ஓவியம் : AI
ஜோதிக்கு சாவு வீட்டுக்குச் செல்லும் சரியானத் தோரணை வந்துவிட்டது. தோரணை என்றால் அதற்கான இணக்கமாக்கிக் கொண்டு சாவு வீட்டுக்குச் செல்வது. முதலில் பொட்டு இடுவதை தவிர்த்து விடுவாள். சாதாரண சேவை உடுத்துவாள். எந்த வகையிலும் கவனம் பெற தக்க வகையில் சேலை இருக்காது. ஜாக்கிரதையாக சோகத்தை வரவழைத்துக் கொள்வாள். சாவு வீட்டுக்குச் செல்வதற்கான சரியான ஏற்பாட்டில் கண்ணீரை உற்பத்தி செய்து கொள்வாள். அப்படித்தான் சுகுமாரன் உறவு சார்ந்த ஒரு சாவிற்கு அன்று செல்ல வேண்டி இருந்தது.
சுகுமாரனின் அண்ணன் மகளின் மாமனார் இறந்து விட்டார். அதற்காகச் செல்வதற்கான ஆயத்தங்களில் சுகுமாரன் இருந்தான். இதுபோன்று இழவு காரியங்களுக்கு செல்லும்போது கொஞ்சம் ஜாக்கிரதையாக தான் செல்ல வேண்டும் என்று பல சமயங்களில் சுகுமாரன் நினைப்பான். ஆனால் அந்த ஜாக்கிரதைத்தனம் எதுவும் இல்லாமல் சென்று விடுவான்.
வருத்தம் தரும் நேரங்களில் அதுவும் ஒன்றாகிவிடும்.
இப்போது கூட எந்த உடை அணிந்து கொள்வது என்பது தான் குழப்பம் இருந்தது வழக்கமாக அவன் அணியும் நீல நிற ஜீன்ஸ் பேண்ட் அவனுக்கு எப்போதும் ஒத்துழைப்புத் தந்து கொண்டிருக்கிறது. அதை பல நாட்களாக அவன் பயன்படுத்தி வந்தான். பத்து நாட்கள்., பதினைந்து நாட்கள் அணிந்துவிட்டால் பின்னர் அதை அழுக்குக் கூடைக்கு அனுப்புவான். அப்படி அழுக்கோடு இருப்பது தான் அந்த ஜீன்ஸ் பேண்ட்டின் உயர்ந்த பட்ச அழகு என்பது அவனுடைய எண்ணம். பிறகு அழுக்கும் சாதாரணமாகி விடுகிறது. அடிக்கடி பேண்ட் மாற்ற வேண்டிய அவசியம் இல்லை.
ஒரு பேண்டை பத்து பதினைந்து நாட்கள் பயன்படுத்தலாம் அப்படித்தான் தன் வயதை மீறி அவன் அதை எல்லாம் இப்போது பயன்படுத்த ஆரம்பித்திருந்தான் சட்டையை வேண்டுமானால் வெவ்வேறு விதங்களில் மாற்றிப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் ஒரே பேண்ட் தான். பல நாட்கள் பயன்படுத்தலாம்,
ஒரே வானம் ஒரே வயது என்று அவனது நண்பன் ஜெகதீஷ் செல்வார்.. அதே போல் ஒரே பேண்ட். சில சட்டைகள் .
”வெளியில் போகலையா, எங்கும் சுற்றுலா செல்லவில்லையா “ என்று கேட்டால் ஜெகதீஷ் “ இந்த முதுவயதில் எங்கு செல்வது ஒரே வானம் தான். எங்கு சென்றாலும் இருக்கிறது ஒரே வயிறு தான். நம்மோடு இருக்கிறது தேவையானால் பசிக்கிறது “ என்று சொல்வார். அப்படித்தான் ஒரே பேண்ட் உடன் பல நாட்கள் இருப்பதற்கும் அவன் பழகிக் கொண்டான் அது சுலபமாக இருந்தது
அவனுக்கு இப்போது அவனுக்கு வேறு பேண்ட்டை தேர்வு செய்து கொள்ள வேண்டும் என்று தோன்றவில்லை இழவு வீட்டிற்கு இதுபோல ஜீன்ஸ் பேண்ட் தன் முதுமை வயது சார்ந்து தேவையா என்பதை ஒரு முறை கேட்டுக் கொண்டாலும் பழைய பேண்ட்டுகள் வயதைக் காட்டிவிடும் ஜீன்ஸ் பேண்ட் என்றால் இன்னும் ரிட்டயர்டு ஆகவில்லை. இன்னும் வயதாகவில்லை என்று வேஷம் கட்டிக் கொள்வதற்கு பயன்படுகிறது. அப்படித்தான் அப்போது அவன் வேஷம் கட்ட வேண்டி இருந்தது.
