UNSUNG HEROES என்று ஆங்கிலத்தில் குறிக்கப்படுபவர்கள் எல்லாத் துறைகளிலும் உண்டு. ஒரு துறையில் அவர்கள் ஆற்றிய சீரிய பணியும் பங்களிப்பும் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருப்பவர்கள். இந்த அங்கீகாரம் என்பதில் உள்ள ’அரசியல்’ காரணமாக ஓரங்கட்டப்படுபவர்கள் தமிழ் இலக்கியத் துறையில், குறிப்பாக கவிதைப் பிரிவில் நிறையவே உண்டு. காத்திரமாக தொடர்ந்து கவிதைவெளியில் இயங்கிவந்தாலும் இலக்கியத் திறனாய்வாளர்கள் என்ற அடைமொழியோடு அவ்வப்போது பட்டியலிட்டுக் கொண்டிருப்பவர்களுடைய கருணைவிழிகள் இவர்கள் பக்கம் திரும்புவதேயில்லை! அரசியல்துறையில் உள்ள, திரைப்படத்துறையில் உள்ள பிரபலங்களோடு தான் தோளோடு தோள்சேர்த்து நிற்கும் படங்களைத் திரும்பத்திரும்ப வெளியிட்டுக் கொள்ளாததனால் இருக்கலாம், கவிதைகள் எழுதுவதோடு நில்லாமல் தன் கவிதைகளைப் பற்றிப் பெரிதாகப் பேசிக்கொள்ளத் தெரியாததால் இருக்கலாம். சமூக சீர்திருத்தக் கண்ணோட்டங்களைக் கொண்டு வாழ்ந்துவருபவராயிருப்பினும் அதை வெளிச்சம்போட்டுக் காட்டத்தெரியாததாயிருக்கலாம்; சமூகத்தை உய்விப்பதே தன் கவிதைகளின் முழுமுதற்கடன் என்று உரத்து முழக்கமிடத் தெரியாததாயிருக்கலாம்.
ஊர் அபிமானத்தில், அன்னபிற அபிமானங்களில் சில கவிஞர்கள் ஒருவரையொருவர் திறனாய்வு செய்துகொள்வதும் நடக்கிறது. இதில் தவறேதும் இல்லை. ஆனால், இப்படிச் செய்வதன் மூலம் சில கவிஞர்களே திரும்பத்திரும்ப முன்னிலைப்படுத்தப் படுவதும், நவீன தமிழ்க்கவிதையின் ‘அறங்காவலர்களாக’ பாவிக்கப்படுவதும்’ தொடர்ந்த ரீதியில் நடக்கும்போது அது குறித்து பேசவேண்டிய தேவையேற்படுகிறது.
முப்பது வருடங்களுக்கும் மேல் தமிழ் இலக்கிய வெளியில் இயங்கிக்கொண்டி ருப்பவர். காத்திரமான கவிதைகளையும் படைப்புகளையும் எழுதியிருப்பவர்; எழுதிவருபவர் கவிஞர் ஆசுவின் இதுவரையான மொத்தக் கவிதைகளடங்கிய முழுத் தொகுப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. மேலும், முழுநேர படைப்பாளியாக இருக்கும் கவிஞர்களின் படைப்பியக்கம் கவனம் பெறும் அளவு, சாதாரணத் தொழிலாளியாய் இயங்கியவாறே தன் படைப்பூக்கத்தைப் பறிகொடுக்காமல் தொடர்ந்து எழுதிவரும் கவிஞர்கள் கவனம் பெறுவதில்லையென்றே தோன்றுகிறது. இதற்கு கவிஞர் ஆசுவை உதாரணமாகக் காட்ட முடியும். நல்ல கவிதைகளை ஆர்வமாகப் படிக்கும் வாசகர்கள் அவருடைய இலக்கியப் பங்களிப்பை அறிவார்கள். ஆனால், சமீபத்தில் அவர் அரசு சார்பில் அளிக்கப்படும் தமிழறிஞர் உதவித்தொகைக்கு விண்ணப்பித்தும் அது பரிசீலிக்கப்படாதது குறித்து மிகவும் மனம் வருந்தி எழுதியிருந்த பதிவைப் படிக்க நேர்ந்தது. தமிழறிஞர்களுக்கான அரசு உதவி என்பது பல நேரங்களில் வசதி படைத்தவர்களுக்கே கிடைக்கும் அவலநிலையைப் பற்றி வேறு பலரும் பல்வேறு தருணங்களில் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.
