முன்னுரை

ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல பயன்படும் ஊர்தியே தேர்.அந்தத் தேரை ஓட்டுபவர் தேர்ப்பாகன் என்று அழைக்கப்பட்டார். நால்வகை படைகளில் ஒன்று தேர்ப் படையாகும். தேரில் நகர்ந்து தாக்கும் படை தேர்ப் படை. தேரில் குதிரைகள் பூட்டப்பட்டன. அதைத் தேர்ப்பாகன் செலுத்தினான். தேரை ஓட்டுவதற்கு நல்ல பயிற்சி வேண்டும். .சங்க இலக்கியத்தில் தேர்ப்பாகன் குறித்து நிறைய குறிப்புகள் கூறப்பட்டுள்ளன. கம்பரும் தன் இராமாயணத்தில் தேர்ப்பாகன் குறித்து கூறியுள்ள செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கைகேயி ஒரு தேரோட்டி

போரில் வெற்றிபெற தேரோட்டி மிகவும் வல்லவனாக இருக்கவேண்டும். சம்பராசுரனுடன், தசரதன் போர் புரியும்போது கைகேயி அவனுக்கு உதவினாள். பாடலில் ’கோல்கொள’ என்ற பகுதிக்குத் தேர் சக்கரத்தின் அச்சாணி கழன்று விழுந்துவிட்டபோது, அந்தத் தேர் சாய்ந்து விழுந்து விடாதவாறு தன் விரலையே கோலாகக் கொண்டு தேரை ஓட்டினாள். என்றும், தேர்ப்பாகன் இல்லாத நிலையில் தசரதனுக்காக குதிரைகளை ஒட்டுகையில் கோல் கொண்டு தேரை ஓட்டினாள் என்றும் கொள்ளலாம். தேர்மீது அமர்ந்து போர் செய்யும் போது தேரைச் செலுத்தும் பாகன் தேர்ப்பாகனாவான்.

“பஞ்சி மென் தளிர் அடிப்பாவை கோல்கொள
வெஞ்சினத்து அவுணர் தேர் பத்தும் வென்றுளேற்கு
எஞ்சல் இல் மனம் எனும் இழுதை ஏறிய
அஞ்சு தேர் வெல்லும் ஈது அருமை ஆவதோ”
(மந்திரப்படலம் 18)

தேர்ப்பாகனின் கடமை

` தேரில் ஏறிய தலைவனின் குறிப்பறிந்து தேரினைச் செலுத்துதல் தேரோட்டியின் கடமை ஆகும். தேரில் ஏறிப் போர் செய்பவர் கருத்தும், குதிரையின் உள்ளமும் ,பகைவர் மனமும், கால நிலையும், காரிய சாதனையும் அறிந்து நடக்கவேண்டும்.போர் செய்பவர் தடுமாறும்போது,உண்மை நிலையை உணந்து எடுத்துக் கூறவேண்டும். தேரில் ஏறிப் போர் செய்பவர் தளர்ச்சியுற்றால்,தொடர்ந்து போர் செய்ய இயலாதநிலையில் அவருடைய உயிரைக் காக்கவேண்டும்.பாகன் ஓட்டும் தேரில் ஏறிப் போர் செய்பவர் மனதில் தவறான எண்ணம் தோன்றினாலும் உண்மைத் தன்மையை எடுத்துக் கூறவேண்டும்.எதிரிகள் தேர்ப்பாகனையே முதலில் வீழ்த்துவர். ஏனெனில் அப்போதுதான் பகைவர் தேர் ஓடாது என்பதால் முதலில் தன் உயிர்க்கே ஆபத்து என்று தெரிந்த நிலையிலும் தன் தேரில் ஏறுபவரைக் காக்கவேண்டும்.