பத்து நாட்களாகவே தலைக்கு டை அடிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தான் ஆனால் எப்படியோ அது நழுவிக் கொண்டே இருந்தது இப்போது சாவு வீட்டிற்கு செல்ல வேண்டும் . உறவுகள் மத்தியில் தான் நரைத்த மயிருடன் இருப்பது நன்றாக இருக்காது. தன் வயதை சுலபமாக காட்டிவிடும். ஆகவே தலைக்கு டை அடித்துத் தான் செல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்திருந்தான். அவன் மனைவியும் அதை ஆமோதித்தாள்.அவள் அவனுடன் ஒத்துப்போகிற சமாச்சாரங்கள் வெகு குறைவு .
அவள் தான் அதை செய்கிறவள். அவன் தலைக்கேச ஒழுங்குக்கு சிகை அலங்காரக்கூடம் செல்கிற போது ஒவ்வொரு முறையும் கடைக்காரர் கோபால் டை தயாரிக்கலாமா என்று கேட்பார். வேண்டாம் வீட்டிலேயே அடித்துக் கொள்கிறேன் என்பான். வீடு என்றால் மனைவிதான் அடிப்பார். எந்த சிக்கலும் இல்லை. குறைவாக அடிப்பார். தேவையான இடத்தில் மட்டும் அடிப்பார். அது போதும்.. சலூன் என்றால் மண்குளியல் போல அப்பி விடுவார்கள். அப்புறம் அழுத்தமான கருப்பாகிவிடும் அது சில சமயங்களில் அது அகோரோமாகிவிடும். சில சமயம் கண் புருவம் என்று கூட சலூன்காரர்கள் அடித்து விடும் அபாயம் உண்டு. வீட்டில் மனைவி ஜாக்கிரதையாக கொஞ்சம் மையை மட்டும் எடுத்துக் கொண்டு சரியாக பூசி அரை மணி நேரம் இருக்க சொல்லுவாள்..வீடு என்றால் சவுகரியம்தான்
இழவு வீட்டுக்குச் சென்றால் நூற்றுக்கணக்கான பேர்கள் வந்து போவார்கள். குறைந்தது இரண்டு மூன்று நாட்களுக்கு ஏதாவது சடங்கு என்று கூப்பிட்டுக் கொண்டே இருப்பார்கள். பிறகு பத்தாம் நாள் சடங்கு என்று கூப்பிடுவார்கள். இல்லையென்றால் பதினாறாம் நாள்..
எல்லாவற்றுக்கும் சேர்ந்து இப்போதைக்கு டை போட்டுக் கொள்ளலாம் என்று தோன்றியது.
அவன் போட்ட ஜீன்ஸ் பேண்ட்டைக் கழற்றி இருந்தான். அவனின் வேகத்தை பார்த்து ஜோதி புரிந்து கொண்டாள். இப்படியே போனால் எனக்கும் கௌரவம் இல்லை டை போட்டுக்கோங்க என்றாள். அண்ணன் மகள் தொலைபேசி செய்த போது தான் வெளியூரில் இருப்பதாகவும் கொஞ்சம் தாமதமாகத் தான் வருவேன் என்றும் சொன்னாள்.
மகள் என்றால் அண்ணன் மகள். தாமதமாக வருவேன் என்று சொன்னான். நிதானமாக போகலாம் என்று அர்த்தம் உள்ளூர் தானே. ஆனால் நகரத்தின் இன்னொரு முனையில் இருந்தது. அவர்கள் வீடு. பதினைந்து கிலோமீட்டர் செல்ல வேண்டும். சாவு என்ற செய்தி தனக்கு வந்து விட்டது அவசரம் காட்டுவதற்காக உடனே செல்ல முடியாது.
வெகு சாதாரணச் சட்டையை போட்டுக் கொண்டு கவனம் இல்லாமல் சென்று அந்த சோகச் சூழ்நிலையில் இருக்க முடியாது என்பதை அவன் எப்போது மனதில் கொண்டிருப்பான். நல்ல வேலையாக கொஞ்சம் தாமதமாகி தான் விட்டது. முன்பே ஜாக்கிரதையாக வெளியூரில் இருப்பதாக சொன்னது நல்லது தான். மெல்லச் செல்லலாம். காரணம் வெளியூருக்கு சென்று விட்டேன். அல்லது . வெளியூர் செல்லும் வழியில் பாதியில் தகவல் கேட்டு வந்தேன் என்று ஏதாவது பதில் சொல்லலாம். அப்படியேச் சொல்லும்படி ஜோதியிடமும் அவன் சொல்லியிருந்தான்.
கொஞ்சம் அழுக்கான ஜீன்ஸ் பேண்ட் போதும், சட்டையை தேர்வு செய்வதில் ஜாக்கிரதை தேவை. கொஞ்சம் அடுக்கி வைத்திருந்த சட்டைகளில் அவன் பார்வையில் பட்டது லேசான புள்ளிகளைக் கொண்ட ஒரு வெள்ளைச் சட்டை.. சாவு வீட்டுக்கு சோகத்தைக்காட்ட அழுக்கு சட்டையுடன் தான் போக வேண்டுமா.