இருப்பும் இன்மையும், போதாமையின் அலைக்கழிதலில், பின்புலம் இல்லாத ஒரு மனிதனில் படைப்பு குடிபுகுந்து விட்டால், மகிழ்வின் தருணமெல்லாம் இனியதின் பொருளாவதில்லை.
நதி அதன் பாட்டுக்கு போவது போல, நான் முப்பதைந்து ஆண்டு காலம் படைப்புக்காக இயங்கி கடந்து கொண்டிருக்கிறேன். என் தடங்கள் கண்ணீரும் கசப்பு நிறைந்தவை எனச் சொல்வதில் யாதொரு வெட்கமும் இல்லை.
என் மனம் நம்பிக்கையின் வேர் பற்றி எங்கேனும் கிடைக்கும் துளி ஈரத்தை வார்த்து, எனக்கான தளிரை பச்சையத்துடனே வைத்திருக் கிறேன். காலத்தின் சாட்சியங்களாக இதுவரை வாழ்ந்த அநுபவத் தின் வாழ்வை நேர்மையுடன் கவிதைகள் கதைகள் எனக்குத் தெரிந்த, கைக்கூடிய மொழியில், நான் கண்டதையும் காணக்கூடிய தையும் எழுதி வருகிறேன்.
என்று சமீபத்தில் வெளியாகியுள்ள தனது முழுக்கவிதைத் தொகுப்பு குறித்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர் ஆசு.
இதுவரை இவருடைய எட்டு கவிதை நூல்கள், நான்கு சிறுகதை நூல்கள், 209 - கவிஞர்களின் கவிதைகளின் கவிச்சித்திரம் இரண்டு நூல்கள், உரைச் சித்திர நூல் ஒன்று என 15-நூல்கள் வெளியாகியுள்ளன. இவை இன்னும் கூட வேண்டும் அதற்கான சூழல், பெருங்கனவு வெளியாக ஆக வேண்டும் என்பதே என் அவா என்று ஆர்வமும் நம்பிக்கையுமாகக் கூறும் கவிஞர் ஆசுவின் இயற்பெயர் ஆ .சுப்பிரமணியன். 5-10-1961இல் விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டத்தைச் சேர்ந்த முன்னூர் என்ற இடத்தில் பிறந்தவர் தற்சமயம் சென்னையிலுள்ள அம்பத்தூர் ஒரகடம் பகுதியில் வசித்துவருகிறார். கடைசல் இயந்திரப் பணியாளராகப் பணியாற்றிவரும் இவர் வேலை, குடும்பம் ஆகிய பொறுப்புகளை செவ்வனே நிறைவேற்ற அயராது பாடுபட்டுவருகிறார். அவற்றி னூடாய் முப்பது வருடங்களுக்கும் மேலாக அவருடைய காத்திரமான இலக்கியப் பங்களிப்பும் தொடர்கிறது. இவருக்கு.
ஆசுவின் கவிதைகள் சில
ஒரு கரித்துண்டில்
எத்தனை கங்குகள்
எரிந்து அடங்கியிருக்கும்
ஒரு சுடரில்
எத்தனை ஒளிச்சேர்வை
கூடியிருக்கும்
ஒரு பூவில் எத்தனை
மகரந்தங்கள் சூழ்ந்திருக்கும்
ஒரு கனியில்
எத்தனை சுவை தித்திப்பாய் இருக்கும்
ஒரு நட்பில்
*
சன்னலை
அழுத்தி மூடாதீர்கள்
மூடும்போதும்
திறக்கும்போதும்
மிக மென்மையாக
கையாளுங்கள்
அந்த சன்னல் இடுக்குக்குள்
காற்றொன்று நசுங்கிக் கேவுவதை
நாம் அறிய முடியாதெனினும்,
ஒவ்வொரு சன்னலை அறைந்து
மூடவும் திறக்கையில்
அதன் வலி உணருவதாய்
சற்று முன் அதன் மீதமர்ந்த
சின்னஞ்சிறு குருவி கீறிச்சிடுவது
காதுகளில் கேட்கத் தான் செய்கிறது.
