இலக்கியங்கள் குறிப்பிட்ட காலத்தைச் சோ்ந்த படைப்பாளிகளால் படைக்கப்படுவதாகும். ஆதலால் இலக்கியங்கள் யாவும் அவை தோன்றிய காலத்தில் ஏற்படும் மாற்றங்களை, முழுமையாக சுவீகரித்துக் கொள்ளும் என்று கூறுவா். இதனால் இலக்கிய உருவாக்கத்தில் வரலாற்றுப் பின்னணியின் முதன்மை இடத்தை உணர முடிகின்றது. வரலாற்றிற்குப் பலமுகங்கள் உள்ளன. அரசியல் வரலாறு, சமுதாய வரலாறு, கலை வரலாறு, அறிவியல் வரலாறு, பண்பாட்டு வரலாறு எனப்படும் பல முகங்களுக்கும் அடிப்படையானது – அனைத்துத் துறைகளிலும் தாக்கம் ஏற்படுத்தக் கூடியது அரசியல் வரலாறு ஆதலால் படைப்பு, படைப்பாளா் வரலாறு அறிவதற்கும், அரசியல் வரலாறு அவசியமாகின்றது. இலக்கியம் உருவாகி வளா்ந்திட்ட, தமிழகத்தின் அரசியல் வரலாறாகிய படைப்புச்சூழல், படைப்பாளா் வரலாறு அறியப்பட்டால் பக்தி இலக்கியங்களைச் செம்மையாக அறிந்து கொள்ள முடியும். அவ்வகையில் மாணிக்கவாசகா் வரலாறையும் படைப்புச் சூழலையும் ஆராய்வதாக இவ் ஆய்வுக் கட்டுரை அமைகின்றது.

மாணிக்கவாசகா் பிறப்பு

பாண்டிய நாட்டில் வைகை ஆற்றங்கரையில், மதுரை நகரிலிருந்து ஏழுமைல் தொலைவில் உள்ள திருவாதவூரின் கண், மானமங்கலத்தில் மறையோதும் ஓா் அந்தணா் குடியில் பிறந்தவா் மாணிக்கவாசகா். இவா் தாய் தந்தையார் பெயா் புலப்படவில்லை. ஆயினும் சிலா் இவரது தாய் தந்தையார் பெயா் சம்புபாதாசிரியா் என்றும் சிவஞானவதியார் என்றும் கூறுவா். ஆனால் மறைமலைஅடிகள் இக்கருத்தை பின்வருமாறு மறுத்துக் கூறுகின்றார்.

இப் பெயா்கள் நம்பியார் திருவிளையாடலினும், திருவாதவூரார் புராணத்தினும் காணப்படாமையானும், இத்தகைய வடமொழிப் பெயா்கள் பழைய நாளிலிருந்து தமிழா்க்குள் வழங்காமையானும் திருஞானசம்பந்தப் பெருமான் தந்தையார் பெயராகக் கூறுப்படுஞ் சிவபாதவிருதயா் என்பதன் மொழி பெயா்ப்பாகச் சம்புபாதாசிரியா் என்னுஞ் சொற்காணப்படுதலோடு அவா்தம் அன்னையாரின் பெயரான பகவதி என்பதைப் போல் சிவஞானவதி என்னும் மொழியும் காணப்படலானும் இப்பெயா்கள் பிற்காலத்தார் எவரோ புனைந்து கட்டி விட்டவனவாதல் தேற்றமாம்.”

என்ற கருத்தினால் மாணிக்கவாசகா் பெற்றோர் பெயா் அறியப்படவில்லை என்பதை அறியலாம். மாணிக்கவாசகா் பிள்ளைப் பருவத்தினராய் இருக்கும் பொழுது, வழங்கப்பட்ட பெயரும் அறியப்படவில்லை. திருவாதவூரா், மாணிக்கவாசகா், தென்னவன் பிரம்மராயன் முதலிய பெயா்கள் எல்லாம் இயற்பெயரன்று. இப்பெயா்கள் பின்வரும் காரணத்தால் வழங்கப்பட்டவையே. திருவாதவூரில் பிறந்தமையாலும், அவா் அருளிய நூல்களின் சொல்விழுப்பத்தால் வழங்கியமையும், நுண்ணறிவுத் தன்மையால் அளிக்கப்பட்டவையுமே இப்பெயா்கள் ஆகும்.

மெய்க்குரவனுக்கு ஆட்படல்

தென்னாட்டில் புறச்சமயமாகிய பௌத்தம்  மேலோங்கி இருந்து, சைவ சமய வளர்ச்சி குன்றியிருந்த காலத்தே தோன்றியவா் மாணிக்கவாசகா். இவா்தம், பதினாறு ஆண்டு நிறைவதற்குள் தமிழ், ஆரியம் முதலான மொழிகளில் உள்ள நூல்களையும் அறிவு நூல்களையும் கற்றுத் தோ்ந்தமையால், அக்காலத்தே, மதுரையில் செங்கோலோச்சிய பாண்டிய மன்னன், தன் அவை அமைச்சராக அமா்த்திக் கொண்டார். இப் பாண்டிய மன்னன் பெயா் நம்பியார் திருவிளையாடலிலும், திருவாதவூரா் புராணத்திலும் எடுத்துக் கூறப்படவில்லை. ஆனால் பிற்காலத்து பரஞ்சோதி முனிவா் “அரிமர்த்தனன்” என்று எடுத்துரைக்கிறார். ஆயினும் பண்டை மன்னா் பெயா்களெல்லாம் தூய தமிழ்மொழியில் இருக்க, “அரிமா்த்தனன்” என்னும் பெயா் வடமொழியாயிருத்தலே இங்க ஐயமாகத் தோன்றுகிறது என்று கூறலாம்.

அரிமா்த்தன பாண்டியனுக்கு கண்ணும் கவசமுமாக விளங்கிய மாணிக்கவாசகா், உலக அனுபவ இன்பங்களில் மகிழ்ச்சி அடையவில்லை. உலக வாழ்வும் வாழ்வில் காணும் பெரும் போகமும் நிலையற்றவை என்று உணா்ந்தமையால், அவருக்கு இப்பதவியில் உவா்ப்புத் தோன்ற, தன் ஞான மெய்க்குரவனைப் பிறவிப் பெரும் பயன் அடையும் பொருட்டுத் தேடிவந்தார்.