நல்ல சட்டையுடன் போகலாம் அப்போதுதான் டையைக் கலக்கி எடுத்து தயார் செய்து கொண்டிருந்தாள் ஜோதி. சாதாரண தோற்றத்தில் இருப்பது சங்கடங்களை கொடுத்துக் கொண்டே இருக்கும்
0
அந்த வெள்ளைச் சட்டையை எடுத்து போட்டுக் கொண்டான் நன்கு தேய்த்து அழகாக தான் இருந்தது ஆனால் சட்டையில் இருந்த புள்ளிகள், கோடுகள் அவனுக்கு எப்போதும் பிடிக்கும் வழக்கமாகச் சட்டையை இன் செய்து கொள்வான். இப்போது சாவு வீடு அப்படி எல்லாம் போக வேண்டாம் கொஞ்சம் சாதாரணமாக செல்லலாம் என்று நினைத்தான் ஆகவே இன் செய்து கொள்வதைத் தவிர்த்தான். குறைந்தபட்ச இழவுத் தோரணையை வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்பதில் முதல் பணியாக அது ஏதாவது இருக்கட்டும் என்று நினைத்தான்
நான் ரெடி என்றான் சுகுமாரன். ஜோதி நான் எப்போதோ ரெடி என்றாள்.
“நீ சாவு வீட்டுக்கு சரியான தோரணையில் செல்வதில் அக்கறை கொண்டிருக்கிறாய் ரெடியாகிவிட்டாய் என்பது தெரிகிறது”
” ஆமாம் அப்படித்தான் தான் இருக்க வேண்டும் நல்ல புடவை இருக்கக் கூடாது. கலர் அதிகம் போட்டிருக்க கூடாது. தலையில் பூ இருக்க கூடாது இப்படியெல்லாம் இருந்தால் சாவு வீட்டில் மரியாதை இருக்கும் . சாவு வீட்டு மரியாதை என்று ஒன்று உள்ளது “
” நான் மரியாதை உடன் இருக்கிறேனா “
” அப்படி சொல்ல முடியாது உங்கள் வயது அப்புறம் நீங்கள் இதையெல்லாம் செய்து உங்கள் வயதை காட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதால் உங்கள் மனது என்ன சொல்கிறதோ அதைச் செய்யுங்கள் “
0
மகளின் மாமனார் கண்ணாடி பெட்டிக்குள் சுகமாகக் கிடந்தார். அவரின் நீண்ட கால நோய் காரணமாக இப்போது நிம்மதி பலருக்கும். முன்பு தொலைபேசியில் கேட்டபோது தூக்கத்தில் உயிர் பிரிந்தது என்று சொன்னார்கள்.. இப்போது கேட்டபோது காலையில் 6:00 மணிக்கு என்றார்கள். கூட இருந்தீர்களா அவருடைய கடைசி வாக்கு என்ன என்றான். அவர்கள் எதுவும் பதில் சொல்லவில்லை ஆகவே தூக்கத்தில் தான் உயிர் பிரிந்திருக்க வேண்டும் என்று நினைத்தான்.
முன்னதாக அந்த வீட்டைக் கண்டுபிடிக்க கொஞ்சம் சிரமப்பட வேண்டியிருந்தது. காரணம் இரண்டு ஆண்டுகளாக அந்த பக்கம் வரவில்லை செத்துப்போன மனிதனுடைய படத்தை போட்டு பிளக்ஸ் எங்காவது தொங்கிக் கொண்டிருக்கும். அது வழி காட்டும் என்று நினைத்தான். . ஆனால் விளம்பர பிளக்ஸ் எங்கும் இல்லை. ஆகவே குமரன் காலனி இரண்டாவது தெருவா, ஆறாவது தெருவா என்பதில் அவனுக்குக் குழப்பம் இருந்தது.. இரண்டாவது தெருவில் சாவுக் களையுடன் வீடு எதுவும் தென்படவில்லை. ஐந்தாவது தெருவில் கோடை விடுமுறை என்பதால் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த நான்கு பையன்களிடம் கேட்டான் .இந்தப் பக்கம் ஏதாவது சாவு விழுந்து விட்டதா என்று. .ஆறாவது தெருவில் ஒரு பெரியவர் இறந்து விட்டார் என்றான் ஒரு பையன்
“ எந்த வீடு “
“ போனால் தெரியும் “
“ உனக்கு தெரிஞ்சவங்களா”
“ இல்ல. அவங்க வீட்ல யாரும் மத்தவங்கள கூட பேச மாட்டாங்க பழக மாட்டாங்க. அவங்க மகன்க ரெண்டு பேரும் துபாயில் இருக்காங்க. அதனால அவங்க மத்தவங்க கூட அதிகமா பழகுவதில்லை. இரண்டு குழந்தைக இருக்கு அந்த குழந்தைகளும் தெருவில் விளையாடாது. அதனால அந்த வீதியில நான் இருந்தாலும் அவங்களோட அவ்வளவு தொடர்பு இல்லை. யாருக்கும் தொடர்பில்லை “
சரியானத் தொடர்பு இல்லை என்பதை சாவு வீட்டின் முன்னால் போடப்பட்டிருந்த சாமியானவின் கீழ் உட்கார்ந்து கொண்டிருந்த குறைவான நபர்களின் எண்ணிக்கை காட்டியது.
