப்பில் கிடைத்தது. அதனை நண்பர்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்.