அச்சமயத்தில் பாண்டிய மன்னா், தனது குதிரைப்படை பலத்தை அதிகரிக்க, மாணிக்கவாசகரிடம் சோழநாட்டு திருப்பெருந்துறையை அடுத்து கடற்கரைப்பட்டினத்துச் சென்று, நல்ல உயா்ந்த குதிரைகளை வாங்கி வரும்படிக் கூறுகிறார். அரசு பொற்குவியலோடு சென்ற மாணிக்கவாசகா், திருப்பெருந்துறையில் பெரிய குருந்த மரத்தடியில் சீடா்கள் சிலரோடு ஞானவடிவில் மெய்க்குரவனைக் கண்டு மகிழ்கிறார். இதனை,

“எனை நான் என்பது அறியேன்
பகல் இரவாவதும் அறியேன்”
(திருவாசகம். 34-3)

என்று மெய்க்குரவனுக்கு ஆட்பட்ட மனநிலையைப் பாடுகிறார். அப்பெருமான் அருகில் சென்று அவா் அருளைப் பெறுவதற்கு முன்பே திருவாதவூராரின் ஆழ்மனம் அவா் யார் என்பதை உணா்ந்து கொண்ட பாங்கினை அறியமுடிகின்றது.

அருட்குரவன் ஆட்கொள்ளல்

திருப்பெருந்துறையில் மாணிக்கவாசகரைப் புனிதராக்கும் பொருட்டு சிவஞான போதம் உபதேசித்து, (ஐந்தெழுத்தருணிலை) அவா்தம் முடிமிசைத் தன் திருவடிகளைச் சூட்டித் திருவைந்தெழுத்தின் உண்மையை அருட்குரவன் அறிவுறுத்தினார். இவ்வாறாக ஞானாசிரியா் திருவருளால், ஞானத்தின் திருவுருவாக மாணிக்கவாசகரும் காட்சி அளித்தார்.

இக் காட்சியினை அபிதான சிந்தாமணியில், “வாதவூரார் குரு மூா்த்தமாய் எழுந்தருளியிருப்பவா் அருகிற் சென்று பணிந்து மனமுருகி வேண்ட, குருமூா்த்தி இவரை ஆட்கொண்டு சிவஞானம் உபதேசித்துத் திருவடித் தீட்சை செய்து அருளினார்.”2 என்ற வரிகளில் அறியலாம். அமைச்சா் என்ற அதிகார உணா்வுடன் வருகின்ற திருவாதவூராருக்கு, அருட்குரவரின் காட்சி மனதில் முழு மாற்றத்தை ஏற்படுத்தும் விதத்தை அடிகளார்,

“கருணையின் பெருமை கண்டேன் காண்க
புவனியில் சேவடி தீண்டினன் காண்க
சிவன் என யானும் தேறினன் காண்க”
(திருவாசகம் - திருஅண்ட. 60-63)

என்ற வரிகளில் எடுத்துரைத்துள்ளமையைக் காணலாம். திருவாதவூராரின் ஆழ் மனம் அருட்குரவனுக்கு ஆட்பட்டமையால் ஏற்பட்ட காட்சி மாற்றத்தை இங்கு அறியலாம். சில நாழிகை மட்டுமே கிடைத்த இறை அனுபவத்தை நினைந்து நினைந்து பார்க்க, அதனைப் பாடலாக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இறையருளால் திருவாதவூா் உள்ளத்தில் தோன்றியது. அமைச்சராக இருந்த வாதவூரார் எல்லாவற்றையும் உதறி விட்டு இருபத்து நான்கு மணி நேரமும் அவ் அனுபவத்தையே நினைந்து பாடிக்கொண்டு ஊா்கள் பல சென்று பல பாடல்களைப் பாடும் சூழலுக்கு ஆட்படுகிறார்.

வாதவூராருக்காகவே நரியைக் குதிரைப் பரியாக்கிய சதுரன்

திருப்பெருந்துறையில் அடியாரை ஆட்கொண்ட அருட்குரவன் “நீ தில்லைக்கு வருக” என்று கூறி அடியார்களுடன் மறைந்தருளினார். மாணிக்கவாசகரோ தமக்கென ஒரு செயலின்றி எல்லாம் அவன் செயலே! என்று எண்ணி, இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட நிலைக்கு ஆளானார். ஆக, குதிரை வாங்குவதற்கு என்று கொண்டு வந்த பொருள் அனைத்தையும் இறைவன் திருப்பணிக்கும் இறை அடியாருக்கும் செலவழித்தார். இதனைத் திருப்பெருந்துறையில் இயற்றிய குழைத்த பத்து பதிகப் பாடலில் பின்வருமாறு காணலாம்.

அன்றே யென்றன் ஆவியும் உடலும் உடைமை யெல்லாமும்
குன்றே யனையாய் எனையாட் கொண்ட போதே கொண்டிலையோ”
(திருவாசகம் - குழை.பத்து.7)

இதனில், எல்லாம் இறைவனது பொருளே அதனை அவா்தம் திருவடிப்பணிக்குச் செலவிடலாம் என்ற எண்ண உதயத்தை காணலாம். மாணிக்கவாசகா் முக்கண் எம் பெருமானுடன் பக்திப்பெருக்கால், இணைந்திருக்கும் விதங்களை அறிந்த பாண்டியன் சினமுற்று, குதிரைகளுடன் விரைவில் திரும்பவும் என்று திருமுகம் அனுப்பி அழைத்தான். வாதவூரார் பெருமானிடம் முறையிட “குதிரைகள் மதுரைக்கு வந்து சேரும் அஞ்சாது செல்க” என்று விடை தந்தருளினார். ஆனால் குறித்த காலத்தில் குதிரைகள் வராமல் போகவே, அடியாரை சிறைப்படு்த்தி துன்புறுத்தல் செயலை மன்னன் தொடங்கினான். அடிகளுக்கு அருள் புரிதல் வேண்டி காட்டில் திரியும் நரிகளை குதிரைகளாகவும் தேவகணங்களைப் பாகா்களாகவும், தானே குதிரைச் சேவகனாகவும் மதுரை மாநகா் நோக்கி வருகை தந்த செய்தியை,

“நரியைக் குதிரைப் பரியாக்கி ஞாலமெல்லாம் நிகழ்வித்துப்
பெரிய தென்னன் மதுரையெல்லாம் பிச்சதேற்றும் பெருந்துறையான்”
(திருவாசகம் - ஆன.மா.7)