“ எப்போ பிணத்தை எடுப்பாங்களோ “
“, பசங்க எல்லாம் துபாயில் இருந்து வரணுமோ என்னமோ “
“ அது வரைக்கும் பிணம் கிடக்குமா நாமளும் இருக்க வேண்டுமா “ என்ற முன்பே ஜோதி கேட்ட கேள்விக்கு அவன் பதில் சொல்லவில்லை.
இங்கு வந்த பிறகு தான் தெரிந்தது மகன்கள் வந்த பின்னால்தான் காரியம். மகன்கள் அனேகமாக விடிய காலையில் வந்து விடுவார்கள் என்றார்கள் அப்படியானால் அப்பா இறந்து ஒருநாள் கழித்து தான் அவர்கள் வருகிறார்கள். ஒரு நாள் கழித்து தான் அப்பாவின் சடலம் சுடுகாட்டுக்கு போகும். ஒரு நாள் அவர் அப்படியே கிடப்பார். ஒரு நாள் முழுக்க அங்கேயே உட்கார்ந்து கொண்டிருக்க முடியாது என்பது அவனுக்கு தீர்மானமென ஞாபகம் வந்தது.. ஒரு நாள் முழுக்க கடக்க வேண்டியிருக்கும்.
சாதாரணமானத் துக்க விசாரிப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அந்த வகையில் சிலர் வந்து போயினர். மகளின் மாமியார் நாங்கள் எவ்வளவோ அவரை காப்பாற்ற முயற்சி செய்தோம் முடியவில்லை என்றார். அவருக்கு இதயத்தில் கோளாறு அதை சரி செய்தார்கள் பெரிய செலவு செய்தார்கள். பிறகு நன்றாக இருப்பதாக குறுஞ்செய்தியில் சொல்லிக் கொண்டார்கள். தவறி விழுந்தவர் காலில் முறிவு ஏற்பட்டு விட்டது. அதனால் சரியாக நடக்க முடியவில்லை அந்த முறிவு தான் அவருக்கு சோகத்தை ஏற்படுத்தி விட்டது என்று அவர்கள் சொன்னார்கள் .நன்றாகத் தேறிக் கொண்டிருந்தவர் இப்படி போய்விட்டார் என்றார்கள். ஆனால் எந்த வகையிலும் அழுகைக் குரல் யார் பக்கம் இருந்து வரவில்லை.படுக்கையில் கிடந்தவர் அழுகையையும் கொண்டு போய் விட்டார்.
எப்படி சாவு வீட்டில் பொழுதை கழிப்பது என்பது அவனுக்குத் தெரியவில்லை. ஆனாலும் குறைந்தது அரை நாளாவது இருக்க வேண்டும் நாளை தான் சாவு அடக்கம் என்று சரியாகத் தெரிந்தால் வீட்டுக்கு கூட போய்விடலாம். ஆனால் எப்போது போவது என்பதுதான் கேள்வி. . வெயில் சுட்டெரித்தது சாமியானாவின் அடர் வண்ண சுவரைத் தாண்டி வெயில் ஊடுருவி கழுத்து பகுதியைக் கசகசா என்றாக்கியது.
அவனின் இரட்டை சக்கர வாகனத்தில் அன்றைய தினசரிகள் இரண்டு இருந்தன. ஒன்று ஆங்கில தேசிய நாளிதழின் தமிழ் தினசரி. இன்னொன்று பொது உடமைக் கட்சி ஒன்றின் தினசரி.
அவர்கள் அந்த பொது உடமைக் கட்சி தினசரிக்கு சந்தா செலுத்த வேண்டும் என்று பத்து பேர் சேர்ந்த குழு ஒரு முறை வீட்டிற்கு வந்து விட்டார்கள். அவன் காலையிலே ஆன்லைனில் அதை பார்த்து விடுவதாக சொன்னான். பல ஆண்டுகளாக அப்படித்தான் ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஆனால் கட்டாயம் சந்தா வேண்டும் என்றார்கள். ஆன் லைன் பத்திரிக்கைகளுக்கு சந்தா செலுத்துவது என்றால் அவனின் ஒரு மாத பென்சன் கழிந்து விடும் என்றான் கிண்டலாக.