பரதனும் தேர்ப்பாகனே

இராமனின் திருமணநாளன்று மிதிலையில் அவன்தேர் ஏறித் திருமணமண்டபம் செல்ல, அத்தேரை பரதனே செலுத்தினான். சிறப்புப் பெற்ற சூரியனது தேரைப்போன்ற தேரிலே, சூரியனது தேர்ப்பாகனாகிய அருணன் நிற்பதுபோல, ஆனந்தக் கண்ணீரைச் சொரியும் மலர்ப் போன்ற கண்களைப் பெற்ற பரதன், “குதிரைச் சம்மட்டி” என்னும் கோலைக் கையில் கொண்டு நிற்கவும்,வளையும் வில்லையுடைய இலட்சுமணனும், அவனுடன் மற்றொரு தம்பியான சத்ருக்கணனும் கவரி வீசவும் இராமன் தேரிலே சென்றான்.

“அனையது ஓர் தேரினில் அருணன் நின்றெனப்
பனி வரு மலர்க்கண் நீர்ப் பரதன் கோல் கொள
குனி சிலைத் தம்பியர் இருவரும் குழைந்து
இனிய பொற் கவரி கால்இயக்க ஏகினான்”
(கடிமணப்படலம்1178)

இராமனது தேரை மிதிலையில் செலுத்தியவன் பரதனே என்பதை அறியமுடிகிறது.

இராவணனை வென்று அயோத்தி நகரில் முடிசூட்டிக் கொள்ளத் தேர் ஏறியபோது, அதைச் செலுத்தியவனும் பரதனே.

“பாழிய மற்றைத் தம்பி பால்நிறக்கவரி பற்ற
பூமியை அடக்கும் கண்ணீர்ப் பரதன் கோல் கொள்ளப் போனான்”
(திருமுடி சூட்டுப்படலம் 4233)

சுமந்திரன் என்னும் தேர்ப்பாகன்

சுமந்திரன் என்ற சொல்லுக்கு நல்ல அறிவுரை கூறுபவன் என்பது போருள். சுமந்திரன், தசரதனுக்கு அமைச்சன் மட்டுமல்ல சிறந்த தோரோட்டியும் கூட. புத்திரகாமேட்டி யாகத்திற்கு ருசியசிருங்கரை அழைத்து வந்தவர் இவரே.தசரதனுக்கு மட்டுமல்ல இராமனுக்கு நல்ல சாரதி.மற்றும் நல்ல அமைச்சனும் தான். இராமனுக்கு முடிசூட்ட எண்ணிய தசரதன் தம் அமைச்சர்களுடன் ஆலோசனை செய்யப், பின் இராமனை இங்கு அழைத்து வருமாறு சுமந்திரனை அனுப்பினார்.அவரும், இராமனைத் தேரில் ஏற்றிக் கொண்டு வந்தார்.

“கண்டு கை தொழுது ஐய இக் கடலிடைக் கிழவோன்
உண்டு ஓரு காரியம் வருக என உரைத்தனன் எனலும்
புண்டரீகக் கண் புரவலன் பொருக்கென எழுந்து ஓர்
கொண்டல்போல்பவன் கொடி நெடுந் தேர்மிசைக் கொண்டனன்”
(மந்திரப்படலம் 50)