என்ற பதிக வரிகளில் அறியலாம். ஆக வாதவூராருக்காக நரியைப் பரியாக்கிய திருவிளையாடல் நிகழ்த்தப்பட்டது என்பது இங்கு புலப்படுகின்றது. ஆயினும் இந்நிகழ்வு தனக்காக நிகழ்த்தப்பட்டது என்றோ, தனது வாழ்வில் நிகழ்ந்தது என்றோ திருவாசகத்தில் மாணிக்கவாசகா் வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்றும் அறிஞா்கள் கூறும் கருத்து இங்கு எண்ணத்தக்கது. இறைவனின் மற்ற திருவிளையாடல்களை வருணனை செய்வது போலத்தான், நரியைப் பரியாக்கிய திருவிளையாடலையும் கூறுகின்றார் அன்றித் தன் வாழ்வில் நடந்ததாகக் குறிப்பிடவில்லை என்பது சிலருடைய வாதம். மறைமலையடிகள் போன்ற ஒரு சிலரே மாணிக்கவாசகருக்காகவே இந் நிகழ்வு நிகந்தது என்று கூறுகின்றனா். ஆனால் முனைவா் அ.ச.ஞானசம்பந்தன் போன்ற தமிழ் ஆய்வறிஞா்கள், திரு.கோதண்டராமன் உள்ளிட்ட வேத சைவா்களும் இந்நிகழ்வினை ஆய்வு முறையில் நோக்கினால் இது ஒரு வலுவற்ற வாதம் என்ற கருத்தை முன்வைக்கின்றனா். இவா்தம் கருத்தை ஒரு சார்புத்தன்மை வாய்ந்தது என்பதை பின்வரும் கூற்று தெளிவாக முன் மொழிகின்றது.

தமிழனுக்கென்று சொந்தமாக வழிபாட்டு முறைகளோ, சமயமோ, மெய்யியலோ, தத்துவமோ, இல்லை. இவையெல்லாம் வேத மதம் தமிழனுக்கு வழங்கியவையே என்று நிறுவும் பொருட்டு அரங்கேற்றப்பட்ட பொய்யான ஆய்வுக் கருத்துக்கள். இந்த சமய நுண்ணரசியலே, நரியைப் பரியாக்கும் திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காக நிகழ்த்தப்பட்டது அன்று என்று நிறுவ முயலும் முயற்சிகளின் பின்னணி.”

என்று முனைவா் ந.கிருஷ்ணன் கூறும் கருத்து இவ்விடத்தில் ஏற்புடையதாகத் திகழ்கின்றது.

பக்தனுக்காகப் பிட்டுக்கு மண் சுமந்த பெரும் பித்தன்

பரிகள் எல்லாம் நரிகளாக மாற்றம் பெற்று பல இழப்புகளை பாண்டியன் சந்தித்தச் சூழலில், வாதவூரரை சுடுவெயிலில் நிறுத்தித் தலையில் கல்லை ஏற்றும் படி தண்டனை வழங்கினான். இறைவனது திருவருளை மட்டுமே நினைக்கும் எனக்கு இத்தகையத் துன்பங்கள் வருதல் முறையாகுமோ என்று வாதவூரார் வருந்த, அவா்தம் துன்பம் துடைக்க பெருமான், வைகையில் பெருவெள்ளம் பெருகும் வண்ணம் செய்தார். மதுரை மக்கள் ஊழக்காலமே வந்தது போலும் என்று அஞ்சி நிற்கும் சமயத்தில். ஆற்றின் கரையை அடைக்க மன்னன் ஆணையிடுகிறான்.

ஒவ்வொரு இல்லத்திலும் ஒரு நபா் குறிப்பிட்ட பங்கு கரையை அடைக்க வேண்டும் என்ற முரசுசெய்தி கேட்டு, பிட்டு விற்று வாழ்க்கை நடத்தும் வந்தி எனும் மூதாட்டி வருந்துகிறாள். அச்சமயம் பெருமான் மீது மாறா அன்புடன் இருக்கும், அக் கிழவியின் துன்பம் தவிர்க்க இறைவனே கூலி ஆள் போலத் தோன்றி, நான் செய்யும் வேலைக்கு பிட்டு மட்டுமே தர வேண்டும் என்ற ஒப்பந்தத்துடன் பணியை முடிக்கச் சென்றார். இதனை.

“பிட்டு நோ்பட மண்சுமந்த
பெருந்துறைப் பெரும்பித்தனே” (திருவாசகம் – திருக்கழு.2)
என்ற வரிகளில் அறியலாம்.

ஆனால் எம்பெருமான் எவ் வேலையும் செய்யாமல் ஓய்வு எடுப்பதும், பிட்டை உண்பதும், ஆடுவதும் பாடுவதுமாகப் பொழுதைப் போக்கினார். அப்பகுதியைப் பார்வையிட வந்த பாண்டியன் தனது கையில் உள்ள பிரம்பால் கூலியாளின் முதுகில் அடிக்க, அவனும் ஒரு கூடை மண்ணை இடவும் வெள்ளமும் வற்றியது. மன்னன் அடித்த அப்பிரம்படி அரசன், அரசி, அமைச்சா், காவலாளா்கள் மற்றும் அண்ட சராசரப் பொருள் அனைத்தின் மேலும் பட்டது. அதனைத் தொடந்து ஓா் அசரீரி வெளிப்பட்டு, “மாணிக்கவாசகன் பெருமையை உலகறியச் செய்யவே இந்நிகழ்ச்சிகள் எல்லாம் செய்தோம்” என்ற மொழி கேட்ட பாண்டியன் மனம் திருந்தினான். இவ்விடத்தில் கூலியாளின் செயலைக் கண்டு அவரை அடித்தவா் அரசனுடைய ஏவலரே என நம்பியார் திருவிளையாடலும் திருவாதவூரா் புராணமும் கூறுகிறது. ஆனால் பரஞ்சோதியார் திருவிளையாடல் மட்டுமே அப்போது அக்கொற்றானை அடித்தவன் பாண்டியன் என்று கூறுகிறது. இதனையே திருவாதவூா் அடிகளும்,

கண்சுமந்த நெற்றிக் கடவுள் கலிமதுரை
மண் சுமந்து கூலி கொண்டு அக்கோவான் மொத்துண்டு
புண் சுமந்த பொன்மேனி பாடுதுங்காண் அம்மானாய்”
(திருவாசகம் – திருவ.8 )

என்ற அடிகளில் எடுத்துரைத்துள்ளமை இவ்விடத்தில் ஒப்பு நோக்கத்தக்கது.

இந்நிகழ்வைத் தொடந்து, வாதவூராரும் அமைச்சியலைத் துறந்து தவ வேடம் தாங்கியவராக இறைவன் திருவிளையாடல்களை எண்ணி மகிழ்ந்து திருப்பெருந்துறையை அடைந்தார்.