“ஆண்டு சந்தா எவ்வளவு “
“2000 ரூபாய் “
“ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. உங்க கட்சியோட இலக்கிய பத்திரிகை செங்கனல்க்கு ஆண்டு சந்தா கட்டிர்ரன். படிக்க ஏதாவது கிடைக்கும் ”
“ அது வேண்டாங்க நாங்க இப்போ பத்திரிக்கையோட சந்தா சேகரிப்புத் திட்டத்தில் இருக்கம். எங்க கட்சி மாநிலச் செயலாளர் சென்னையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை வர்றாரு. அவர்கிட்ட நூறு சந்தா தரணும். அதுக்கு சந்தாரசேகரிப்பு திட்டத்தில் இருக்கம். அதனால செங்கனலுக்கு நீங்க அப்புறம் சந்தா குடுங்க. இப்போ செம்பரிதிக்கு சந்தா கொடுங்க.”
“ 2000 ரூபாய் ரொம்ப அதிகமா இருக்கிறது”
ஜீபே நம்பரை சொல்ல ஆரம்பித்தார்கள். கடைசியில் பேரம் பேசி ஆறு மாத சந்தாவிற்கு அவன் ஒத்துக் கொண்டான் அதேபோல ஜி பேயில் அவர்கள் முன்னிலையில் பணம் செலுத்த வேண்டியிருந்தது.
“ சாப்பிட்டு போக ஆசை . ஆனா சந்தா சேகரிப்பு வேலை முந்திட்டு நிக்குது. சாப்பிட்டுப் பழகி தோழமையை வளர்த்துக் கொள்வது எங்கள் வழக்கம்” என்றபடிக் கிளமபினார்கள். பழைய அலுவலகத் தோழர்கள் அவர்கள்.
ஆறு மாதம் கழித்து மறுபடியும் இப்படி வருவார்களா அல்லது தொலைபேசியில் கேட்டு புதுப்பித்துக் கொள்வார்களா. ஆனால் ஆறு மாத சந்தா போதும் என்ற தீர்மானமாக இருந்தான். ஆறு மாத்த்திற்குப் பிறகு இப்படியொரு விஜயத்தை தவிர்ப்பது பற்றி யோசித்தான்.
0
பொது உடமைக் கட்சியின் தினசரி சந்தா, ஆறு மாதம் எப்போது முடியும் என்ற கவலை சாவு வீட்டில் வந்தது. சாவுக் கவலையை விட பெரிதானது அது.
அந்த இரண்டு தினசரிகளையும் அவன் இரட்டை சக்கர வாகனத்தில் வைத்திருந்தான் அவற்றை எடுத்து வந்து புரட்ட ஆரம்பித்தான். அவனின் பக்கத்தில் இருந்த முதியவரின் காலில் போடப்பட்டிருந்த கட்டுகள் அவர் மூட்டு நோயால் அவதிப்படுபவர் என்பதைக் காட்டியது.
ஜோதிக்கு வானத்தைப் பார்ப்பது அப்போதைய வேலையாக இருந்தது. வழக்கமாக கைபேசி பார்த்து ஏதாவது செய்தி அனுப்பி கொண்டிருப்பாள் கைபேசி அவளின் சிரிப்புக்காக சில விஷயங்களை தொடர்ந்து ஏதாவது செய்து கொண்டே இருக்கும். இப்போது அவள் கையில் கைபேசி இல்லை கைபேசி வைத்துக் கொண்டிருப்பது அந்த சூழலுக்கு உகந்த நிலையில்லை என்று முடிவு செய்து கொண்டார் போல் இருந்தது
சுகுமாரன் தினசரிகளை எடுத்த போது செம்பரிதிதான் முதலில் வந்தது அதில். எதையாவது ஒன்றை படிப்போம். . அது கட்சி பத்திரிக்கை என்று முதல் பார்வையில் எல்லாருக்கும் சொல்லிவிடும். சிவப்பு நிறத்தில் எழுத்துக்கள் மின்னிக்கொண்டிருந்தன வேறு வழியில்லை. கொஞ்சம் கூட்டம் கரைகிற வரைக்கும், உறவினர்கள் வந்து நகரும் வரைக்கும் அங்கு உட்கார்ந்து இருக்க வேண்டும். வெயிலை கொஞ்சம் மறக்க வேண்டும்.. தினசரி வாசிப்பு இப்போதைய பொழுதுபோக்கு .
அவர் எதிரில் வந்து நின்ற மகள் கண்ணீர் மல்க நின்று இருந்தாள். அவள் கையில் தேநீர் கோப்பைகள் இருந்தன. அவள் கண்களில் இருந்து வந்த கண்ணீரை பார்த்து அவன் “ நீதான் அவர் ரொம்ப ஜாக்கிரதையா அவரெ கடைசி காலத்தில பாத்துட்டே. என்ன பண்றது காலம் முடிஞ்சு போச்சு கவலைப்படாதே “என்றான்.
