நீர்கொழும்பு மாண்மியம்- ஒரு சந்திப்பும் சில நினைவுகளும்! - பூங்கோதை -
அவுஸ்திரேலியா - மெல்பேர்னிலிருந்து எமது மூத்த ஊடகவியலாளர், எழுத்தாளர், நீர்கொழும்பை பூர்வீகமாகக் கொண்ட, திரு முருகபூபதி இங்கிலாந்து வருகையின் போது , ஏறத்தாழ நாற்பது வருடங்களின் பின் ஒரு குடும்ப உறவினராக என்னைச் சந்தித்துக் கொண்டது மனதை நெகிழ வைத்தது. பேசுவதற்கும் பழகுவதற்கும் மிக இனிமையான மனிதர். பல இலக்கிய விருதுகளை வென்றதற்கான கர்வம் எதுவும் இல்லாதவர். நான் உரிமையுடன் சிறு வயதில் பார்த்துப் பழகியவர்.
என் வாழ்வில் மிக இனிமையான வசந்த காலம் என்றால் அது நான் என் பெற்றோரோடு நீர்கொழும்பில் வாழ்ந்த காலப்பகுதி தான். இன, மத, மொழி வேறுபாடுகள் இன்றி அனைத்து மக்களும் ஒருவருக்கொருவர் அன்போடும் விட்டுக் கொடுத்தலோடும் அழகான ஒரு சமூகக் கட்டுமானத்தை அங்கு அமைத்திருந்தார்கள்.
நீர்கொழும்பில் எம்மோடு வாழ்ந்த அநேகமான பல தமிழ், சிங்கள, முஸ்லிம் மற்றும் ஏனைய கலப்பு இனக் குடும்பங்களை இன்று வரையும் நான் நினைவில் வைத்திருந்தாலும், பல விடயங்கள் மறந்தும் போயிருந்தன.
வந்தாரை வாழ வைக்கும் சிங்கார நீர்கொழும்பில் தான் எனது தாயும் தந்தையும் தமது திருமண வாழ்வை 1966ம் ஆண்டில் ஆரம்பித்திருந்தனர். ஆனால் அதற்கு முன்பே என் தந்தை அங்கு தனது மூத்த சகோதரர் திரு செல்லத்துரையுடன் காலணிகள் விற்கும் தொழிலை ஸ்தாபித்திருந்தார்.