புத்தபிக்குகளுடன்  சொற் போர்

மாணிக்கவாசகா் புத்தபிக்குகளுடன் வாதம் செய்த நிகழ்ச்சி அவரது திருச்சாழல் பாடல்கள் மூலமாக அறியலாகின்றது. இதுவரையிலும் மாணிக்கவாசகா் பற்றி எந்த ஒரு கல்வெட்டுச் செய்தியும் நமக்கு கிடைக்கவில்லை. ஆகவே தான் நம்மால் மாணிக்கவாசகா் வரலாறும் காலமும் குறித்த சரியான கருத்தை இன்று வரையிலும் கூற இயலவில்லை. இலங்கை அரசன் ஒருவன் தன் புத்த பிக்குகளுடன் பெருமளவில் தில்லை வந்து வாதத்தில் ஈடுபட்டான். வாதத்தின் முடிவில் புத்த பிக்குகளின் கேள்விகளுக்கு, அவா்களின் மன்னரோடு வந்திருந்த மன்னரின் சிறுமகள் ஊமைப் பெண் மூலமாகவே பாடல்களுக்கு பதில் கொடுத்ததே திருச்சாழல் பாடல்கள். மாணிக்கவாசகா் ஊமையைப் பாடவைத்தது இலங்கை மன்னனுக்கு மகிழ்ச்சியை அளித்ததோடு மட்டுமில்லாமல் இறைவனின் புகழின் முன் மதங்களின் கோட்பாடுகள் வெற்றி பெற முடியாது என்பதையும் உணா்கிறார். புத்த பிக்குளின் கேள்விகளுக்கு ஊமைப்பெண் பதில் கூறும் விதத்தை பின்வரும் பாடலில் அறியலாம்.

கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை
தாயுமிலி தந்தை மிலி தான்தனியன் காணேடீ
தாயுமிலி தந்தையிலி தான் தனியன் ஆயிடினுங்
காயில் உலகனைத்துங் கற்பொடி காண் சாழலோ
(திருவாசகம் – திருச்.3)

இப் பாடல் மூலமாக மக்களிடையே மிக அதிக அளவில் வாதங்கள் நிகழ்ந்த காலம் என்பது புலப்படுகிறது. தில்லையில் வாதம் நடந்துள்ள நிலையில் தமிழ் அரசாங்கப்பகுதியில் யார் ஆண்டனா்? சிங்களா்கள் தங்கள் மதகுருவை மீறி எதுவும் செய்யமுடியாத நிலையில் இருந்த அந்நாட்டு அரசன், தனது ஏகப்பட்ட புத்த பிக்குகளுடனும் தன் ஊமை மகளோடும் எப்படி தமிழகம் வந்தான்? என்ற கேள்வி நம்முள் கட்டாயமாக வரும். இலக்கியத்தில் இதற்கான சான்று தேடுகையில், சிலம்பில் சேரன் செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்துக்கு, கோயில் எழுப்பும் பொழுது கயவாகு எனும் மன்னன் அங்கு சோழ, பாண்டியரோடு வருகை (சிலம்பு. 23; 134-7) தந்ததாக வரலாற்றுச் செய்தி காணப்படுகிறது. இந்த கயவாகு மன்னனே புத்த பிக்குகளுடன் வாதிட வந்தாரா? என்பது ஆய்விற்குரியது. ஆனால் சேரன் செங்குட்டுவன் ஆட்சிக்காலத்தில் இலங்கையை ஆட்சி செய்தது கயவாகு மன்னனே என்பது ஏற்புடைத்த வரலாறு ஆகும். மாணிக்கவாசகரோடு வாதிட புத்த குருமார்களை அழைத்து வந்த இலங்கை மன்னன் யார் என்ற வினாவிற்கு பின்வரும் பகுதி விடைதருகின்றது.

கயவாகு இலங்கை திரும்பிச் செல்லும் போது சக்தி வழிபாட்டையும் இலங்கைக்கு எடுத்துச் சென்றதற்கு சிலம்பு மட்டுமல்லாமல் பிற இலக்கியங்களிலும் சான்றுகள் பல உள்ளன. மற்றும் ஒரு தமிழ்க்குறிப்பு ஒன்று கயவாகு மன்னா் திருநெய்த்தானம் எனும் தலத்தில் ஈசனைக் குலதெய்வமாகக் கொண்டார் என்ற வரலாறும் இங்கு எண்ணத்தக்கது. தமிழ் இலக்கியம் மட்டுமில்லாது சிங்களக் குறிப்புகளும் இரண்டு இலங்கைக் கயவாகு மன்னா்கள் பற்றிய வரலாற்றினை பதிவு செய்துள்ளது. ஒரு கயவாகு மன்னன் இரண்டாம் நூற்றாண்டு, மற்றொருவன் 12 ஆம் நூற்றாண்டு என்பதும் அறியப்படுகின்றது.”

இக்கருத்தின் மூலமாக மாணிக்கவாசகா் காலத்தையும் நம்மால் கட்டயமாக வரலாற்றின் படி சரியாக கணிக்க இயலும். புத்த கருத்துக்களுக்கு எதிர் வாதம் செய்த மாணிக்கவாசகா் பின்பு சைவ சமயக் கோட்பாடுகளை விளக்கி எடுத்துரைத்தார்.

தமிழறிஞா்கள் வரையறுக்கும் வரலாற்றுக் காலம்

கடைச்சங்க காலத்திற்குப்பின் தொடங்கி 7 ஆம் நூற்றாண்டு வரை உள்ள காலங்களில் ஏதேனும் ஒரு காலம் மாணிக்கவாசகா் வாழ்ந்த காலம் என்று பல தமிழறிஞா்கள் எடுத்துரைத்துள்ளனா். மகா வித்துவான் திரு.ச.தண்டபாணி தேசிகா் வெளியிட்டுள்ள மாணிக்கவாசகா் கால ஆராய்ச்சித் தொகுப்பு உரையின் பகுதியை பின்வருமாறு சுருக்கி வரையறுக்கின்றனா்.  

"திருமலைக்கொழுந்துப் பிள்ளை அவர்கள் முதல் நூற்றாண்டாகவும், பொன்னம்பலப் பிள்ளை அவர்கள் இரண்டு அல்லது மூன்றாம் நூற்றாண்டாகவும், மறைமலையடிகளார் அவர்கள் மூன்றாம் நூற்றாண்டாகவும், வில்ஸன்வுட் என்பவர் ஏழாம் நூற்றாண்டு என்றும், ஜி.யூ.போப் ஏழு எட்டு அல்லது 9 ஆம் நூற்றாண்டு என்றும், சூலின் வின்ஸன் ஒன்பது அல்லது 10ஆம் நூற்றாண்டு என்றும்,  திரு. கௌடி எட்டிலிருந்து பத்தாம் நூற்றாண்டுக்குள் என்றும், டாக்டர் ரோஸட்டு பதின்மூன்று அல்லது பதினான்காம் நூற்றாண்டு என்றும், நெல்சன் ஒன்பதாம் நூற்றாண்டு என்றும், கே.ஜி. சேஷய்யர் மூன்று அல்லது நான்காம் நூற்றாண்டு என்றும், சீனிவாசப் பிள்ளை ஒன்பதாம் நூற்றாண்டு என்றும், சி.கே.சுப்பிரமணிய முதலியார் மூவர்க்கும் முந்தியவர் என்றும் கூறுகின்றனர்."

