- ஓவியம் AI -
கடந்த ஆனி மாதம், சீக்கிய மத முறையிலான திருமணம் ஒன்றைப் பார்க்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. இது நான் பார்த்த முதலாவது வேற்று இன, மத திருமணம் என்பதால் அது சம்பந்தமான எனது மன உணர்வுகளை உங்களுடன் பகிரலாம் என்று நினைக்கிறேன்.
ஏற்கனவே சீக்கிய இனத்தவருடன் எனக்கு இருந்த தொடர்பு பற்றி இங்கு குறிப்பிட வேண்டும். தொண்ணூறுகளின் தொடக்கத்தில் போட்ஸ்வானாவில் சீக்கியர் ஒருவரோடு மூன்று மாதங்கள் ஒரே வீட்டில் வசித்திருக்கிறேன். வீடு விற்பனை முகவராகக் கனடாவில் வேலை பார்த்த அவர், அக்காலப் பகுதியில் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை காரணமாகத் தொழில் தேடி போட்ஸ்வானாவிற்கு வந்தார். கனடாவில் இருக்கும் எனது சகோதரரின் பரிந்துரையோடு வதிவிடம் தேடி எனை நாடி வர, இந்திய அமைதிப் படையின் அடடூழியங்களை நேரடியாகப் பார்த்திருந்தாலும், வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டேன். எனினும் அவருடன் நான் வசித்த அந்த மூன்று மாதங்கள், சீக்கிய சமுதாயம் பற்றிய எனது எண்ணத்தை முற்றாக மாற்றி விட்டன. அன்று தொடங்கிய எமது நட்பு, நான் போட்ஸ்வானாவை விட்டு வரும் வரை தொடர்ந்தது.
சுவாரசியமாகப் பேசவும் சுவையாகச் சமைக்கவும் கூடிய அவரோடு நடந்த உரையாடல்களில் இருந்து சீக்கிய மதத்தின் வரலாறு, சீக்கியர்களின் வாழ்க்கைமுறை பற்றி விபரமாக அறிந்து கொண்டேன். ஒரு இந்துத் தகப்பனுக்கும், இஸ்லாமியத் தாய்க்கும் பிறந்த குரு நானக்(1469-1539) எனும் குருவினால் சீக்கிய மதம் நிறுவப்பட்டது. அவரைத் தொடர்ந்து வந்த 9 சீக்கிய மத குருமார்களினால் அது மெருகூட்டி வளர்த்தெடுக்கப்பட்டது. பத்தாவது குருவான குரு கோவிந்த் சிங், அவர்களுடைய புனித நூலான குரு கிரந்த் சாஹிபை தனக்கு அடுத்த குருவாக பிரகடனப்படுத்த, இன்று வரை அந்தப் புனித நூலையே குருவாகக் கொண்டு வழிபட்டு வருகின்றனர். அவர்களின் வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் உள்ள பிரதான மண்டபத்தில் உள்ள தர்பார் சாஹிப் என்று அழைக்கப்படும் சிறு மேடையில் குரு கிரந்த் சாஹிபை வைத்து, கவிதை வடிவில் அதில் உள்ள சுலோகங்களைப் பாடித் துதிப்பது, அவர்களின் வழிபாட்டு முறையாகும். இந்து, இஸ்லாம் இரண்டினதும் வரலாறு, இறையியல்த் தடங்களை சீக்கியம் தன்னகத்தே கொண்டுள்ளது. சீக்கியம், எப்படி வாழவேண்டும் என்று பல நல்ல விடயங்களைக் கூறி இருந்தாலும், தியாகம், மனித நேயம் மற்றும் நேர்மையான நடத்தை என்பவற்றிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது.