முடிசூட்டுவதற்கான நேரம் வந்துவிட்டதால் மன்னனை அழைத்து வருமாறு வசிட்டர், சுமந்திரனிடம் சொன்னார்.அவரும் அரண்மனை சென்று பார்த்தபோது, மன்னர் அங்கு இல்லாததால், அங்கிருந்தவர்களிடம் வினவி அறிந்து கொண்டு, கைகேயியின் அரண்மனைக்கு வந்தார். அப்போது கைகேயி, சுமந்திரரிடம் இராமனை இங்கே அழைத்து வருக என்றாள்.சுமந்திரரும் இராமனை அழைத்துக் கொண்டு வந்தார். கைகேயி மன்னனிடம் பெற்ற வரத்தின்படி இராமன் கானகம் செல்ல இருந்தபோது சீதையும், இலட்சுமணனும் உடன்வர அவர்களை சுமந்திரன் தேரிலே ஏற்றிக் கொண்டு சென்றார். அனைவரும் அவர்களைப் பின் தொடர்ந்தனர்.அனைவரும் உறங்கியபிறகு தேரை நகருக்குத் திருப்பிச் செல்லுமாறு இராமன், சுமந்திரனிடம் கூறினார். தேர் பாகன் தேர் ஓட்டுவதற்கு தனி பயிற்சி பெற வேண்டும். இந்தப் பயிற்சியும் ஒரு கல்வியாகும். நகர மக்களும் உடன் வர இராமனை அழைக்கப் போன சுமந்திரன் இராமன் வர மறுப்பதால்,இராமன் சொல்படி தேரை அயோத்தி நோக்கி ஓட்டினான். அப்போது காட்டில் நகர மக்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கேத் தெரியாமல் சுமந்திரன் தேரை ஓட்டினான். அவர்கள் விழித்துப் பார்த்தால் தேரோடிய பாதையைப் பார்த்து இராமன் நகருக்குத் திரும்பி விட்டான் என்று மக்கள் நம்பும்படி தேரை திறமையுடன் ஓட்டினான். இராமன் அங்கிருந்து காட்டிற்குச் சென்று விட்டதால் இராமனையும் தேரையும் காணாத மக்கள் இராமன் நகர் திரும்பிவிட்டார் என்று நம்பினர். இதற்குக் காரணம் சுமந்திரன் கற்று இருந்த தேரோட்டம் கல்வி மாட்சியே ஆகும்.

“கூட்டினன் தேர் பொறி கூட்டிகோள்முறை
பூட்டினன் புரவி அப் புரவி போம் நெறி
காட்டினன் காட்டி தன் கல்வி மாட்சியால்
ஓட்டினன் ஒருவரும் உணர்வுறாமலே“
(தைலமாட்டுப்படலம் 570)

பெரும் துயரத்தில் இராமனைக் காட்டில் விட்டுவிட்டேன் என்பதை நான் மன்னனிடம் சென்று அறிவிக்கவோ என்று அழுதார். நடந்ததை சுமந்திரன் வசிட்டரிடம் கூறி விட்டு , அவருடன் மன்னவனைக் காணச் சென்றான். தசரதன் தனது தேர்ப்பாகனாகிய சுமந்திரனைப் பார்த்து இராமன் தூரத்தே இருக்கிறானா? அண்மையில் இருக்கிறானா? என்று கேட்டான். அவரும் மூவரும் காட்டுக்குள் சென்றனர் என்றபோதே மன்னவனும் தன் இன்னுயிர்த் துறந்தான்.

வசிட்டர், சுமந்திரரிடம் பரதனுக்கு ஓலை அனுப்புங்கள். அவன் வரும்வரை முக்கிய அரசியற் பணிகளை நீ செய்க என்று கூறினார்.பரதன் வந்து அரசனின் ஈமக் காரியங்கள் எல்லாம் முடிந்த பிறகு, பரதனிடம் பேசுமாறு சுமந்திரன், வசிட்டரிடம் கண் சாடைக் காட்டினான்.

இராமனைக் காட்டிலிருந்து அழைத்து வரச் சென்றபோது, சுமந்திரரும் வந்தார். குகனின் பெருமையையும், பரதனுக்கு எடுத்துக் கூறினார்.இராமனைக் காண சுமந்திரரான தேர்ப்பாகன் தொழுத கையனாய் வந்து சேர்ந்தான்.