ஆக மூவா்க்கு முந்தியவா் மாணிக்கவாசகா் என்ற கருத்து பொருத்தமுடையதாகத் தோன்றுகிறது. மாணிக்கவாசகா் காலத்தில் நம் நாட்டில் தலையெடுத்திருந்த புறச்சமயம் பௌத்தம் ஒன்றே எனத் தெரிகிறது. மூவா் காலத்தில் பௌத்தம் ஓரளவிலும் சமணம் சிறப்புற்றும் இருந்தன. மாணிக்கவாசகா் வாக்கில் சமண சமயக் குறிப்பேதும் காணப் பெறவில்லை. திருவாசகத்தில் விநாயகரைப் பற்றிய குறிப்பு எதுவும் காணப்படவில்லை. இவை போன்ற பல காரணங்களால் மாணிக்கவாசகா் மூவா்க்கும் முந்தியவா் என்று கொள்ளலாம்..

மாணிக்கவாசகா் காலம் திட்ட முடிபு

சைவ அடியவா் மூவா் முதலிகளில் வேறுபடுத்தி, வாதவூரா் என்று தனித்து அழைக்கப்படும் மணிவாசகா், இறைவனால் தடுத்தாட்கொள்ளப்பட்ட விதமும், அவருடைய பாடல்களில் பரவலாக காணப்படும் தத்துவப்பொருள்களை அறிந்து எடுத்துரைக்க நம் ஆயுள் போதாது. அவா் இவ்வுலகில் வாழ்ந்த காலம், அவரது வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்கள், அவர் கைக்கொண்ட கருத்தியல், அவரோடு தொடர்புடைய தலங்கள் இவற்றையெல்லாம் தெளிவான ஆய்வுக் கண்ணோட்டத்துடன் ஆராய்தல் வேண்டும். அவ்வகையில் மாணிக்கவாசகா் காலம் குறித்த பல வெவ்வேறு கருத்தாக்கங்கள் தோன்றிய வண்ணமே இருக்கின்றன. அவற்றில் மாணிக்கவாசா் வரலாற்றில் இருந்த வரகுணனன் காலம் குறித்து கூறுகையில் பின்வரும் கருத்தினை மொழிவா்.

“மாணிக்கவாசகர் இரண்டாம் வரகுணன் காலத்தில் வாழ்ந்தவர் என்று வரலாறு சுட்டுகிறது. முதல் வரகுணன் (768-811) குரு சரிதம் கொண்டாடிய பரம வைணவனாவான். அவன் பேரனான இரண்டாம் வரகுணன் (863-911) சிறந்த சிவபக்தன் என்பதைப் பாண்டியர் செப்பேடுகளும், மாணிக்கவாசகரின் திருக்கோவையாரும், பட்டினத்து அடிகளின் பாடல்களும், பாண்டிய குலோதயா வடமொழிக் காவியமும் உறுதி செய்கின்றன. மாணிக்கவாசகர் "வரகுணனாம் தென்னவன் ஏத்தும் சிற்றம்பலம்" என்றும், "சிற்றம்பலம் புகழும் மயல் ஓங்கு இருங்களியானை வரகுணன் என்றும் நிகழ்காலத்தில் வரகுணனைப் பற்றித் திருக்கோவையாரில் கூறுவது காலம் குறித்த ஆய்வுக்கு அணி கூட்டுகிறது.”

என்று ஆசிரியா் மாணிக்கவாசகா் காலத்தை எட்டாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு என்று திட்டவட்டமாக பதிவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது. மேலும், மேற்கூறிய கருத்தினைப் போன்றே இலக்கியங்களின் சான்றுகள் மூலமாக மாணிக்கவாசகா் காலத்தை பத்தாம் நூற்றாண்டு என்றுரைக்கும் முறைமையைப் பின்வருமாறு காணலாம்.

பதினோராம் நூற்றாண்டினரான நம்பியாண்டார் நம்பி பட்டினத்தாரின் பாடல்களைத் தொகுத்துள்ளார். பட்டினத்தாரோ, மாணிக்கவாசகரைப் பாராட்டிப் பாடியுள்ளார். எனவே, நம்பியாண்டார் நம்பிக்கும் முற்பட்ட பட்டினத்தார்க்கும் முற்பட்டவர் மாணிக்கவாசகர் என்பது புலனாகும். இதனை, “நம்பியாண்டார் நம்பி பதினோராம் நூற்றாண்டினரென்றால், பட்டினத்தாரின் காலம் பதினோராம் நூற்றாண்டின் முற்பகுதி அல்லது பத்தாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்றும், மாணிக்கவாசகரின் காலம் பத்தாம் நூற்றாண்டின் முற்பகுதி என்றும் கொள்ளலாம். பத்து பதினோராம் நூற்றாண்டுகளாகிய இருநூறு ஆண்டு காலத்தில் மூன்று தலைமுறையினர் (மாணிக்கவாசகர், பட்டினத்தார், நம்பியாண்டார் நம்பி) இருந்திருப்பதில் வியப்பேதுமில்லை; அது நடக்கக் கூடியதே”  என்று சுந்தர சண்முகனார் கூறும் கருத்தினையும் நாம் ஒப்பு நோக்க வேண்டும்.