காற்றே
சன்னலுக்கு வெளியே
இருந்துவிடுயென,
அருகிலிருக்கும் மரம் சொல்கிறது
என்ன சொன்னாலும் தலையாட்ட
காற்றுக்கு மட்டுமே தெரிகிறது
இன்னும் அறிவொன்றும் முளைக்காத
காற்றின் குரல்
யாருக்கும் கேட்காவிடினும்
சன்னல்கள் இல்லாத வீட்டில்
காற்றுக்கு
காற்று தான் ஜீவன்
*
அய்யனாரின் புரவிகள்
மனிதர் அற்ற
ஊரின் ஆற்றின் கரையில்
அய்யனார் புரவி மீது அமர்ந்து
காவலிருக்கிறார்
களவுப்போகும் புரவிகளுக்காய்
ஆற்றின் கரையில்
புரவி மீது அமர்ந்தவர்
ஒரு நாள் அடைமழையில்
அவர் அமர்ந்த புரவியை
மழையே களவாடியது
மீண்டும் அவர் எதிரேயிருந்த
ஏழெட்டுப் புரவிகளில்
ஒரு புரவி மீதமர்ந்த
அய்யனார் புரவியும்
வெயில் உரித்து
வெய்யிலே களவாடியது
மீந்த ஒன்றிரண்டுப் புரவிகளையும்
புயல் வெறித்து களவாடின
திகைத்த அய்யனார்
அச்சத்தின் பீதியில்
தானே ஒரு புரவியாகியப் பொழுதில்
தானும் அதுவுமாக காவலிருந்தார்
மனிதர் அற்ற ஊரின் ஆற்றின் கரையில்
அய்யயனார் ஏன்? புரவி மீது
அமர்ந்து காவலிருக்கிறார்
கள்வர்கள் இல்லாத ஊரில்
களவுப்போகும் புரவிகளுக்காய்...
மழை வெய்யில் புயல்
ஏன்? கள்வர்களாயின
களவாடப்படும் சீற்றங்கள்
நெறித்தலில்
திமிறும் காலத்தின் எச்சம்
அய்யனாரின் வீச்சரிவாளில்
உறைந்த ஒரு சொட்டு குருதியில்
சமன்படுத்தி நீளும் அறத்தில்
கணைத்து எழுகின்றன
களவாடப்பட்ட புரவிகள்
*
இரவு வேளையில்
நகரத்தில் சாலையை
குறுக்காக கடப்பது எளியதானயில்லை
யாரோ ஒருவரின் அரவணைப்பில்
போகவேண்டியதாயிருக்கிறது
சாலையில் போகும் உந்துகளின் விளக்குகள்
நட்சத்திரங்களாய்க்
கண்ணைப் பறிக்கின்றன
வானம் தரையிறங்கியது போல.
பூக்கூடை சுமந்து சாலையை
கடக்கும் அவளும் நட்சத்திரங்களை
சுமக்கிறாள்.
இரு நட்சத்திரங்களை சுமந்து
சாலையைக் கடக்கிறேன்
சாலையெல்லாம்
நட்சத்திர கண்களாக.
ஆசு
*
எனக்குத் தெரியும் என்பதெல்லாம்
உங்களுக்கும் முன்னேயே
தெரியும் தானே!
நெடும் வழியில் மயக்கமுற்று
சுருண்டு தரைபாவி விழும் மனிதனை நான் அறிகிறேன்
முதன் முதலாய்,
இதற்கு முன்னர் அறியாதவர் என்பதால்
அவரை விட்டுட்டு போக முடியுமா?
எல்லோருக்கு இங்கு அவர் தெரிந்திருக்கலாம்.
எனக்கு அவர் தெரியாதவர் எனினும்,
இந்நிலையில் அவர் தானே முக்கியம்
ஒரு துளி நீர் போதும்
ஒரு துளி அணைத்தல் போதும்
ஒரு துளி பதற்றம் போதும்
ஒரு துளி தான் அன்பென
அவரில் உறைந்துவிட.
கவிஞர் ஆசு - விவரக்குறிப்புகள்
பிறந்த ஊர்: முன்னூர்
திண்டிவனம் வட்டம்,
விழுப்புரம் மாவட்டம்.
தற்போது வசிக்கும் ஊர் :
சென்னை, அம்பத்தூர், ஒரகடம்.
குடும்பம் :
சு.மஞ்சுளா என்கிற மனைவியும், சு.சித்தார்த்தன், சு.தமிழ்ச்செல்வன் என்கிற மகன்கள்.
சு.பிரியா மகள், மூத்த மகனுக்கு திருமணமாகி, ஹேமலதா என்கிற மருமகளும் பேரன் குகனும் உள்ளனர்.
கல்வி : S. S. L.C,....iTi...
தொழில் : கடைசல் இயந்திரப் பணியாளர்.