அக்ககுமரனின் தேர்ப்பாகன்

அனுமனைப் பிடித்து வரத் தானே செல்வதாக அக்க குமரன் இராவணனிடம் அனுமதி பெற்று போர்க்களம் வந்தான். எதிரே நின்ற அனுமனைக் கண்டு எள்ளி நகைத்தான். அவருடைய தேர்ப்பாகன் ,”ஐயனே நான் சொல்வதைக் கேட்பாயாக, உலகில் நடக்கும் செயல்கள் இப்படிப்பட்டவை என்று உறுதியாகக் கூற முடியுமா? உருவு கண்டு குரங்கு என்று எள்ளாமை வேண்டும். நம் அரசனான இராவணனோடு எதிர்த்து வெற்றி பெற்ற வாலி ஒரு குரங்கு தான் என்றால், அதற்கு மேல் சொல்ல வேண்டியது ஏதேனும் உண்டோ நான் சொன்னதை மனதில் பதித்துக் கொண்டு போரிட செல்க” என்று அவன் உணருமாறு உரைத்தான். தேர்ப்பாகன் கூறியதைக் கேட்ட அக்ககுமரன் ’இந்த இடத்தில் புகுந்து இவ்வளவு அழிவு செய்த இக்குரங்கை அழித்த பிறகும் எஞ்சி நிற்கும் என் கோபத்தால் தொடர்ந்து சென்று மூன்று உலகங்களிலும் நுணுகி தேடி, சிறிய இடத்தையும் விடாமல் ஆராய்ந்து வெளியில் உள்ள குரங்குகளையும், கர்ப்பத்தில் உள்ள குரங்குகளையும் அழிப்பேன்’ என்று வஞ்சினம் கூறினான்.

“அன்னதாம் நகு சொல் கேட்ட சாரதி ஐய கேண்மோ
இன்னதாம் என்னல் ஆமோ உலகியல்? இகழல் அம்மா
மன்னனோடு எதிர்ந்த வாலி குரங்கு என்றால் மற்றும் உண்டோ?
சொன்னது துணிவில் கொண்டு சேறி என்று உணரச் சொன்னான்”
(அக்ககுமாரன் வதைப் படலம் 954)

இவ்வாறு  அக்ககுமரனுக்கு தேர்ப்பாகன் அறிவுரை வழங்கியதையும் அதைக் கேட்டு அவனும் நடந்து கொண்டதையும்  அறியமுடிகிறது.

மகோதரனின் தேர்ப்பாகன்

இராவணனின் அமைச்சர்களுள் ஒருவன். அவன் இராவணனிடம் நான் இராமனுடன் போர் புரியஅனுமதி அளிக்குமாறு வேண்டினான். இராவணன் அனுமதி அளிக்கவில்லை.இந்நிலையில் இராமனின் தேரானது அவனை நெருங்கிற்று. வெகுண்டெழுந்த மகோதரன் சாரதியை நோக்கி ‘இராமனின் தேரை முட்டுமாறு நம் தேரைத் தூண்டுக என்றான். உடனே தேர்ப்பாகன் அவனை நோக்கி ஐயனே பெருமையுடைய இராமனின் தோற்றத்தைக் கண்டால், ஓர் இராவணன் அல்லாமல், எண்ணுதற்குரிய இராவணர்களே ஆனாலும், இன்று இராமனை நெருங்கிய போது இறந்துபடுவரே அல்லாமல், வெற்றி பெற்று மீண்டு செல்வரோ? ஆதலால் நீ இராமனை விட்டு விலகி வேறு வழியில்செல்வதே செய்யத்தக்க நல்ல காரியமாகும்

“எண் அருங்கோடி வெங்கண் இராவணரேயும் இன்று
நண்ணிய பொழுது மீண்டு நடப்பரோ கிடப்பது அல்லால்
அண்ணல்தன் தோற்றம் கண்டால்ஐய நீ கமலம் அன்ன
கண்ணனை ஒழிய அப் பால் செல்வதே கருமம் என்றான்”
(இராவணன் வதைப் படலம் 3654)

என்று சாரதி சொன்னவுடன், மகோதரன் கோரப் பற்களையுடைய பிளந்த வாயை மடித்து, அவனை நோக்கி ‘இவ்வாறு பேசிய உன்னை உண்டேன் என்றால் தேர்ப்பாகனை உண்டவன் என்ற பழிச்சொல் எனக்கு உண்டாகும். ஆதலால் அவ்வாறு நான் செய்யவில்லை என்று சொல்ல உடனேத் தேர்ப்பாகனும் தன் தேரை இராமனுடையத் தேர் முன் செலுத்தினான்.( இராவணன் வதைப் படலம் 3655)