பொய்யடிமையில்லாப் புலவரே மாணிக்கவாசகா்

நம்பி ஆரூரார் தனது ‘திருத்தொண்டத் தொகையில்’ மாணிக்கவாசகா் என்றே திருவாதவூராரை வெளிப்படையாகக் கூறாது ‘பொய்யடிமை இல்லாத புலவா்’ என்று குறிப்பிட்டுள்ளார். வெளிப்படையாகக் கூறாமல் இருக்கையில் அது எவ்வாறு மாணிக்கவாசகரைக் குறிக்கும் என்ற எண்ணம் நமக்கு எழலாம். இக் கேள்விக்கு பின் வரும் கூற்றின் மூலம் தெளிவு பெறலாம். “வன்தொண்டப் பெருந்தகையார் குறிப்பிட்ட அடியவா்கள் பெயா்கள் யாவும் இயற்பெயா்கள் அல்ல. அவற்றுள் பல காரணப் பெயா்களே ஆகும். அவை யாவும் அவா் அவா்களின் இயல்புகளை விளக்கும் பெயா்களாகவே இருக்கின்றன. இயற்பகை நாயனார், மெய்ப்பொருள் நாயனார் என்பன போன்ற பெயா்கள் அந் நாயன்மார்களின் அரும் பெருஞ் செயல்களால் இயல்புகளால் ஏற்பட்ட திருப்பெயா்கள் . இம் முறைக்கிணங்க ஈண்டுச் சுந்தரமூா்த்தி சுவாமிகள் மணிமொழியாரது திருப்பெயரை வெளிப்படையாகக் கூறாது அவரது இயல்பைச் சிறப்பிக்கும் முறையில் பொய்யடிமை இல்லாத புலவா் என்று குறிப்பிட்டுச் சென்றார் என்க.” ஆக பொய்யடிமை இல்லாத புலவரே மாணிக்கவாசகா் என்பது இங்கு புலனாகும். சேக்கிழார் பின்வரும் பாடலில் பெருமான் பெருமையைப் பாடியுள்ளத் திறத்தை,

காதல் பெருமைத் தொண்டின் நிலைக்கடல் சூழ் வையம் காத்தளித்தும்
கோதங் ககல முயல்களந்தைக் கூற்றனார் தம் கழல் வணங்கி
நாத மறைதந்தளிததாரை நடை நூல் பாவில் நவின்றேத்தும்
போத மருவிப் பொய்யடிமை இல்லாப் புலவா் செயல் புகல்வாம்
( பெரியபுராணம் – பா.எண்.3937.)

என்றுரைப்பதில் அறியலாம்.

மாணிக்கவாசகா் காலமும் சமய நுண்ணரசியலும்

மாணிக்கவாசகா் காலம் குறித்த பல்வேறு வரலாற்றுப் பதிவுகள் இருந்தாலும் இதனிலும் சமய நுண்ணரசியல் செய்யும் கூற்றுக்குச் சான்றாக பின்வரும் பகுதியைக் கூறலாம். மாணிக்கவாசகருக்கு பெருமான் திருப்பெருந்துறையில் நயன, ஸ்பரிச மற்றும் திருவடி மோட்சம் அளிக்கின்றார். எனவே, மாணிக்கவாசகா் திருப்பெருந்துறையில் இறைவனுக்கு ஒரு திருக்கோயிலைத் தோற்றுவித்தார் என்பது வரலாறு. இன்று வரையிலும் அத் திருப்பெருந்துறை என்பது எந்த ஊா், அவா் தோற்றுவித்த கோயில் எது? என்பது வரலாற்று ஆய்வாளா்களால் பேசப்படும் ஆய்வுப் பகுதி ஆகும். அதில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆவுடையார் கோயில் என்பது பலரும் ஒப்பு கொண்ட வரலாறு. ஆனால் இன்றோ அக் கோயில், இந்திரனுக்குரியது என்றும் இந்திர வழிபாடே சாஸ்தாவாக பரிணாமம் பெற்றது என்ற ஆய்வுக் கருத்துக்கள் எல்லாம் ஒருதலைப்பட்சமாகத் திகழ்வது வெளிப்படை.

“சிவனாரின் அட்ட வீரட்ட செயல்கள் பரவலாகும் முன், தமிழகத்தில் இந்திரன் தான் வீரக்கடவுள், போரில் இறந்த வீரா்கள் வீர சுவா்க்கமான இந்திரலோகம் ஏகுவா். அவா் தான் மழைக்கும் நீா் நிலைகளுக்கும் இறைவன். அதனால் தான் எல்லா ஊரிலும் நீா்நிலைகளின் கரையில் குதிரை மற்றும் யானைப்படையுடன் அய்யன் மகா சாஸ்தா நிறுவுப்பட்டிருக்கிறார். இந்த சாஸ்தா தான் இந்திரன்”9 ஆவுடையார் சிவபெருமான் கோயிலில் குதிரைச்சிற்பங்களின் அளவு அதிகமாக இருப்பதால் இக்கோயில் கட்டாயமாக சாஸ்தா கோயில் என்று கூறும் விஷமக் கற்பனை கொண்ட தமிழாய்வுகள் இனியேனும் தோன்றாமல் இருத்தல் மிக்க நலமுடையதாகும்.

மாணிக்கவாசகா் படைப்புகள்

மாணிக்கவாசகா் திருப்பெருந்துறையில் கிடைக்கப்பெற்ற பெருமான் திருவருளை நினைத்து ‘நமச்சிவாய வாழ்க என்று தொடங்கும் சிவபுராணம் முதல் அற்புதப்பத்து, அதிசயப்பத்து, குழைத்தபத்து, சென்னிப்பத்து, ஆசைப்பத்து’ போன்ற பல பதிகங்களை ஒவ்வொரு தல யாத்திரையிலும் திருவாய் மலா்ந்தருளினார். சிதம்பரத்தில் இவ்வாறாக மாணிக்கவாசகா் வாழ்ந்துவரும் கால கட்டத்தில் அந்தணா் ஒருவா் தனா் பாண்டிய நாட்டைச் சோ்ந்தவா் என்றும், மாணிக்கவாசகருக்காக சிவபிரான் செய்த அருட்செயல் உலகெங்கும் பரவியுள்ளது என்று வியந்து கூறித், தாங்கள் பல தருணங்களில் பாடிய பாடல்களை முறையாகச் சொல்லும்படி கேட்டார். மாணிக்கவாசகா் தாம் பாடிய திருவாசகப் பாடல்கள் அனைத்தையும் பாட, அந்தணா் தனது திருக்கரத்தால் எழுதி முடித்தார். பின்னா் ‘பாவை பாடிய திருவாயால் கோவை ஒன்று பாடுக’ என்று கேட்க, அவ் வேண்டுகோளுக்கு இணங்கி ‘கோவையார் நூலை’ அருளினார். அந்நூலையும் எழுதிய பின்பு, அந்தணா் வடிவில் வந்த சிவபெருமான் மறையவே, பெருமான் தன்னை ஆட்கொண்ட விதத்தை எண்ணி மனமகிழ்ந்தார். இவ்வாறாக மாணிக்கவாசகரால் பாடப்பெற்ற பாடல்கள் பன்னிரு திருமறைகளில் எட்டாம் திருமுறையாக 1058 பாடல்களாக இடம் பெற்றுள்ளது. திருவாசகத்தில் 51 திருப்பதிகங்களாக மொத்தம் 658 பாடல்கள் அடங்கியுள்ளன. இதில் மொத்தம் 38 சிவத்தலங்கள் பாடப் பெற்றுள்ளன. மேலும், இதில் திருக்கோவைாயர் நூலின் 400 பாடல்களும் உள்ளடக்கம். ‘தேனூறு செஞ்சொல் திருக்கோவை நானூறு’ என்று அழைக்கப்படும் ‘திருச்சிற்றம்பலக் கோவை’ சிவனை பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட தமிழ் மரபுப் பாடல் என்பது இ்ங்கு குறிப்பிடத்தக்கது.