எழுதிய நூல்கள்
கவிதைகள்
1. ஆறாவது பூதம்
2. என்றொரு மெளனம்
3. ஈரவாடை
4. குரல்களைப் பொறுக்கிச் செல்கிறவன்
5. நேசித்தவனின் வாழ்வுரை
6. தீண்டும் காதலின் சொற்கள்
7. நிலம் பருகும் மழை
சிறுகதை நூல்கள்
8. அம்மாக்கள் வாழ்ந்த தெரு
9. நாட் குறிப்பில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்
10. கடந்து போகிறவர்களின் திசைகள்
11. செல்லி
கவிச்சித்திர நூல்கள்
12. திறந்திருக்கும் சன்னலுக்குள் ஓடிக்கொண்டிருக்கும் நதி.
(102 - கவிஞர்களின் கவிதைகளின் உரைச் சித்திரம்)
13. ஆகாயத்தை அளந்த பறவைகளின் தடங்கள்
(107-கவிஞர்களின் கவிதைகளின் உரைச் சித்திரம்)
வெளிவர இருக்கும் நூல்
14. மயிலிறகு வாசிக்கும் புத்தகம்
(உரைச்சித்திரம்)
கைப்பிரதியாக உள்ள நூல்கள்
ஒரு சிறுகதை தொகுப்பு ஒரு கவிதை நூல்.
பெற்ற விருதுகள்
1. இலக்கிய வீதி இனியவனின் அன்னம் விருது
2. கவிக்கோ துரை.வசந்தராசன் அவர்களின் பண்ணை தமிழ்ச்சங்க விருது.
3. கவிஞர் செஞ்சி தமிழினியனின் விதைநெல் விருது .
ஃபேஸ்புக்கில் ஆசு கவிதைகளைப் பற்றி Sakthiarulanandham Sakthi பின்வருமாறு எழுதியிருக்கிறார்:
”தமிழ்க்கவிதை பரப்பில் படிப்பாளிகள் மட்டுமல்ல உழைப்பாளிகளும் பங்களித்து வருகிறார்கள்.அமைப்புசாரா தொழிலாளர்கள் என்று ஒரினம் உண்டு.வேலை பாதுகாப்பு,பணி ஒய்வுத்தொகை,பணி நேர வரையறுப்பு என எதுவுமற்று உழைத்து தேய்பவர்கள்.கடைகளில் பணி செய்பவர்கள் அமர முடியாது, கழிவறை வசதி இருக்காதென எத்தனையோ தொல்லை கள்.அவற்றுக்கு நடுவிலும் தங்கள் படைப்பூக்கம் குறைந்து போகாது தொடர்ந்து இயங்குபவர்களுள் தோழர் ஆசுவும் ஒருவர்.லேத் பட்டறை யில் கடைசல் தொழிலாளர்.சக படைப்பாளிகளை கொண்டாடு பவர். முகநூலில் தான் படித்து இரசித்த கவிதைகளை சொற்சித்திரங்களாக்கி தொகுப்பாக கொண்டு வந்தவர்.கலைஞன் பதிப்பகத்திற்காக சமகால படைப்பாளிகளின் படைப்புகளை தொகுப்பாக்க உழைத்தவர். கவிதை, சிறுகதைஆகியவற்றுடன்,சின்னஞ்சிறு நவீன கதைகளை முகநூலில் எழுதி பாராட்டுகள் பெற்றவர்.’’
சமீபத்தில் வெளியாகியிருக்கும் தனது முழுக்கவிதைத் தொகுப்பு குறித்து கவிஞர் ஆசு இவ்வாறு கூறியுள்ளார்:
"என்னுடைய 35 - ஆண்டு கால உழைப்பு இத்தொகுப்பு. என் கவிதைகளின் முழுத் தொகுப்பும் மானுடத்தின் வலிகளை தமிழ்க் கவிதையில், நான் அறிந்தவரை பதிவு செய்துள்ளேன், நட்புகள் தோழமைகள், உறவுகள் எல்லோரும் இத்தொகுப்பை வாங்கி ஆதரிக்க வேண்டுகிறேன். இந்தக் கவிதைகள் என்னுடையது எனிலும், இது ஒரு வாழ்க்கை மட்டுமில்லை. எல்லோரின் வாழ்வுக்கானது என்பதை, நெஞ்சு நிமிர்த்தி சொல்வேன்’’.
கவிஞர் ஆசுவின் கவிதைகளைத் தொடர்ந்து படித்துவரும் வாசகராக, அவ்வப்போது அவருடைய சில கவிதைகளை விரும்பி மொழிபெயர்க் கும் மொழிபெயர்ப்பாளராக அவருக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துகள் உரித்தாகின்றன.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.