எனது நண்பன் ஒருவர், சீக்கியரை மணக்கும் தனது புதல்வியின் திருமணத்திற்கு என்னை அழைக்க, இரண்டு மதத் திருமணங்களில் சீக்கிய திருமணம் எனது தெரிவாக அமைந்ததற்குச் சீக்கியருடன் எனக்கிருந்த நட்பும் ஒரு காரணமாகும். Middlefield இல் உள்ள குருத்வாராவில் இடம்பெற்ற அந்தத் திருமணத்திற்குச் சென்ற எனக்கு வாசலிலேயே மிகவும் எளிமையான ஒரு தலைப்பாகை கட்டப்பட்டது. திருமணம் முடியும் வரை அது என் தலையிலேயே இருந்தது. முதலாவது நிகழ்வான Reception of Barat குருத்துவாருக்கு வெளியில் உள்ள சிறு பூங்காவில் குறித்த நேரத்திற்கு இடம்பெற்றது. மாலை போட்டு, இனிப்பு வழங்கி மணமக்களின் குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகப்படும் அந் நிகழ்வு, வயதில் முதியோர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. அழைப்பிதழிலும் மணமக்களின் பெற்றோர் அழைப்பு விடுக்காமல் மணமகனின் பேரன் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது அப்போது எனது நினைவுக்கு வந்தது. சுமார் 20 நிமிடங்கள் நட ந்த அறிமுக நிகழ்வை அடுத்து, காலை உணவு பரிமாறப்பட்டது. குருத்வாராவின் கீழ்த்தளத்தில் உள்ள பெரிய சாப்பாட்டுக் கூடத்தில் அனைவரும் தரையில் அமர்ந்து சாப்பிட்டார்கள். சமையல் வேலை உட்பட அங்கு வேலை செய்பவர்கள் அனைவரும் தொண்டர்கள் என்று அப்போது அறிந்து கொண்டேன்.
சாப்பிட்டு முடிய, Anand Karaj என்று அழைக்கப்படும் திருமணச் சடங்கு இடம்பெறும் மண்டபத்திற்குச் சென்றோம். இம்மண்டபம் அங்கிருக்கும் வணக்கத் தலங்களில் ஒன்றாகும். நான் அங்கு செல்லும் போது தர்பார் சாஹிபிற்கு அருகில் உள்ள ஒரு சிறு மேடையில் மூன்று பேர் தபேலா, ஆர்மோனியம் என்பவற்றை தாமே இசைத்துப் பாடிக் கொண்டிருந்தார்கள். நிகழ்வில் கலந்து கொள்ள வந்தவர்கள் தர்பார் சாஹிபிற்கு முன்னாள் திறந்த உண்டியலில் பணத்தைப் போட்டு (எல்லாம் 5 டொலர்), முழங்காலிட்டு வணங்கி, ஆண்கள் ஒரு பக்கமாகவும் பெண்கள் ஒரு பக்கமாகவும் தரையில் அமர்ந்து கொண்டார்கள். தர்பார் சாஹிபிற்கு பின்புறத்தில் இருந்து ஒரு சிறுவன் சாமரம் வீசிக் கொண்டு இருந்தான். பூரண அமைதியில் நிறைந்திருந்த மண்டபத்தில் அந்த இசை ஒலியைத் தவிர வேறு எந்த சத்தமும் இருக்கவில்லை.
திருமணம் எங்கே, எப்படி நடக்கப் போகிறது என்று நான் குழம்பிக் கொண்டு இருக்கும் போது, இருவர் வந்து தர்பார் சாஹிபிற்கு முன்னால் ஒரு துணியை விரிக்க, மணமகன் கையில் ஒரு வாளுடன், அவர் குடும்பத்தினரால் அழைத்து வரப்பட்டு தர்பார் சாஹிப்பைப் பார்த்தபடி அமர்ந்து கொண்டார். சிறிது நேரத்தில், குடும்பத்தினர் புடைசூழ வந்த மணமகளும் மணமகனின் இடப்பக்கத்தில் அமர்ந்து கொண்டார். அவர்களின் அணிகலன்கள் மற்றவர்கள் போலல்லாது மிகவும் டாம்பீகமாக இருந்தது வெளிப்படையாகத் தென்பட்டது. நிகழ்வுக்கான நேரம் வர, இசை நிகழ்ச்சி நிறுத்தப்பட்டு, ஒலிவாங்கி ஒரு அறிவிப்பாளரின் கைக்கு மாறியது. இது கலப்புத் திருமணம் என்பதால், திருமணம் நடைபெறும் முறையையும், ஒவ்வொரு செய்கைகளின் அர்த்தங்களையும், சபையோர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் அவர் கூறியதைத் தொடர்ந்து ஒலிவாங்கி பாடகர்கள் கைக்குச் சென்றது.