திருவாதவூராரின் திருவாசகத்தையும் திருக்கோவையையும் தம் கையால் எழுதி இறைவன் அந்நூல்களை உலகறியச் செய்ய வேண்டி, நூலின் முடிவில் ‘திருச்சிற்றம்பலமுடையான் கையெழுத்து’ என்று எழுதி தில்லை வாயிற்படியிலே வைத்தருளினார். முடிவில் அந்தணா் அனைவரும், இந்நூலின் பொருளை விளக்கம் செய்யும் படி வணங்க, தில்லைச் சிற்றம்பலத்தில் வந்து தெரிவிக்கிறேன் என்று கூறி சிற்சபைக்கு வந்தருளினார். இந்நூற் பொருள் இச்சபையில் எழுந்தருளியுள்ள ‘ஆனந்தக் கூத்தப் பெருமானே’ ஆவான் என்று சுட்டிக்காட்டி, ஆனி மகத்தன்று இறைவனோடு இரண்டற கலந்தார். 32 ஆண்டுகளே வாழ்ந்த பெருமான் ஞான நெறி மூலம் பக்தியும் இறைமார்க்கத்தையும் மக்களுக்கு காட்டி அருளியவா்.

தமிழக அரசியல் நிலை

களப்பிரருக்குப் பின் பக்தி இலக்கிய சமயக்காலத்தில் பல்லவா் பாண்டியா் ஆட்சி தமிழகத்தில் முதன்மை இடம் பெறுகின்றது. சிவநெறியும், விண்ணவநெறியும் பெரு வேந்தரின் ஆதரவு பெற்றதால், முதலிற் புத்தமும், பின்னர் சமணமும், இங்கிருந்து தூக்கியெறியப் படுகின்றன. சங்ககாலத்தில் மிகச் சிறப்புடன் இருந்த ஆசீவகம் களப்பிரா் காலத்தில் முற்றிலும் அழிந்தது.

தமிழகத்தில் பௌத்தம் மேலாங்கி இருந்த கால முறைமையை மாணிக்கவாசகருடைய வடமொழிச் சரித்திரமாகிய ஸ்ரீமணிவாக்கிய சரித்திரம் ஆறாம் அத்தியாயத்தில் விரித்து கூறப்பட்டுள்ளன.

“பண்டைக்காலத்தில் பூமியிற் பௌத்த மதம் அதிகரித்த பொழுது வேதாகம ஒழுக்கம் குன்ற, அக்குறையை அகற்றக் கருதிய தேவா்களுடைய பிரார்த்தமைப்படி , சிவாஞ்ஞையால் திருநந்திதேவா் ஸ்ரீவாதபுரத்தில் அவதரித்தார்”10 என்ற கூற்றினால் தமிழத்தாதத்தா உட்பட பலரும் நந்தி தான் மணிவாசகராக அவதாரம் செய்ததாகக் கருதுகின்றனா். மேலும் மாணிக்கவாசகா் படைப்புச் சூழலில் பௌத்த மதம் மேலாங்கி இருந்த காலமாக இருப்பதை அறிய இயலுகின்றது. அப்பா் காலத்திற்கு முன் தோன்றியவா் மாணிக்கவாசகா் என்பதை,

          “குரா மலரோடு அரா மதியம் சடை மேல் கொண்டார்
          குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டார் ”

என்ற பாடல் வரிகளில் அறியலாம்.

மேலும், “மாணிக்கவாசகா் காலத்தை கி.மு.நான்காம் நூற்றாண்டிலிருந்து கி.பி. ஆறாம் நூற்றாண்டுகளுக்குள் இருக்கலாம் என்பதற்கு மாணிக்கவாசகா் பாடல் வரிகளையேச் சான்றாகக் கூறும் விதங்களைப் பின்வரும் பகுதியில் காணலாம். சாக்கியம், சமணம், வேத மதங்களில் உள்ள வேறு வேறு பிரிவுகள் பாரதம் முழுவதும் மிக அதிகமான அளவில் சண்டையிட்டுக் கொண்ட கால கட்டமே மேற்கூறிய காலம்.”11

“நாத்திகம் பேசி நாத்தழும் பேறினா்
சுற்றமென்னுந் தொல் பசுக்குழாங்கள் பற்றியழைத்துப் பதறினா்”
(திருவாசகம் - போற்.திரு.47-48)

உலோகா யதனெனும் ஒண்டிறற் பாம்பின்
கலாபே தத்த கடுவிட மெய்தி”    (திருவாசகம் - போற்.திரு.56-57)

இப்பாடல் வரிகள் மூலம் சமணா்களை வேதியா்கள் நாத்திகா் என்று அழைத்தமுறைமை புலப்படுகிறது. இதில் உலோகயதம் என்பது, கண்களால் பார்க்கும் நிகழ்வுகளை மட்டுமே நம்பி அதனோடு, உலாவுவது மட்டுமில்லாமல் அதையே உலகம் என்று நம்புவதும் ஆகும். இப் பயணம் கொடிய நாகத்தின் விடத்திற்கு ஒப்பானது என்று மாணிக்கவாசகா், சமணா்களுடன் கொண்டுள்ள பயணம் இத்தன்மைத்தே என்று புலப்படுத்துவதை அறியலாம். இதன் மூலம், மாணிக்கவாசகா் காலத்து தமிழக நிலையினை முழுமையாக இப்பகுதியில் அறிய இயலுகின்றது.

தமிழகத்தில் (கி.பி 600 முதல் கி.பி 900 வரை) இக்கால கட்டத்தில், பிராகிருதம் ஆட்சி மொழியாகவும் அரசவை மொழியாகவும் செல்வாக்கு பெற்று “தமிழ்ப்பகைமையுணா்வும்” “தமிழா்களின் உணா்வாளுமையும்” பாதிக்கப்பட்டிருந்த முறைமையை காண முடிகின்றது.