இராமனின் தேர் பாகன் மாதலி

இராமனுக்கு இந்திரன் தேர் அனுப்பினான். மாதலியே தேர்ப் பாகன் ஆவான். அவன் இராமனிடம் வந்து ஆற்றல் மிக்க தேர் இது. இந்திரனால் அனுப்பப்பட்டது என் பெயர் மாதலி என்றான். இராமன், மாதலியிடம் நான் தூண்டும்போது தேரைச் செலுத்துக என்ற போது, வள்ளலே உன் கருத்தும், குதிரையின் உள்ளமும், பகைவர் மனமும், கால நிலையும், காரிய சாதனையும் அறிவேன் என்று கூற, இராமன் ஆறுதல் அடைந்தான். இராவணனுடன் நேருக்கு நேர் போரிடும் போது, இருவருக்கும் சமமான போர் நிகழ்ந்தது. இராவணன் தன் பாகனிடம் கூறி, தன் தேரை மேலே எழச்செய்தான். இராமனும் தன் தேரை வானில் எழும்படி மாதலியிடம் கூற அவனும் அவ்வாறே செய்தான். இராவணன் மாதலி மீதும், குதிரைகள் மீதும் அம்பு எய்தான். இராவணன் செய்த மாயத்தால் இராமன் என்ன இது என்று மாதலியிடம் கேட்க அவன் இம்மாயச் செயல் உன்னால் ஒழிக்கட்பாலது என்றான். மாதலி மொழிப்படி ஞானாஸ்திரம் ஏவி மாயத்தை அழித்தான். போர்க்களத்தில் தேர்ப்பாகனின் அறிவும் செயல்பட வேண்டும். இராவணன் செலுத்திய அம்பு மாதலி முகத்தில் பட்டு இரத்தம் சிந்தியது.இராவணன் மேல் இராமன் ஐம்முகாஸ்த்திரம் எய்தான். இராவணன் மயங்கி தேர் மீது சாய்ந்தான். இராவணனின் தேரை அத்தேரோட்டி திருப்பி ஓட்டிச் சென்றதைக் கண்ட மாதலி, இராவணன் மீண்டும் உணர்வு பெற்றால் அவனை வெல்வது கடினமாகும். அதனால், இப்போதே அவனைக் கொல்க என்றான்.

“தேறினால் பின்னை யாதும் செயற்கு அரிது
ஊறுதான் உற்றபோதே உயிர்தனை
நூறுவாய் என மாதலி நூக்கினான்
ஏறு சேவகனும் இது இயம்பினான்”
(இராவணன் வதைப் படலம் 3814)

போரில் வெற்றி பெறும் வழியை தன் முதலாளிக்கு கூறவேண்டியதும் தேர்ப்பாகனின் கடமைகளுள் ஒன்றாகும்.

அறத்தின் நாயகன் மறுத்துவிட்டான்.