“ நான் அழுகிறது அதுக்காக இல்லை நீங்க பேப்பர் படிக்கிறதுக்கு. என்ன ஆச்சு... இழவு வீட்டில் உட்கார்ந்துட்டு பேப்பர் படித்து என்ஜாய் பண்ணுணா என்ன அர்த்தம் “
அவனுக்கு அதிர்ச்சியாகிவிட்டது நேரம் போகும் என்று தினசரி புரட்டியது இப்படி ஒரு கோணத்தில் கொண்டு வந்து நிறுத்திவிட்டது தெரிந்தது. அவன் செய்தித்தாளை நான்கைந்து மடிப்புகளாக செய்து அவனின் தொடை பக்கத்தில் செருகி கொண்டான். இப்போது அவன் செய்தித்தாளை படிக்கவில்லை என்பது ஆறுதல் போல் மகள் நகர்ந்தாள். பிணத்தின் பக்கம் இருந்த போது கூட அவள் இப்படி கண்ணீரில் மிதக்கவில்லை என்பது ஞாபகம் வந்தது.
பக்கத்தில் இருந்த முதியோரோ ஜோதியோ எதுவும் பேசவில்லை அவர்கள் இப்படி சாவு வீட்டில் இப்படி கைபேசியைப் பார்ப்பது, செய்தித்தாள் படிப்பது தவறு என்று முன்பே ஞானம் பெற்றவர்கள். அந்த ஞானம், அறிவு தனக்கு இல்லாததை அவன் தனக்குள் சொல்லிக் கொண்டான். வெறுமனாக உட்கார்ந்து கொண்டிருப்பதை தவிர இழவு வீட்டிற்கான தோரணையெல்லாம் கொண்டு வந்து விட வேண்டும் என்பது உடனடியாக அவன் மனதிற்கு வந்தது.
“ நீங்க இந்த சட்டையை கூட போட்டு வந்து இருக்க கூடாது கொஞ்சம் சாதாரண சட்டை போட்டு வந்து இருக்கலாம் “ என்றாள் ஜோதி அவள் சாதாரண முறையில் தான் இருந்தாள். சாவு வீட்டுத் தோரணனையோடு அவள் வெகுவாக ஒத்துழைப்பாள் அப்படித் தான் அவள் தன்னை மாற்றிக்கொண்டாள்,
வானத்தைப் பார்த்தபடி வெயிலை சகித்துக் கொண்டு சுகுமாரன் உட்கார்ந்து இருந்தான். இப்போது வெயில் அவன் முகத்தில் நேரடியான வீச்சைக் கொண்டு வந்துவிட்டது. கழுத்தில் கசகசா என்று வியர்வை பெருக்கெடுத்தது அவன் மனைவியின் சாதாரண ஜாக்கெட்டையும் நனைத்தது.
இப்போது சட்டை ஒரு அளவிற்கு அழுக்காகிவிட்டது சாவு வீட்டு தோரணைக்கு அது உகந்ததாகிவிட்டது என்பது அவனுக்குத் தெரிந்தது ஆனால் இப்படி உட்கார்ந்து இருந்தால் காய்ச்சல் வந்து விடும். உடம்பு ஒரு மாதிரியாகிவிடும் ஆகவே வீட்டிற்கு போகலாம் என்று தான் நினைத்தான். ஒரு நாள் காத்திருக்க முடியாது. புதிதாக வந்தவர்களிடம் தேனீர் கோப்பையை நீட்டிக் கொண்டிருந்த மகளை அழைத்தான்.
“ நாளை தானே மாப்பிள்ளைகள் வருகிறார்கள். ஆகவே காலையில் வந்து விடுகிறோம் “ அதுவும் சரிதான் என்று அவள் தலையாட்டினாள். நல்ல வேளை. சாவு வீட்டில் இருந்து எப்படி போவது என்று திக்கு முக்காடிக் கொண்டிருந்த அவனுக்கு அவள் எதுவும் பதில் சொல்லாமல் மௌனமாக ஒத்துழைப்பு தந்தது ஆச்சரியமாக இருந்தது. அவனுக்கு ஆறுதலாக இருந்தது. வெயில் கொடுமை பிணத்தை நாளைக்கு தான் எடுக்கப் போகிறார்கள் என்பது பெரிய ஆறுதல்
“ மாப்பிள்ளைக பெங்களூர் வந்துருவாங்க விடிகாலையிலெ . அங்கிருந்து பிளைட் புடிச்சு கோயம்புத்தூர் வந்துருவாங்க எப்படியும் விடிகாலையிலெ வந்துருவாங்க “
“ அடக்கம் எத்தனை மணிக்கு “
“ நேரம் தெரியல “
“டெத் செர்டிபிகேட் வாங்கியாச்சா “
“ வழக்கமா அவருக்கு ட்ரீட்மென்ட்க்கு பாக்குற டாக்டர் தரேன்னு சொல்லிட்டாரு. அதை வாங்கிட்டு போனா தான் மின்மயானத்திலெ நேரம் கிடைக்கும். அங்கயும் வரிசை இருக்கும்.”