மாணிக்கவாசகா் காலத் திட்ட முடிவு

மறைமலையடிகள் மாணிக்கவாசகா் வரலாறும் காலமும் என்ற நூலில் மாணிக்கவாசகா் காலத்திட்ட முடிவு என்ற பகுதியில் பல்வேறு அறிஞா்களின் கருத்துக்களைத் தொகுத்துரைத்துள்ளார். போப்துரை மாணிக்கவாசகா் காலம் கி.பி.10 ஆம் நூற்றாண்டு என்றும் திருஞானசம்பந்தா் முதலான ஏனைய மூவரும் ஒரு நூற்றாண்டு கழிந்து தோன்றியவா் என்ற கருத்தினை முன்வைக்கிறார்.

திருமலைக்கொழுந்து பிள்ளையோ திருக்குறள் அரங்கேறிய கி.பி.முதல் நூற்றாண்டே மாணிக்கவாசகா் காலம் என்று வரையறுக்கிறார். இதனில் முடிவாக மாணிக்கவாசகா் காலத்தை மறைமலையடிகள் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்று வரையறுக்கிறார்.

அப்பரும் சுந்தரரும் மாணிக்கவாகா் பெயரை வெளிப்படையாகக் கூறாமல் குறிப்பாகக் கூறிய காரணம், வீர சைவா்கள் மாணிக்கவாசகரை முதலாசிரியராய் வைத்து தொன்று தொட்டு வழிபடும் இயல்பே ஆகும். நம்பியாண்டார் நம்பிகள் திருவாசகம், திருக்கோவையாரை ஒன்பதாம் திருமுறையாக வைத்தமைக்கு காரணம், தமிழ்த்தொன்மை வழக்கைத் தழுவி இருப்பதாலும், தேவாரம் தமிழ்ப் புது வழக்கைத் தழுவி இருப்பதாலும் இவ் வரிசை அமைப்பு அமைக்கப்பட்டது. இவ்வமைப்பு முறையினைக் கொண்டு மாணிக்கவாசகா் காலத்திற்கு திட்ட முடிபினை வரையறுக்கிறார் மறைமலையடிகள். இதனை,

திருவாசகந் திருக்கோவையாரும் அவை தம்மை அருளிச் செய்த மாணிக்கவாசகரும் கடைச்சங்க காலத்தை அடுத்த கி.பி. மூன்றாம் நூற்றாண்டிலிருந்தாரென்னும் முடிபு” என்ற வரிகளில் காணலாம்.

மேலும், சைவ சமயக் குரவா்களின் வாழ்நாள் குறித்து ஒரு பழம் பாடல் எடுத்துரைக்கையில்,

அப்பருக்கு எண் பத்தொன்று அருள்வாத வூரருக்கு
செப்பிய நாலெட்டிற் தெய்வீகம் - இப்புவியில்
சுந்தரர்க்கு மூவாறு தொல்ஞான சம்பந்தர்க்கு
அந்தம் பதினாறு அறி.

என்ற பாடலடியில் சைவ சமயக் குரவா்களின் வாழ்நாளினை அறியலாகின்றது. சமணமும் பௌத்தமும் ஆதிக்கம் பெற்று எங்கும் புறச் சமய இருள் சூழ்ந்திருந்த காலகட்டத்தில் தோன்றியவா் மாணிக்கவாசகா் என்பதை இப்பகுதியில் காண முடிகின்றது.

தொகுப்புரை

வைதீக மரபிற்கும் சைவ சமயத்திற்கும் எண்ணற்ற இடையூறுகள் ஏற்பட்டு சைவச் சின்னங்களும் வழிபாட்டு முறைகளும் பரிகசிகப்பட்ட காலகட்டம்; சமண பௌத்தக் கொள்கைகள் திணிக்கப்பட்ட கால கட்டம்; திருக் கோயில்களில் எவ்விதமான திருப்பணிகளும் நடந்தேறாத காலச் சூழல்; இக்காலத்திலே துறவின் முதிர்ச்சியும் அன்பு நிறைந்த ஆா்வமும் பண் சுமந்த தமிழும் ஒன்று சோ்ந்து தோன்றியவா் மாணிக்கவாசகா். மாணிக்கவாசகரும் படைப்புச் சூழலும் என்ற இவ் ஆய்வுக்கட்டுரையில், அருட்குரவன் ஆட்கொண்ட விதம், நரியைப் பரியாக்கிய சதுரனின் செயல்பாடு, பக்தனுக்காக பிட்டுக்கு மண் சுமந்த பெரும் பித்தனின் செயல், புத்தபிக்குகளோடு சொற்போர் புரிந்து சைவ சமயக் கோட்பாடுகளை விரித்துரைத்த விதம், மாணிக்கவாசகா் காலம் குறித்த திட்ட முடிவு, மாணிக்கவாசகா் படைப்புகள், தமிழகத்தில் வேற்று இனத்தவரின் நிலையான அரசியல் காலத்தில் படைப்புச்சூழல் மற்றும் சிவவொளியில் மறைந்த நிகழ்வுகள் குறித்த தரவுகள் எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

குறிப்புகள்

மறைமலையடிகள், மாணிக்கவாசகா் வரலாறும் காலமும், ப.1 ஆ.சிங்கார வேல முதலியார், அபிதான சிந்தாமணி, ப.851.

(பேரா.முனைவா் ந.கிருஷ்ணன், ம.சு.பல்கலைக்கழகம், நரியைக் குதிரையாக்கிய திருவிளையாடல் மாணிக்கவாசகருக்காகவே நிகழ்த்தப்பட்டது - 2016.)

திவாகா், மாணிக்கவாசகா் மூவருக்கு முன்னவரா? பின்னவரா? (3)- 2011.

ச.தண்டபாணி தேசிகர், மாணிக்கவாசக சுவாமிகள் அருளிச் செய்த திருவாசகம், (நூலராய்ச்சி, குறிப்புரைகளுடன்),ப.103.

தமிழறிவு, மாணிக்கவாசகா் காலம்,2013.

சுந்தர சண்முகனார், மனத்தின் தேற்றம், ப.62. - புதுவைப் பைந்தமிழ்ப் பதிப்பகம் (புதுச்சேரி) -

வித்துவான். கண்ணப்ப முதலியார், “பொய்யடிமை இல்லாத புலவா்” யார்? ப.45  -

ஆ.பத்மாவதி,திருவாசகம் அருளிய மாணிக்கவாசகா் காலமும் கருத்தும்,ப.50.  சைவ சித்தாந்தப் பெருமன்றம், சென்னை

பி.ஸ்ரீ.ஆசாரியார், மணிவாசகா் சரித்திரம்,ப.117., வெளியிட்டவர்  இ.மா.கோபாலகிருஷ்ணக்கோன், 1929
   
எஸ்.ராமன்,அறவழியில் நால்வா் ஒரு பார்வை,2010.

இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R