இராவணனின் தேர்ப்பாகன்

மகோதரனின் இறப்பைக் கண்ட இராவணன், தேர்ப்பாகனிடம் உடனே தேரை இராமனை நோக்கிச் செலுத்துமாறு கூறினான். குதிரை பூட்டிய வலிய தேரானது தேர்ப்பாகன் விரைந்து தூண்ட, வேகமாக இராமன் எதிரில் சென்றது. இராம- ராவண யுத்தத்தின்போது இராவணன் தேரிலேயே மயங்கியபோது, தேர்ப்பாகன் அவனைக் காப்பாற்ற தேரை வேறு பக்கமாக ஓட்டிச் சென்றான். மயக்கம் தெளிந்த இராவணன், அவனிடம் தேவர்கள் காணுமாறு என் தேரைத் திருப்பி செலுத்தினாயே, இராமன் என்னை எள்ளி இகழுமாறு செய்தாயே. உன்னைப் பெரும் செல்வனாக்கினேன். இப்போது உன்னைக் கொல்வேன் என்று வாளினை ஓங்கினான். தேரோட்டியோ இராவணனை வணங்கி நீ மூச்சொடுங்கி மயக்கமுற்றாய். ஒரு கணம் அங்கு இருந்தாலும் உன் உயிர் சென்றிருக்கும். அது நிகழா வண்ணம் இவ்வாறு செய்தேன். தேரில் உள்ளவனின் வலிமையும் தளர்வையும் ஆய்ந்து அவருடைய உயிருக்கு ஊறு நேரா வண்ணம் செயல்படுவது தேரோட்டியின் கடமையாகும் என்று கூறினான். அதிலிருந்த உண்மையை உணர்ந்த இராவணனும் தேர்ப்பாகனைக் கொல்லாது விட்டு, இராமனை நோக்கித் தேரைச் செலுத்து என்றான்.

“ஓய்வும் ஊற்றமும் நோக்கி உயிர் பொறைச்
சாய்வு நீக்குதல் சாரதி தன்மைத்தால்
மாய்வு நிச்சயம் வந்துழி வாளினால்
காய்வு தக்கது அன்றால் கடை காண்டியால்”
(இராவணன் வதைப் படலம் 3822)

இராம- இராவண யுத்தத்தில் இராவணன் கீழே விழுந்தவுடன் இவ்வளவு நேரமும் தேர் வானத்தில் மிதந்து கொண்டிருந்தது. இப்போது இராமன் தேர்ப்பாகனை நோக்கி இனி இப்பொன்னான தேரைப் பூமியில் செலுத்துவாயாக என்று கூறியவுடன் மாதலியும் அவ்வாறே செய்தான். இராவணன் இறந்துவிட்டான் என்பதை உறுதி செய்த பிறகு மாதலியிடம் நீ தேரினை விண்ணிற்குக் கொண்டு செல்வாயாக என்றான்.

இந்திரசித் தேர் மற்றும் தேர்ப்பாகன்.

இந்திரசித்தனின் தேர்க் குறித்து வீடணன், இராமனிடம் இவனுடைய தேர் நல்ல நிலையில் இருப்பின் இவன் தன்னுடைய வலிமை கெடான் என்றான். உடனே இலட்சுமணன் தேரோட்டியின் தலையைக் கொய்தான்.(இந்திரசித் வதைப் படலம் 3083 )சிவன் அருளால் தேரானது அழியாது இருக்கும் வரையிலும், அவன் கையில் வில் இருக்கும் வரையிலும், போரில் சாகமாட்டான் என்றான். உடனே இலட்சுமணன், இந்திரசித் ஏறியிருக்கும் தேரில் கட்டிய பசியநிறம் கொண்ட கொடிய குதிரைகளும் சாகமாட்டா. அந்தத் தேரின் பல ஒளிகளையுடைய உருளைகளும், பூமியில் முறிந்து ஒழியாது என்பதை எண்ணித் தன் வில்லின் திறமையால் கடையாணிகளைக் கழன்று போகுமாறு செய்து, பின் வயிரம் வாய்ந்த மரத்தாலான அச்சையும், சக்கரங்களையும் தனித்தனியாகப் பிரித்தான்.