“ அப்போ அடக்கம் எத்தனை மணிக்கு “
“ தெரியல “
அவனின் அருகில் வந்து நின்ற அந்த இளைஞனை பார்த்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்தது அவன் வயிறு சற்று உப்பியிருந்தது கொஞ்சம் உடம்பில் சதை சேர்ந்தது
ஜோதி “ என்ன கல்யாணம் ஆயிடுச்சா உனக்கு “ என்று கேட்டாள். ஆகலை என்றான்
“ என்ன ஆகலையா “
“எங்க அண்ணனுக்கு கூட இன்னும் ஆகல”
“ ஆமா கல்யாண சமாச்சாரம் . சாவு வீட்ல இப்படி பேசுற. கல்யாண சமாச்சாரம் பேச்சு இங்க நல்லதா “ என்றான்
“ ஓ சாவு விடு ஞாபகம் வந்திருச்சு” என்றாள்.
“ சரி அடக்கம் எப்போ.... எந்த மின்மயானம் “
“ செண்ட்ரல் மின் மயானந்தான் காலைல ஒன்பது மணிக்கு இருக்கும். எட்டு மணிக்கு வந்துருங்க . போதும் “
0
மின்மயானம் உறவினர்களின் கூட்டத்தைக் கூட்டி விட்டது. எல்லோரின் முகங்களிலும் சாவு சார்ந்த கவலை வந்துவிட்டது. அங்கங்கே இறந்து போனவருடைய பழைய வாழ்க்கை, நட்பு, பழக்க வழக்கம் என்ற தோரணையில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் பல ஆண்டுகளாக எந்த வேலைக்கும் செல்லாமல் மகன்களின் பணத்தால் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவர் என்ற வகையில் பலருக்கும் அவர் மேல் பொறாமை இருப்பது தெரிந்தது. புதிதாகக்கிளம்பிய சாவு பற்றிய கிசுகிசுவை மனதில் கொண்டு வந்து ரசித்துக் கொண்டிருந்தான்
”:இப்ப அவர் வயசு என்ன “
“எழுபது “
“ இந்த வயசுல என்ன வேலை செய்ய முடியும். அதனால்தான் 15 வருஷத்துக்கு முன்னாடியே வேலையெல்லாம் நிறுத்திவிட்டார் .வெளிநாட்டுக் காசு வரதனால அவருக்கு சிரமமும் இல்லை.. ஆமா உலகத்திலெ மதிப்பானது குவைத் பணமா.. துபாய் பணமா.
“ அதெல்லா கூகுள் பாத்துதா தெரிஞ்சுக்கணும் .
“பசங்க இரண்டு பேரும் ஒத்துமையா இருக்காங்களா “
“ இல்ல பெரிய மகன் வந்து போறது இல்ல. சாவுக்கு முன்னால ஒரு வாரத்துக்கு முந்தின வந்து பார்த்து இருக்கான் அவன் அப்பாவுடன் சொத்து தகராறில் இருந்ததால் அந்த வீட்டின் மாடியில் இருந்த அறைகள் பூட்டப்பட்டு இருக்கும் பெரிய மகனுடைய கட்டுப்பாட்டில் அந்த அறைகள் இருந்தன. மாதக்கணக்கில் அவன் துபாயில் இருந்து வருகிற வரை அப்படியே போட்டுக் கிடக்கும் அவன் அங்கு வந்து செல்கிற போது திறப்பான். அவற்றை சுத்தம் செய்வான் மறுபடியும் பூட்டிவிட்டு போய்விடுவான். அப்பாவுடன் நல்ல உறவு இல்லை அம்மாவுடன் நல்ல பேச்சு இல்லை. துபாயில் இருக்கும் இன்னொரு சகோதரருடன் நல்ல நட்பு இல்லை. பிரிந்து தான் இருந்தார்கள். ஒரு வாரம் முன்னால் வந்தவர் அப்பாவின் நிலைமை பார்த்து விட்டு அங்கேயே இருந்திருக்கிறார் வீடு அழுக்காக கிடைக்கிறது என்று நல்ல பெயிண்ட் அடித்து அழகாக்கி விட்டார்.
“ மகனெப் பாக்கணும் அப்படிங்கறது தான் அவர் மனசுல இருந்திருக்கு. அதுதான் அவனெப் பார்த்த பின்னெ போயிட்டாரு. பெரிய மகன் துபாய் போயி ரெண்டு நாள்தா ஆகுது. அவனைப் பாக்கத்தான் அப்படி அவர் கெடந்தார்ன்னு எல்லாரும் சொல்றாங்க. கடைசியா அவனைப் பார்த்ததால் ஆறுதல் தான் “ என்றார்கள்
0
மின்மயான வாகனத்திலிருந்து பிணத்தை இறக்கி வைத்தார்கள். மாப்பிள்ளைகளும் மருமகள்களும் குழந்தைகளும் சூழ நின்று கொண்டார்கள் இப்போது இரண்டாம் நாள் என்பதால் சுகுமாரன் இழவு வீட்டுத் தோரணைக்காக தன்னுடைய தோற்றத்தை எதையும் மாற்றிக் கொள்ளவில்லை காலையிலேயே ஒரு நாளைய நரைத்த மயிர்கள் தென்பட்டதால் முகச் சவரம் செய்து கொண்டான் கொஞ்சம் அழுத்தமான சிவப்பு நிறத்தில் இருந்த ஒரு சட்டையை அணிந்து கொண்டான்
நேற்று வீட்டுக்குச் சென்றதும் இழவு வீட்டுத் துணி என்று போட்டிருந்த ஜீன்ஸ் பேண்டை வெள்ளை சட்டையை கழட்டி போட்டு விட்டான்.இழவு வீட்டுக்குப் போனால், போய்விட்டு வந்தால் அந்த துணிகள் ஒரு ஓரமாகத்தான் கிடைக்கும். அப்படித்தான் கிடக்க வேண்டும் என்பதில் ஜோதி அவருக்கு பல சமயங்களில் அறிவுரை சொல்லி இருக்கிறாள். அவை சாதாரண அழுக்குத் துணிகளுடன் சேரக்கூடாது.