சாமரம் வீசிக் கொண்டு இருந்த சிறுவனின் இடத்தில் மதகுரு வந்து அமர்ந்து கொள்ள, குறிப்பிட்ட நேரத்தில் திருமணத்திற்கான சமயச் சடங்குகள் ஆரம்பமாகியது. இது மிகவும் எளிமையான நிகழ்வு. மணமகனின் பெற்றோர், மணமகனின் சால்வையின் ஒரு நுனியை மணமகனுக்குப் பின்புறமாகக் கொண்டுபோய் மணமகளிடம் கொடுத்தனர். தர்பார் சாஹிபை முழங்கால் இட்டு வணங்கி விட்டு, மணமகன் தனது இரண்டு கைகளிலும் வாளைத் தாங்கி முன்னே போக, மணமகள் சால்வையின் தலைப்பை பற்றிய படி அதனை வலம் வந்து மீண்டும் அமர்ந்து கொண்டனர். இப்படியாக நான்கு தடவைகள் வலம் வந்து முடிய, மணமக்களின் இரண்டு தாய்மாரும் மணமக்களுக்கு இனிப்புப்பண்டம் ஊட்டி விட்டனர். சபையோர் எல்லோரும் எழுந்து நின்று வாழ்த்த மணமக்கள் இருவரும் உத்தியோகபூர்வமாக கணவன் மனைவி ஆகி விட்டார்கள். சுமார் அரை மணித்தியாலம் வரையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், மதகுரு, பீடத்தில் இருக்கும் பெட்டியின் மேல் போர்க்கப்பட்ட துணியை சற்று விலத்துவதும் மூடுவதுமாகச் செய்த சில நடவடிக்கைகளைத் தவிர பெரிதாக ஒன்றும் செய்ததாகத் தெரியவில்லை. மதகுரு மட்டுமின்றி படப்பிடிப்பாளர்கள் உட்பட எவரும் நிகழ்வு தொடங்கியதில் இருந்து முடியும் வரை, மணமக்களை எந்த விதத்திலும் வழி நடத்தவில்லை (வழி நடத்தத் தேவை இருக்கவுமில்லை ) என்பதை இங்கே நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். மணமக்களுக்கான அறிவுரைகள், வேறு இசைக்கருவிகளுடன் இசை நிகழ்வு என திருமண நிகழ்வு மேலும் 15 நிமிடங்களுக்குத் தொடர்ந்தது.
மணமக்கள் தர்பார் சாஹிபை நோக்கி அமர்ந்து இருந்ததால் சபையோர் ஒவ்வொருவராகச் சென்று அருகில் அமர்ந்து வாழ்த்தி, நன்கொடையாகப் பத்து, இருபது டொலர்களாக மணமகளின் மடியில் போட்டு விட்டுச் சென்றார்கள். வாழ்த்தியவர்கள் சமையற்கூடம் செல்ல, அவர்களுக்கு எளிமையான உறைப்பற்ற சுவையான மதிய உணவு பரிமாறப்பட்டது. நான் அணிந்திருந்த தலைப்பாகையை கழட்டி எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு, ஒரு நல்ல நிகழ்வில் கலந்து கொண்ட மன நிறைவோடு வீடு திரும்பினேன்.
புதுமை என்று எண்ணிக்கொண்டு, கண்ட நிண்டவர்களையும் நகலெடுத்து ஆர்ப்பாட்டத்தோடு, பெரும் பொருட்ச் செலவுடன், எம்மவரினால் (எமது பண்பாடு கலாச்சாரம் தான் உலகிலே மிகவும் சிறந்தது என்று கூறிக்கொள்ளும்) செய்யப்படும், சில திருமண நிகழ்வுகளைப் பார்த்து மனம் சலித்திருந்த எனக்கு, மிக அமைதியாகவும் எளிமையாகவும் நடந்த ஒரு திருமண வைபவத்தைப் பார்த்து மன நிறைவு உண்டானதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லைத்தானே.
இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.