முடிவுரை

நகர்ந்து செல்ல பயன்படும் ஊர்தி தேர். மன்னர் மற்றும் உயர்குடியில் பிறந்தோர் அதனைப் பயன்படுத்தினர். தேரைச் செலுத்துபவர் தேர்ப்பாகன் என்று அழைக்கப்பட்டார். தேரில் ஏறிய தலைவனின் குறிப்பறிந்து தேரினைச் செலுத்துதல் தேரோட்டியின் இலக்கணமாகும். கைகேயியும், பரதனும், சுமந்திரரும் தேர்ப்பாகன்களாவர். தேரில் ஏறி போர் செய்பவர் கருத்தும், குதிரையின் உள்ளமும் ,பகைவர் மனமும், கால நிலையும், காரிய சாதனையும் அறிந்து நடக்கவேண்டும். போர் செய்பவர் தடுமாறும்போது, உண்மை நிலையை உணர்ந்து எடுத்துக் கூறவேண்டும். தேரில் ஏறிப் போர் செய்பவர் தளர்ச்சியுற்றால்,தொடர்ந்து போர் செய்ய இயலாத நிலையில் அவருடைய உயிரைக் காக்கவேண்டும்.தேவை ஏற்படும்போது தேரில் ஏறும் தலைவருக்கு சரியான ஆலோசனையும் வழங்கவேண்டும் என்பதை அக்ககுமரன், மகோதரனின் தேர்ப்பாகன்கள் செய்தனர். எதிரிகளுக்கு முதலில் பலியாவதும் தேர்ப்பாகனே என்பதையும் அறிந்து கொள்ளமுடிகிறது.

துணைநூற்பட்டியல்

    எல்லைகள் நீத்த இராமகாதை,பழ.கருப்பையா,விஜயா பதிப்பகம், கோயம்புத்தூர், 2008.

    கமலக்கண்ணன் இர்.வ. நாலாயிர திவ்வியப் பிரபந்தம் மூலமும் விளக்கவுரையும், தொகுதி 1,2, வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2001.

    கம்பன் காட்டும் வைணவப் பேருலகம், அமுதன்,லக்‌ஷண்யா பதிப்பகம், சென்னை,2019.

    பூவண்ணன், கம்பராமாயணம் தொகுதி 1,2,3,4,5,6,7,8 வர்த்தமானன் பதிப்பகம் சென்னை 2004.

மின்னஞ்சல்: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.


Main Menu

அண்மையில் வெளியானவை

விளம்பரம் செய்யுங்கள்

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' கிண்டில் பதிப்பு!

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா'  கிண்டில் பதிப்பாக..

வ.ந.கிரிதரனின் 'அமெரிக்கா' (திருத்திய பதிப்பு) கிண்டில் மின்னூலாக:

நண்பர்களே! 'அமெரிக்கா' நாவலின் திருத்திய பதிப்பு தற்போது கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளியாகியுள்ளது. இலங்கைத்   தமிழ் அகதியொருவனின் அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் நாவல். தாயகம் '(கனடா) பத்திரிகையில் தொடராக வெளியான சிறு நாவல். அமெரிக்கத் தடுப்பு முகாம் வாழ்வை விபரிக்கும் ஒரேயொரு தமிழ் நாவலிது.  அவ்வகையில் முக்கியத்துவம் மிக்கது.எனது (வ.ந.கிரிதரனின்)  'மண்ணின் குரல்', 'வன்னி மண்' , 'கணங்களும் குணங்களும்' ஆகியவையும், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளும் கிண்டில் பதிப்பாக மின்னூல் வடிவில் வெளிவரவுள்ளன என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றேன்.

மின்னூலினை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7TLDRW

கட்டடக்கா(கூ)ட்டு முயல்கள்!: புகலிட அனுபவச் சிறுகதைகள்! - வ.ந.கிரிதரன் (Tamil Edition) Kindle Edition
நான் எழுதிய சிறுகதைகளில், புகலிட அனுபங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட 23 சிறுகதைகளை இங்கு தொகுத்துத்தந்துள்ளேன். இச்சிறுகதைகள் குடிவரவாளர்களின் பல்வகை புகலிட அனுபவங்களை விபரிக்கின்றனந் -வ.ந.கிரிதரன் -

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T93DTW8

இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் வெளியாகின்றது. இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தவறுகளை, இயக்கங்களுக்கிடையில் நிலவிய அக, புற முரண்பாடுகளை கேள்விக்குள்ளாக்குகின்றது.

மின்னூலை வாங்க: https://www.amazon.ca/dp/B08T7XXM4R