இப்போது சாவு அடக்கம் என்பதால் நிறைய நெருக்கமான நண்பர்கள் வந்து போவார்கள். உறவினர்கள் இருப்பார்கள் என்பதால் அவன் இன்றும் ஒரு ஜீன்ஸ் பேண்டையும் சிவப்பு நிற சட்டையையும் அணிந்து வந்திருந்தான். அவனின் புதிய தோற்றத்தை அது காட்டியது.
” இப்ப எங்க வேலை செய்கிறீர்கள் “என்று கேட்டார் அவனின் உறவினர் சண்முகம்
“ நான் ரிட்டயர்டு ஆகி எட்டு வருஷம் ஆச்சு ”
“ ஓ அப்படியா ஆனா நீங்க லைவ்ல இருக்கிற மாதிரி தெரியுது வெரி குட் “ என்றான் சண்முகம் இந்த வார்த்தைகள் தன் ஜாக்கிரதைத் தனத்திற்கு கிடைத்த பாராட்டு என நினைத்திருந்தான்.
இப்போது பிணத்தை சுற்றி நிறைய சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. சுகுமாரன் தன் கைபேசியில் பிணத்தையும் அங்கு இருந்தவர்களையும் படம் எடுத்துக் கொண்டான். அப்போது எதிர் தரப்பில் நின்றிருந்த அண்ணன் மகள் ஏதோ ஒரு முணுமுணுத்தாள். அவன் புரியாமல் பார்த்தான். பிறகு அவளாகவே அவன் நின்றிருந்த எதிர் இடத்திற்கு வந்தாள்.
” டெலிட் டெலிட் “ என்றாள்
” என்ன “
” இப்போ போட்டோ எதுக்கு எடுக்குறீங்க டெலிட் பண்ணுங்க “
“ எதுக்கு டெலிட் பண்ணனும் “
” டெலிட் பண்ணுங்க டெலீட் பண்ணுங்க “
“ பிரேம் போட்டு மாட்டணும் “ என்றான் கிண்டலான சிரிப்புடன்.
“ கூடாது. டெலிட் பண்ணுங்க டெலீட் பண்ணுங்க “
இப்போது சடங்குகளில் ஈடுபட்டு இருந்த சிலர் தவிர மற்றவர்கள் அவளின் முக பாவத்தையும் அழுத்தமான சொற்களையும் கவனித்தார்கள் காலில் கட்டு போட்டு இருந்த முதியவர் மகளின் பக்கம் வந்து ஏதோ சொல்லி அவளை நகரச் சொன்னார்
“ இந்த நேரத்தில் எதற்கு இந்த மாதிரி பேச்சு “ என்று சொல்லி இருப்பார் போல இருந்தது
“ இல்லைங்க சாவ வீட்டுல எதுக்கு படம் எடுக்கணும். அதான் டெலிட் பண்ணச் சொன்னேன் “
“ அப்புறம் பேசிக்கலாம் “ மகள் வேறு பக்கம் போய் சென்று நின்று கொண்டாள். ஜோதி பரபரப்புடன் சுகுமாரன் பக்கம் வந்து நின்றாள்
“ என்னாச்சு ஒரு மாதிரி இருக்கீங்க அவங்க வேற என்னமோ சொல்லிட்டு போனாங்க”
“ ஒன்னும் இல்ல “
“ சாவு வீடு இது. படம் எடுக்கலாமா.. ஆமா உங்களுக்கு சாவு வீட்டுக்கு தோரணையே தெரியல .அயர்ன் பண்ணுண நல்ல டிரஸ் போட்டு வந்துடுறீங்க டை அடிச்சுக்கிறீங்க சரி சரி சாவு வீடுங்கறது ஞாபகம் இருக்கட்டும் அதை மெயின்டெயின் பண்ணுங்க “ என்று மெல்ல முணுமுணுத்து விட்டு நகர்ந்தாள்
சாவு வீடுகளுக்கு என்று இருக்கும் தோரணையை கற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்புடன் அப்போது எடுத்த படங்களை அவன் நீக்க ஆரம்பித்திருந்தான்
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.